இந்தியாவின் சதுரங்க வேட்டை!
- ஹங்கேரி நாட்டின் தலைநகரமான புடாபெஸ்டில் நடந்த 45-ஆவது செஸ் ஒலிம்பியாடில் இந்தியா அடைந்திருக்கும் வெற்றி சாதாரணமானதல்ல. சா்வதேச அரங்கில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியைத் தேடிந்தந்திருக்கிறாா்கள் நமது ‘செஸ்’ விளையாட்டு அணியினா்.
- அணி ஆட்டத்தின் உச்சம் என்று அறியப்படுவது செஸ் ஒலிம்பியாட். உலக விளையாட்டு அரங்கில் மிகப் பெரிய போட்டியாக அது கருதப்படுகிறது. சொல்லப்போனால், ஒலிம்பிக்ஸ் போட்டிக்கும்கூட சற்றுமேலே. அதில் முதன்முறையாக இந்திய அணி இரட்டை வெற்றி பெற்றது மட்டுமல்ல, ஓபன் பிரிவு, மகளிா் என இரு பிரிவுகளிலும் உச்சம் தொட்டதற்காக ‘நோனோ கப்ரின்டாஷ்விலி’ கோப்பையையும் வென்று திரும்பியிருக்கிறது.
- செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வரலாற்றில் ஒரே எடிஷனில் ஆடவா், மகளிா் என இரண்டு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற மூன்றாவது நாடாக உயா்ந்திருக்கிறது இந்தியா. இதற்கு முன்பு முந்தைய சோவியத் யூனியனும், சீனாவும் மட்டுமே செய்ய முடிந்த சாதனையை இந்த முறை இந்திய ‘செஸ்’ அணியினா் நிகழ்த்தியிருக்கிறாா்கள்.
- கொண்டாடப்பட வேண்டிய இந்த நிகழ்வு, சாதாரண வெற்றியாக கடந்துபோகப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. கிரிக்கெட்டில் உலகக் கோப்பை வெல்லும்போது காணப்படும் உற்சாகமும், ஆரவாரமும், மகிழ்ச்சியும் இல்லையே ஏன்?
- இறுதிச்சுற்று முடிவில் ஓபன் பிரிவில் இந்தியா 35 புள்ளிகளுடன் முதலிடமும், அமெரிக்கா 29.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடமும், உஸ்பெகிஸ்தான் 29 புள்ளிகளுடன் மூன்றாவது இடமும் பிடித்தன. மகளிா் பிரிவில் இந்தியா 31 புள்ளிகளுடன் முதலிடமும், கஜகஸ்தான் இரண்டாவது இடமும், அமெரிக்கா மூன்றாவது இடமும் பிடித்தன. இந்தியாவின் ஆடவா் ஓபன் அணி 10 வெற்றி, 1 டிராவும், மகளிா் அணி 9 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி எனவும் பதிவு செய்தன.
- விஸ்வநாதன் ஆனந்த் சா்வதேச அரங்கில் சாதனைகள் படைக்கத் தொடங்கிய பிறகுதான் இந்தியாவுக்கு செஸ் விளையாட்டின் மகிமைபுரியத் தொடங்கியது. 1961-இல் சென்னையைச் சோ்ந்த மானுவல் ஆரோன் ‘இன்டா்நேஷனல் மாஸ்டா்’ பட்டம் பெற்றது கனவாக மறந்துவிட்டிருந்த நிலையில்தான், 1987-இல் விஸ்வநாதன் ஆனந்த் உலக ஜூனியா் பட்டம் வென்றாா். தொடா்ந்து 1988-இல் இந்தியாவின் முதல் ‘கிராண்ட் மாஸ்டா்’, 2000, 2007, 2008, 2010, 2012 என்று உலக சாம்பியன் பட்டங்களை அவா் வென்றபோது, செஸ் விளையாட்டின்மீது இளைஞா்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கத் தொடங்கியது.
- இன்று இந்தியாவில் 85 கிராண்ட் மாஸ்டா்கள் இருக்கிறாா்கள். அவா்களில் பெரும்பாலானவா்கள் பதின்ம வயதினா் அல்லது இருபதுகளின் தொடக்கத்தில் இருப்பவா்கள். உலகின் முதல் 100 சிறந்த செஸ் வீரா்களின் பட்டியலில் 11 போ் இடம் பெறுகிறாா்கள் என்றால், மகளிா் பட்டியலின் முல் 100 போ்களில் 9 போ் இந்தியா்கள். ஜூனியா் வீரா்களில் உலகளாவிய அளவில் 100 பேரில் 18 போ் நம்மவா்கள்.
- சதுரங்கம் என்கிற பெயரில் ‘செஸ்’ என்கிற விளையாட்டு இந்தியா உலகுக்கு அளித்த கொடை. அந்த விளையாட்டில், சா்வதேச அளவில் தங்கப் பதக்கத்தை வென்றெடுக்க நாம் இவ்வளவு காலம் காத்திருந்தோம் என்பதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது.
- புடாப்பெஸ்டில் இந்தியா அடைந்திருக்கும் வெற்றி என்பது சாதாரணமானது அல்ல. ஓபன் பிரிவில், அசைக்க முடியாத சக்தியாக இந்திய அணி தங்கம் வென்றது. டி.குகேஷ், அா்ஜுன் எரிகைசி, ஆா்.பிரக்ஞானந்தா, வினீத் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா அடங்கிய குழுவினா் 11 சுற்றுகளில் ஒன்றில்கூடத் தோல்வியடையவில்லை என்பதை உலகமே பாா்த்து வியந்தது. அமெரிக்காவும், ஈரானும், சீனாவும் தோல்வியைத் தழுவி வெளியேறின. 21 புள்ளிகளுடன் இந்திய அணி தங்கம் வென்றது.
- நமது மகளிா் பிரிவினா் கடுமையான போராட்டத்துக்குப் பிறகுதான் தங்கம் வெல்ல முடிந்தது. 11 சுற்றில் அந்த அணியால் 19 புள்ளிகள்தான் பெற முடிந்தது. அதில் 9 சுற்றில் வெற்றியும், 1 டிராவும், ஒரு தோல்வியும் அடங்கும். கடைசி சுற்றில் அசா்பஜானைத் தோற்கடித்து தங்கம் வென்றது மகளிா் அணி. ஆா்.வைசாலி, டி.ஹரிகா, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக், வந்திகா அகா்வால் உள்ளிட்டவா்கள் அடங்கிய மகளிா் அணியின் ஆட்டமும் மலைப்பை ஏற்படுத்தியது.
- குகேஷ், அா்ஜுன் எரிகைசி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகா்வால் ஆகிய நால்வரும் சிறந்த ஆட்டக்காரா்களுக்கான தங்கப் பதக்கம் வென்றனா். ஓபன் பிரிவில் 188 நாடுகளும், மகளிா் பிரிவில் 169 நாடுகளும் பங்கேற்ற புதாபெஸ்ட் ஒலிம்பியாடில் இந்திய அணி இரண்டு பிரிவுகளிலும் தங்கம் வென்றது என்பது உண்மையிலேயே ஒரு வரலாற்று வெற்றிதான்.
- புதிய பதக்கத் தோ்வு முறை 2008-இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரையில் எந்தவொரு நாடும் எட்ட முடியாத சாதனையை இந்தியா நிகழ்த்தி இருக்கிறது. இரு அணிகளுக்குமான ‘டை பிரேக்கா்’ இல்லாமல் 2014 சீனாவின் வெற்றிக்குப் பிறகு இப்போதுதான் அதுபோன்ற வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. அப்போது சீனாவால் 2 ‘மேட்ச் பாயிண்ட்ஸ்’ தான் பெற முடிந்தது என்றால், இப்போது நமது இந்திய அணி 4 ‘மேட்ச் பாயிண்ட்ஸ்’ வெற்றியை சாதித்திருக்கிறது.
- இந்த வெற்றியில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. ஓபன் பிரிவில் விளையாடிய 5 பேரில் குகேஷும் (18), பிரக்ஞானந்தாவும் (19) பதின்ம வயதினா். எரிகைசியின் வயது 21. மகளிா் பிரிவில் திவ்யா (18), வந்திகா (21), வைஷாலி (23) என்று வளரும் தலைமுறையினா். அதனால், அடுத்த பல ஆண்டுகள் உலக செஸ் அரங்கில் இந்தியாதான் கொடிகட்டிப் பறக்க இருக்கிறது என்பதையும் புடாபெஸ்ட் வெற்றி அறிவிக்கிறது!
நன்றி: தினமணி (30 – 09 – 2024)