TNPSC Thervupettagam

இந்தியாவுக்கு பிரிட்டன் வழிகாட்டும் மருத்துவ சேவை

May 20 , 2021 1346 days 563 0
  • கரோனாவுக்கு எதிராக மருத்துவத் துறையினர், நோயாளிகளின் குடும்பத்தினர், அரசுகள் எல்லாம் அசுரத்தனமான முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர்.
  • ஆனால், சுனாமியைப் போல் சூறையாடிக்கொண்டிருக்கும் கரோனா மேலும் மேலும் நிலைமையை மோசமாக்கிவருகிறது. தற்போது நோய்த் தொற்றுகளில் காணப்படும் அதிகரிப்பானது இந்திய மருத்துவக் கட்டமைப்பில் நிலவும் கிட்டத்தட்ட அலங்கோலமான சூழலைத் தோலுரித்துக்காட்டியிருக்கிறது.
  • மருத்துவ உலகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்; அவர்களுக்குத்தான் கரோனா தொற்றும் ஆபத்து அதிகம் இருக்கிறது.
  • அதே நேரத்தில், ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் தங்கள் எல்லைகளுக்கு உட்பட்டும் எல்லைகளைக் கடந்தும் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கின்றன.
  • எடுத்துக்காட்டாக, ஆக்ஸிஜன் உருளைகளைக் கொண்டுசெல்வதற்காகச் சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்குகிறது; விநியோகச் சங்கிலியில் ராணுவமும் ஈடுபடுத்தப் பட்டுள்ளது.
  • கர்நாடக அரசானது குறிப்பிட்ட அளவைவிடப் பெரியதாக இருக்கும் மருத்துவமனைகள் தங்களின் 75% படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
  • கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். பிற மாநிலங்களும் இதைப் போன்ற நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.
  • ஆக்ஸிஜனையும் தடுப்பூசிகளையும் விநியோகிப்பதற்கு ஒரு தேசியச் செயல்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கொன்றில் கூறியுள்ளது.
  • கரோனா நோயாளிகளை அதிக அளவு அனுமதிக்க வேண்டும் என்ற அரசு உத்தரவுக்குத் தனியார் மருத்துவத் துறையினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; தேசிய விநியோகச் செயல்திட்டம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள கூக்குரலானது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
  • குறிப்பிட்ட அளவு ஏழை நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தாக வேண்டும் என்று இருக்கும் நிபந்தனையைச் செயல்படுத்தத் தவறியதால் ஒரு தனியார் மருத்துவக் குழுமம் நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்ளானது.

அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் அமைப்பு

  • எனினும், தற்போதைய நெருக்கடியானது பெயரளவிலான நமது மருத்துவக் கட்டமைப்பின் மீதுதேசத்தின் கவனத்தைத் திருப்பியிருக்கிறது.
  • இந்தியாவின் மருத்துவ நிலையங்கள், மருத்துவமனைகள், வெவ்வேறு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாகவும், பெரிதும் ஊழல்மயமானவையாகவும், நகர்ப்புறம் சார்ந்தவையாகவும், மேல்தட்டினரையே மையம் கொண்டவையாகவும் உள்ளன.
  • அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதிகளும் மிகவும் குறைவு. இவற்றையெல்லாம் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இவையெல்லாம் நிறுவனங்கள், ஊழியர்கள், சேவைகள் போன்றவற்றின் தற்செயலான தொகுப்பு என்ற அளவிலேயே காட்சி தருகின்றன.
  • 2021-22 நிதியாண்டில் சுகாதாரத்துக்கு இரு மடங்கு நிதி ஒதுக்கப்படவிருக்கிறது. ஆனால், அது வெகு காலமாக மொத்த உற்பத்தி மதிப்பில் 1% என்று இருந்த அளவிலிருந்து இரு மடங்கு என்பது கவனிக்க வேண்டியது. சில கிராமப்புறங்களில் மருத்துவர்-மக்கள்தொகை விகிதம் 1:40,000 என்கிற அளவைவிட மோசமாக இருக்கிறது.
  • இந்தியாவில் மருத்துவ சேவை வழங்குபவர்களுக்குக் கிட்டத்தட்ட 140 கோடி மக்களுக்குப் பணியாற்றும் பொறுப்பு உள்ளது.
  • ஏனெனில், இவர்களில் பெரும்பாலானோருக்கு உடல்நல பாதிப்பு வந்தால் அது வாழ்நாள் முழுவதுமான அச்சமாக மாறிவிடுகிறது. இந்தியாவில் தனிநபர் கடனுக்கு முக்கியக் காரணமாக மருத்துவச் செலவுகளே இருக்கின்றன.
  • இதற்கு அவ்வப்போது வரும் பிணிகளோ, காற்று மாசு போன்று யாரும் தப்பிக்க முடியாத வகையிலான சுற்றுச்சூழல் பிரச்சினைகளோ காரணங்களாக இருக்கின்றன (காற்று மாசினால் 2019-ல் 17 லட்சம் மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்ததாக ‘லான்ஸெட்’ இதழ் கூறுகிறது; காற்று மாசினால் ஏற்படும் வருடாந்திர இழப்பு ரூ.6.98 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது; இது இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3% ஆகும்.)

இந்தத் திட்டத்துக்கான தருணம்

  • நடைமுறையளவில், கரோனா பெருந்தொற்றானது இந்திய தேசிய மருத்துவ சேவை குறித்த தீவிரமான பரிசீலனையைக் கொண்டுவரலாம். அது குறித்த இந்திய அளவிலான பொது விவாதம் இதுவரை இல்லாத அளவில் நிகழலாம்.
  • ஆனால், இது ஒன்றும் புதிய சிந்தனை இல்லை. 1946-ல் ஆட்சிப் பணியாளர் சர் ஜோஸப் போர், ‘என்ஹெச்எஸ்’ (NHS) என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் தேசிய மருத்துவ சேவையைப் பெரிதும் பின்பற்றக்கூடிய தேசிய மருத்துவ சேவை பற்றிய விரிவான முன்மொழிவை அப்போதைய அரசிடம் முன்வைத்தார், அதே காலகட்டத்தில் என்ஹெச்எஸ் பிரிட்டனில் சட்டமாக ஆகவிருந்தது.
  • ஜோஸப் போர் இன்னும் மேலே சென்று நோய்த் தடுப்பு மருத்துவத்தையும் நோய்க்கான சிகிச்சையையும் எல்லா நிலைகளிலும் ஒன்றிணைக்க வேண்டும் என்றார். பிரிட்டனின் மருத்துவ சேவைகள் மோசமான நிலையை அடைந்ததால் 1930-களில் பிரிட்டனின் என்ஹெச்எஸ் திட்டத்துக்கான வரைவு உருவாக்கப்பட்டது.
  • இதற்கு இரண்டாம் உலகப் போர் முக்கியக் காரணம். அதன் மிக மோசமான தருணங்களில் பிரிட்டனைச் சமூக ஜனநாயக நாடாக ஆக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது; முழுமையான மக்கள் நல அரசு, அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை, கலவையான பொருளாதாரம் என்று திட்டமிடப்பட்டது. இது எல்லாம் சேர்ந்து என்ஹெச்எஸ் திட்டத்துக்கு ஒரு உந்துதல் கொடுத்திருக்கலாம்.
  • இதன் விளைவுதான் பொதுத் திட்ட வகுப்பு, அரசியல்,அனைவருக்கும் உயர்தர மருத்துவ சேவை போன்றவற்றில் பிரிட்டன் புரிந்திருக்கும் மாபெரும் சாதனை.
  • இது பயிற்சி, ஆராய்ச்சி போன்றவற்றையும் உள்ளடக்கும். இந்தச் சேவையானது முழுவதும் வரிப் பணத்திலிருந்து செலவிடப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கான ஒதுக்கீடு பொது மருத்துவர்களுக்கான தொகையையும் உள்ளடக்குகிறது.
  • அவர்களில் பெரும்பாலானோர் தனிப்பட்ட விதத்தில் மருத்துவ சேவை வழங்கினாலும் என்ஹெச்எஸ் பயனாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கு அரசு அவர்களுக்கு நிதி வழங்குகிறது. ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து போன்ற அதிகாரம் பரவலாக்கப்பட்ட பகுதிகளில் பொது மருத்துவர்கள் வழங்கும் மருந்துச் சீட்டில் உள்ள மருந்துகளுக்கு நோயாளிகள் பணம் தரத் தேவையில்லை.
  • இங்கிலாந்தில் உள்ள குறிப்பிட்ட அளவிலான நோயாளிகள் சிலர் மட்டும்தான் மருந்துகளைப் பணம் கொடுத்து வாங்க வேண்டும். மருத்துவமனைச் சிகிச்சைகள், மருந்துகள் அனைத்துக்கும் கட்டணமில்லை, புறநோயாளிகளுக்கும் தொடர் வருகைகளுக்கும் கட்டணமில்லை.
  • பிரிட்டனின் பொது மக்கள் இதற்கான செலவுகளைத் தங்கள் வரிகள் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள்.
  • கிட்டத்தட்ட விதிவிலக்கின்றித் தங்கள் மருத்துவத் தேவைக்கேற்ப சிகிச்சை பெறுகிறார்கள்.
  • 11 லட்சம் ஊழியர்களைக் கொண்ட என்ஹெச்எஸ்தான் பிரிட்டனிலேயே மிக அதிக ஊழியர்களைக் கொண்ட அமைப்பு. பிரிட்டனின் மொத்த உற்பத்தி மதிப்பில் இதற்குத் தற்போது 7.6% நிதி ஒதுக்கப்படுகிறது. இது மிகவும் பெரியதாகவும் விரிவானதாகவும் இருந்தாலும் மிகவும் உள்ளூர்மயமான சேவையை வழங்குகிறது.

என்ஹெச்எஸ்ஸில் உள்ள பிரச்சினைகள்

  • உலகெங்கும் பெரும் மதிப்போடு பார்க்கப்பட்டாலும், இந்தத் திட்டம் தொடர்பாகவும் பிரச்சினைகள் எழாமல் இல்லை. வெவ்வேறு வர்க்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு விதமான கவனிப்பு போன்ற ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன (இது குறித்த கண்டுபிடிப்பால் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன).
  • எனினும், என்ஹெச்எஸ் தொடங்கப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூத்த மருத்துவர்களில் பலரும் அதற்குப் பிறகு அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாட்டிலேயே மிகவும் நேசிக்கப்படும், நம்பிக்கைக்குரிய அமைப்பாக என்ஹெச்எஸ் இருப்பதாகவும், அரசக் குடும்பத்தைவிட உயர்வாக அது கருதப்படுவதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
  • இந்தியா தற்போது மிக மோசமான சுகாதார நெருக்கடியில் இருக்கிறது. அநேகமாக சுதந்திரத்துக்குப் பிறகான காலகட்டத்திலேயே மிகவும் மோசமான நெருக்கடி இது.
  • கிடைக்கும் தகவல்கள் படி இந்திய மருத்துவக் கட்டமைப்பின் பல பகுதிகளும் கடுமையான அழுத்தத்தில் இருக்கின்றன. ஜோஸப் போர் கனவுகண்ட திட்டத்தைத் தற்போதைய சமூகச்சூழலுக்கு ஏற்பக் கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.
  • ஆனால், பெருந்தொற்றைத் திறம்பட எதிர்கொள்வதற்கே இந்திய தேசிய மருத்துவ சேவை என்ற அமைப்பை உருவாக்குவது உடனடித் தேவையாக இருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (20 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்