TNPSC Thervupettagam

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏழு தடைக்கற்கள்!

September 12 , 2024 126 days 140 0

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏழு தடைக்கற்கள்!

  • உலக பொருளாதார வல்லரசாக இந்தியா உருவாக வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதல்ல.
  • உக்ரைனிலும் காஸவிலும் தொடர்ந்துவரும் போர்ப் பதற்றம் உலகளாவிய சரக்கு விநியோகச் சங்கிலியில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உலகச் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் உலகப் பொருளாதார வளர்ச்சி இதுவரை இல்லாத அளவாக 3 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. சர்வதேச அளவில் பொருளாதாரத் தேக்கநிலை காணப்படுகையில் இந்தியா மட்டும் தனித்து தப்பிவிட இயலாது. சக்தி வாய்ந்த பொருளாதாரமாக இந்தியா மாற, உலக பொருளாதாரச் சூழலும் ஒத்துழைக்க வேண்டும்.
  • கடந்த இரு பத்தாண்டுகளாக இந்தியா வளர்ந்த தேசமாக மாறுவது குறித்து அவநம்பிக்கையுடனேயே பேசப்பட்டு வந்துள்ளது. அதற்கேற்ப, சமாளிக்க முடியாத சில சிக்கல்களை நாடு எதிர்கொண்டு வருகிறது. வளர்ச்சிக்கு அடிப்படையான, நேர்மறை சிந்தனைகளை வளர்க்காமல், விஷ வித்துகளைத் தூவும் மோசமான கருத்தாக்கங்களை நாடு தற்போது எதிர்கொள்வதுபோல வேறெப்போதும் கண்டதில்லை. இது தேச வளர்ச்சி தொடர்பான மக்களின் சிந்தனையைத் தடம் மாற்றுகிறது. தற்போது கிளப்பப்படும் ஜாதி அடையாள அரசியல் இதை மேலும் மோசமாக்குகிறது.
  • பிரதமர் மோடியின் கனவான வளர்ந்த இந்தியா என்பது எந்த அடிப்படையில் சாத்தியமானது? இதற்கு கடந்த இரு பதவிக் காலத்திலும் அவரது ஆட்சித் திறனே ஆவண சாட்சியமாக நிற்கிறது. உறங்கிக் கிடந்த பொருளாதாரத்தை விழிப்படையச் செய்வதில் மோடி வெற்றி பெற்றிருக்கிறார். மந்தச் சூழலை மீறி, எந்த விரயமுமின்றி, மக்கள் நலத் திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
  • சமையல் எரிவாயு இணைப்புகள், நியாயவிலைக் கடைகளில் இலவச உணவு தானிய விநியோகம், கிராமங்களில் கழிப்பறைகள் அமைத்தல், வீட்டுவசதித் திட்டங்கள், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, சாலைகள் விரிவாக்கம் போன்ற திட்டங்களை மோடி அரசு இதுவரை காணாத வேகத்தில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. இதன் விளைவாக, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக்கிறது. தற்போது உலக அரங்கில் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) 8 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது. உலகில் எந்த ஒரு நாடும் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதத்துக்கு இணையாக இல்லை.
  • ஆனால் இது போதாது. இலவச கவர்ச்சித் திட்டங்களைவிட, வறுமையிலிருந்து வெளியேறிய கோடிக்கணக்கான நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மிகவும் உச்சத்தில் இருக்கிறது. இந்த அதீத விழைவைப் பூர்த்தி செய்வது லேசான காரியமல்ல.
  • பல கோடி இளைஞர்களின் கனவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. அவர்கள் தரமான வாழ்க்கை வாழ விரும்புகின்றனர். இந்த எதிர்பார்ப்புகளை அரசு பூர்த்தி செய்யுமா? இந்தக் கேள்விக்கான பதில் எளிதானதல்ல. ஏனெனில், இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக ஏழு தடைக்கற்கள் அமைந்திருக்கின்றன.

கல்வியும் வேலைவாய்ப்பும்:

  • இந்தியா எதிர்கொள்ளும் சவால்களில் மிகவும் முக்கியமானது வேலைவாய்ப்பின்மை பிரச்னைதான். அண்மையில் வெளியான பொருளாதார ஆய்வு ஒன்றில், ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 78.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக "ஸ்கில் இந்தியா' போன்ற 5 திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வந்தாலும், அவை தற்காலிகமானவையாகவே காட்சி அளிக்கின்றன. கிழிசல்களை மறைக்கத் தைப்பது போன்ற இந்த உத்திகளால், அடிப்படை பிரச்னையைத் தீர்க்க இயலாது.
  • அதைவிட சிக்கலான பிரச்னை, வேலைக்கேற்ற தகுதியான நபர்கள் கிடைப்பது சிரமமாகி வருவதுதான். நாட்டில் செயல்படும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் பெயரளவிலான பட்டதாரிகளை உருவாக்குகின்றனவே ஒழிய, அறிவுக் கூர்மையுள்ள, திறமையான இளைஞர்களை உருவாக்குவதில்லை. அரசு கல்வி நிறுவனங்களின் தரமோ அதலபாதாளத்தில் இருக்கிறது. இவற்றைச் சரிசெய்ய எந்தத் தீவிரமான முனைப்பும் காட்டப்படுவதாகத் தெரியவில்லை.
  • 2023-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கல்வி ஆய்வறிக்கையின்படி, 14 - 18 வயதுக்குட்பட்ட இந்திய மாணவர்களில் கால்வாசிப் பேர் பிராந்திய மொழியில் உள்ள இரண்டாம் வகுப்பு பாடநூலைக்கூட பிழையின்றிப் படிக்க இயலாமல் தடுமாறுகின்றனர். அதேபோல எளிய வகுத்தல் கணக்குகளைக்கூட இவர்களில் 43% பேரால்தான் தீர்க்க முடிகிறது.
  • திறமையுள்ள, தகுதியான நபர்களுக்காக லட்சக் கணக்கான வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளன. அறிவுக் கூர்மை பற்றாக்குறை பட்டியலில் இந்தியா உலக அளவில் ஏழாமிடம் வகிக்கிறது. வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களில் 81 சதவீதத்தினர், திறனுள்ள பணியாளர்கள் கிடைப்பது அரிதாக இருப்பதாகக் கூறுகின்றனர். திறனுள்ள பணியாளர்களுக்கான இடைவெளி 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை இருக்கிறது. திறமையான வேலைகளுக்கு நபர்கள் தட்டுப்பாடு இருக்கும் அதேவேளையில், பல கோடி பேர் வேலைவாய்ப்பின்றி இருப்பதுதான் முரண்பாடான சிக்கல்.

சீனாவுடன் வர்த்தகப் பற்றாக்குறை:

  • இந்திய - சீன இரு தரப்பு வர்த்தகம் 118 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது; இதில் இந்தியாவின் ஏற்றுமதி 16.67 பில்லியன் டாலர் மட்டுமே. அதாவது, சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 100 பில்லியன் டாலராக உள்ளது. நாட்டின் ஏற்றுமதி குறைவாகவும், இறக்குமதி அதிகமாகவும் இருப்பது சீரற்ற வர்த்தகமாகும்.
  • இதனால், வர்த்தகப் பற்றாக்குறை உருவாகிறது. பொருளாதார ஆய்வறிக்கை இதைச் சமாளிக்க இயலாத "சீன சவால்' என்று கூறுகிறது. இந்திய எல்லையில் தேசப் பாதுகாப்புக்கு சீனா அச்சுறுத்தலாக இருந்தாலும், அதனுடனான வர்த்தகப் பங்களிப்பை இந்தியாவால் தவிர்க்க இயலாது என்பதே நிதர்சனம்.

நிர்வாகத்தில் ஊழல்:

  • நிர்வாகத் திறமையின்மையும் ஊழலும் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரும் தடைகளாக உள்ளன. நரேந்திர மோடி பிரதமரான பிறகு அரசின் உயர்நிலைகளில் ஊழல் தடுக்கப்பட்டுவிட்டது என்பது உண்மை. அதேபோல, செல்வாக்கான அரசியல்வாதிகளின் தலையீடுகளும் உயர்நிலை அளவில் இல்லை. ஆனால், அடிமட்டத்தில் ஊழல் இன்னும் புரையோடித்தான் இருக்கிறது. நிர்வாகச் சோம்பலும் லஞ்சமும் அதன் கட்டமைப்பின் உள்ளேயே ஓர் அங்கமாகத் தொடர்கின்றன. இதைத் தவிர்க்க எத்தனை திட்டங்களை வகுத்தாலும், நடைமுறைக்கு வராத வரை எந்தப் பலனும் இல்லை.

நீதித் துறையில் சீர்திருத்தம்:

  • "தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படுவதற்கு ஒப்பானது' என்றொரு பழமொழி உண்டு. நமது நாட்டின் நீதிமன்றங்கள் தரும் புள்ளிவிவரங்களே இதற்கு சாட்சியம். தற்போது நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5.1 கோடிக்கும் மேல். குறிப்பாக, மாவட்ட நீதிமன்றங்கள், மாநில உயர் நீதிமன்றங்களில் தீர்க்கப்படாமல் தேங்கியுள்ள 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1.80 லட்சம்! நீதித் துறையில் சீர்திருத்தம் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

லாபமற்ற விவசாயம்:

  • தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2023-24-ஆம் நிதியாண்டுக்கான வேளாண் உற்பத்தி விகிதம் 1.4%. இரண்டாவது முன்னோட்ட மதிப்பீடும் 0.7 சதவீதமாக உள்ளது. நாட்டு மக்கள்தொகையில் 45.8% பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விவசாயத் துறையில் வளர்ச்சி இவ்வளவு குறைவாக இருப்பது நல்லதல்ல. ஏனெனில், விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை. தனி நபருக்கு 5 கிலோ அரிசியும் கோதுமையும் இலவசமாக வழங்குவது இதற்கான தீர்வல்ல. வேளாண் சீர்திருத்தங்கள் காலத்தின் தேவையாகும். ஆனால், மத்திய அரசு நிறைவேற்ற முயற்சித்த வேளாண் சீர்திருத்தங்களை சுயநலக் கும்பல்கள் போராட்டங்களால் தடுத்து நிறுத்திவிட்டன.

திசைதிருப்பும் கருத்தாக்கங்கள்:

  • நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பவை, திட்டமிட்ட ரீதியில் உருவாக்கப்படும் மோசமான கருத்தாக்கங்களே. வெளிநாடுகளின் உதவியுடன் உள்நாட்டில் இயங்கும் குழுக்களால் விதைக்கப்படும் தவறான கருத்தாக்கங்கள் நமது முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக இருக்கின்றன. இவை, பச்சைப் பொய்கள், அரைகுறை உண்மைகள், ஜோடிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் ஆதாரத்தில் பரப்பப்படுகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டில் திட்டமிட்ட ரீதியில் (டூல்கிட்) கிளப்பிவிடப்பட்ட ஆர்ப்பாட்டங்களை இங்கு நினைவில் கொள்ளலாம்.

மின் விநியோகத் தடைகள்:

  • நமது தனி நபர் மின் நுகர்வு பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 1947-இல் இந்தியாவில் தனி நபரின் சராசரி மின் நுகர்வு 16 யூனிட்களாக இருந்தது. இது 2023 மார்ச் மாதத்தில் 1,327 யூனிட்களாக அதிகரித்துள்ளது. ஆயினும், மின்சாரத்தைக் கொண்டு செல்வதிலும், விநியோகத்திலும் ஏற்படும் இழப்புகள், உலக தரநிர்ணயத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாக இருக்கின்றன. இதற்கு உள்கட்டமைப்பில் திறனற்ற நிர்வாகமும், ஊழலும், மின் திருட்டும் காரணங்களாக இருக்கின்றன. நாம் பொருளாதாரத்தில் வளர வேண்டுமானால், மின் விநியோகத்தில் உடனடி மாற்றங்கள் நிகழ்ந்தாக வேண்டும்.

நன்றி: தினமணி (12 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்