TNPSC Thervupettagam

இந்தியாவின் பொருளாதார நிலை

June 2 , 2022 797 days 548 0
  • பாகிஸ்தானின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் எரிபொருள்கள் விலை கடந்த மே 26-ஆம் தேதி ரூ.30 உயர்த்தப்பட்டதால், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.179.86 ஆகவும், டீசல் ரூ.174.15 ஆகவும் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலை நேற்று (ஜூன் 1) ஒரே நாளில் ரூ.213 உயர்த்தப்பட்டதால் ஒரு லிட்டர் ரூ.605 என வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
  •  "லாகூரில் எந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் பெட்ரோல் இல்லை. ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லை. அரசியல் முடிவுகளால் பொதுமக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?' - இது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸின் ட்விட்டர் பதிவு.
  • இலங்கையில், கடந்த 50 நாள்களாக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். பொருளாதார பாதிப்பு ஏதோ இந்த இரண்டு நாடுகளுக்குத்தான் என்று நாம் எண்ணிவிட வேண்டாம். உலகில் உள்ள பல நாடுகளின் நிலைமை இதுதான்.
  • உக்ரைன் மீதான ரஷியப் படையெடுப்பு தொடங்குவதற்கு முன்பே, கடன் நிலவரம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், 70 நாடுகள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தது. கரோனா நெருக்கடியில் இருந்து உலக நாடுகள் மீண்டு மூச்சு விடுவதற்குள் உக்ரைன் - ரஷிய போர் தொடங்கி, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட்டது.
  • உக்ரைன் போர் காரணமாக 107 நாடுகள் கடும் நெருக்கடியை சந்திக்க உள்ளன என்றும், இதில் 69 நாடுகள் உணவுப் பொருள்களின் விலை உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, நிதி நெருக்கடி போன்றவற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்படக் கூடும் என்றும் ஐ.நா. கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்திருந்தது.
  • போருக்கு முன்பாக உலகின் கோதுமை ஏற்றுமதியில் ரஷியா, உக்ரைனின் பங்கு 28%. பயிர்களுக்கு முக்கிய உரமான பொட்டாஷ் ஏற்றுமதியில் ரஷியா, பெலாரஸின் பங்கு 40%. எரிபொருள் ஏற்றுமதியிலும் ரஷியாவின் பங்கு கணிசமானது. போரால் கோதுமை, பொட்டாஷ், எரிபொருள் ஆகியவற்றின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
  • போர் சூழலில் ஏற்றுமதி, உணவு விநியோக சங்கிலியில் பாதிப்பு காரணமாக உகாண்டா, கென்யா, எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, நேபாளம், செனகல், கோஸ்டாரிகா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவுப் பொருள்களின் விலை மிகமிக கடுமையாக அதிகரிக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) எச்சரித்திருக்கிறது. இதில் பெரும்பான்மையானவை ஆப்பிரிக்க நாடுகளாகும்.
  • அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கவில்லை என்றாலும், ஐரோப்பிய நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி விண்ணைத் தொட்டுள்ளது. ரஷியாவுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுப்பதற்காக, இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷியாவிலிருந்தான கச்சா எண்ணெய் இறக்குமதியில் 90% ஐ நிறுத்த ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இதனால், ரஷியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டாலும், ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை புதிய உச்சத்தை தொடக்கூடும்.
  • ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பல பில்லியன் டாலர்களை உக்ரைனுக்கு அளித்து போர் முடிவுக்கு வராமல் பார்த்துக் கொள்கின்றன. இன்னொருபுறம், போர் காரணமாக உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்துக்கும் இந்த நாடுகள் பெரும் தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
  • கரோனாவுக்கு முன்பே கடனில் சிக்கிய ஏழை நாடுகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு உதவிக்கரம் நீட்டி வந்தன. கரோனா பாதிப்பு, உக்ரைன் போர் காரணமாக ஏழை நாடுகளுக்கு செய்து வந்த நிதி உதவியை ஐரோப்பிய நாடுகள் முற்றிலுமாக நிறுத்தக்கூடும். "ஏழை நாடுகளுக்கு உதவுபவர்கள், அதை நிறுத்திவிட்டு போருக்கு அதிகம் செலவழித்தால் அது பெரும் சோகத்தில்தான் முடியும்' என்று எச்சரிக்கிறார் ஐ.நா. சபையின் துணை பொதுச் செயலாளர் அமினா முகமது.
  • உணவு, எரிபொருள் பற்றாக்குறை, அதிக வறுமை போன்றவை இலங்கையிலும், பாகிஸ்தானிலும் காணப்படுவது போல பொருளாதார வளர்ச்சி அடையாத பெரும்பாலான நாடுகளில் சமூக அமைதியைக் கேள்விக்குறியாக்கக் கூடும். இலங்கையைப் போல மக்கள் தெருவில் இறங்கி போராடி அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
  • ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் நாட்டில் விலைவாசி சற்று அதிகரித்திருந்தாலும்கூட, தட்டுப்பாடில்லாமல் நாம் தொடர முடிகிறது. மத்திய அரசால் சுமார் 80 கோடி பேருக்கு இரண்டாண்டுகளுக்கும் மேலாக மாதாமாதம் 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுவது உலகின் வேறெந்த நாட்டிலும் செய்யப்படாத சாதனை. வலிமையான நிர்வாகக் கட்டமைப்பும், தேவைக்கு அதிகமான உணவு உற்பத்தியும், தளர்வில்லாத பொருளாதார இயக்கமும் இதற்கு முக்கியமான காரணிகள். மக்கள் செல்வாக்குள்ள வலுவான தலைமையும்கூட காரணம்.
  • மிகவும் இக்கட்டான சூழலில் உலகம் சிக்கிக் கொண்டிருக்கிறது. உக்ரைன் - ரஷியப் போர் முடிவுக்கு வந்தாலும், மீண்டெழுவதற்கு சில ஆண்டுகளாகும். அதைக் கருத்தில் கொண்டு நாம் முன்னெச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்!

நன்றி: தினமணி (02 – 06– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்