TNPSC Thervupettagam

இந்தியாவுக்கு முன்னுதாரணமாகும் தென்னிந்திய மாநிலங்கள்!

October 4 , 2019 1881 days 931 0
  • பொருளாதார வளர்ச்சி பெற உகந்த வகையில் அனைத்து அம்சங்களிலும் முன்மாதிரியாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு மூல விசையாகவும், சமூக முன்னேற்றத்துக்கு உந்து மேடையாகவும் தென்னிந்திய மாநிலங்கள் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகன உற்பத்தி ஆகியவற்றுக்குக் கேந்திரமாக விளங்குகின்றன.
  • விவசாயத்தில் அதிக உற்பத்தித்திறன் கொண்டவையாகவும் காபி, தேயிலை, ஏலக்காய், கிராம்பு என்று தோட்டக்கலை, நறுமணப் பயிர்களுக்குத் தாய்வீடாகவும் திகழ்கின்றன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா என்ற ஐந்து மாநிலங்களின் நபர்வாரி வருமானமானது உத்தர பிரதேசத்தைப் போல மூன்று மடங்காகவும், பிஹாரைப் போல ஐந்து மடங்காகவும் இருக்கிறது.
  • பொருளாதார வளர்ச்சியில் மட்டுமின்றி, சமூக வளர்ச்சியிலும் தென்னிந்திய மாநிலங்கள் முன்னேறியுள்ளன. நாட்டின் பிற பகுதிகளை விட தென்னிந்தியாவில் பெண்கள், பட்டியலினத்தவரின் சமூக-பொருளாதார நிலை மேம்பட்டதாக இருக்கிறது.
  • பாலின விகிதம் கிட்டத்தட்ட சமமாக இருக்கிறது. குடும்பக் கட்டுப்பாடு முறை சிறப்பாக அமலில் இருக்கிறது.
  • சிறு குடும்பம்தான் பெரும்பாலும் ஏற்கப்பட்ட நெறியாகிவிட்டது. தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளிலும் தென்னிந்தியா முன்னிலை வகிக்கிறது.
மக்களுக்கானதே வளர்ச்சி
  • தென்னிந்தியாவின் வளர்ச்சியானது சமூகத்தின் எந்தப் பிரிவு மக்களையும் ஒதுக்கி வைத்து நடப்பதல்ல; மாநிலங்களின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மக்களுடைய நன்மையையே அடிப்படையாகக் கொண்டவை.
  • பல மொழி, மத, கலாச்சாரங்களையும் வரவேற்று ஆதரிக்கும் பன்மைத்துவக் கலாச்சாரமே தென்னிந்தியாவின் அடையாளம். கோழிக்கோடு, கொச்சி, விசாகப்பட்டினம், சென்னை போன்ற போக்குவரத்து மிகுந்த துறைமுகங்கள் தென்னிந்தியாவில் உள்ளன.
  • பழமையும் பெருமையும் புராதனமும் கொண்ட மதுரை, விஜயநகரம் போன்றவை இப்பகுதியின் சிறப்பை எடுத்துச் சொல்பவை. ஆதிகாலம் தொட்டே உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகளையும் பயணிகளையும் ஈர்த்தவைதான் தென்னிந்திய நகரங்களும் துறைமுகங்களும். யூதம், கிறிஸ்தவம், இஸ்லாமியம் தென்னிந்தியாவில்தான் முதலில் அறிமுகமாயின.
  • இந்த அலாதியான கலவை காரணமாகவே மிகப் பெரியதும் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கதுமான புராதன இந்துக் கோயில்களும், உலகின் மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயங்களும் மசூதிகளும் தென்னிந்தியாவில்தான் கட்டப்பட்டன.
  • இப்படி எல்லா முக்கிய மதங்களின் வழிபாட்டிடங்களும் இருக்கும் பகுதி உலகிலேயே தென்னிந்தியாவில் மட்டும்தான் என்று பெருமைகொள்ள முடியும்.
  • உலக வரலாற்றின் நெடும்பகுதியில் மேற்கத்திய நாடுகளுடனும் மத்தியத் தரைக்கடல் நாடுகளுடனும் கீழை நாடுகளுடனும் தொழில், வர்த்தகத் தொடர்புகளும் கலாச்சாரப் பிணைப்புகளும் கொண்டது தென்னிந்தியா.
  • தென்னிந்தியர்களின் வணிக நோக்கும் விருந்தோம்பலும் இப்பகுதியின் முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணிகளாக இருந்துவருகின்றன. ‘நாம்’ - ‘அவர்கள்’ என்ற குறுகிய மனப்பான்மையால் பகையை மட்டும் வளர்க்கும் பகுதிகளிலிருந்து வேறுபட்டிருப்பதாலேயே தென்னிந்தியா முன்னேறிய பிரதேசமாக இருக்கிறது.
சமூகச் சீர்திருத்த இயக்கங்கள்
  • இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் தென்னிந்தியாவை வளப்படுத்த முக்கியக் காரணங்களாக இருந்தன.
  • இந்தப் பாரம்பரியமே அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. பெங்களூருவும் ஹைதராபாத்தும் நவீன காலத்தில் வேலைவாய்ப்பு தேடி வருவோருக்குப் புகலிடமாக இருப்பது சமீபத்திய சான்று.
  • பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு, முதலீட்டுக்கு ஏற்ற சூழலும் களமும் தென்னிந்தியாவில் அதிகம் காணப்பட்டன. நாட்டின் வேறு பகுதிகளில் வளர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தனர்; சமூக முன்னேற்றம் என்பதைத் துணை விளைவாகவே கருதினர்.
  • தொழில் வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக அறியப்பட்டாலும் குஜராத்தில் இன்னமும் ஆண்-பெண் விகிதம் சமமின்றி இருக்கிறது; தீண்டாமையும் நிலவுகிறது.
  • சமூக முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு பொருளாதார வளர்ச்சி நிலைக்குமா என்ற கேள்வி எழுகிறது.
  • தென்னிந்தியாவில் இரண்டு அம்சங்களிலும் முக்கியத்துவம் நிலவுகிறது. தனியார் முதலீட்டை ஈர்க்க சந்தைக்கு ஆதரவான கொள்கைகளை மாநில அரசுகள் வகுக்கின்றன;
  • அனைவருக்கும் முன்னேற்றத்தில் பங்கு தரப்படுகிறது. இந்த அணுகுமுறையால் கட்டுப்பாடுகளற்ற சந்தையானது அனைவருக்கும் வேலைவாய்ப்பையும் ஊதியத்தையும் முன்னேற்றத்தையும் அளிக்கிறது.
  • மாநில அரசுகள் நடுவர்களாகவும், சமூக நீதியை வழங்குபவர்களாகவும் பொது விஷயங்களைப் பகிர்ந்தளிப்பவர்களாகவும் செயல்படுகின்றன. இதனால், பொருளாதாரத்தில் தொடர் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படுகிறது.
தனியார் முதலீடுகள்
  • தனியார் முதலீட்டை ஈர்ப்பதுடன் உற்பத்தி அல்லது விநியோகத்தில் தங்களுடைய சார்பில் பொது முதலீட்டையும் மாநில அரசுகள் தாராளமாக அளிக்கின்றன.
  • இது சமூகம் முழுமைக்கும் பலன் தருகிறது. எனவே, இருவிதமான முதலீடுகளும் சமூகத்தில் சமநிலை ஏற்பட உதவுகின்றன.
  • தென்னிந்திய வளர்ச்சி மாதிரியானது மிகப் பெரிய வெற்றியைத் தந்துவிடவில்லை என்று கூறுவோரும் உண்டு. கடுமையான தண்ணீர் பற்றாக்குறை, முடிவே இல்லாத லஞ்ச-ஊழல் தென்னிந்தியாவில் நிலவுவது உண்மைதான்;
  • கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் பிற தென்னிந்திய மாநிலங்களைவிட கேரளமும் தமிழ்நாடும் அதிகம் சாதித்துள்ளன என்பதும் உண்மையே. பொருளாதார நடவடிக்கைகளிலும் எல்லா தென்னிந்திய மாநிலங்களும் ஒன்றுபோல இல்லை.
  • கேரளத்தில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கான சூழ்நிலை நிலவவில்லை என்பதும் உண்மைதான். தென்னிந்தியாவுக்குள் இப்படிச் சில வேறுபாடுகள் இருந்தாலும் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தென்னிந்தியாதான் வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கிறது என்பதைப் புறக்கணித்துவிடுவதற்கில்லை.
பின்பற்றத்தக்க மாதிரி
  • தென்னிந்தியாவின் வளர்ச்சியானது பின்பற்றத்தக்க முன்மாதிரியாக இருக்கிறது. இங்கே தொழில் செய்வது மட்டும் எளிது என்பதில்லை; பொருளாதார வளர்ச்சியின் பலன்களும் சந்தையின் பலன்களும் அனைவராலும் பகிர்ந்து பெற முடிகிறது.
  • தென்னிந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் சமூகச் சீர்திருத்தவாதிகள் தோன்றி மதம், சாதி கடந்து சிந்திக்குமாறு மக்களைப் பக்குவப்படுத்தியுள்ளனர். மூடநம்பிக்கைகளைப் போக்கியுள்ளனர்.
  • கல்வியின் மேன்மையை உணர்த்தியுள்ளனர். சமத்துவம் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். இதனாலும், சமூகரீதியாகத் தென்னிந்தியா விழிப்புணர்வும் வளர்ச்சியும் பெற்றுள்ளது. எனவே, பிற மாநிலங்கள் தென்னிந்தியாவைப் பின்பற்ற வேண்டும்.
  • தமிழ்நாட்டின் பொது சுகாதார ஏற்பாட்டைப் பாராட்டி தாஸ்குப்தா 2010-ல் எழுதியிருக்கிறார்.
  • 20-வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அனைத்து சாதியினருக்கும் ஆலயங்களைத் திறந்துவிட்டது திருவிதாங்கூர் சமஸ்தானம். ஆரம்பக் கல்வியை ஆதரித்தது. அதுதான் கேரளத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயத்துக்கு ஆரம்பமாக இருந்தது.
  • 21-வது நூற்றாண்டிலும் தென்னிந்தியாவிடமிருந்து பிற பகுதிகள் உத்வேகம் பெற வேண்டும். அது நிலையான, சமச்சீரான, அனைவருக்கும் பலன் தரும் முன்னேற்றத்துக்கு நாட்டை இட்டுச்செல்லும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்