TNPSC Thervupettagam

இந்தியாவின் ஆதிக்கத்துக்கு உள்ளாகுமா இலங்கை

April 3 , 2022 856 days 441 0
  • சில நாட்களுக்கு முன்பு இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆறு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளமை, மிக முக்கியமான மாற்றத்தை இலங்கையில் ஏற்படுத்தப்போகிறது எனலாம். அந்த ஆறு ஒப்பந்தங்களையும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.

1.இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள முறைமையை அமல்படுத்துதல்.

2. கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை.

3. யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள அனலை தீவு, நெடுந்தீவு, நைனா தீவு ஆகிய மூன்று தீவுகளிலும் கலப்பு மின்சக்தித் திட்டங்களை அமல்படுத்துதல்.

4. இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பை நல்குதல்.

5. காலி மாவட்டத்திலுள்ள இருநூறு பாடசாலைகளில் பிரத்யேகமான கல்வி மென்பொருளுடன் கூடிய ஸ்மார்ட் அட்டைகளோடு நவீன கணினி ஆய்வுக்கூடங்களை ஸ்தாபித்தல்.

6. வெளிநாட்டுச் சேவைக்கான சுஷ்மா ஸ்வராஜ் நிலையம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச ராஜதந்திரப் பயிற்சி நிலையம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

  • இவற்றுள் இரண்டாவதான கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது, இந்திய அரசாங்கத்தின் ஆறு மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியோடு இலங்கையில் நிறுவப்படவுள்ளது. இதன் மூலம் இந்திய உளவு விமானங்கள் இலங்கை வானத்தைப் பயன்படுத்தும். 
  • இலங்கை தன்னுடைய கடல் மற்றும் வான் பாதுகாப்பை இந்தியாவுடன் நேரடியாகப் பகிர்ந்துகொள்வதாகக் கருதலாம். கடற்பரப்பில் பாதிப்புக்குள்ளாகும் கப்பல்களின் பாதுகாப்பை சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைய உறுதிப்படுத்தவும், இப்பிராந்தியத்துக்குள் பாதிப்புக்குள்ளாகும் கப்பல்கள் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இந்த நிலையம் மிகவும் அவசியம்.
  • மூன்றாவது உடன்படிக்கையை முன்பே இலங்கை சீனாவுடன் மேற்கொண்டிருந்தது. இப்போது சீனாவுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு, இந்தியாவிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் சீனாவைக் கோபித்துக்கொள்ள நேரிடும் என்று சர்வதேசச் சமூகம் குரலெழுப்புகிறது. நான்காவது உடன்படிக்கையின் மூலம் இலங்கையிலுள்ள அனைத்து மீன்பிடித் துறைமுகங்களையும் இந்தியா எவ்விதத் தடங்கலும் இல்லாமல் அணுகலாம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
  • உண்மையில், இந்த உடன்படிக்கைகளைக் கடந்த ஆட்சியில் செய்திருந்தால், தற்போது இலங்கையை ஆளுபவர்கள் இந்திய விஜயத்தையும் இந்த உடன்படிக்கைகளையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருந்திருப்பார்கள். பௌத்தப் பிக்குகள்கூடத் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள்.
  • எனினும், இந்த உடன்படிக்கைகளால் இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படாது என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்திருக்கிறது. என்றாலும், இந்த ஆறு உடன்படிக்கைகளாலும் இலங்கையைப் பேராபத்து சூழும் என்று இலங்கையிலுள்ள இந்திய விரோத சக்திகள் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டேதான் இருக்கின்றன.
  • தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கை போன்ற எந்தவொரு சிறிய நாட்டுக்கும் பலம் மிக்க அண்டை நாடொன்றின் அரவணைப்பு அத்தியாவசியமானதாகும். கடனில் மூழ்கிக்கொண்டிருக்கும் தனித்த தீவான இலங்கையை மீட்டெடுக்கவும், பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவிக்கவும் எந்த நாடாவது உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற நிலையில், அதை அருகிலேயே இருக்கும் இந்தியா செய்ய முன்வந்திருப்பது பாராட்டப்பட வேண்டியதும், வரலாற்று முக்கியத்துவம் மிக்கதுமான நிகழ்வாகும். 
  • இந்தியா போன்ற ஆளுமை மிக்க நாடொன்று, இலங்கைக்குப் பாதுகாப்பளிப்பதையும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதையும் இவ்வாறாக உறுதிசெய்துவிட்டால், சீனா போன்ற தந்திரமான நாடுகள் எளிதில் இலங்கையிடம் வாலாட்டாது.
  • கடந்த 2005-ல் ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவையும், மேற்கு நாடுகளையும் கையாளுவதற்காகவும், உள்நாட்டுப் பிரச்சினைகளிலும் வர்த்தகத்திலும் பொருளாதாரத்திலும் சீனாவையே சார்ந்திருந்தது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் சீனாவுடன் நெருக்கமான உறவு பேணப்பட்டதோடு, அப்போது நாட்டில் சீனாவால் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது.
  • பிறகு, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் அவர் சீனாவை இலங்கையுடன் அவ்வளவாக நெருங்க விடவில்லை. அதன் பிறகு, ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச சீனாவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி, அதனைச் சார்ந்திருக்கத் தொடங்கியதே சீனாவின் செல்வாக்கு இலங்கையில் மேலோங்கி, இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறியதற்குக் காரணம் என்று கூறலாம்.
  • இலங்கையின் பொருளாதாரச் சீர்குலைவைச் சீரமைக்க இந்தியா தொடர்ந்து உதவிசெய்யும் என்று ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்தியக் கடனுதவிக்குப் பிறகுஇலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடல் குறித்தும், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகியவற்றிலான ஒத்துழைப்பு, மீன் பிடித்தலிலுள்ள பிரச்சினைகள் ஆகியவை குறித்தும் ஜெய்சங்கர் கவனம் செலுத்தியுள்ளார். அத்தோடு, இலங்கையிலுள்ள பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.
  • இவற்றுள் முக்கியமான ஒரு நிகழ்வாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசியதைக் குறிப்பிடலாம். இதுவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துப் பேசியதில்லை. தற்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச பதவி விலக நேர்ந்தால், அடுத்த ஜனாதிபதியாக வரும் வாய்ப்பு எதிர்க்கட்சித் தலைவருக்கே உள்ள சூழ்நிலையில், அவருடனான சந்திப்பு அண்மைய இந்திய உடன்படிக்கைகளைப் பலப்படுத்தும் என்று நம்பலாம்.
  • இந்தியா உதவிசெய்வதாலும், புலம்பெயர்ந்துள்ளவர் ளிடம் இலங்கை அரசு உதவிகள் எதிர்பார்ப்பதாலும் இலங்கைத் தமிழர்கள் உட்பட சிறுபான்மைச் சமூகத்துக்கு ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது. இந்தியா செய்யும் நிதியுதவிகள் மூலம் நிறுவப்படவிருக்கும் நிலையங்கள் சிறுபான்மையினர் செறிந்து வாழும் இடங்களில் அமைக்கப்படவிருப்பதால், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தொழில்வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியம் அதிகம். அவ்வாறே புலம்பெயர்ந்துள்ளவர்களில் அநேகமானவர்கள் தமிழர்கள் என்பதால், அவர்கள் இலங்கையில் தொழில் முயற்சிகளில் முதலீடு செய்ய முன்வரும்போது, அவற்றிலும் அதிகமான தொழில்வாய்ப்புகள் தமிழர்களுக்கு வழங்கப்படக் கூடும். அத்தோடு, இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளில் புலம்பெயர்ந்தவர்களின் ஆளுமை மேலோங்கும்.
  • இலங்கையில் தற்போது தட்டுப்பாடாக இருக்கும் உணவு, எரிபொருள், மருந்து, மின்சாரம் போன்ற அத்தியாவசிய விடயங்களில் இந்தியா தலையிட்டு உதவிசெய்ய முன்வருவதைப் பாராட்ட வேண்டும். மருந்துத் தட்டுப்பாட்டின் காரணமாக இலங்கையின் அரசாங்க மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்டு, அது குறித்துக் கேள்வியெழுப்ப ஜெய்சங்கருக்கு எழுந்த துணிச்சல்கூட இலங்கையின் அமைச்சர்களுக்கு இருக்கவில்லை.
  • ஆகவே, பொதுமக்கள் இப்போது தம்மை ஆளுவது யார் என்பதைப் பார்ப்பதில்லை. தம்மை யார் ஆதிக்கத்துக்குள்ளாக்கப் போகிறார்கள் என்றெல்லாம் யோசிப்பதில்லை. தம்மை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் பட்டினியின்றியும் யார் வாழ வைக்கப்போகிறார்கள் என்பதை அறியத்தான் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

நன்றி: தி இந்து (03 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்