- சுதந்திரமான, நேர்மையான முறையில் தேர்தல்கள் நடப்பதுதான் குடியாட்சியின் அடிப்படை. இந்தியாவில் தேர்தல்களை நடத்தும் பொறுப்பு, இந்திய அரசமைப்பால் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இது ஒரு நிலையான அமைப்பாகும். நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்கள், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் பதவிகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களை நடத்துவதன் மொத்த நடைமுறைகளையும் இயக்குவதும் அவற்றைக் கட்டுப்படுத்துவதும் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயல்பாடுகளாகும்.
தேர்தல் ஆணையர்கள்
- தேர்தல் ஆணையம் ஜனவரி 25, 1950இல் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டுமே இதன் தலைமைப் பொறுப்பில் இருந்தார். 1989இல் 2 கூடுதல் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
- தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் உள்பட 3 பேர் அடங்கிய குழு, முக்கியமான பிரச்சினைகளில் பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் முடிவெடுக்கிறது. முடிவெடுப்பதில் மூவருக்கும் சமஅதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 6 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை பதவியில் நீடிப்பார்கள்.
- டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் செயலகத்தில் (தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகம்) ஏறக்குறைய 550 அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இவர்களில் மூத்தவர்களான 5 அல்லது 6 துணைத் தேர்தல் ஆணையர்களும் தலைமை இயக்குநர்களும் முக்கியமான பணிகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட குழுவினருக்குத் துணை நிற்கின்றனர்.
- தேர்தல் ஆணையச் செயலகம் தயார் செய்யும் வரவு - செலவுத் திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதே வழக்கம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான மொத்தச் செலவை மத்திய அரசும், சட்டமன்றத் தேர்தல் செலவுகளை அந்தந்த மாநில அரசுகளும் ஏற்கின்றன. இரண்டு தேர்தல்களும் ஒரே காலகட்டத்தில் நடக்கும்போது, செலவு சமமாகப் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
அசைக்க முடியாத பதவி
- தேர்தல் ஆணையம், தேர்தல்களைச் சுதந்திரமாகவும் பாகுபாடுகள் இன்றியும் நடத்துவதைப் பாதுகாக்கச் சில முன்னேற்பாடுகளை அரசமைப்புச் சட்டக்கூறு 324 கொண்டுள்ளது. அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக் காலம் சட்டப் பாதுகாப்பு பெற்ற ஒன்றாகும். உச்ச நீதிமன்ற நீதிபதியின் பதவியைப் போலவே, இவரது பதவியும் பறிக்கப்பட முடியாதது.
- தலைமைத் தேர்தல் ஆணையரின் தவறான நடத்தையோ, தகுதியின்மையோ நிரூபிக்கப்படும் சூழலில், அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் சிறப்புப் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்படும்போது மட்டுமே தலைமைத் தேர்தல் ஆணையரைக் குடியரசுத் தலைவர் பதவிநீக்கம் செய்ய முடியும். தலைமைத் தேர்தல் ஆணையர் பரிந்துரைத்தால் மட்டுமே, பிற தேர்தல் ஆணையர்கள், மாநிலம் சார்ந்த தேர்தல் ஆணையர்கள் பதவி நீக்கம் செய்யப்பட முடியும்.
அதிகாரங்கள்
- நாடு முழுவதும் தேர்தல் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளைத் தீர்மானித்தல், வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல், தகுதியுள்ள வாக்காளர்களைப் பதிவுசெய்தல், தேர்தல் அட்டவணைகளையும் நாள்களையும் அறிவித்தல், வேட்பு மனுக்களைப் பரிசோதித்தல், அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், சின்னம் ஒதுக்குதல், கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும் சின்னம் ஒதுக்குவதிலும் எழுகிற தகராறுகளைத் தீர்க்க நடுவர்மன்றம் போலச் செயல்படுதல், தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக எழும் தகராறுகள் குறித்து விசாரணை செய்ய அதிகாரிகளை நியமித்தல், முறைகேடுகள் நிகழ்ந்தால் தேர்தலை ரத்துசெய்தல், குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரிடம் விண்ணப்பித்து, தேர்தலை நடத்துவதற்கான பணியாளர்களைப் பெறுதல், நாடு முழுவதும் தேர்தல் நடக்கும் விதத்தைக் கண்காணித்தல், அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்தல், அவை தேர்தலில் பெறும் வாக்கு களைப் பொறுத்து அவற்றுக்கு மாநில அல்லது தேசியஅந்தஸ்து வழங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளன.
- வாக்குச்சாவடியின் அமைவிடம், வாக்கு எண்ணிக்கை மையத்தின் அமைவிடம், வாக்குச்சாவடி, வாக்கு எண்ணிக்கை மையம் ஆகியவற்றுக்கு உள்ளேயும் அவற்றைச் சுற்றியும் தேவையான ஏற்பாடுகள் ஆகியவற்றை முடிவுசெய்வதும் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உள்பட்டவைதான்.
போதாமைகள்
- இந்திய அரசமைப்புச் சட்டம், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தையும் பாரபட்சமற்ற தன்மையையும் பாதுகாக்க முனைந்தாலும், நடைமுறையில் அது சாத்தியப்படாத சூழல்களும் ஏற்படுவது உண்டு. அதற்குக் காரணமான சில போதாமைகள் சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.
- தலைமைத் தேர்தல் ஆணையர், குடியரசுத் தலைவரது இசைவுடன்தான் பதவியில் நீடிக்கிறார். இதன் மூலம் மத்தியில் ஆளும் கட்சி, ஆணையர்மீது மறைமுகமாகவாவது தாக்கம் செலுத்த முடியும். மத்திய கனரகத் தொழில் அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அருண் கோயல் ஐஏஎஸ், நவம்பர் 2022இல் விருப்ப ஓய்வுபெற்ற மறுநாளே இந்தியத் தேர்தல் ஆணையராகக் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டார். இவர் இப்போது பதவி விலகிவிட்டார். மின்னல் வேகத்தில் நடந்த இந்த நியமனத்துக்கு எதிராகப் பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
- மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட குழு, அருண் கோயலுக்குத் தகுதி இருப்பினும், அசாதாரண வேகத்தில் அவர் நியமிக்கப்பட்ட முறை குறித்துக் கேள்வி எழுப்பியது. அது வழங்கிய தீர்ப்பில், ‘பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் அறிவுறுத்தலின்படி, தலைமைத் தேர்தல் ஆணையரும் பிற ஆணையர்களும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட வேண்டும்.
- தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும்வரை இந்த முறை தொடரும். குடியாட்சியில் நியாயமான முறையில் தேர்தல்கள் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்’ எனக் கூறியது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில், மத்தியில் ஆளும் கட்சி குறுக்கீடுகளை ஏற்படுத்த முடியும் என்கிற வாதங்களை வலுப்படுத்துவதாக இந்த வழக்கு அமைந்தது.
- ஆனால் பிரதமர், பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய குழு தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் என்பதற்கான சட்டத்தை மத்திய அரசு 2023ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் மூலம் தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை மத்திய அரசு தடுத்துவிட்டது.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 03 – 2024)