TNPSC Thervupettagam

இந்தியாவின் நெற்களஞ்சியம் ஆகுமா தமிழகம்

January 1 , 2023 671 days 391 0
  • உணவு உற்பத்தியில் பெருமைமிகு சாதனைகளைத் தமிழகம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், குஜராத், பிஹார், ஹரியாணா, நாகலாந்து உள்ளிட்ட மாநிங்களில் உணவு உற்பத்தி பரப்பளவு, 2022இல் கணிசமாகக் குறைந்துள்ளது. 20.90 லட்சம் ஹெக்டேர் (5.62%) பரப்பு சாகுபடி குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 22 லட்சம் ஆயிரம் ஏக்கர் சாகுபடி நடந்துள்ளது; விளைச்சலில் 1.22 கோடி டன் சாகுபடி எட்டப்பட்டுள்ளது.
  • காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின்படி தமிழகம் பெற வேண்டியது ஓராண்டுக்கு 177 டி.எம்.சி ஆகும். ஆனால், ஜூன் முதல் செப்டம்பர் வரை, மழைப்பொழிவு மூலமாகவே 468 டி.எம்.சி நீர் கிடைத்தது; இந்த ஆண்டு கொள்ளிடத்தில் ஐந்து முறை வெள்ளம் பெருக்கெடுத்தது. விளைச்சலில் சாதனைக்கு, தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளும் முக்கியக் காரணம். இந்தியாவில் விவசாயத்துக்குத் தனி நிதிநிலை அறிக்கை கொண்டுவந்தது தமிழக அரசுதான்.
  • முன்கூட்டியே மேட்டூரில் தண்ணீரையும் நெல் கொள்முதல் நிலையங்களையும் திறந்து, கடைமடை வரை தண்ணீரையும் கொண்டு சேர்த்தது அரசு. நெல் உற்பத்தியில் இந்திய அளவிலான சாதனை என்பது தமிழகத்துக்குப் புதிதல்ல. 1904-1905இல் ஆங்கிலேயே அரசின் 3 ஆண்டுக்கான வருவாய்த் துறை அறிக்கைப்படி, இந்திய நதிப் பாசனத்தில் காவிரிப் பகுதி முதலிடம் பெற்றது. தமிழகம் அப்பெருமையை இப்போது மீட்க முடியும்.

நெல் கொள்முதல்

  • நெல் கொள்முதலுக்காக நுகர்பொருள் வாணிபக் கழகத்தை 1973இல் தமிழக அரசு தொடங்கியது. ஏகபோகக் கொள்முதல், இணையான கொள்முதல் உள்ளிட்ட பிரத்யேக நடைமுறைகளை இந்த அமைப்பு பின்பற்றியது. 2002 அக்டோபர் 1 முதல் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட கொள்முதல் கொள்கையில் இணைந்து, இந்திய உணவுக் கழக அமைப்பின் கொள்முதல் செய்யும் பணியைத் தமிழக அரசு தொடங்கியது.
  • 2002-03இல் 347 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டன. இதன் கொள்முதல் 1.59 லட்சம் மெட்ரிக் டன்னாக அமைந்தது. படிப்படியாக இது வளர்ந்து நடப்பு ஆண்டு 3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், 58 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதலும் தமிழக அரசின் இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • வேளாண்மை என்பது உற்பத்தியைச் சார்ந்து அல்லாமல், விவசாயிகளின் வருமானம் சார்ந்து இருக்க வேண்டும் என தேசிய விவசாய ஆணையம் கூறுகிறது; எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையும் இதுவே. குவிண்டால் நெல்லுக்கு, கேரள அரசு ரூ.2,820, சத்தீஸ்கர் அரசு ரூ.2,600 வழங்குகின்றன. ஆனால், தமிழக அரசு ரூ.2,065 மட்டுமே தருகிறது. இத்தனைக்கும் குவிண்டாலுக்கு ரூ.2,500 எனத் தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்திருந்தது. அது இன்னும் நிறைவேற்றப்படாதது விவசாயிகளுக்கு ஏமாற்றம் தருகிறது.

ஈரப்பதம்

  • நெல் இயற்கையாக நீர் நிறைவான சூழ்நிலையில் வளரக்கூடியது என்பதால் இயல்பாகவே அறுவடையில் ஈரப்பதம் 20-24% வரை இருக்கும். இப்போதோ மூன்று மாதங்களில் சிறிது சிறிதாகப் பெய்ய வேண்டிய மழை 10 அல்லது 15 நாட்களில் கொட்டித் தீர்க்கிறது. இதனால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து முளைத்து,உடைந்து, வண்ணம் மங்கி, சுருங்கிய நெல்லாக உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஈரப்பதத்தைத் தளர்த்த விவசாயிகள் விண்ணப்பித்தால், அதை டெல்லியிருந்து மத்திய குழு வந்து பார்வையிட வேண்டியிருக்கும். இந்தச் சம்பிரதாயங்கள் முடிவதற்குள் மேலதிக இழப்புகள் ஏற்படுகின்றன; பேரிடர்கள் தொடர்கின்றன. குறிப்பிட்ட செ.மீ. அளவுக்கு மேல் மழைப்பொழிவு இருந்தால், பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிப்பதுபோலவே கனமழை காலங்களில் நெற்பயிரில் ஈரப்பதம் அறிந்து தளர்வு அறிவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும்.
  • ஈரப்பத அளவை துல்லியமாக அறிய டிஜிட்டல் மீட்டர், ஈரப்பத மீட்டர் போன்ற நவீன தொழில்நுட்பத்தை அரசு கையாளலாம். நெல்லை உலர்த்துவதற்கான உலர்களங்களை அதிகரிக்க வேண்டும். சாக்கு, சணல் தட்டுப்பாடு இன்றி கிடைக்கச் செய்யவும், சரக்கு ஏற்றும் வாகனங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.

பயிர்க் காப்பீடு

  • பயிர்க் காப்பீடு என்பது கானலில் மீன் பிடிப்பதைப் போன்றது. கடந்த 5 ஆண்டுகளில் காப்பீடு செலுத்திய விவசாயிகளில் 28% பேர் மட்டுமே பயன்பெற்றுள்ளனர்; 72% விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்கூட இழப்பீடு கிடைக்கவில்லை. தமிழகத்தில் கடந்த இரண்டு குறுவை காலங்களிலும் பயிர்க் காப்பீடு நிறுத்தப்பட்டது. சம்பா சாகுபடி அனுபவமும் துயரமானதுதான். தஞ்சை மாவட்டத்தில் 856 கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள் 3,50,212 ஏக்கருக்கு ரூ.1,33,884 தொகையைப் பயிர்க் காப்பீட்டுக்காக, கடந்த சம்பாவில் பிரீமியமாகச் செலுத்தினார்கள்.
  • இப்பருவத்தில் ஏற்பட்ட கனமழையின் பாதிப்பை முதல்வரும் அமைச்சர்களும் பார்வையிட்டனர். எனினும் இதில் 849 கிராமங்களைப் புறக்கணித்துவிட்டு வெறும் 7 கிராமங்களுக்கு மட்டுமே பயிர்க் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ரூ.17.94 கோடி பிரீமியம் செலுத்திய விவசாயிகள் இழப்பீடாகப் பெற்றது ரூ.35.42 லட்சம் மட்டுமே ஆகும். இது பயிர்க் காப்பீடு குறித்து விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முறைகேடுகள்

  • நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் ஊழல்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு எச்சரித்தது; எனினும் இந்த ஊழல்கள் களையப்படவில்லை. 1881இல் சென்னை மாகாண ஆளுநராக கிரான்ட் டஃப் இருந்தபோது, லஞ்ச-ஊழலுக்கு எதிராக உழவர்கள் போராடினர். அப்போது உழவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டது ஊழலுக்குக் காரணமான தாசில்தார் ஒருவர் தண்டனை பெற்று சிறைக்குச் செல்லும்வரை விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தது.
  • இந்த வகை ஊழலின் ஊற்றுக்கண் இன்றுவரை அடைக்கப்படவில்லை என்பது துயரம். கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் போதுமான ஊதியம் இல்லை என்றும், கொள்முதல் நிலைய மின்கட்டணத்துக்குக்கூட அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும் ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தச் சூழலை அரசு மாற்ற வேண்டும். எல்லாவற்றையும் மீறி ஊழல் நடக்குமானால் கொள்முதல் நிலையங்களில் பணப்பட்டுவாடா நடத்த ரோபாட் இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

தீர்வுகள்

  • இந்தியாவின் பல மாநிலங்களில் உணவு உற்பத்தி குறையும்போது முன்னேற்றம் காட்டும் தமிழகத்துக்கு, சிறப்பு நெல் கொள்முதல் முறையை மத்திய அரசு அறிவித்து ஊக்கப்படுத்த வேண்டும். நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களைத் தேவைக்கேற்ப இயக்கி ஊழலுக்கு எதிராகத் தமிழக அரசு இரும்புக் கரம் ஏந்த வேண்டும்.

நன்றி: தி இந்து (01 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்