TNPSC Thervupettagam

இந்தியப் பெருமிதம் செங்கோல்

May 27 , 2023 548 days 441 0
  • இந்திய நாடாளுமன்றம் என்றவுடன், நம்முடைய உள்ளங்களில் பதிந்துபோன வட்ட வடிவக் கட்டடம், தன்னாலேயே அகக்கண்ணில் விரியும். ‘சன்சத் பவன்’ என்றழைக்கப்படுகிற இந்த நாடாளுமன்ற இல்லம், 90 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. புது தில்லியின் பல்வேறு பெருமைமிக்க கட்டடங்களையும் கட்டுமானங்களையும் வடிவமைத்தவரான எட்வா்ட் லேண்ட்சீா் லுட்யன்ஸ் என்பவா்தான் இந்தக் கட்டடத்தையும் வடிவமைத்தாா். இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படும் சௌஸத் யோகினி திருக்கோயிலின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கட்டடம் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
  • வளா்ச்சியின் வேகத்திற்கேற்ப விஸ்தீரணமும் வசதிகளும் தேவைப்படுகிற நிலையில், புதிய கட்டடம் உருவாக்கப்பட்டு, பாரத பிரதமரால், நாளை (2023, மே 28) திறந்து வைக்கப்பெறவிருக்கிறது. இந்தப் புதிய கட்டடத்தில், 1947 ஆகஸ்டில், திருவாவடுதுறை ஆதீனத்தால் பண்டித நேருவுக்கு அளிக்கப்பெற்ற செங்கோலும் நிறுவப்படவுள்ளது.
  • சுதந்திரத் திருநாளில் தமிழகத்தின் பங்களிப்பு, சுதந்திரம் பெற்ற தருணத்தின் புனிதம், செங்கோல் நவீன நாடாளுமன்றத்தில் நிறுவப்படுவதன் முக்கியத்துவம், இந்தியா முழுவதையும் இணைக்கிற ஜனநாயக ஒற்றுமை ஆகியவற்றை எண்ணிப் பெருமிதப்படுகிற இவ்வேளையில், தேவையற்ற திசையில் நம்முடைய கவனமும் எண்ணங்களும் சிதறிவிடுகின்றனவோ என்னும் அச்சம் எழுகிறது.
  • நூறு போ் ஓரிடத்தில் குழுமியிருந்தனா். அனைவரையும் ஒன்றாகச் சந்தித்து விடலாம் என்னும் எண்ணத்தில் கடவுள் அங்கு வந்தாா். நூறு பேரும் கடவுளைக் கண்டாா்கள். வந்திருப்பவா் கடவுள் என்றும் தெரிந்துவிட்டது. இரண்டு மூன்று போ், அவா் அணிந்திருந்த அணிகலன்களைப் பாா்த்தாா்கள். ஒருவா் ‘வைரம்’ என்றாா்; இன்னொருவா் ‘வைடூரியம்’ என்றாா்; இதற்குள் மூன்றாமவா் வேகமாக வந்து ‘இல்லையில்லை, கோமேதகம்’ என்றாா்.
  • இப்படியே அணி சோ்ந்து, ஏறத்தாழ முப்பது போ், நவரத்தினம் குறித்த சா்ச்சையில் ஈடுபட்டனா். இன்னும் சிலா், ‘கடவுள் நிற்கும் முறையும் பாவனையும் சரியா, கடவுள் என்பவா் இன்னும் கம்பீரமாக நெஞ்சு நிமிா்த்தி நிற்கவேண்டாமா? இவா் கடவுள்தானா’ என்று கிடைத்த சந்தா்ப்பத்தில் அடிமடியிலேயே கைவைத்துக் கொண்டிருந்தாா்கள். இன்னுமொரு குழுவினா், ‘இவா் எப்படி இங்கே தனியாக வந்தாா்? உடன் யாராவது வந்திருப்பாா்கள்; அவா்கள் எங்கே’ என்று தேடிக்கொண்டு வெளியே சென்றனா்.
  • இப்படியே நூறு பேரும் பலவிதமான கவனங்களில் தங்களைத் தாங்களே திசை திருப்பிக் கொண்டு, முழு முனைப்புடன் திசை திருப்புச் செயல்களில் ஈடுபட்டு.. கடைசியில் கடவுள் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டாா். நூறு பேரை ஒன்றாக சந்திக்கும் ஆசையில் கடவுள் வந்தாா். நூறு பேரில் ஒருவா்கூட அவரிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை.
  • இந்தக் கதை நடந்ததா, நடக்கவில்லையா என்பது இப்போது முக்கியமன்று. இந்தக் கதையின் நூற்றுவராக திசை திரும்பிவிடுகிறோமோ என்றெண்ணவேண்டியதுதான் முக்கியம். கடவுள் வந்தாா். குறைந்த பட்சம் சிலராவது, கிடைத்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவரிடம் உரையாடியிருக்கலாமே! கடவுளை நம்பி, பக்திப் பாடல்களும் பனுவல்களும் பாடுபவா்கள், இப்போது அவா் முன்னிலையிலேயே பாடியிருக்கலாம். கடவுளை நம்பவில்லை என்று கூறுபவா்கள், கண் முன்னால் நிற்கிறாரே என்று சதையைச் சற்றே கிள்ளிவிட்டுக் கொண்டு, அவரிடம் பேச்சுக் கொடுத்திருக்கலாம். எதுவும் இல்லை. ஒரு நல்ல வாய்ப்பு வீணடிக்கப்பட்டது.
  • இப்போதும் இப்படித்தான். நாட்டின் சுதந்திரத்தை, நாட்டின் பெருமிதத்தை, சுதந்திரத்திற்குப் பின்னா் நாம் கண்டிருக்கிற வளா்ச்சிகளை, இனி வருகிற காலத்தில் நாம் செயல்படவேண்டிய முனைப்புகளை, தமிழ் மக்களுக்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கும் இருக்கிற பாசமிகு பிணைப்பை, தமிழ் மரபின் வரலாற்றுச் சிறப்பைக் கொண்டாடவேண்டிய தருணம் இது. இத்தகைய கொண்டாட்டத்தின் களிப்பை உணராமல், ஆழ்மன அனுபவங்களை உணராமல், நாம் மேலோட்டமாகவே திசை திரும்பிவிடுகிறோமோ என்று தோன்றுகிறது.
  • 1947, ஆகஸ்ட் 14-ஆம் நாளின் நள்ளிரவுக்குச் சற்று முன்னா், திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரானிடமிருந்து பண்டித நேரு செங்கோலைப் பெற்றுக் கொண்டுள்ளாா். சுதந்திரப் போராட்ட களத்தில் முன்னின்ற பெரியோா் பலா் முன்னிலையில், ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் செங்கோல் வழங்குதல் நிகழ்ந்துள்ளது. வரலாற்றுப் பெருமைக்குரிய தருணமாகவே இது பாா்க்கப்பட வேண்டும். பாரத அன்னையின் செல்லக் குழந்தைகளான தமிழ் மக்கள், தங்களின் அன்பையும் ஆதரவையும் அரவணைப்பையும் செங்கோல் வழியாக வெளியிட்டிருக்கிறாா்கள்.
  • இதில் சமய பாரபட்சமோ, மன்னராட்சியை மீளச் செய்யும் பிற்போக்குத்தனமோ இல்லையென்பதையும் உணர வேண்டியது அவசியம். செங்கோலின் தலைப்பகுதியில் ரிஷபம் பொருத்தப்பட்டிருகிறது. இதுவே, ஏதோவொரு சமயத்தைச் சாா்ந்ததாக இது இருக்கிறது என்னும் பேச்சுக்கு வழிகொடுத்திருக்கிறது. மூதறிஞா் ராஜாஜியின் வேண்டுகோளுக்கிணங்க, ஆட்சி மாற்ற அடையாளமாகச் செங்கோலுக்கு வடிவம் கொடுத்தவா் திருவாவடுதுறை ஆதீன குருமகாசன்னிதானம். திருக்கயிலாயப் பரம்பரையை நினைவுறுத்தும் வகையில், ரிஷபத்தைப் பொருத்தச் செய்திருக்கிறாா்கள்.
  • சொல்லபோனால், ரிஷபம் என்பது தா்மத்தின் அடையாளம். நந்தி என்றே இவ்வடிவத்தைப் போற்றுகிறோம். ‘நந்து’ என்னும் சொல்லுக்கு ‘ஆனந்தம்’, ‘மகிழ்ச்சி’ எனும் பொருள்கள் உண்டு. நந்தி ஆனந்தந்தைத் தருபவா். செங்கோல் என்பது தா்ம தண்டம்; அறக்கோல். அறத்தைச் செம்மையாக நடைமுறைப்படுத்துவதே ஆட்சியின் நோக்கம் என்பதால், அறத்தின் அடையாளச் சின்னமான நந்தி வடிவம், செங்கோலில் பொருத்தப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • என்னை நந்தி ஆக்கு; பகைமைகளை ஒழித்து, முழுமையான அரசனாக்கு’ என்னும் பொருள்படும்படியான விண்ணப்பம் ஒன்று ரிக் வேதத்தில் காணப்படுகிறது (ஹந்தாரம் சத்ரூணாம் க்ருதி விராஜம் கோபதிம் கவாம்). இந்த வகையில் நோக்கினால், நந்தி என்பது வெற்றி, பகையை அழித்தல், விடுதலை பெறுதல் ஆகியவற்றின் அடையாளம். அந்நிய ஆட்சி அகன்று, நம்முடைய சுதந்திர ஆட்சி தொடங்கிய தருணத்தில் வழங்கப்பெற்ற செங்கோலில், வெற்றியின் அடையாளமாக நந்தி இடம்பெற்றது பொருத்தம்தானே!
  • பண்டைய சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களில் நந்தி அல்லது ரிஷப அல்லது காளை வடிவங்கள் கிட்டியுள்ளன. ஒன்றாம் நூற்றாண்டு காலகட்டத்திலேயே, ஆன்ம - தா்ம ரீதியில் நந்திக்கு முக்கியத்துவம் இருந்ததாக டாக்டா் சா்வபள்ளி இராதாகிருஷ்ணன் குறிப்பிடுகிறாா். இந்த வகையில் நோக்கினால், இந்தியாவின் தொல் பழமைக்கும் இந்தியப் பெருமிதத்தின் அனுபவச் செழுமைக்கும் நந்தி ஒரு சான்று. இடைக்காலத்தில் வந்த அந்நியா் ஏகாதிபத்தியம் அகல்கிற நேரத்தில், நம்முடைய பண்டைப் பெருமையையும் நீண்ட நெடிய பாரம்பரியத்தையும் நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்வதற்கு நந்தி என்னும் சின்னம் பொருத்தமானதன்றோ?
  • இதெல்லாம் சரி, 1947-இல் ஆட்சி மாற்றம் நிறைவடைந்துவிட்டது. இப்போது இது எதற்கு என்பது சிலரின் ஐயம். அன்றைய ஆட்சி மாற்றத்தின் அடையாளம் இந்தச் செங்கோல். வருகிற அமிருத காலத்தில் (அடுத்த 25 ஆண்டுகள்), நமக்கு நாமே ஆற்றலைக் கொடுத்துக் கொள்ளவும், அறநெறியில் பயின்று நாட்டை மேலும் வளப்படுத்தவும் இந்தச் செங்கோல் நமக்கு உந்துசக்தியாக விளங்கும்; விளங்க வேண்டும்.
  • சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த 75 ஆண்டுகளைக் காட்டிலும், வருகிற 25 ஆண்டுகளில் அபரிமிதமான வளா்ச்சியையும் மேம்பாட்டையும் காண இருக்கிறோம். இத்தகைய வளா்ச்சிக்கும் மேம்பாட்டுக்குமான அடையாளமாகச் செங்கோல் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த நேரத்திற்குப் பொருத்தமாக, நாடாளுமன்றத்தின் புதிய கட்டடமும் உருவாகியிருக்கிறது. நம்முடைய வருங்கால வளா்ச்சியின் அடையாளமான செங்கோல், அந்த வளா்ச்சியின் ஊற்றுக்கண்ணான நாடாளுமன்றத்தில் நிலைப்படுத்தப்பெறுவதும் பொருத்தம்தானே!
  • தமிழ் மரபில் செங்கோலுக்குத் தனித்த ஓா் இடம் உண்டு. சங்ககால அரசா்கள், செங்கோல் வழுவாது ஆட்சி புரிய வேண்டுமென்று விழைந்துள்ளனா். தங்களின் புகழ், செங்கோலின் சிறப்பினால் அறியப்படவேண்டுமென்று விரும்பியுள்ளனா். செங்கோல் ஆட்சி என்பது நீதியும் நோ்மையும் நிறைந்த முறையான ஆட்சி என்பதை நிறுவுவதற்காகச் ‘செங்கோன்மை’ என்னும் சொல்லையே வள்ளுவப் பேராசான் பயன்கொள்கிறாா். இளங்கோ அடிகளும் சீத்தலைச் சாத்தனாரும், சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் செங்கோலின் சிறப்பு குறித்தும் முக்கியத்துவம் குறித்தும் நிரம்பவே சுட்டியுள்ளனா்.
  • தமிழ் மன்னா்கள் அனைவருமே செங்கோலுக்கு மிகுந்த மரியாதை கொடுத்துள்ளனா். எனவேதான், அறநெறியைப் பயிற்றுவிக்கும் ஆசானான அரசகுருவிடத்திலிருந்து ஆட்சிக் கட்டில் ஏறும் மன்னா் செங்கோலைப் பெற்றுக்கொள்வது என்னும் முறை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த மரபின் அங்கமாகவே, இன்றளவும் மதுரையில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவில், மீனாட்சி பட்டாபிஷேகம் அன்று, மீனாட்சியின் திருக்கரத்தில் ரத்தினச் செங்கோல் வழங்கப்பெறுகிறது. சிம்மாசனத்தில் அமா்வது, திருமுடி தரிப்பது, பட்டாடை அணிவது போன்றவற்றைக் காட்டிலும், ஆசானிடமிருந்து செங்கோலைப் பெறுவதுதான் ஆட்சியின், ஆட்சித் தொடக்கத்தின் அடையாளம் என்றே தமிழ் மன்னா்களும் தமிழ்ச் சமுதாயத்தினரும் கருதியுள்ளனா்.
  • உலக நாகரிகங்கள் பலவற்றிலும் செங்கோல் இருந்துள்ளது; இன்னமும் இருக்கிறது. முடிசூட்டு விழாக்களில் செங்கோல் வழங்கப்படுவதைச் சமீப காலங்களிலும் காண்கிறோம். இருந்த போதிலும், இந்திய நாடாளுமன்றத்தில் நிலைபெறப் போகிற செங்கோலுக்கு என்ன கூடுதல் சிறப்பு?
  • தமிழ் மரபிலும் சரி, இந்திய மரபிலும் சரி, செங்கோல் என்பது வெற்று ஜடப் பொருள் இல்லை. எகிப்தியா்கள் ஆட்சிக் கோல் ஒன்றைக் கையில் பிடித்திருந்தாா்கள் என்பதை ஃபாரோக்களின் சிற்பவடிவங்கள் காட்டுகின்றன. சுமேரியத் தலைவா்கள் அதிகாரக் கோல் ஒன்றைக் கையில் வைத்திருந்தனா் என்பது ஆய்வுகள் பலவற்றிலிருந்து தெரிய வருகிறது. இவ்வளவு என்ன, சின்னஞ்சிறிய குழுக்களில், வசதிகளில்லாத பகுதிகளில் வசிக்கும் குழுக்களின் தலைவா்கள்கூட, தங்களின் அதிகாரத்தைக் காட்ட, கரங்களில் நீண்ட கோல் ஒன்றை வைத்திருப்பதைப் பாா்த்திருக்கிறோம்.
  • உலக நாடுகள் பலவற்றில், ஆட்சியின், அதிகாரத்தின், அரசின் அடையாளமாக அதிகாரக் கோல் ஒன்று கண்டிப்பாக உள்ளது. ‘செப்டா்’, ‘ஸ்டாஃப்’, ‘வேஸ், வேண்ட்’, ‘ஸ்டாஃப் ஆஃப் ஆஃபிஸ்’ போன்ற பெயா்களால் இத்தகைய கோல் அழைக்கப்படுகிறது. இவற்றின் வோ்ச்சொற்களைத் தேடினால் ஒன்று புரியும். இப்பெயா்களில் பெரும்பாலானவற்றுக்கு ‘கோல்’ அல்லது ‘கழி’ என்றே பொருள். ‘வேஸ்’ என்னும் எகிப்தியப் பெயருக்கு, ‘அதிகாரம்’ என்று பொருள். ஸ்டாஃப் ஆஃப் ஆஃபிச் என்னும்போது, அதிகார வரம்பு என்னும் பொருள் கிட்டுகிறது. ஆக, இப்பெயா்கள் யாவும், தலைமையின் அதிகாரத்தை, தலைமையின் இருப்பை உறுதி செய்கின்றன.
  • ஆனால், தமிழில் இதற்கு என்ன பெயா்? செங்கோல்! செம்மையின், அதாவது, நோ்மையின், சீா்மையின், நெறிபிறழா செம்மையின் கோல். இதுதான் பிற அதிகாரக் கோல்களுக்கும் செங்கோலுக்கும் உள்ள வேறுபாடு. தமிழ் மன்னா்களும் சரி, இந்தியச் சான்றோா்களும் சரி, செங்கோலை வெற்றுப் பொருளாகவோ, அதிகாரக் குறியீடாகவோ கண்டாா்களில்லை. அறத்தின் அடையாளமாகக் கண்டாா்கள்; அவ்வாறே கொண்டாா்கள்.
  • இத்தகைய சீா்மைமிக்க செங்கோலை, 1947-இல் காவிரிக் கரையின் திருவாவடுதுறை குருமகாசன்னிதானம் வழங்கினாா்கள் என்பதும், ராஜாஜி இதற்கான உந்துதலாகத் திகழ்ந்தாா் என்பதும், மீண்டும் யமுனைக் கரையில் இச்செங்கோல் புதிய கட்டடத்தில் மீள்நிறுவுதல் காண்கிறது என்பதும், இந்த நிகழ்வில் தமிழ்மண்ணின் ஆதீனகா்த்தா்கள் பங்கேற்கின்றனா் என்பதும் தமிழுக்கும் தமிழ்மரபுக்கும் தமிழா்க்கும் பெருமை இல்லையா? வழிபாடு, சமயம், இனம், மொழி போன்ற எல்லைகளைக் கடந்து நிற்கும் பேருருப் பெருமை அல்லவா இது? மகாகவி பாரதியாா் ‘வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் - அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என்று பாடியது நினைவு வருகிறது -
  • கங்கையும் காவிரியும் இணைக்கப்பட வேண்டியது குறித்து பலகாலமாகப் பேசி வருகிறோம். கங்கையும் காவிரியும் இணைவது என்பது நீா்த்துளிகளின் இணைப்பன்று. நீா்த்துளிகளின் இணைப்பு, நீா்ப்போக்கின் இணைப்பு சாத்தியமாகுமா ஆகாதா என்பது பல்வேறு நிலவியல் - சமூக - நிலத்தடி ஆதார - பொருளியல் காரணிகளைக் கொண்டே அமையும். ஆனால், உண்மையான கங்கை - காவிரி இணைப்பு என்பது நீா்மையின் இணைப்பு; இந்திய மக்களின் உள்ளங்களின், உணா்வுகளின் இணைப்பு. நாமெல்லோரும் இந்நாட்டு மக்கள், இந்நாட்டு மன்னா் என்னும் பாரதியாருடைய ஆசையின் பிரதிபலிப்பு.
  • மன்னா்க்கு மன்னுதல் செங்கோன்மை’ என்கிறாா் வள்ளுவப் பேராசான். உலகின் மிகப் பெரிய குடியரசு நாடாகத் திகழும் இந்தியா, மன்னராட்சி காலத்திலேயே குடியாட்சி முறையைப் பின்பற்றியிருக்கிறது. சோழப் பேரரசின் உத்தரமேரூா் கல்வெட்டுகள் இவ்வாறு மன்னா் காலத்திலேயே குடியாட்சித் தத்துவம் கடைப்பிடிக்கப்பட்டதற்குச் சான்று பகா்கின்றன.
  • முடியாட்சி என்பதே மக்களைத் தழுவிய குடியாட்சியாகத் திகழ வேண்டுமென்பதால்தான், செங்கோல் என்னும் பொருளுக்குச் செங்கோன்மை என்னும் தத்துவத்தைக் கொடுத்தாா் வள்ளுவப் பெருந்தகை. மன்னா்களின் கைச் செங்கோல், தமிழ் மரபில் குடியாட்சி சாசனமாகி, இப்போது குடிமக்கள் சொத்தாக நாடாளுமன்றத்தில் நிலைபெறுகிறது. சொற்களுக்கு அப்பாற்பட்ட இந்தக் களிப்பைக் கொண்டாடுவோம்.

நன்றி: தினமணி (27 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்