TNPSC Thervupettagam

இந்தியாவில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள்

June 4 , 2024 220 days 3304 0

(For English version to this please click here)

அறிமுகம்:

  • ஒரு அரசியல் கட்சி என்பது பகிரப்பட்ட அரசியல் சித்தாந்தங்களால் ஒன்றிணைந்த தனி நபர்களின் கூட்டாகும், இது தேர்தலில் போட்டியிடுவதையும், சமூக நலனுக்காக முன்மொழியப் பட்ட கொள்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துவதன் மூலம் ஆட்சி நிர்வாகம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் கட்சிகளானது தேசிய, மாநில அல்லது பிராந்தியக் கட்சியாக இருந்தாலும், உள்ளூர், மாநில அல்லது தேசியத் தேர்தல்களில் பங்கேற்க விரும்பினால், இவை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் (ECI) பதிவு செய்ய வேண்டும்.

  • அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் மற்றும் அந்தஸ்தானது, அவற்றின் தேர்தல் செயல்திறனுக்கு ஏற்றவாறு ஏற்ற இறக்கமாகக் காணப்படும், மேலும் அவை தேசிய, மாநில அல்லது பிராந்தியக் கட்சிகளாக வகைப்படுத்தப்படுவதைத் தீர்மானிக்கிறது.
  • இந்தியாவில் ஜனநாயகச் செயல்முறையை வடிவமைப்பதில் அரசியல் கட்சிகள் வகிக்கும் முக்கியப் பங்கினை அரசியலமைப்புக் கட்டமைப்பானது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அரசியல் கட்சிகள்: பொருள் மற்றும் வகைகள்

  • அரசியல் கட்சிகள் என்பது ஒரே மாதிரியான அரசியல் கருத்துக்களைக் கொண்ட தனி நபர்களின் குழுக்கள் ஆகும், அவை அரசியலமைப்பு வழிமுறைகள் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கும், தேசிய நலன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் இணைந்து செயல்படுகின்றன.

அரசியல் கட்சிகளின் வகைகள்

  • பிற்போக்குக் கட்சிகள்: இவை பழைமையான சமூக-பொருளாதார மற்றும் அரசியல் கட்சிகளைப் பராமரிக்க எண்ணுகிறது.
  • பழமைவாத கட்சிகள்: இவை தற்போதைய நிலையை அப்படியே பாதுகாக்க எண்ணுகிறது.
  • தாராளவாத கட்சிகள்: இவை தற்போதுள்ள அமைப்புகளில் சீர்திருத்தத்தை மேற்கொள்கிறது.
  • தீவிரக் கட்சிகள்: தற்போதைய அமைப்புகளை வெளியேற்றுவதன் மூலம் இக்கட்சிகள் ஒரு புதிய ஒழுங்கை நிறுவுகிறது.

இந்தக் கட்சிகள் பெரும்பாலும் அவற்றின் சித்தாந்தங்களின் அடிப்படையில் வகைப் படுத்தப் படுகின்றன:

  • இடதுசாரி கட்சிகள்:
  • இவை குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்காக, தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இவற்றில் இந்தியாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் (மாக்சிஸ்ட்) கட்சி கட்சிகளும் அடங்குகிறது.
  • மையக் கட்சிகள்:
  • மையக் கட்சிகளானது தடையற்ற சந்தைப் பொருளாதாரம் மற்றும் சமூக நலக் கொள்கைகளுக்கு இடையேயான சமநிலையை ஆதரிக்கும் வகையில் ஒரு மைய நிலையினை ஆக்கிரமிக்கிறது.
  • இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஒரு முக்கிய மையக் கட்சியாகும்.
  • வலதுசாரி கட்சிகள்:
  • இக்கட்சிகள் பாரம்பரிய மதிப்புகள், தேசிய அடையாளம் மற்றும் பொருளாதார தாராள மயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பழமைவாத சித்தாந்தங்களின் தழுவுல்களாக உள்ளன.
  • இந்தியாவில் பாஜக கட்சி முன்னணி வலதுசாரி கட்சியாக உள்ளது.

கட்சி அமைப்புகளின் வகைகள்

  • ஒரு கட்சி அமைப்பு: இவ்வமைப்பில் ஒரு ஆளும் கட்சி மட்டுமே உள்ளது, எதிர்க்கட்சி இல்லை. (எடுத்துக்காட்டு: முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா).
  • இரு கட்சி அமைப்பு: இவ்வமைப்பில் இரண்டு பெரிய கட்சிகள் உள்ளன. (எடுத்துக்காட்டு: அமெரிக்கா, இங்கிலாந்து).
  • பல கட்சி அமைப்பு: இவ்வமைப்பில் பல கட்சிகள் உள்ளன, மேலும் இது கூட்டணி அரசாங்கங்களுக்கு வழி வகுக்கும். (எடுத்துக்காட்டு: பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி).

இந்தியாவில் கட்சி அமைப்பு

இந்தியக் கட்சி அமைப்பின் சிறப்பியல்புகள்

  • பல கட்சி அமைப்பு – பன்முகத் தன்மை மற்றும் பெரியது: இந்தியாவின் கண்ட அளவு, பன்மைத் தன்மைச் சமூகம் மற்றும் உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமை ஆகியவை ஏராளமான அரசியல் கட்சிகளின் பங்களிப்பைப் பிரதிபலிக்கின்றன.
  • பல கட்சிகள்: உலகில் இந்திய நாடானது, அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகளைக் கொண்டுள்ளது.
  • பரந்த நிலைப்பாடு: இந்தக் கட்சிகளானது அனைத்து சித்தாந்தங்களையும் உள்ளடக்கிய - இடதுசாரி, மத்திய, வலதுசாரி, வகுப்புவாத மற்றும் வகுப்புவாதமற்ற கட்சிகளைக் கொண்டு உள்ளது.
  • கூட்டணி அரசாங்கங்கள்: பல கட்சிகளின் இருப்பானது பெரும்பாலும் தொங்குப் பாராளுமன்ற மற்றும் சட்டசபைகளுக்கு வழிவகுக்கிறது, மேலும் இதன் விளைவாக கூட்டணி அரசாங்கங்கள் உருவாகின்றன.

தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் அங்கீகாரம்

  • தேர்தல் ஆணையமானது, அரசியல் கட்சிகளைத் தேர்தலுக்காகப் பதிவு செய்து, தேர்தல்களில் அவற்றின் செயல்திறன் அடிப்படையில், தேசிய அல்லது மாநில கட்சிகளாக அங்கீகாரம் அளிக்கிறது.
  • இவை தவிர மற்ற கட்சிகள் பதிவு செய்யப்பட்ட - அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக அறிவிக்கப் படுகின்றன.
  • அங்கீகாரம் என்பது கட்சிச் சின்னங்கள், அரசியல் கட்சி ஒளிபரப்புக்கான நேரம் மற்றும் வாக்காளர் பட்டியல்களுக்கான அணுகல் போன்ற செயல்களின் அடிப்படையில் தீர்மானிக்கப் படுவதாகும்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சிறப்புரிமைகள்

  • சின்னங்கள்: தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கான பிரத்தியேக சின்னங்களைக் குறிக்கிறது.
  • ஒளிபரப்பு: அரசுக்குச் சொந்தமான தொலைகாட்சி மற்றும் வானொலியில் ஒளிபரப்ப நேரம் ஒதுக்கப் படுகிறது.
  • நியமனம்: வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரு முன்மொழிபவர் மட்டுமே தேவைப்படுகிறது.
  • பிரச்சாரம் செய்வோர்கள்: தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் 40 நட்சத்திரப் பிரச்சாரகர்களை வைத்திருக்கலாம்; அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பிரச்சாரகர்களை வைத்திருக்கலாம்.
  • நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பயணச் செலவுகளானது வேட்பாளர்களின் தேர்தல் செலவில் சேர்க்கப் படவில்லை.

தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கான நிபந்தனைகள்

  • ஒரு கட்சி கீழ்க்கண்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்தால் அது தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
  • வாக்குகள் மற்றும் இடங்கள்: மக்களவை அல்லது சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலில், ஏதேனும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6% செல்லுபடியாகும் வாக்குகளைப் பெற்று, நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதாகும்.
  • மக்களவைத் தொகுதிகள்: பொதுத் தேர்தலில், குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள்  2% செல்லுபடியாகும் வாக்குகளைப் பெற்று, மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதாகும்.
  • மாநிலக் கட்சி நிலை: நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படுவதாகும்.

இந்தியாவில் உள்ள அனைத்து தேசியக் கட்சிகளின் பட்டியல்

  • 6 தேசியக் கட்சிகளும், 56 அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளும், 2796 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப் படாத அரசியல் கட்சிகளும் உள்ளன.

  • ஏப்ரல் 10, 2023 அன்று, இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) மூன்று முன்னாள் தேசியக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ் (TMC), தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகியவற்றின் தேசியக் கட்சி அந்தஸ்தை ரத்து செய்தது.
  • இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை (AAP) தேசியக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கான நிபந்தனைகள்

  • ஒரு கட்சி கீழ்க்கண்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்தால், அது மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
  • வாக்குகள் மற்றும் சட்டமன்ற இடங்கள்: சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலில் மாநிலத்தில் 6% செல்லுபடியாகும் வாக்குகளைப் பெற்று, இரண்டு சட்டமன்ற இடங்களைப் பெற வேண்டும்.
  • வாக்குகள் மற்றும் மக்களவைத் தொகுதிகள்: மக்களவைக்கான பொதுத் தேர்தலில் மாநிலத்தில் 6% செல்லுபடியாகும் வாக்குகளைப் பெற்று ஒரு மக்களவைத் தொகுதியிலும் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
  • சட்டமன்ற இடங்கள்: சட்டப் பேரவையில் 3% இடங்கள் அல்லது மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் எது அதிகமோ அதில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
  • மக்களவைத் தொகுதிகள்: மக்களவைக்கான பொதுத் தேர்தலில் ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்ட ஒவ்வொரு 25 இடங்களுக்கும் ஒரு மக்களவைத் தொகுதி அல்லது அதில் ஒரு பகுதியில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
  • வாக்குகள்: மக்களவை அல்லது சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் மாநிலத்தில் மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 8% பெற்று இருக்க வேண்டும் (2011 ஆம் ஆண்டில் சேர்க்கப் பட்டது).

இந்தியாவில் பிராந்தியக் கட்சிகளின் பங்கு

பிராந்தியக் கட்சிகளின் அம்சங்கள்

  • செயல்பாட்டு நோக்கம்: இவை பொதுவாக ஒரு குறிப்பிட்ட மாநிலம் அல்லது பிராந்தியத்தில் செயல்படுகிறது.
  • பிராந்திய அடையாளம்: இக்கட்சிகள் பிராந்திய நலன்களை வெளிப்படுத்தச் செய்வதோடு குறிப்பிட்ட கலாச்சாரம், மதம், மொழியியல் அல்லது இனக்குழுக்களுடன் அடையாளம் காணப் படுகிறது.
  • உள்ளூர் கவனம்: உள்ளூர்ப் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள், பெரும்பாலும் மொழி, சாதி, சமூகம் அல்லது பிராந்தியத்துடன் தொடர்புடையவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • மாநில அளவிலான அதிகாரம்: இவை மத்திய அரசில் அதிகாரம் பெறுவதில் கவனம் செலுத்தாமல், மாநில அளவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டது.
  • பிராந்திய சுயாட்சி: இந்திய ஒன்றியத்திற்குள் உள்ள மாநிலங்களுக்கு அதிக சுயாட்சியினைப் பெற்றிட எண்ணுகிறது.

பிராந்தியக் கட்சிகளின் வகைப்பாடு

  • கலாச்சாரம்/ இன அடிப்படையிலான வகைப்பாடு: பிராந்தியக் கலாச்சாரம் அல்லது இனம் சார்ந்த கட்சிகளாகும். எடுத்துக்காட்டு: சிரோமணி அகாலி தளம் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, திமுக கட்சி.
  • அகில இந்தியக் கண்ணோட்டம்: தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்ட கட்சிகள், ஆனால் அவை வரையறுக்கப்பட்ட தேர்தல் தளத்தை அடிப்படையாகக் கொண்டது. எடுத்துக்காட்டு: சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி.
  • பிளவுபட்ட குழுக்கள்: இவை தேசியக் கட்சிகளில் ஏற்பட்ட பிளவுகளால் உருவாக்கப்பட்ட கட்சிகளாகும். எடுத்துக்காட்டு: பிஜு ஜனதா தளக் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.
  • தனிநபர் கட்சிகள்: தனிப்பட்டத் தலைவர்களால் அவர்களின் திறமை அடிப்படையில் உருவாக்கப் பட்டது. எடுத்துக்காட்டு: லோக் ஜனசக்தி கட்சி, இமாச்சல் விகாஸ் காங்கிரஸ் கட்சி.

பிராந்தியக் கட்சிகளின் எழுச்சி

  • பிராந்தியக் கட்சிகளின் தோற்றத்திற்குப் பங்களிக்கும் காரணிகள்:
  • கலாச்சார மற்றும் இன வேறுபாடு.
  • பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள்.
  • வரலாற்று அடையாளத்தைப் பாதுகாப்பது.
  • பதவியில் இருந்து நீக்கப் பட்ட மகாராஜாக்கள் மற்றும் ஜமீன்தார்களின் நலன்கள் குறித்தவை.
  • பிராந்தியத் தேவையை  நிவர்த்தி செய்வதில் தேசிய அரசியலின் தோல்வி.
  • மாநிலங்களின் மொழிவாரி மறுசீரமைப்பு.
  • திறமையான பிராந்திய தலைவர்கள்.
  • பெரிய கட்சிகளுக்குள் கூட்டப் பூசல்கள்.
  • காங்கிரஸ் கட்சியின் அதிகார மையப்படுத்தல் போக்கு.
  • பலவீனமான மத்திய எதிர்க் கட்சிகள்.
  • அரசியலில் சாதி மற்றும் மதத்தின் பங்கு.
  • பழங்குடி குழுக்களிடையே அந்நியப்படுதல் மற்றும் அதிருப்தி.

பிராந்தியக் கட்சிகளின் பங்கு

  • ஆளுகை: பிராந்திய அளவில் சிறந்த நிர்வாகத்தையும், நிலைத்தன்மையையும் வழங்குகிறது.
  • ஆதிக்கத்திற்குச் சவால்: காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தைக் குறைப்பது என்ற நிலையில், ஒரு கட்சி ஆதிக்க அமைப்புக்குச் சவாலாக இருக்கிறது.
  • மத்திய-மாநில உறவுகள்: மத்திய-மாநில உறவுகளில் செல்வாக்கு, அதிகப் பிராந்திய சுயாட்சிக்கு அழுத்தம் கொடுகிறது.
  • போட்டிமிகு அரசியல்: அரசியலை அதிக போட்டித் தன்மை கொண்டதாக ஆக்கி, அடிமட்ட அளவிலான அரசியல் பங்கேற்பை அதிகரிக்கிறது.
  • வாக்காளர் தேர்வு: பிராந்திய நலன்களில் கவனம் செலுத்தி, தேர்தல்களில் வாக்காளர் தேர்வை விரிவுபடுத்துகிறது.
  • அரசியல் விழிப்புணர்வு: உள்ளூர்ப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, அரசியல் உணர்வு மற்றும் அரசியலில் பங்கேற்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது.
  • மத்திய அதிகாரத்தைச் சரிபார்த்தல்: மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்குகளுக்கு எதிராகச் செயல்படுகிறது.
  • பாராளுமன்ற ஜனநாயகம்: சிறுபான்மை கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டிற்குப் பங்களிப்பு அளிக்கிறது.
  • ஆளுநரின் பங்கு: மாநில விவகாரங்களில் ஆளுநர்களின் தரப்பிலான பங்களிப்பை அம்பலப் படுத்துகிறது.
  • கூட்டணி அரசியல்: இக்கட்சிகள் தேசியக் கட்சிகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறது, மேலும் மத்தியில் கூட்டணி அரசாங்கங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பிராந்தியக் கட்சிகளின் செயலிழப்பு

  • பிராந்திய மற்றும் தேசிய நலன்கள்: தேசிய நலன்களை விட பிராந்தியத்திற்கு முன்னுரிமை தருவது, சில சமயங்களில் அதிக தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
  • பிரிவினையை ஊக்குவித்தல்: பிராந்தியவாதமானது சாதிவாதம், மொழிவாதம், வகுப்புவாதம் மற்றும் பழங்குடிவாதம் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டைத் தடுக்கிறது.
  • மாநிலங்களுக்கிடையேயான தகராறுகள்: இரு மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப் பங்கீடு, எல்லைகள் சார்ந்த மற்றும் பிற பிரச்சனைகளில் பங்களிப்பை வழங்குகிறது.
  • ஊழல் மற்றும் வாரிசு அரசியல்: சுயநலத்தை ஊக்குவிக்கும் வகையில் ஊழல், வாரிசு அரசியல் மற்றும் ஆதரவில் ஈடுபடுகிறது.
  • மக்கள்நலன்சார் நடவடிக்கைகள்: இவை தேர்தல் தளத்தை வலுப்படுத்த மக்கள்நலன்சார் திட்டங்களில் கவனம் செலுத்தி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு அடிக்கடி தீங்கு விளைவிக்கிறது.
  • கூட்டணி செல்வாக்கு: கூட்டணி அரசாங்கங்களில், முடிவெடுப்பதில் செல்வாக்கு செலுத்துவதன் மூலம் பிராந்தியக் கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது.

முடிவுரை:

  • அரசியல் கட்சிகள் இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பு போன்றவை, இவை பல்வேறு கண்ணோட்டங்களையும், கருத்துகளையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.
  • தேசிய ஜாம்பவான்கள் முதல் பிராந்திய ஜாம்பவான்கள் வரை, அனைவரும் ஆட்சி நிர்வாகத்தை வடிவமைக்கிறார்கள் மற்றும் சமூக நலனுக்காக வாதிடுகின்றனர்.
  • தேர்தல் செயல்திறனின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்ட கட்சிகள் மாறும் அரசியல் கட்டமைப்புக்கு ஏற்றவாறு தம்மை மாற்றி அமைக்கின்றன.
  • இடதுசாரிக் கட்சிகள் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அதே வேளையில், வலதுசாரிக் கட்சிகள் கலாச்சாத்ர தேசியவாதத்தை நிலை நிறுத்துகின்றன, மேலும் பிராந்தியக் கட்சிகள் உள்ளூர் அடையாளங்களை முன்னிலைப்படுத்துகின்றன.
  • அவற்றின் எழுச்சியானது சிக்கல்களை ஏற்படுத்தி, நுணுக்கமானப் பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது, எனினும் அவை தேசிய ஒற்றுமைக்குச் சவால் விடுக்கின்றன.
  • இறுதியில், அரசியல் கட்சிகளின் செயல்திறனானது, இந்திய ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது.
  • உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்த, உரையாடல் மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்தை ஊக்குவிப்பதன் மூலம், அரசியல் கட்சிகள் நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்