TNPSC Thervupettagam

இந்தியாவை அறிவோம்: ஹரியாணா

May 7 , 2019 2005 days 1095 0
மாநில வரலாறு
  • சிந்து சமவெளி நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்த நிலப் பகுதி. ஹிஸார் மாவட்டத்தில் உள்ள ராக்கிகரி, ஃபதேஹாபாத் மாவட்டத்தின் பிர்டானா ஆகிய கிராமங்களில் சிந்து சமவெளி நாகரிகத்தின் எச்சங்கள் இன்றும் உள்ளன. 12-ம் நூற்றாண்டில் தராவடி, ஹான்சி ஆகிய பகுதிகளில் தனது கோட்டைகளை நிறுவினார் சாஹமான் வம்சத்தைச் சேர்ந்த பிருத்விராஜ் சவுஹான். இரண்டாம் தராய்ன் போரில் அவரை வென்ற முகமது கோரி ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட பகுதிகளைத் தன் வசமாக்கினார். பின்னர், டெல்லி சுல்தான்களும் முகலாயர்களும் ஆண்டனர். 1857-ல் நடந்த சிப்பாய்க் கலகம் இங்குள்ள அம்பாலா கன்டோன்மென்ட்டில் தொடங்கியதாக கே.சி.யாதவ் எனும் வரலாற்றுப் பேராசிரியர் கூறுகிறார். பஞ்சாபின் ஒரு பகுதியாக இருந்த ஹரியாணா, 1961-ல் தனி மாநிலமாக உருவானது.
புவியியல் அமைப்பு
  • வட மத்திய இந்தியாவில் உள்ள ஹரியாணா, நாட்டின் 21-வது பெரிய மாநிலம். பரப்பளவு 44,212 சதுர கிமீ. (தமிழகத்தின் பரப்பளவு 30 லட்சம் சதுர கிமீ). 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ஹரியாணாவின் மக்கள்தொகை 2.53 கோடி. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 573. (தமிழகத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 555). இந்துக்கள் 87.46%. பட்டியலின சமூகத்தினர் 19%. பட்டியலின சமூகத்தினரில் சமார், வால்மீகி, தானுக் போன்றோர் முக்கியமானவர்கள். பழங்குடியினர் குறிப்பிடப்படவில்லை. முஸ்லிம்கள் 7.03%, சீக்கியர்கள் 4.91%, கிறிஸ்தவர்கள் 0.20%, சமணர்கள் 0.21%, பெளத்தர்கள் 0.03%. பிற சமூகத்தினர் சொற்ப எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.
சமூகங்கள்
  • இதுவரை முதல்வர் பதவியில் இருந்தவர்களில் ஜாட் சமூகத்தினரே அதிகம். 1996 முதல் பன்ஸி லால், ஓம் பிரகாஷ் சவுதாலா, புபேந்திர சிங் ஹூடா என்று தொடர்ந்து ஜாட் சமூகத்தினரே முதல்வர்களாக இருந்தனர். ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) கட்சிக்கு ஜாட் சமூகத்தினரின் ஆதரவு அதிகம். பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார் அரோரா சமூகத்தைச் சேர்ந்தவர். ஜாட் சீக்கியர்கள், பிஷ்னோய், ரோர், தியாகி, பஞ்சாபி கத்ரி, அஹீர், பிராமணர்கள் போன்ற சமூகத்தினரும் முக்கியத்துவம் கொண்டவர்கள்.
ஆறுகள்
  • ஹரியாணாவின் முக்கிய நதி யமுனை. மாநிலத்தின் மிக நீளமான நதியும் இதுதான். உத்தராகண்டின் யமுனோத்ரி பகுதியில் உருவாகும் இந்நதி, ஹரியாணாவில் சுமார் 320 கிமீ நீளத்துக்குப் பாய்ந்தோடுகிறது. பல்வல் அருகே ஹசன்பூர் வழியாக உத்தர பிரதேசத்துக்குள் நுழைகிறது. இன்னொரு முக்கிய நதி கக்கர். இந்தோரி, சாஹிபி, தோஹான், கிருஷ்ணாவதி போன்ற நதிகள் ஆரவல்லி மலைப் பகுதிகளில் உருவாகி ஹரியாணாவுக்குள் நுழைகின்றன. தாங்க்ரி, மார்க்கண்டா போன்ற நதிகளும் குறிப்பிடத்தக்கவை.
காடுகள்
  • மிகக் குறைந்த வனப்பரப்பைக் கொண்ட மாநிலம். இம்மாநிலத்தின் வனப்பரப்பு 1,586 சதுர கிமீ. இது மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் இது 58%. மாநிலத்தின் மரங்கள் அடங்கிய பரந்த நிலப்பரப்பு 2.90%. கடந்த சில ஆண்டுகளில் இதன் வனப் பகுதிகள் சுமார் 79 சதுர கிமீ குறைந்திருக்கிறது. வனப்பரப்பில் 24,913 ஹெக்டேர் காப்புக் காடுகள் உள்ளன. பாதுகாக்கப்பட்ட காடுகள் 1.1 லட்சம் ஹெக்டேர். வகைப்படுத்தப்படாதவை 974.94 ஹெக்டேர். சுல்தான்பூர் தேசியப் பூங்கா, காலேசர் தேசியப் பூங்கா ஆகியவை முக்கியமானவை. பிந்தாவாஸ், கப்பர்வாஸ், சரஸ்வதி உள்ளிட்ட சரணாலயங்களும், ஹிஸார் மான்கள் பூங்காவும் இங்கு உள்ளன.
நீராதாரம்
  • பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களுடன் மேற்கொள்ளப்பட்ட சத்லெஜ் – பியாஸ் நதிகள் இணைப்புத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாநிலம் ஹரியாணா. அனங்க்பூர் அணை, கெளசல்யா அணை, மசானி தடுப்பணை ஓட்டு தடுப்பணை, பத்ராலா தடுப்பணை, ஹாத்னிகுண்ட் தடுப்பணை உள்ளிட்ட அணைகள் இங்கு உள்ளன. மேற்கு யமுனை கால்வாய், பக்ரா கால்வாய், குர்கான் கால்வாய் ஆகியவை ஹரியாணாவின் பிரதானமான பாசனத் திட்டங்கள். சட்லெஜ் – யமுனை இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு இந்திரா காந்தி ஆட்சிக்காலத்திலேயே தொடக்கப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டாலும் இன்று வரை அத்திட்டம் நிறைவுபெறவில்லை. வறட்சிப் பகுதிகளில் ஜுயி, சேவானி, லோஹாரு, ஜவாஹர்லால் நேரு இறவை நீர்ப்பாசனத் திட்டங்களை ஹரியாணா வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கனிம வளம்
  • கனிம வளத்தைப் பொறுத்தவரை ஹரியாணா பின்தங்கிய மாநிலம்தான். கிடைக்கும் கனிமங்களும் அதிகமாகச் சுரண்டலுக்குள்ளாக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு. குறிப்பாக, ஆரவல்லி மலைத் தொடரில் பல பகுதிகள் கடுமையாகச் சுரண்டப்படுகின்றன. கயோலினைட் எனப்படும் வெண் களிமண், சுண்ணாம்புக் கல், டோலோமைட், குவார்ட்ஸ், பளிங்கு, வெள்ளீயம், பெல்ட்ஸ்பார், தாமிரம், கிரானைட், டங்க்ஸ்டன் போன்றவை ஹரியாணாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பொருளாதாரம்
  • 2016-17-ல் ஹரியாணாவின் ஜிடிபி ரூ.8 லட்சம் கோடி. 2018-19-ல் இதன் உத்தேச மதிப்பு ரூ.7.85 லட்சம் கோடி. 2012-17 காலகட்டத்தில் ஹரியாணாவின் வளர்ச்சி விகிதம் 12.96%. விவசாயமே பிரதானம். வேளாண் ஏற்றுமதியில் 7% இம்மாநிலத்தினுடையது. குறிப்பாக, பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் ஹரியாணாவின் பங்கு 60%. தகவல் தொழில்நுட்பத் துறை, மோட்டார் வாகன உற்பத்தி, சேவைத் துறை ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. ஏப்ரல் 2000 முதல் டிசம்பர் 2018 வரையிலான காலகட்டத்தில், ரூ.5.7 லட்சம் கோடி மதிப்பிலான அந்நிய நேரடி முதலீட்டை ஹரியாணா பெற்றிருக்கிறது.
முக்கியப் பிரச்சினைகள்
  • வேலைவாய்ப்பின்மைதான் பிரதானப் பிரச்சினை. காற்று, குடிநீர் மாசுப் பிரச்சினை, போக்குவரத்து நெரிசல் போன்றவையும் முக்கியமான பிரச்சினைகள். சுகாதாரத் துறையில், குறிப்பாக ஆரம்ப சுகாதாரத் துறையில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. விவசாயக் கடன், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை போன்றவை விவசாயிகளின் பிரதானக் கவலைகள். ஒவ்வொரு தேர்தலிலும் சட்லெஜ் – யமுனை இணைப்புக் கால்வாய்த் திட்டப் பிரச்சினை முக்கியத்துவம் பெறுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்