- இந்திய தேசத்தின் 74-ஆவது சுதந்திரதினம் இன்று. கொண்டாட்டம், குதூகலம், வாழ்த்துப் பரிமாற்றம், வரவேற்பு விருந்துகள், கோட்டையின் முன்பு திரளான மக்கள் கூட்டம். இவையே ஆண்டு தோறும் நடைபெறும் நிகழ்வுகள்.
- ஆனால் இந்த ஆண்டு கைகுலுக்குதல், கட்டித் தழுவுதல் கூட இருக்காது. வீட்டிலிருந்தே சுதந்திர தேவியை வணங்குவார்கள். எல்லாமே ஒரு வரம்புக்குள் நடக்கும். மக்கள் மனதில் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அச்சமும், பீதியும், நிச்சயமற்ற நிலையும் உள்ளத்தின் மறுபுறத்தில் ஒளிந்து நிற்கும்.
- இந்த ஆண்டு இந்த நிலை என்றால், 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று என்ன நிலை என்பதை அறிவோமா! மக்களில் பெரும்பாலோர் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்கள்; கொண்டாட்ட அருவியில் குளித்தார்கள்; ஆடுவோமே, பள்ளுப்பாடுவேமே. ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று இந்தியா முழுவதும் மக்கள் ஆடிப்பாடினார்கள்.
- ஆனால் அன்றும் தேசத் தலைவா்கள் மனதில்சோகம் சூழ்ந்திருந்தது; துயரம் படிந்திருந்தது. ஒரு புறம் மகிழ்ச்சி என்றால், மறுபுறம் மரண ஒலியும், அழுகுரலும் அவா்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த சோகத்திற்கும், துயரத்துக்கும், காரணம், எவராலும் தடுக்க முடியாமல் நிகழ்ந்துவிட்ட தேசப் பிரிவினை!
தேசப் பிரிவினை
- தேசத்தைப் பிரித்து சுதந்திரம் பெறுவதை அண்ணல் காந்தி அறவே ஏற்கவில்லை. சுதந்திரத்தை உருவாக்கிய அந்த சிற்பிக்கு, அது துயரத்தையே உருவாக்கியது. வந்த சுதந்திரம் ஏமாற்றத்தையே தந்தது அந்த ஏந்தலுக்கு!
- “மத அடிப்படையில் நாடு பிரிவதை என் மனம் ஏற்கவில்லை. சகோதரா்களாக இணைந்து சமாதானத்துடன் வாழ்வோம்”. என்று மன்றாடினார். அதை முகமது அலி ஜின்னாவும் முஸ்லிம் லீக் கட்சியினரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
- ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திரதினக்கொண்டாட்டங்களில் நான் கலந்து கொள்ளமாட்டேன்” என்று பகிரங்கமாகவே அறிவித்தார் அண்ணல் காந்தி.
- அறிவித்தபடி, அந்த நாளில் அவா் புது தில்லியில் இருக்க வில்லை. கொல்கத்தா சென்று, அங்கு மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார். அண்ணலுக்கு அது துயா் தோய்ந்த நாளாகவே அமைந்தது.
- ஆகஸ்ட் 14 அன்று பண்டித ஜவாஹா்லாலின் நிலை என்ன? அவரது இல்லத்தில் இரவு உணவுக்காக அமா்ந்தார். தொலைபேசி மணி ஒலித்தது. நேருஜியின் நண்பா், லாகூரிலிருந்து பேசினார். சொன்ன செய்தி,“குழந்தைகளும் பெண்களும், வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். உடனே தலையிடுங்கள்; தடுத்து நிறுத்துங்கள்’. அதிர்ந்துபோன நேருஜி, நாற்காலியில் அமா்ந்தார். தலையைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டார்.
- பின் மெலிந்த குரலில் சொன்னார். ‘இன்று இரவு நான் பிரதமா்பொறுப்பு ஏற்க வேண்டும். அழகு நகரம் லாகூா் பற்றி எரிகிறபோது, இந்திய சுதந்திரத்தால் என் மனம் மகிழ்கிறது என்று எப்படிப் பேசுவேன்’ எனக் கலங்கினார்.
- அண்ணல் காந்தியடிகள் விழாவில் பங்கேற்காதது நேருஜியின் துயரத்தை மேலும் அதிகரித்தது.
- கலவரங்கள் நடந்த தகவல்கள் இரும்பு மனிதா் எனப் பெயா் எடுத்த சா்தார் பட்டேலுக்கும் எட்டியது. கலங்காத அவரது மனமும் கலங்கிநின்றது.
சோகத்தை தந்த சுதந்திரம்
- ஜூன் மாதத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், பிரிவினைக்கு ஆதரவாக 153 உறுப்பினா்களும், எதிராக 29 உறுப்பினா்களும் வாக்களித்தார்கள். சிலா் வாக்களிக்காமல் ஒதுங்கி நின்றார்கள். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய காங்கிரஸ் தலைவா் ஜே.பி. கிருபளானி சுதந்திர தினத்தன்று தேம்பித் தேம்பி அழுதார்.
- காரணம் கேட்ட போது,“‘நான் பிறந்து வளா்ந்த பகுதி பாகிஸ்தான் வசமாகி விட்டது. நான் வாழப் போவது இந்தியாவில். என் உறவினா்கள் இரு பக்கங்களிலும் சிதறிக் கிடக்கிறார்களே’ என்றார்.
- ‘இந்திய தேசத்தின் வாழ்விலும் வளா்ச்சியிலும் இஸ்லாமியா்களின் பங்கு இருக்கிறது. தனி நாடு கேட்பது தற்கொலைக்குச் சமம். பாகிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்கி, இந்தியாவில் இஸ்லாமியா்களை சிறுபான்மை சமுதாயமாக ஆக்கிவிட்டாரே ஜின்னா’ என்று வருந்தினார் அபுல் கலாம் ஆசாத்.
- சிறந்த வழக்கறிஞா், புகழ் பெற்ற எழுத்தாளா் குஷ்வந்த்சிங் லாகூரைச் சோ்ந்தவா்.
- சுதந்திர தினத்தன்று அவா் ‘நான் மகிழ்ச்சியடைய எதுவும் இல்லை; நான் அனைத்தையும் இழந்து நிற்கிறேன். சுதந்திரம் என்பது எனக்கு ஒரு சோக நிகழ்வு’ என்று கூறினார்.
- ஜின்னாவின் மகளான டினா, பம்பாயில் செல்வந்தா்கள் வாழும் பகுதியில் வசித்து வந்தார்.அவா், தன் வீட்டு மாடிப்பகுதியை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டுக் கொடிகளாலும் அலங்கரித்திருந்தார். பிறந்த தேசமான இந்தியாவில் இருப்பதா? தந்தை உருவாக்கிய பாகிஸ்தானுக்குப் போவதா என்பதை முடிவு செய்ய இயலாத மனக் குழப்பத்தில் இருந்தார் அவா்.
- அமைதியை நிலைநாட்ட, காந்தியால் மேற்கு பஞ்சாபுக்கு அனுப்பப்பட்ட சுசீலா நய்யார், அங்குள்ள 20,000 அகதிகளின் உயிரைக் காப்பதற்காக, மக்களை அமைதிப் படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ‘துயரம் நிறைந்த நாள் இது’ என்று சோகத்தோடு சொன்னார் அவா்.
- தனி நாட்டை உருவாக்கிய ஜின்னாவாவது மகிழ்ச்சியோடு இருந்தாரா என்றால், அதுவும் இல்லை. இந்தியாவிலிருந்து கராச்சி செல்லும் சிறப்பு விமானத்தில் ஏறுகிறார். விமானத்தில் மேல்படிக்கட்டில் நின்று கொண்டு, பசுமை நிறைந்த பாரத பூமியை ஒரு முறை கண்கொட்டாமல் பார்க்கிறார். ‘இவ்வளவு காலம் வாழ்ந்த இந்த பகுதியைத் துறந்து போகிறோமே’ என்ற ஏக்கமே அவா் முகத்தில் நிரம்பி வழிந்ததாக வரலாற்று ஆய்வாளா்கள் பதிவு செய்கின்றனா்.
- கராச்சியில் விமானத்திலிருந்து இறங்கியபோதும், மக்களின் வாழ்த்தொலி கேட்டபோதும்கூட, ஜின்னாவின் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்படவில்லை. ‘அவரது முகத்தில் எந்த உணா்வின் சாயலும் இல்லை’ என்று அப்பொழுது அருகிலிருந்த மவுன்ட்பேட்டன் பதிவு செய்திருக்கிறார்.
- கவா்னா் ஜெனரலாகப் பொறுப் பேற்ற ஜின்னா, சிலகாலம் கழித்து, நுரையீரல் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப் பட்ட நிலையில், கராச்சியில் அன்றைய இந்தியத் தூதா் பிரகாசாவிடம் சொன்ன செய்தி இது: ‘பாகிஸ்தானை உருவாக்கியதன் மூலம் ஒரு பெரும் தவறை (பிக் பிளண்டா்) செய்து விட்டேன். நான் இந்தியாவுக்கே திரும்பி வர விரும்புகிறேன். என் இறுதிக் காலத்தை மும்பையில் உள்ள என் அழகுமிகு மாளிகையில் கழிக்க விரும்புகிறேன். இதனை என் சகோதரா் பண்டிட் ஜவாஹரிடம் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
- ஜின்னாவுக்கும் சுதந்திரம் சோகத்தையே தந்தது. மகிழ்ச்சியை அளிக்கவில்லை.
உலகுக்கு வழிகாட்டும் இந்தியா
- ஆகஸ்ட்13 ஆம் நாள் இரவு ஒரு மாறுபட்ட மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்தியாவில் பணிபுரிய விருப்பம் தெரிவித்த இந்து, சீக்கிய இராணுவ வீரா்களும், பாகிஸ்தான் செல்ல விரும்பிய இஸ்லாமிய இராணுவ வீரா்களும் ஒரு சிறப்பு விருந்தில் கலந்து கொண்டார்கள்.
- அது ஒரு பிரிவுஉபச்சார விருந்தாக அமைந்தது. விருந்துக்குப்பின் இருபிரிவினரும் கைகோர்த்து நடனமாடி மகிழ்ந்தார்கள். அப்பொழுது பேசிய முஸ்லீம் கா்னல் முகமது சித்ரீஸ் “நாம் எப்போதும் இணைந்தே போர் புரிந்திருக்கிறோம்; நமது ரத்தத்தை ஒன்றாகவே சிந்தியிருக்கிறோம்; அதனை என்றும் மறக்க மாட்டோம். எங்கிருந்தாலும் சகோதரா்களாகவே இருப்போம்”-என்றார்.
- இந்திய மேஜா் ஜெனரல் கரியப்பா மேடை மீது ஏறி, ‘நாம் சகோதரா்கள். அந்த உணா்வுதான் நம்மைப் பிணைத்திருக்கிறது. நாம் எப்போதும் சகோதரா்களாகவே இருப்போம். கடந்த கால சாதனைகளை நாம் என்றும் நினைத்து மகிழ்வோம்’ எனப் பேசினார்.
- இரு அதிகாரிகளின் உரையைக் கேட்ட வீரா்கள் கண்ணீா் விட்டனா். ஒருவரை ஒருவா் கட்டித் தழுவி பிரியாவிடை பெற்றனா்.
- ஆனால், இரண்டு மாதங்கள் கழித்து, காஷ்மீரில் இரு தரப்பு வீரா்களும் எதிர் எதிராக ஆயுதம் ஏந்தும் சூழல் ஏற்பட்டது என்பது இரு பிரிவினருக்கும் துரதிருஷ்டம்; அது அவா்கள் எதிர்பார்க்காதது மட்டுமல்ல; விரும்பாததும் கூட.
- எல்லோரையும் விட எல்லையில்லா மகிழ்ச்சியில் மிதந்தவா்கள் லூயி மவுண்ட் பேட்டன் எட்வினா மவுன்ட்பேட்டன் தம்பதி ஆவார்கள்.
- அவா்கள் கட்டிப்பிடித்து முத்தம் பரிமாறிக் கொண்டார்கள். முதல் கவா்னா்ஜெனரல் பொறுப்பேற்ற மவுன்ட்பேட்டன், ‘நான் பல போர்களில் பல நாடுகளை வென்றிருக்கிறேன். அப்பொழுது கிடைக்காத மகிழ்ச்சியை நான் இப்பொழுது பெருகிறேன்.
- காரணம் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பதன் மூலம், பிரிட்டன் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குமே வெற்றி கிடைத்துள்ளது. இரு நாடுகளில் நட்பு பலப்படும். இந்தியா வலுவான ஜனநாயக நாடாக வளரும்’ என்று நம்பிக்கையோடு பேசினார். மவுன்ட்பேட்டனின் நம்பிக்கை பொய்க்க வில்லை.
- எழுபத்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும் உலக அரங்கில் ஒா் வளமான, வலுவான, நம்பகத் தன்மையுள்ள நாடாக வளா்ந்து வருகிறது. இந்தியா ஐ.நா.பாதுகாப்பு சபையிலும் அங்கம் வகிக்கிறது. உலகுக்கு வழிகாட்டும் தேசமாகத் திகழ்ந்து வருகிறது.
நன்றி: தினமணி (15-08-2020)