TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 07

November 24 , 2024 53 days 431 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 07

(For English version to this please click here)

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) 2016 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.
  • இந்த திட்டம் இயற்கைச் சீற்றங்கள், பூச்சிகள் மற்றும் நோய்களால் ஏற்படும் பயிர் இழப்பு அல்லது இவற்றால் சேதம் ஏற்பட்டால் விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு மற்றும் நிதி உதவி வழங்க உதவுகிறது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • இடர் குறைப்பு: வெள்ளம், வறட்சி, நிலச் சரிவு, ஆலங்கட்டி மழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் பயிர் இழப்பைச் சந்திக்கும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குதல்.

  • வருமானத்தை நிலைப்படுத்துதல்: விவசாயிகளின் வருமானத்தை உறுதிப்படுத்தி, பயிர் இழப்பு ஏற்பட்டாலும் தொடர்ந்து விவசாயம் செய்ய வழி வகை செய்தல்.

  • நவீன செயல்முறைகளை ஊக்குவித்தல்: விவசாய உற்பத்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்த நவீன தொழில்நுட்பம் மற்றும் செயல்முறைகளைப் பின்பற்ற விவசாயிகளை ஊக்குவித்தல்.
  • நிதி அளிப்பு: விவசாயத் துறைக்குத் தொடர்ச்சியான நிதி அளிப்பினை உறுதி செய்து, அதன் மூலம் உணவுப் பாதுகாப்பு, பயிர் பல்வகைப்படுத்துதல் மற்றும் விவசாயத் துறையின் போட்டித் தன்மையை மேம்படுத்துதல்.

பயனாளிகள்:

  • வருடாந்திர உணவுப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் தோட்டக் கலைப் பயிர் சாகுபடியில் ஈடுபடும் சிறு மற்றும் பெரு விவசாயிகள்.

  • நிறுவனக் கடன் பெறாத விவசாயிகள்: நிறுவனக் கடன் பெறாத விவசாயிகள் தன்னார்வப் பங்கேற்பைத் தேர்வு செய்யலாம்.

தகுதி அளவுகோல்கள்:

  • உணவுப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் வருடாந்திரத் தோட்டக் கலைப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள்.
  • நிறுவன கடன் பெறுபவர்கள்: பயிர் உற்பத்திக்காக வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள் தன்னிச்சையாக இத்திட்டத்தில் பதிவு செய்யப் படுவார்கள்.

  • கடன் பெறாதவர்கள் தானாக முன்வந்து பங்கு பெறுதல்: கடன் பெறாத விவசாயிகள் சுய விருப்பத்தின் பேரில் தானாகவே இத்திட்டத்தில் பங்கேற்கலாம்.
  • வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள்: வடகிழக்கு மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு அதிக காப்பீட்டு மானியங்களுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பலன்கள்:

  • விரிவான காப்பீட்டுத் தொகை: வெள்ளம், வறட்சி, பூச்சித் தாக்குதல்கள் மற்றும் பிற உள்ளூர் இடர்பாடுகள் போன்ற பலவிதமான பேரிடர்களை இந்தக் காப்பீட்டுத் தொகை உள்ளடக்கி இருக்கிறது.
  • அறுவடைக்குப் பிந்தைய இழப்புக் காப்பீடு: பருவமழை மற்றும் சூறாவளியால் ஏற்படும் இழப்புகள் உட்பட, அறுவடைக்குப் பிறகு ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீடு வழங்கப் படுகிறது.
  • விரைவான உரிமைகோரல் தீர்வு: விரைவான மற்றும் துல்லியமாக பயிர்ச் சேதத்தை மதிப்பிடுவதற்கு ஆளில்லா விமானங்கள், தொலை உணர் கருவிகள் மற்றும் திறன்பேசிகள் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

  • குறைக்கப்பட்ட காப்பீட்டுச் சுமை: அரசாங்கம் காப்பீட்டு மானியங்களை வழங்குவதோடு அந்தக் காப்பீட்டுச் செலவை அரசாங்கம், விவசாயிகள் மற்றும் காப்பீட்டாளர் ஆகியோருக்கு இடையே பகிர்ந்து கொள்கிறது.
  • நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT): உடனடியாக பணம் செலுத்துவதை உறுதி செய்வதற்காக, காப்பீட்டுத் தொகையானது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படுகின்றது.

முக்கிய அம்சங்கள்:

  • பகுதி சார்ந்த அணுகுமுறை: PMFBY ஒரு "பகுதி சார்ந்த அணுகுமுறை" என்பதைப் பயன்படுத்துகிறது, இதில் தனிப்பட்ட வேளாண் நிலங்களுக்குப் பதிலாக, முழுப் பகுதிகளுக்கும் (ஊராட்சிகள் அல்லது கிராமங்கள்) காப்பீட்டுத் தொகை வழங்கப் படுகிறது.  

  • காப்பீட்டு மானியம்: அரசாங்கம் காப்பீட்டு மானியங்களை வழங்குகிறது.
  • பாசனம் இல்லாத பகுதிகளுக்கு, மத்திய மானியம் 30% வரையும், பாசன பகுதிகளுக்கு 25% வரையும் வழங்கப் படுகிறது.

  • மேம்படுத்தப்பட்ட அறுவடைக்குப் பிந்தைய இழப்புக் காப்பீட்டு: இந்தத் திட்டத்தில் முன்பு சேர்க்கப் படாத வகைகளான பருவம் தவறிய மழை, சூறாவளி மழை மற்றும் பூச்சிகளால் ஏற்படும் பயிர் இழப்புகள் சேர்க்கப் பட்டுள்ளன.

மறுசீரமைப்பு (PMFBY 2.0):

  • PMFBY திட்டத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றும் வகையில் அதை மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

PMFBY 2.0 திட்டத்தில் உள்ள சில முக்கிய மாற்றங்கள்:

  • வடகிழக்கு மாநிலங்களுக்கான மானியம் அதிகரிப்பு: வடகிழக்கு மாநிலங்களுக்கான மத்திய அரசின் காப்பீட்டு மானியத்தின் பங்கு 50%லிருந்து 90% ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
  • மாநிலங்களுக்கான நெகிழ்வுத் தன்மை: மாநிலங்களுக்கு, இப்போது மாவட்டங்களுக்கான நிதி அளவைத் தேர்வு செய்யவும் மற்றும் கூடுதலாக இடர்களினால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தேர்ந்தெடுக்கவும் விருப்பம் உள்ளது.
  • விரைவான உரிமைகோரல் தீர்வு: தொழில்நுட்பத் தலையீடுகள் மகசூல் மதிப்பீடுகளை விரைவாகக் கணக்கிடவும், உரிமைக் கோரல்களை விரைவாகத் தீர்க்கவும் உதவுகின்றன.
  • காலதாமதத்திற்கான அபராதம்: குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தேவையான காப்பீட்டு மானியத்தை வழங்கத் தவறினால், மாநிலங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

விலக்குகள்:

  • திட்டம் பின்வருவனவற்றை உள்ளடக்காது:
  • போர், பயங்கரவாதம் அல்லது அபாயகரமான நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் இழப்புகள்.
  • கலவரங்கள் அல்லது தீங்கிழைக்கும் சேதங்களால் ஏற்படும் இழப்புகள்.
  • வீட்டு அல்லது காட்டு விலங்குகளால் ஏற்படும் மகசூல் அழிவு.
  • அணுசக்தி அபாயங்களின் மூலம் மாசுபடுவதால் ஏற்படும் இழப்புகள்.

கூடுதல் தகவல்:

  • செயல்படுத்தல்: மாநில அரசுகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் இணைவதன் மூலம் PMFBY செயல்படுத்தப்படுகிறது.
  • இந்தத் திட்டம் விவசாயத் துறையை மேம்படுத்துவதையும், விவசாயத்துடன் தொடர்புடைய சிக்கல்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • திறன் மாதிரித் தொழில்நுட்பம்: சேத மதிப்பீட்டின் துல்லியத்தை மேம்படுத்த, பயிர் வெட்டும் பரிசோதனைகளுக்கு (CCEs) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.
  • தகவல், தொலைதொடர்பு மற்றும் கல்வி (ICE): இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, காப்பீட்டு நிறுவனங்கள் மொத்தக் காப்பீட்டில் 0.5% அளவை ICE நடவடிக்கைகளுக்குச் செலவிட வேண்டும்.

நிலையான வேளாண்மைக்கான தேசியத் திட்டம் (NMSA)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2014-15.
  • நிலையான வேளாண்மைக்கான தேசியத் திட்டம் (NMSA) என்பது பருவநிலை மாற்றம் மீதான இந்தியாவின் தேசிய செயல் திட்டத்தின் (NAPCC) கீழ் உள்ள எட்டு திட்டங்களில் ஒன்றாகும்.

  • இந்தத் திட்டம் விவசாயத் துறையின் நிலைத் தன்மையை மேம்படுத்துதல், உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் மற்றும் விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், சுற்றுச்சூழல் நிலைத் தன்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பிற துறைகள் மற்றும் அமைச்சகங்களின் ஆகியன NMSA செயல்படுத்தப் படுவதற்குப் பொறுப்பான தலைமை முகமை ஆகும்.

NMSA திட்டத்தின் நோக்கங்கள்:

  • நிலையான வேளாண்மைக்கான தேசியத் திட்டத்தின் (NMSA) முதன்மை நோக்கங்கள்:
  • உற்பத்தித் திறன், நிலைத் தன்மை மற்றும் பருவ நிலை மாற்றத்தை எதிர்க்கும் தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இடம் சார்ந்த ஒருங்கிணைந்த விவசாய முறைகளை ஊக்குவித்தல்.
  • விவசாயச் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க இயற்கை வளங்களை, குறிப்பாக மண் மற்றும் நீரைப் பாதுகாத்தல்.
  • மண் வள வரைபடங்கள், உரங்களின் சரியான பயன்பாடு மற்றும் துல்லியமான ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் மண் சுகாதார மேலாண்மையை மேம்படுத்தல்.
  • நீர் ஆதாரப் பயன்பாட்டை மேம்படுத்த "ஒரு சொட்டுக்கு அதிகப் பயிர்" என்ற ஒரு உத்தியைச் செயல்படுத்துவதன் மூலம் நீர் பயன்பாட்டுச் செயல்திறனை அதிகரித்தல்.
  • விவசாயிகள் மற்றும் பங்குதாரர்களுக்கான பருவ நிலை மாற்றத் தழுவல் மற்றும் தணிப்பு உத்திகளில் திறனை மேம்படுத்துதல், NICRA (பருவ நிலை மீள்திறனுடைய வேளாண்மை மீதான தேசியப் புதுமையாக்கல் திட்டம்) போன்ற பிற தேசிய முன்னெடுப்புகளுடன் இணைத்தல்.

  • மானாவாரி விவசாயத்தின் இலக்குகளை அடையவும், மானாவாரி பகுதிகளில் உற்பத்தியை மேம்படுத்தவும், திறம்பட துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை உறுதி செய்தல்.
  • NICRA உருவாக்கிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, MGNREGS (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்) போன்ற பிற திட்டங்களில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி மானாவாரி விவசாயத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்த, தேர்ந்தெடுக்கப் பட்ட தொகுதிகளில் புதுமையான மாதிரிகளை உருவாக்குதல்.

NMSA திட்டத்தின் கூறுகள்:

  • NMSA திட்டமானது நான்கு முக்கியக் கூறுகளைக் கொண்டது, ஒவ்வொன்றும் நிலையான விவசாய வளர்ச்சியின் வெவ்வேறு அம்சங்களை நோக்கமாகக் கொண்டது:

மானாவாரி பகுதி மேம்பாடு (RAD):

  • மானாவாரிப் பகுதிகளில் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான விவசாய முறைகளை ஊக்குவிக்கிறது.
  • தற்போதுள்ள நீர்நிலை மேம்பாட்டுத் திட்டங்களிலிருந்து (MGNREGS, RKVY போன்றவை) வளப் பயன்பாட்டை மேம்படுத்த "நீர்நிலை-கூடுதல்" கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது.

  • விவசாயம், தோட்டக் கலை, கால்நடைகள், மீன்வளம் மற்றும் வேளாண் காடுகளை இணைத்து ஒருங்கிணைந்த அணுகுமுறைகளில் கவனம் செலுத்துகிறது.
  • மண் வளக் குறிப்பேடுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது மற்றும் விவசாய கால நிலைக் காரணங்களின் அடிப்படையில் பொருத்தமான பயிர் தேர்வு செயயப் படுகிறது.

வேளாண் நில நீர் மேலாண்மை (OFWM):

  • மழைநீர் சேகரிப்பு மற்றும் திறமையான நீர்ப்பாசன முறைகள் போன்ற நீர் சேமிப்புத் தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், வேளாண்மை நிலங்களில் நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நீர் பயனீட்டாளர் சங்கங்கள் மற்றும் பங்கேற்பு அணுகுமுறைகள் மூலம் நீர்வள மேலாண்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • நீர் பயன்பாடு மற்றும் விநியோக அமைப்புகளின் செயல்திறனை அதிகப்படுத்தும் நடைமுறைகளை ஊக்குவிக்கிறது.

மண் வள மேலாண்மை (SHM):

  • மண் வள வரைபடங்களின் வளர்ச்சி மற்றும் மண் பரிசோதனையின் அடிப்படையில் பொருத்தமான பெரு மற்றும் நுண்-ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
  • மண் அரிப்பு மற்றும் சீரழிவைத் தடுக்க நிலையான நிலப் பயன்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுவதை ஆதரிக்கிறது.
  • கரிம வேளாண்மைக்கான தேசிய மையம் (NCOF) மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளின் இலக்குத் தலையீடுகள் மூலம் உப்பு, காரம் மற்றும் அமில மண் போன்ற பிரச்சனைக்குரிய மண்ணை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • கரிம வேளாண்மை நுட்பங்களை ஒருங்கிணைப்பதற்கும், உள்ளூர் மண் மற்றும் நிலப் பண்புகளுக்கு ஏற்ப சிறந்த நடைமுறைத் தொகுப்புகளை உருவாக்குவதற்கும் உதவுகிறது.

திறன் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் (CBTT):

  • விவசாயிகள் மற்றும் பங்குதாரர்களின் காலநிலை-மீள்தன்மை விவசாய நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • பயிற்சித் திட்டங்கள், செயல்விளக்கம் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் மூலம் அறிவு மற்றும் தொழில்நுட்பங்களை மாற்றுவதற்கு உதவுகிறது.
  • உற்பத்தித் திறன், நிலைத் தன்மை மற்றும் மீள்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு காலநிலைத் திறன் விவசாய செயல்முறைகளைப் பரப்புவதை ஊக்குவிக்கிறது.

வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகள்:

  • NMSA திட்டம் திறம்படச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, பின்வரும் விதிமுறைகள் நிறுவப்பட்டுள்ளன:
  • அறுவடை மற்றும் போக்குவரத்துக்கான வழிகாட்டுதல்கள்: இந்த வழிகாட்டுதல்கள் வேளாண் காடுகளின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அவற்றின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்யவும் உதவுகின்றன.
  • தேசிய வேளாண் வனவியல் கொள்கை (2014): இந்தக் கொள்கையானது, விவசாய நிலங்களில் மரங்களை ஒருங்கிணைப்பதை ஊக்குவிப்பதோடு மரங்களின் பரப்பை அதிகரிப்பதையும், மண் வளத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • இழப்பீட்டுக் காடு வளர்ப்பு நிதி: காடு வளர்ப்பு நிவாரண நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் (CAMPA) திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்பார்வை செய்கிறது, நிலையான விவசாயம் மற்றும் காடு வளர்ப்பு திட்டங்களுக்கு நிதி பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்கிறது.

வேளாண் காடு வளர்ப்புத் துணைத் திட்டம் (SMAF):

  • NMSA திட்டத்தின் கீழ், விவசாய நிலங்களில் பயிர் உற்பத்தியை நிறைவு செய்யும் வகையில், மரங்களின் பரப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2016-17 ஆம் ஆண்டில் வேளாண் காடு வளர்ப்புத் துணைத் திட்டம் (SMAF) தொடங்கப்பட்டது.
  • இந்த முன்னெடுப்பு 2014 ஆம் ஆண்டின், தேசிய வேளாண் வனவியல் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

SMAF திட்டத்தின் நோக்கங்கள்:

  • அதிக கரிமப் பொருட்கள் மூலம் மண் வளத்தை மேம்படுத்தல்.
  • வேளாண் காடுகளுக்கு உயர்தர நடவுப் பொருட்களை வழங்குதல்.
  • மரங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் பயிர்கள் மற்றும் பயிர் முறைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்தல்.
  • வேளாண் காடு வளர்ப்பு மூலம் விவசாயிகளுக்கு நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.
  • வேளாண் காடு வளர்ப்பு முயற்சிகளை ஆதரிக்க பயனுள்ள தகவல் அமைப்பை நிறுவுதல்.

SMAF திட்டத்தின் முக்கியக் கூறுகள்:

  • விவசாய நிலங்களில் மரங்களை வளர்ப்பதை ஊக்குவித்தல்.
  • வேளாண் காடு வளர்ப்பு முறைகளை விவசாயிகள் கடைபிடிப்பதற்கான திறனை வளர்ப்பது.
  • நீண்ட கால நிலைத்தன்மைக்காக வனவியல் மற்றும் விவசாய உற்பத்தி இரண்டையும் ஒருங்கிணைக்கும் வேளாண் வனவியல் மாதிரிகளின் பயன்படுத்துதல்.

NMSA திட்டத்திற்கான தகுதி அளவுகோல்கள்:

  • மானாவாரிப் பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அல்லது மண் ஆரோக்கியம், நீர் மேலாண்மை மற்றும் காலநிலை மீள் தன்மையை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளவர்கள்.
  • உற்பத்தித் திறன் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத் தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, பயிர்ச் சாகுபடியுடன் மரங்களை ஒருங்கிணைப்பதில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு வேளாண் காடு வளர்ப்பு முயற்சிகளில் பங்கு பெறலாம்.

NMSA திட்டத்தின் நன்மைகள்:

  • மேம்படுத்தப் பட்ட நீர் மற்றும் மண் மேலாண்மை மூலம் மானாவாரிப் பகுதிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்.
  • காலநிலை-திறன்சார்ந்த விவசாயச் செயல்முறைகள் மூலம் காலநிலை மீள்தன்மைத் திறனை அதிகரித்தல்.
  • மேம்பட்ட மண் ஆரோக்கியம் சிறந்த விவசாய உற்பத்திகள் மற்றும் நீண்ட கால நிலைத் தன்மைக்கு வழி வகுக்கும்.
  • திறமையான நீர்ப் பாசன முறைகள் மற்றும் நீர்ப் பாதுகாப்பு நடைமுறைகள் மூலம் நிலையான நீர் பயன்பாடு.

கூடுதல் தகவல்:

  • பிற திட்டங்களுடன் இணைத்தல்: NICRA (பருவ நிலை மீள்திறனுடைய வேளாண்மை மீதான தேசியப் புதுமையாக்கல் திட்டம்) மற்றும் MGNREGS (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்) போன்ற பிற தேசிய முன்னெடுப்புகள் உடன் இணைந்து NMSA திட்டம் செயல்படுகிறது.

  • தொழில்நுட்ப ஆதரவு: மண்ணின் வளத்தை வரைபடமாக்குவதற்கும், நீர் வளங்களை மதிப்பிடுவதற்கும், செயல்படுத்தப்பட்டத் திட்டங்களின் வெற்றியைக் கண்காணிப்பதற்கும் புவியியல் தகவல் அமைப்பு (GIS) மற்றும் தொலை உணர்வு தொழில்நுட்பங்களை இந்தத் திட்டம் உள்ளடக்கியுள்ளது.
  • கிராமப்புற வளர்ச்சியுடன் ஒருங்கிணைப்பு: ஒருங்கிணைந்த நீர்நிலை மேலாண்மைத் திட்டம் (IWMP) மற்றும் RKVY (ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா) போன்ற கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களிலிருந்து NMSA திட்டமானது வளங்களைப் பயன்படுத்துகிறது.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்