TNPSC Thervupettagam

இந்தியாவின் ஒளிவிளக்கு ராஜீவ் காந்தி

May 22 , 2023 553 days 341 0
  • தமது 40-வது வயதில், பாரத நாட்டின் இளைய பிரதமராக பொறுப்பேற்று ராஜீவ் காந்தி நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். அன்னை இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரத்தில், கடமை உணர்ச்சியுடன் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டு, அவர் செயலாற்றிய விதம் எல்லோரையும் புல்லரிக்கச் செய்தது.
  • பிரதமர் பொறுப்பை ஏற்ற சில நாட்களிலேயே பொதுத் தேர்தலுக்கு அறிவிப்பு வெளியிட்டு, மொத்தமுள்ள 543 இடங்களில் 414 இடங்களில் வெற்றி பெற்று பெருவாரியான மக்களின் ஆதரவோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பொறுப்பேற்று உலகத்தின் முன் கம்பீரமாக நின்றவர் ராஜீவ் காந்தி. ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவதில் அல்லும் பகலும் அயராது உழைத்தவர்.
  • விஞ்ஞானமும், தொழில்நுட்பமும்தான் இந்த நாட்டின் வறுமையை விரட்ட உதவும் என்று நம்பியவர். நாட்டை எதிர்நோக்கியிருந்த பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திறந்த மனதுடன் முயற்சிகளை மேற்கொண்டார். அவரது அணுகுமுறையில் வித்தியாசம் இருந்தது, மாறுதல் இருந்தது. பஞ்சாப் பிரச்சினையை தீர்ப்பதற்கும், அசாம் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் உடன்பாடு கண்டார்.
  • இந்த உடன்பாட்டை காண்பதில் கட்சி கண்ணோட்டமின்றி, நாட்டு நலனையே பெரிதாக மதித்தார். கூர்கா பிரச்சினையையும், மிசோரம் மக்கள் பிரச்சினையையும் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். ஜனநாயகத்தில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதை தடுத்து, நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா என்கிற அமைப்புகளை உருவாக்கி, மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்குவதில் வெற்றி கண்டவர்.
  • இதன் மூலம் ஜனநாயகத்தை பரவலாக்கினார். அண்டை நாடுகளோடு நல்லுறவு காண்பதில் தீவிரம் காட்டினார். மாலத் தீவில் ஆட்சியை எதிர்த்து கலகப் போர் நடந்தபோது, அந்த அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க ராணுவத்தை அனுப்பி, நொடிப் பொழுதில் அடக்கி, அந்நாட்டை காப்பாற்றிய பெருமை ராஜீவ் காந்திக்கு உண்டு. அந்நிய நாடுகளானாலும், அண்டை நாடுகளானாலும், சுமூகமான உறவு காண சார்க் என்ற அமைப்பை உருவாக்க பெரும் பங்காற்றினார்.
  • கடந்த 1988-ம் ஆண்டில் அவரது சீன விஜயம், சீனாவுடன் நமது உறவுகளை புதுப்பிக்க பெரிதும் உதவியது. நமீபியா விடுதலை பெற, உலக அரங்கில் குரல் கொடுத்து அந்த நாட்டு மக்களுக்கு விடுதலையும் பெற்றுத் தந்தார்.
  • ஒருமுறை ராஜீவ் காந்தி உரையாற்றும்போது ‘‘இந்தியா மிகவும் தொன்மையான, ஆனால் இளம் தேசம். நான் இளைஞன். ஆனால், எனக்கும் கனவு உண்டு. உலகின் முதல் வரிசையில் உள்ள நாடுகளில், மனித குலத்துக்கு தொண்டு புரிவதில் வலுவான, சுதந்திரமான, தற்சார்புள்ள இந்தியா குறித்து கனவு காண்கிறேன்’’ என்றார். இந்தியாவின் சிறந்த வல்லமைமிக்க பிரதமராக அவர் சுடர்விட்டார்.
  • தமிழக மக்களோடு ராஜீவ் காந்தி கொண்டிருந்த நெருக்கமும், அன்பும் அளவற்றவை. 1988-ம் ஆண்டில் 13 முறை தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிராமம் கிராமமாக வாகனத்தை அவரே ஓட்டிச் சென்று வழிநெடுக மக்களை சந்தித்தார். ஏழை எளிய மக்களின் அன்பை பெற்றவராக தமிழ் மக்களின் பாச வெள்ளத்தில் திளைத்தார்.
  • இலங்கை தமிழரின் 40 ஆண்டு கால பிரச்சினையை தீர்க்க இலங்கை அதிபர் ஜெயவர்தனாவுடன் இந்திய–இலங்கை உடன்பாடு கண்டார். இலங்கை தமிழர்களுடைய நல்வாழ்வுக்காக தம் இன்னுயிரை பணயம் வைத்து இலங்கையில் தமிழர் ஆட்சியை உருவாக்கி, தமிழை அரியணையில் ஏற்றி, தமிழ் தாயகப் பகுதியை உருவாக்கியவர் ராஜீவ் காந்தி.
  • மலர்ந்த முகத்துடன் எந்நேரமும் சிரித்தவாறு, எந்த தமிழ் மக்களை நேசித்தாரோ – அதே இனத்தைச் சேர்ந்த அந்நியர்கள் – இந்தியாவின் பகைவர்கள் – தமிழகத்தில் ஊடுருவி – கோழைத்தனமாக 1991 பொதுத் தேர்தல் பரப்புரையின்போது ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பெண்ணை மனித வெடிகுண்டாக பயன்படுத்தி அவரை படுகொலை செய்தார்கள். உலகத் தலைவராக ஒளிவிட்டுப் பிரகாசித்த அந்த அணையா விளக்கை, தேச விரோத சதிகாரர்கள் பலவந்தமாக ஊதி அணைத்து விட்டார்கள்.
  • ஒளிபடைத்த கண்களோடும்–மலர்ந்த முகத்தோடும் நம்மிடையே பவனி வந்த எழுச்சி முரசு அடங்கிவிட்டது. இளைய நிலா மறைந்து விட்டது. இந்திய நாட்டின் பிரதமராக ஐந்தே ஆண்டுகளில் தேசிய, சர்வதேச அரங்கில் பார் போற்றும் வகையில் பல்வேறு சாதனைகளை படைத்த இந்த நூற்றாண்டின் மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு நாள் மே 21, 2023. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவராகவும், பாரத பிரதமராகவும் பொறுப்பேற்று, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய பாரத ரத்னா ராஜீவ் காந்தி புகழ் என்றும் மக்களால் என்றும் நினைவுகூரப்படும்.

நன்றி: தி இந்து (22 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்