TNPSC Thervupettagam

இந்தியா சாதித்ததும் சறுக்கியதும்

December 19 , 2023 397 days 225 0
  • அரசியல் சர்ச்சைகள், சமூகப் பதற்றங்கள், விபத்துகள், வெளியுறவுச் சிக்கல்கள் எனப் பல்வேறு எதிர்மறை நிகழ்வுகளுடன், மைல்கல் மசோதாக்கள், விண்வெளித் துறைச் சாதனைகள், பொருளாதார வளர்ச்சி என நம்பிக்கையூட்டும் பல அம்சங்களும் கலந்த ஆண்டாக 2023ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அமைந்தது.

அரசியல் சர்ச்சைகள்

  • பாஜக எம்.பி-யும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீராங்கனைகள் ஜனவரி மாதம் நடத்திய போராட்டங்கள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தன. பிரிஜ் பூஷண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. 2019 மக்களவைத் தேர்தலின்போது கர்நாடகத்தில் பிரச்சாரக் கூட்டத்தில், “எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று ராகுல் காந்தி பேசியது அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில், மார்ச் 23இல் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததால் எம்.பி. பதவியை அவர் இழந்தார்.
  • அத்தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால் இழந்த பதவி அவருக்கு மீண்டும் கிடைத்தது. இன்னொரு புறம், அதானி குழுமம் குறித்து விமர்சித்துவந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் டிசம்பர் 8 அன்று பதவியிலிருந்து நீக்கப்பட்டார். டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்துக்குள் சிலர் அத்துமீறி நுழைந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராடிய நிலையில், 14 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பாஜக அரசு 2019 முதல் 71 முறை இப்படி எம்.பி-க்களை இடைநீக்கம் செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
  • பாஜகவை வீழ்த்தப் பல்வேறு சித்தாந்தக் கட்சிகள் இணைந்ததன் நீட்சியாக, ஜூலை 18 அன்று உருவான ‘இண்டியா’ கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எனினும், ஐந்து மாநிலத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு - ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியை இழந்து விமர்சனத்துக்கு உள்ளானது காங்கிரஸ். தெலங்கானாவில் முதல் முறையாகக் கிடைத்திருக்கும் வெற்றியின் தெம்பில், மீண்டும் கூட்டணியைக் கட்டியெழுப்பும் பணிக்கு அக்கட்சி தயாராகிவருகிறது. ‘காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டக்கூறு 2019இல் நீக்கப்பட்டது சரிதான்’ என 2023 டிசம்பர் 11 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பாஜகவின் கொள்கை அரசியலுக்குப் பலம் சேர்த்திருக்கிறது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா தேதியும் நெருங்குகிறது.

அதிரவைத்த மணிப்பூர் கலவரம்

  • பழங்குடி அந்தஸ்து கோரிவந்த பெரும்பான்மை மெய்தேய் சமூகத்தினரின் சமூக–பொருளாதார நிலை குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஏப்ரல் 19 அன்று மணிப்பூர் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைக் கண்டித்து, குகி பழங்குடியினர் போராட்டத்தில் இறங்க, மெய்தேய் சமூகத்தினரின் எதிர்வினையும் சேர்ந்துகொள்ள, அது கலவரமாக மாறியது. மணிப்பூர் குறித்துப் பிரதமர் மோடி மெளனம் கலைக்க வேண்டும் என்று களமிறங்கிய எதிர்க்கட்சிகள், அரசுமீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆகஸ்ட் மாதம் கொண்டுவந்தன; தீர்மானம் தோல்வியடைந்தது. மத்திய அரசு கொண்டுவர முயலும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. நாட்டின் பெயரை ‘பாரதம்’ என மாற்ற அரசு திட்டமிடுவதாகவும் பரபரப்பு நிலவியது.

வெளியுறவு சாதக–பாதகங்கள்

  • ஜி20 அமைப்பின் ஓராண்டு காலத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த இந்தியா, டெல்லிக்கு வெளியிலும் பல்வேறு நகரங்களில் கூட்டங்களை நடத்திக் கவனம் ஈர்த்தது. ஆப்ரிக்க ஒன்றியத்தை ஜி20 நிரந்தர உறுப்பினராக்கியது, இந்தியா-மத்தியக் கிழக்கு-ஐரோப்பா பொருளாதாரப் பாதைத் திட்டம் என்பன உள்ளிட்ட பலன்கள் கிடைத்தன. போர், வணிகப் போட்டிகள் எனப் பல்வேறு காரணங்களால் ஒட்டாமல் விலகியிருக்கும் உலக நாடுகளை ஒன்றிணைக்க இம்மாநாடு உதவியதாக இந்தியாவுக்குப் புகழாரங்கள் கிடைத்தன.
  • ஜூன் 18 அன்று காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக, செப்டம்பர் 18 அன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். அதேபோல், அமெரிக்காவில் வசித்துவரும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுவைப் படுகொலை செய்வதற்கு நிகில் குப்தா என்பவர் மூலமாக இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் சதிசெய்ததாக அமெரிக்க அரசுத் தரப்பிலிருந்து எழுந்த இன்னொரு குற்றச்சாட்டும் சர்ச்சையானது.

ரயில் விபத்துகள்

  • ஜூன் 2 அன்று ஒடிஷாவின் பாலாசோரில் உள்ள பஹாநாகா பஜார் ரயில் நிலையத்தில் நடந்த கோர விபத்தில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் 13 பேர் உயிரிழக்கக் காரணமான ரயில் விபத்து உள்ளிட்ட பல விபத்துகள் பதற்றம் தந்தன. ரயில்வே துறையில் 3.12 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. டிசம்பர் 13 அன்று வெளியான சாலைப் பாதுகாப்பு தொடர்பான உலக அளவிலான அறிக்கையின்படி, 2010-2021 வரை உலக அளவில் சாலை விபத்து மரணங்கள் 5% குறைந்திருக்கும் நிலையில், இந்தியாவில் அது 15% அதிகரித்திருக்கிறது. கனமழை, தேர்தல்கள் போன்ற காரணங்களால் நாட்டின் சாலைக் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகப் பேசப்பட்ட நிலையில், இதற்கென பட்ஜெட்டில் இன்னும் அதிகமாக நிதி ஒதுக்கப்படும் எனச் செய்திகள் வெளியாகின.

மகிழ்ச்சித் தருணங்கள்

  • ‘சந்திரயான் 3’ மூலம் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தை இந்தியா எட்டியது; அதன் பிரக்யான் உலாவிக் கலம் வெளிவந்து ஒளிப்படங்களை எடுத்து அனுப்பியது, இந்தியர்களைப் பரவசப்படுத்தியது. சூரியனை ஆராய ஆதித்யா எல்-1 விண்கலத்தை செப்டம்பர் 2 அன்று இஸ்ரோ செலுத்தியது. 2024 ஜனவரி 7 அன்று அது தன் இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ உள்ளிட்ட கனவுத் திட்டங்களும் காத்திருக்கின்றன. செப்டம்பர் 20 அன்று நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது ஒரு மைல்கல்.
  • தொகுதி மறுவரையறை உள்ளிட்டவற்றுக்குப் பிறகுதான் இது அமலாகும் என்றாலும் நம்பிக்கையூட்டும் நகர்வு இது. உத்தர்காசியில் சார்தாம் சாலைக் கட்டுமானத்தின்போது சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட 41 தொழிலாளர்களை ‘ஆபரேஷன் ஜிந்தகி’ மூலம் உத்தராகண்ட் அரசு மீட்டது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நிம்மதி தந்தது. 2023-24 நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 7.8%, இரண்டாவது காலாண்டில் 7.6% என மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் வளர்ச்சி நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. ஜிஎஸ்டி கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 65%ஆக அதிகரித்திருப்பதை அரசு ஆக்கபூர்வமாகப் பார்க்கிறது.

காத்திருக்கும் சவால்கள்

  • மக்கள்தொகையில் முதலிடம் பிடித்துவிட்டது இந்தியா. வேலை தேடும் வயதினரும், மருத்துவ வசதிகளை நாடும் முதியோரும் அதிகரிக்கவிருக்கும் நிலையில், அதற்கேற்ற திட்டங்கள் தேவை. தெருநாய்கள் நாடு முழுவதும் தீவிரமான பிரச்சினையாகி இருக்கின்றன. நாய்க்கடியால் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகளாகக் கடும் வெப்பத்தையும் கனமழையையும் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் எதிர்கொண்டன. இவற்றைக் கையாள இந்தியாவின் திட்டம் என்ன என்பது எதிர்காலத்தின் முக்கியக் கேள்வி!

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்