TNPSC Thervupettagam

இந்தியாவை அறிவோம்: பஞ்சாப்

May 6 , 2019 2078 days 1151 0
மாநில வரலாறு
  • சிந்து சமவெளி நாகரிகத்தின் பகுதியாக இருந்த பிரதேசம். பியாஸ், சத்லஜ், ராவி, ஜேலம், சினாப் ஆகிய ஐந்து நதிகள் பாயும் நிலம் என்பதால் மத்திய ஆசியாவைச் சேர்ந்த துருக்கி படையெடுப்பாளர்களால் ‘பஞ்சாப்’ எனும் பெயரைப் பெற்றது. மெளரியர்கள், பாக்த்ரியர்கள், கிரேக்கர்கள், சகர்கள், குஷாணர்கள், குப்தாக்கள், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தாக்கள், சீக்கியப் பேரரசர்கள் போன்றோர் ஆட்சி செய்த பிரதேசம்.
  • ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் டெல்லி, ஜாலந்தர், லாகூர், முல்தான் மற்றும் பல சமஸ்தானங்களை இணைத்து பஞ்சாப் மாகாணம் உருவாக்கப்பட்டது. தேசப் பிரிவினையின்போது முஸ்லிம்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் வசித்த பஞ்சாபின் மேற்குப் பகுதி பாகிஸ்தானுடன் இணைந்தது. 1956-ல் படியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் அரசுகளின் ஒன்றியம் (பெப்சு) பஞ்சாபுடன் இணைந்தது. பஞ்சாபில் இந்தி பேசும் மக்கள் அடங்கிய பகுதிகள் இணைக்கப்பட்டு 1961-ல் ஹரியாணா மாநிலம் உருவானது. சண்டிகர்தான் இரு மாநிலங்களுக்கும் தலைநகர். சண்டிகர் ஒரு ஒன்றியப் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
புவியியல் அமைப்பு
  • இந்தியாவின் வடமேற்கில் அமைந்திருக்கும் மாநிலம். பரப்பளவு 50,362 சதுர கிமீ. நாட்டின் பரப்பளவில் இது 53% ஆகும். (தமிழகத்தின் பரப்பளவு 1.30 லட்சம் சதுர கிமீ.) இந்தியாவின் 20-வது பெரிய மாநிலம். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 2.77 கோடி. நாட்டின் மக்கள்தொகையில் இது 2.28%. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 550. (தமிழகத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 555.) சீக்கியர்கள் 57.69%, இந்துக்கள் 38.49%. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 22%, பட்டியலின சமூகத்தினர் 31%. பழங்குடியினர் குறிப்பிடப்படவில்லை. முஸ்லிம்கள் 1.93%, கிறிஸ்தவர்கள் 1.26%.
சமூகங்கள்
  • சீக்கியர்களே பெரும்பான்மையினர். சீக்கிய மதத்தில் அரோரா, கத்ரி, ஜாட், சைனி, சமர், வால்மீகி போன்றோர் முக்கியமானவர்கள். ஜாட் சமூகத்தினர் 20%-க்கும் அதிகம். அரசியலில் இவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இவர்களை ஒப்பிட குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் கத்ரி, அரோரா சமூகத்தினர் விவசாயம், வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இம்மூன்று சமூகத்தினர் மற்றும் பிராமணர்கள், ராஜபுத்திரர்கள், பனியாக்கள் போன்றோர் முன்னேறிய சமூகத்தினர். சைனி, ராம்கரியா, சுனார், குர்ஜர் போன்றோர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைச் சேர்ந்தவர்கள். சீக்கியர்களில் சமர், வால்மீகி போன்றோர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆறுகள்
  • பியாஸ், சத்லஜ், ராவி, ஜேலம், சினாப் ஆகிய ஐந்து நதிகளும் சிந்து நதியின் கிளை நதிகள். 1960-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தான சிந்து நதி ஒப்பந்தத்தின்படி பியாஸ், ராவி, சத்லெஜ் ஆகிய ஆறுகளை நிர்வகிக்கும் பொறுப்பு இந்தியாவுக்கும் சினாப், ஜேலம், சிந்து ஆகிய நதிகளை நிர்வகிக்கும் பொறுப்பு பாகிஸ்தானுக்கும் வழங்கப்பட்டன. இமாச்சலப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் பியாஸ், பஞ்சாபில் சுமார் 470 கிமீ ஓடி சத்லெஜ் நதியுடன் கலக்கிறது. சத்லெஜ் திபெத்தில் உற்பத்தியாகிறது. ராவி நதி இமாச்சலப் பிரதேசத்தில் உற்பத்தியாகிறது.
காடுகள்
  • பஞ்சாப் நிலப்பரப்பில் 87% காடுகள் உள்ளன. 2003-ல் 6.3% ஆக இருந்த வனப் பரப்பு கணிசமாக அதிகரித்திருக்கிறது. அடர்த்தியான காடுகள் குறைவு; புல்வெளிகள், புதர்கள் நிறைந்த வனப் பகுதிகளே அதிகம். பஞ்சாபின் வனப் பரப்பில் வெப்பமண்டல வறண்ட இலையுதிர்க் காடுகளே பிரதானம். மொத்த வனப் பரப்பில் இவ்வகைக் காடுகள் 81.27%. 12 வன விலங்கு சரணாலயங்கள், இரண்டு உயிரியல் பூங்காக்கள், மூன்று மான் பூங்காக்கள் உள்ளன.
நீராதாரம்
  • ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1849-ல் நீர்ப்பாசனத் துறை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டங்களில் ராவி நதியின் குறுக்கே பாரி தோஆப் கால்வாய், சத்லெஜ் நதியின் குறுக்கே சிர்ஹிந்த், பிகானேர், கிழக்குக் கால்வாய்கள் உருவாக்கப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின்னர், பக்ரா அணை, போங் அணை, பியாஸ் – சத்லெஜ் இணைப்புக் கால்வாய், ரஞ்சித் சாகர் அணை என்று பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பஞ்சாபின் நிலப்பரப்பில் 85% சாகுபடி நிலங்கள். 1990-களிலிருந்து மழைப்பொழிவு குறைவு. சராசரி மழைப்பொழிவு 9 மில்லிமீட்டர்.
கனிம வளம்
  • ஆற்றுப் படுகைகளில் கிடைக்கும் கனிமங்கள்தான் ஆதாரம். இமயமலைப் பாறைகளில் கிடைக்கும் கனிமங்கள், இமயமலையில் உருவாகி பஞ்சாப் வழியே பாயும் ஆறுகளின் வழியே வந்தடைகின்றன. நிலக்கரி போன்ற பிரதான கனிமங்கள் கிடைப்பதில்லை. மணல், சரளைக் கற்கள், வண்டல் மண், கூழாங்கற்கள் போன்றவை பிரதானம். மணல் கொள்ளை அதிகம் என்பதால் மணல் மற்றும் கனிமங்கள் தொடர்பாகப் புதிய கொள்கைகளை உருவாக்கியிருக்கிறது பஞ்சாப் அரசு.
பொருளாதாரம்
  • இந்தியாவின் தானியக் களஞ்சியம். இந்தியாவின் உணவுக் களஞ்சியம் எனும் பெயர் இதற்கு உண்டு. 80% விவசாய நிலம். கோதுமை, அரிசி, கரும்பு, பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாநிலம். இந்தியாவின் கோதுமை உற்பத்தியில் பஞ்சாபின் பங்கு 5%. அரிசியில் 11%, பருத்தியில் 10.26%. சைக்கிள், விளையாட்டுப் பொருட்கள், உள்ளாடை உற்பத்தி அதிகம். மாநிலத்தின் பொருளாதாரத்தில் ரியல் எஸ்டேட் துறையின் பங்களிப்பு கணிசமானது. 2017-18-ல் இம்மாநிலத்தின் ஜிடிபி ரூ.4.65 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
முக்கியப் பிரச்சினைகள்
  • பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் விவசாயத் துறையின் வளர்ச்சி மிகவும் மந்தம். விவசாயிகள் தற்கொலை முக்கியப் பிரச்சினை. 2011-12-ல் 2% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை 2017-18-ல் 7.8% ஆக அதிகரித்துவிட்டது. இளைஞர்களிடையே பரவலாகியிருக்கும் போதைப் பொருள் பழக்கம் பஞ்சாபை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. சுகாதாரத் துறையிலும் பின்தங்கியிருக்கிறது பஞ்சாப்.

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்