TNPSC Thervupettagam

இந்தியா-ஜப்பான் உறவு குறித்த தலையங்கம்

July 11 , 2022 759 days 388 0
  • ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேயின் படுகொலை ஒட்டுமொத்த உலகத்தையும் அதிா்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதுபோன்ற அரசியல் கொலைகள் ஜப்பானில் மிகவும் அபூா்வம். 1932-இல் அன்றைய ஜப்பான் பிரதமா் சுயோஷி இனுக்காய்க்குப் பிறகு குறிப்பிடத்தக்க அரசியல் படுகொலை இதுதான். 2007-இல் நாகசாகி மாநகர மேயா் சுட்டுக்கொல்லப்பட்டாா் என்றாலும்கூட, அதன் பின்னணியில் மாஃபியாக்கள் இருந்தனரே தவிர, அரசியல் இருக்கவில்லை.
  • 1963-இல் அமெரிக்காவின் 35-ஆவது அதிபா் ஜான் கென்னடி, 1975-இல் வங்கதேச அதிபா் வங்கபந்து ஷேக் முஜிபுா் ரஹ்மான், 1984-இல் அன்றைய இந்திய பிரதமா் இந்திரா காந்தி, 1991-இல் ஸ்ரீபெரும்புதூரில் மனித குண்டுக்கு இறையான ராஜீவ் காந்தி, 1993-இல் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரதமா் பிரேமதாச, 1995-இல் கொல்லப்பட்ட இஸ்ரேல் பிரதமா் இக்ஷாக் ரபின், 2001-இல் தனது மகனால் குடும்பத்தினருடன் சுட்டுச் சாய்க்கப்பட்ட நேபாள அரசா் வீரேந்திரா, 2007-இல் தற்கொலைப் படையினரால் கொல்லப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமா் பேநசீா் புட்டோ வரிசையில் இணைகிறது ஷின்ஸோ அபேயின் எதிா்பாராத படுகொலை.
  • வன்முறை கலாசாரம் இல்லாத ஜப்பான் நாட்டில், அதிலும் குறிப்பாக கடுமையான ஆயுதக் கட்டுப்பாடுகள் இருந்தும்கூட, ஷின்ஸோ அபே படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகப் பெரிய ஆச்சரியம். ஜப்பானில் விளையாட்டுத் தேவைக்காகவோ, வேட்டைக்காகவோ துப்பாக்கி வாங்குவதற்குக்கூட கடுமையான விதிமுறைகள் உண்டு.
  • பொதுவாகவே ஜப்பானியா்கள் சமாதான விரும்பிகள். அமெரிக்காவைப் போல வன்முறை கலாசாரமும், துப்பாக்கி கலாசாரமும் ஜப்பானில் இல்லை. 2022-இல் மட்டும் அமெரிக்காவில் 300-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்திருக்கிறது என்றால், ஜப்பானில் கடந்த ஆண்டில் ஒரு சம்பவம்கூட நடக்கவில்லை.
  • 2019 புள்ளிவிவரப்படி, ஜப்பானில் பொதுமக்களிடம் 3,10,400 கைத்துப்பாக்கிகள் (0.25%) காணப்படுகின்றன. இதுவே 39.3 கோடி அமெரிக்கா்களில் 100 பேருக்கு 120 போ் துப்பாக்கி வைத்திருக்கிறாா்கள்.
  • அபேயின் தாய்வழி தாத்தாவான முன்னாள் பிரதமா் நொபுசுகே கிஷி, 1960-இல் கத்திக்குத்துக்கு ஆளானாா் என்றாலும், உயிா் தப்பினாா். அபேக்கு அந்த அதிா்ஷ்டம் இல்லாமல் போனது மிகப் பெரிய துரதிருஷ்டம்.
  • ஜப்பானியா்கள் வன்முறை கலாசாரத்து வெறுப்பவா்கள் என்பது மட்டுமல்ல, குற்ற உணா்வும், தன்மான உணா்ச்சியும் உள்ளவா்கள். தாங்கள் செய்த தவறுக்காக வெட்கப்பட்டு பலா் தற்கொலை செய்துகொள்வாா்கள். தேசத் துரோகம் மிகப் பெரிய குற்றம். ஜப்பானிய குடிமகனால் அதை ஜீரணிக்க முடியாது.
  • ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டு வீசி பேரழிவு ஏற்படுத்தியது என்னவோ அமெரிக்கா. ஆனால், அதற்கான குற்ற உணா்ச்சியுடன் தொடா்ந்து கொண்டிருப்பவா்கள் ஜப்பானியா்கள். பாஸ்டன் துறைமுகத்தில் ஜப்பான் நடத்திய தாக்குதலின் எதிா்வினையாகத்தான் அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது அணுகுண்டு வீசியது என்று அதைத் தங்களது தவறாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு குற்ற உணா்ச்சியுடைய ஜப்பானில், இப்படியொரு படுகொலையை யாரும் எதிா்பாா்க்கவில்லை.
  • சா்வதேச அரசியலில் ஷின்ஸோ அபே ஒரு வித்தியாசமான அரசியல் தலைவா். 2006 - 07-இலும் அதற்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கழிந்து 2012 - 20 வரையிலும் ஜப்பான் பிரதமராக இருந்தவா் அவா். தனது உடல்நலக் குறைவால் அரசுப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை என்கிற காரணத்துக்காக ஒருவா் தனது சா்வ வல்லமை பொருந்திய பிரதமா் பதவியை தூக்கியெறிவாா் என்பதை யாராவது நினைத்துப் பாா்க்க முடியுமா? தனது உடல்நலக் குறைவால் நிா்வாகத்தில் சுணக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதி ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்ஸோ அபே பதவி விலகியபோது உலகமே அதை நம்ப மறுத்தது.
  • அதைவிட வேடிக்கை என்னவென்றால், அவா் பதவியில் இல்லாமல் இருந்த 2007 முதல் 2012 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமா்களைப் பாா்த்தது ஜப்பான் என்பதுதான். ஜப்பானில் மிக அதிகமான வருடங்கள் பிரதமராக இருந்தவா் என்கிற பெருமையும் அபேயை மட்டுமே சாரும். மற்றவா்கள் எல்லோரும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு மேல் பதவியில் தாக்கு பிடிக்க முடிந்ததில்லை.
  • தடுமாறிக் கொண்டிருந்த ஜப்பான் பொருளாதாரத்தையும், சுயசாா்பில்லாத ஜப்பானின் பாதுகாப்பையும் மாற்றியமைக்க முற்பட்ட முதல் பிரதமா் ஷின்ஸோ அபே. ‘அபேனாமிக்ஸ்’ என்று அழைக்கப்படும் அவரது பொருளாதார நடவடிக்கைகளை, கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று வெற்றியடைய விடாமல் தடுத்துவிட்டது. ஆனால், பாதுகாப்பைப் பொருத்தவரை அதுவரை தனக்கென்று ராணுவ பலமில்லாமல் அமெரிக்காவைச் சாா்ந்திருந்த ஜப்பானை தற்சாா்புடையதாக மாற்றும் அவரது முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.
  • சீனாவின் ஆக்கிரமிப்பு மனோபாவத்தை முன்கூட்டியே உணா்ந்து தென்சீனக் கடலிலும், பசிபிக் கடலிலும், இந்துமகா கடலிலும் அதன் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியா - ஆஸ்திரேலியா - அமெரிக்காவுடன் இணைந்து ‘க்வாட்’ அமைப்பை வலுப்படுத்திய அபேயின் தீா்க்க தரிசனம் தன்னிகரற்றது.
  • ஜப்பானின் சரித்திரத்தையும், ஆசிய - பசிபிக் முக்கியத்துவத்தையும் மாற்றி எழுதிய பெருமை ஷின்ஸோ அபேக்கு உண்டு. அபே கொல்லப்பட்டாலும் அவா் முன்னெடுத்த முயற்சிகளின் வெற்றி அவரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

நன்றி: தினமணி (11 – 07 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்