TNPSC Thervupettagam

இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் படேல்

November 30 , 2018 2185 days 14992 0

To read this article in English: Click Here

சர்தார் படேல்
  • சர்தார் படேல் “இந்தியாவின் இரும்பு மனிதர்” அல்லது “நவீன இந்தியாவின் பிஸ்மார்க்” என்று வெகுவாக புகழப் படுகிறார்.
  • சாதிப் பாகுபாடு, தீண்டாமை, மது அருந்துதல் மற்றும் பெண்கள் விடுதலை ஆகியவற்றிற்கு எதிராக சர்தார் படேல் குஜராத் மாநிலம் மட்டுமன்றி மற்ற மாநிலங்களிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
  • 1928 ஆம் ஆண்டில் நடைபெற்ற பர்தோலி சத்தியாகிரகத்தில் படேல் பங்கு பெற்று விவசாயிகளை ஒன்றிணைத்ததன் விளைவாக “சர்தார்” என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
இளமைக் காலம் மற்றும் அவரது குடும்பம்
  • வல்லபாய் படேல் 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று தற்போதைய குஜராத்தின் நாடியாட் கிராமத்தில் ஜாவர்பாய் மற்றும் லட்பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
  • படேல் 1891 ஆம் ஆண்டில் தன்னுடைய 16-வது வயதில் ஜாவர்பாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மணிபென் படேல் மற்றும் தயாபாய் படேல் ஆகிய இரு குழந்தைகளைப் பெற்றனர்.

  • இவருக்கு 33 வயதாகியிருக்கும் போது ஜாவர்பா படேல் காலமானார். இவர் தன் மனைவியின் மீது அதீத அன்பு செலுத்தினார். இவர் தன் மனைவியின் இறப்பிற்குப் பின்னர் மறுமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்தார்.
கல்வி
  • 1897 ஆம் ஆண்டில் வல்லபாய் படேல் தனது 22-வது வயதில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். அதன்பின் படேல் சட்டத் துறை தேர்வு எழுதுவதற்காக படிக்கத் தொடங்கினார்.
  • படேல் 1910 ஆம் ஆண்டில் சட்டக் கல்வி பயில்வதற்காக இங்கிலாந்தில் உள்ள மிடில் டெம்பிள் என்ற இடத்திற்குச் சென்றார்.
  • படேல் 1913 ஆம் ஆண்டில் தன்னுடைய 38-வது வயதில் “இன்ஸ் ஆப் கோர்ட்டில்” சட்டப் படிப்பை நிறைவு செய்தார். படேல் குஜராத்தில் உள்ள கோத்ராவில் வழக்குரைஞராகப் பணியாற்றுவதற்காக இந்தியாவிற்குத் திரும்பினார்.

  • இவர் 36 மாத காலம் படிக்கக் கூடிய படிப்பை 30 மாதத்திலேயேப் படித்து முடித்தார். படேல் இதற்கு முன் கல்லூரி சென்ற அனுபவம் இல்லாமலேயே இறுதித் தேர்வில் முதலிடம் பிடித்தார்.
1917 - 1923
  • படேல் குஜராத் மன்றத்தில் உறுப்பினரானார். இம்மன்றத்தில் மகாத்மா காந்தி உரையாற்றினார்.
  • 1917 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் குஜராத் பிரிவான குஜராத் சபையின் செயலாளராக சர்தார் வல்லபாய் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1917 ஆம் ஆண்டு செப்டம்பரில் “சுயராஜ்யம்” குறித்த கோரிக்கைக்கான காந்தியின் மனுவில் கையெழுத்திடுவதற்கு இந்தியர்களை ஊக்கப்படுத்துவதற்காக போர்சத் என்ற இடத்தில் ஒரு ஊக்கமளிக்கக் கூடிய உரையை படேல் வழங்கினார்.
  • 1918 ஆம் ஆண்டில் குஜராத்தில் உள்ள கேதா என்றும் அழைக்கப்படுகின்ற கைரா என்ற நகரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பின்பும் பிரிட்டிஷ் அரசாங்கம் விவசாயிகளை வரி செலுத்துமாறு வற்புறுத்தியது. விவசாயிகள் வரி செலுத்த வேண்டாம் என்று “வரி செலுத்தாப் போராட்டத்தை” (No Tax Campaign) படேல் அங்கு தலைமையேற்று நடத்தினார்.
  • படேல் 1917 ஆம் ஆண்டு முதல் 1924 ஆம் ஆண்டு வரை அகமதாபாத்தின் முதலாவது இந்திய நகராட்சி ஆணையராகப் பணியாற்றினார். படேல் 1924 ஆம் ஆண்டு முதல் 1928 ஆம் ஆண்டு வரை அகமதாபாத்தின் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • படேல் 1920 ஆம் ஆண்டு குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார். இவர் 1945 ஆம் ஆண்டு வரை இப்பதவி வகித்தார். இவர் தனது பதவி காலத்தில் அந்த மாகாணத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் கவனத்தை செலுத்தினார்.
  • 1923 ஆம் ஆண்டில் நாக்பூரில் நடைபெற்ற கொடி சத்தியாகிரகப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார். காந்தியின் கைதுக்குப் பின் இந்தியக் கொடியை ஏற்றுவதற்கு பிரிட்டிஷ் அரசின் தடைச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்துவதற்காக படேல் அழைக்கப்பட்டார்.

 

பர்தோலி சத்யாகிரகம் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ்
  • படேல் 1928 ஆம் ஆண்டில் பர்தோலியில் மிகையான வரிவிதிப்புக்கு எதிராக நில உடைமையாளர்களை ஒன்று திரட்டி வெற்றிகரமாக போராட்டம் நடத்தினார்.
  • 1930 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட புகழ்பெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின்போது பல தலைவர்கள் சிறை சென்றனர். அந்தப் போராட்டத்தில் பங்குபெற்று சிறை சென்ற தலைவர்களில் படேலும் ஒருவர்.
  • படேல் 1931 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் கராச்சியில் நடைபெற்ற 49-வது இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1941 - 1945
  • 1940 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்த்து படேலும் கைது செய்யப்பட்டார். அதன்பின் 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் படேல் விடுதலை செய்யப்பட்டார்.
  • 1942 ஆம் ஆண்டில் கிரிப்ஸ் திட்டத்தின் பரிந்துரைகளை படேல் கடுமையாக எதிர்த்தார்.
  • 1942 ஆம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தின் போது படேல் மறுபடியும் கைது செய்யப்பட்டு அகமது நகர் கோட்டையில் 1945 ஆம் ஆண்டு வரை சிறை வைக்கப்பட்டார்.
  • 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தேர்தலில், மொத்தமுள்ள 16 மாநிலங்களில் 13 மாநிலங்கள் சர்தார் படேலை தலைவராகத் தேர்ந்தெடுத்தன.
  • மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கிணங்கி இந்தியப் பிரதமர் பதவிக்கான போட்டியிலிருந்து படேல் விலகினார்.
  • படேல் இந்தியாவின் சார்பாக நாடு பிரிப்பு ஆணையத்தில் பங்கு பெற்றார். மேலும் இவர் நேருவுடன் இணைந்து இந்திய அமைச்சர்கள் குழுவைத் தேர்ந்தெடுத்தார்.

சுதந்திரத்திற்குப் பின்பு
  • இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 15 வரை இந்தியாவின் முதல் துணைப் பிரதமராக படேல் பணியாற்றினார்.
  • மேலும் இவர் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 15 வரை இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
  • படேல் இந்திய அரசியல் ஒருங்கிணைப்பின் போதும் 1947 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட போரின் போதும் இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாகச் செயல்பட்டார் (1947 ஆகஸ்ட் 15 - 1950 டிசம்பர் 15).
  • மேலும் படேல் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார் (1947 ஆகஸ்ட் 15 முதல் 1949 ஆம் ஆண்டு வரை).

  • இவர் அரசியலமைப்பை உருவாக்கும் பணிக்காக பிற தலைவர்களை நியமிக்கும் முடிவை எடுத்தார். மேலும் வரைவுக் குழுவின் தலைவராக டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரை நியமிக்கும் முடிவையும் படேல் எடுத்தார்.
  • அரசியலமைப்புச் சபையில் அடிப்படை உரிமைகள், பழங்குடியின மற்றும் விலக்கப்பட்ட பகுதிகள், சிறுபான்மையினர் மற்றும் மாகாண அரசியலமைப்பு ஆகியவற்றுக்கு பொறுப்புடைய குழுக்களின் தலைவராக படேல் செயல்பட்டார்.
சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்
  • இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்பு இந்திய அரசாட்சியின் கீழ் 562 சுதேச அரசுகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்ததில் படேல் முக்கியப் பங்காற்றினார். இதற்காக படேல் “இந்தியாவின் இரும்பு மனிதர்” என்று அழைக்கப்படுகிறார்.
  • மேலும் காஷ்மீர், ஜூனாகத் மற்றும் ஹைதராபாத் போன்ற சுதேச அரசுகளை இந்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கு படேல் சூத்திரதாரியாக ஒரு முக்கியப் பங்காற்றி செயல்பட்டார்.

  • போலோ நடவடிக்கை (Operation Polo) என்பது 1948 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஹைதரபாத்தின் மீது எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கையின் குறியீட்டுப் பெயராகும்.
  • படேல் இந்திய சுதேச அரசுகளை ஒருங்கிணைப்பதற்காக அப்போதைய மாநிலங்கள் துறை அமைச்சகத்தின் செயலாளரான V.P. மேனனுடன் இணைந்து பணியாற்றினார்.
  • இந்திய அரசியல் ஒருங்கிணைப்பு குறித்த “இந்திய சுதேச அரசுகளின் ஒருங்கிணைப்புக் கதை” என்ற புத்தகத்தை மேனன் எழுதியுள்ளார். மேலும் இவர் இந்தியப் பிரிவினை குறித்த “அதிகார மாற்றம்” என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
மறு கட்டமைப்பு
  • இந்தியக் குடிமைப் பணி மற்றும் இந்தியக் காவல் பணி ஆகியவற்றை உருவாக்கியதில் படேல் முக்கியப் பங்காற்றினார்.
  • இதற்காக படேல் “அகில இந்திய குடிமைப் பணிகளின் தந்தை” எனவும் “இந்தியக் குடிமைப் பணியாளர்களுக்கான புனிதப் புரவலர்” எனவும் அழைக்கப் படுகிறார். மேலும் படேல் இந்தியக் குடிமைப் பணியாளர்களை “நாட்டின் எஃகு சட்டகம்” என்றும் விவரித்தார்.
  • 1948 ஆம் ஆண்டு குஜராத்தின் சௌராஷ்டிராவில் உள்ள சோம்நாத் ஆலயத்தை புதுப்பிப்பதற்கான முயற்சியைத் தொடங்குவதில் படேல் தனிப்பட்ட முயற்சியினை மேற்கொண்டார்.
இறுதி மூச்சு (இறப்பு)
  • படேல் 1950 ஆண்டு டிசம்பர் 15 அன்று ஏற்பட்ட கடுமையான மாரடைப்பின் காரணமாக பம்பாயில் உள்ள பிர்லா இல்லத்தில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
  • அவரது இறுதிச் சடங்கு பம்பாயில் (மும்பையில்) உள்ள சோனாப்பூரில் நடைபெற்றது.
 அங்கீகாரங்கள்
  • படேல் தனது இறப்பிற்குப் பின்பு 1991 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய குடிமகன்களுக்கான விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.
  • 1948 ஆம் ஆண்டில் நவம்பரில் நாக்பூர் பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் படேல் சட்டத்திற்கான கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டார். மேலும் படேல் 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்திடமிருந்து கௌரவ முனைவர் பட்டத்தையும் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பஞ்சாப் பல்கலைக்கழகத்திடமிருந்து முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
  • 1947 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளி வந்த டைம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் படேல் இடம் பெற்றிருந்தார்.
  • படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 ஆம் தேதி ராஷ்டிரியா ஏக்தா திவாஸாக (தேசிய ஒற்றுமை தினம்) 2014 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப் பட்டது.
படேலும் பிற தலைவர்களும்
  • 1923 ஆம் ஆண்டில் சுயராஜ்யக் கட்சியைத் தொடங்கியவர்களில் வல்லபாய் படேலின் மூத்த சகோதரரான வித்தல்பாய் படேலும் ஒருவர். மேலும் வித்தல்பாய் படேல் 1925 ஆம் ஆண்டில் மத்திய சட்டமன்ற அவையின் முதலாவது இந்தியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • 1948 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆட்சி செய்த இந்தியத் தலைமை ஆளுநரான சக்ரவர்த்தி இராஜகோபாலச்சாரி, நேரு மற்றும் படேல் ஆகியோர் மூவரும் இணைந்து “மூவர் குழு” ஒன்றை உருவாக்கினர்.
  • 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன், காந்தியுடன் தனிப்பட்ட முறையில் பேசிய கடைசி மனிதர் படேல் ஆவார்.
நினைவுச் சின்னங்கள்
  • சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம், அகமதாபாத்.
  • சர்தார் சரோவர் அணை, குஜராத்.
  • சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத்.
  • சர்தார் வல்லபாய் படேல் மைதானம், அகமதாபாத்.
 ஒற்றுமைக்கான சிலை
  • இச்சிலையானது 182 மீட்டர் உயரம் (597 ft) கொண்ட உலகின் உயரமான சிலையாகும்.
  • இச்சிலையானது நர்மதா நதியின் மீது அமைந்துள்ள சர்தார் சரோவர் அணையை நோக்கிய “சாது பெட்” என்று பெயர் கொண்ட ஆற்றுத் தீவில் அமைந்துள்ளது.

  • இச்சிலையானது இந்திய சிற்பக் கலைஞரான ராம் வி. சுதரால் வடிவமைக்கப்பட்டது. இச்சிலை படேலின் 143-வது பிறந்த தினமான 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
  • இச்சிலையானது முன்பு உலக சாதனையாக இருந்த சீனாவின் ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள வசந்த கால புத்தர் ஆலயத்தை விட 54 மீட்டர் அதிக உயரம் கொண்டது (177 ft).

- - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்