- ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார ஏற்றத்துக்குமான அடித்தளங்களில் போக்குவரத்துக் கட்டமைப்பு முதன்மையானது. உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாகமுன்னேறிவரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாகப் போக்குவரத்து சேவைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
- மத்திய அரசும் மாநில அரசுகளும் சாலை, ரயில், விமானம் என அனைத்து விதமான போக்குவரத்து முறைகளையும் முழுவீச்சில் மேம்படுத்திவருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முதல் ‘வாட்டர் மெட்ரோ’ போக்குவரத்துச் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி கேரளத்தில் நேற்று தொடங்கிவைத்தார். இன்று முதல் இத்திட்டம் மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.
இதுவரை...
- கேரளத்தில் மக்கள்தொகை அதிகமுள்ள மாவட்டங்களில் கொச்சியும் ஒன்று; கேரளத்தின் வணிகத் தலைநகரமாகவும் அது கருதப்படுகிறது. கொச்சியில் உள்ள வேம்பநாடு ஏரியின் படகுப் போக்குவரத்தே சரக்கு, பயணிகள் போக்குவரத்துக்கு முதன்மையான வழியாக அந்தக் காலத்தில் இருந்தது. ஆனால், சில பத்தாண்டுகளாக இந்த நீர்வழிப் போக்குவரத்துச் சேவை வெகுவாகக் குறைந்தது. இந்தச் சூழலில்தான், கொச்சியில் ‘வாட்டர்மெட்ரோ’ போக்குவரத்துச் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.
திட்டத்துக்கான செலவு:
- ‘வாட்டர் மெட்ரோ’ திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2017இல் தொடங்கப்பட்டன. உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘கொச்சி வாட்டர் மெட்ரோ’ திட்டத்துக்கு கேரள மாநில அரசும், ஜெர்மனியின் கே.எஃப்.டபிள்யூ. எனும்முதலீட்டு நிறுவனமும் இணைந்து ரூ.819 கோடி முதலீடு செய்துள்ளன. இதில்பெரும்பகுதியை, அதாவது ரூ.579 கோடியை நீண்ட காலக் கடன் ஒப்பந்த அடிப்படையில் கே.எஃப்.டபிள்யூ. நிறுவனம் அளித்திருக்கிறது.
திட்டத்தின் சிறப்புகள்:
- இந்தத் திட்டம் மின்சாரத்தால் இயங்கும் 78 ஹைபிரிட் படகுகளையும், 38 படகு நிலையங்களையும் (ஜெட்டிகள்) கொண்டுள்ளது. இதன் படகுகளும் படகு நிலையங்களும் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவான வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கண்ணாடி நாரிழை (ஃபைபர்) பொருள்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹைப்ரிட் படகுகள், வெள்ளம் அதிகரிக்கும்போதும், குறையும்போதும் சீராகப் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- குளிர்சாதன வசதியைக் கொண்டிருக்கும் இந்தப் படகுகளை கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படகுகள் பேட்டரி மூலம் இயங்குபவை; சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டவை. 15 நிமிடங்களுக்குள் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் திறன் கொண்ட பல வேகமான சார்ஜிங் நிலையங்களையும் இந்தத் திட்டம் கொண்டுள்ளது.
- இந்தத் திட்டத்தால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொச்சி ஏரிக்கரையை ஒட்டி அமைந்துள்ள நகர்ப்புறக் குடும்பங்கள் வணிகம் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வது இந்தத் திட்டத்தின் மூலம் எளிதாகும்.
வழித்தடங்கள்:
- கொச்சியின் ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம் 15 வழித்தடங்களில் இயங்கும். இந்த வழித்தடங்களின் வலையமைப்பு கொச்சியைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கிறது. இந்த வலையமைப்பின் மொத்த நீளம் 78 கி.மீ. ஆகும். இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, கொச்சி உயர் நீதிமன்றம் படகு நிலையத்திலிருந்து வைப்பின் படகு நிலையத்துக்கு வாட்டர் மெட்ரோ படகு இயக்கப்படுகிறது. இந்தப் படகில் இன்று (ஏப்ரல் 26) முதல் மக்கள் பயணிக்கலாம். வைற்றிலா, காக்கநாடு இடையிலான பாதையில் நாளை (ஏப்ரல் 27) முதல் ‘வாட்டர் மெட்ரோ’ படகு இயக்கப்படும்.
திருப்புமுனையின் தொடக்கப்புள்ளி:
- அமெரிக்காவில் விமானப் போக்குவரத்தும் சாலைப் போக்குவரத்தும் சிறப்பாக இருந்தாலும் அந்நாட்டில் கப்பல் போக்குவரத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 500 ஜெட்டிகளையும் 700 கப்பல்களையும் கொண்டிருக்கும் கப்பல்போக்குவரத்துச் சேவை அங்கே 37 மாகாணங்களையும் இணைக்கிறது.
- இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம் கேரளத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன் சுற்றுச்சூழல் மாசடைவதையும் கட்டுப்படுத்தும். சாத்தியமுள்ள பிற மாநிலங்களும் கேரள முறையைப் பின்பற்றினால் அது இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.
நன்றி: தி இந்து (26 – 04 – 2023)