TNPSC Thervupettagam

இந்தியா தன் சொந்தக் காலில் நிற்பது மிக அவசியம்

April 4 , 2019 2099 days 1136 0
  • அவைத் தலைவர் அவர்களே, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக இம்முறை விசித்திரமாக – அதே சமயம் உற்சாகமூட்டக்கூடிய சூழலில் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். நம் நாட்டை ஆக்கிரமிக்க முயன்ற எதிரியின் முயற்சியை மிகச் சமீபத்தில் தகர்த்து எறிந்திருக்கிறோம்; நம்முடைய முப்படையினரின் வீரதீர சாகசங்களால் மிகவும் பெருமிதத்துடனும் – நியாயமான பெருமிதம்தான் – மகிழ்ச்சியுடனும் அவையில் அமர்ந்திருக்கிறோம். போர்க்களத்தில் நமக்குக் கிடைத்த வெற்றி நம்முடைய வெளியுறவுக் கொள்கையாலும் அதன் அமலாக்கத்தாலும் நேரடியாக விளைந்த பலன் என்று நாம் தவறாக நம்பிவிடக் கூடாது.
ராணுவம் போலச் செயல்படுமா அரசு?
  • நாம் போர்க்களத்தில் கையாளும் யுத்த தந்திரங்களைவிட நம்முடைய வெளியுறவுக் கொள்கை மிகவும் இறுகியும், மிகவும் தளர்ந்தும் வலுவற்று காணப்படுகிறது. தங்களுடைய போர்த்திறமையைக் களத்தில் காட்டிய நம்முடைய ராணுவப் படைகளுக்கு நாம் நன்றி சொல்லவும், அவற்றைப் பற்றிப் பெருமைப்படவும் கடமைப்பட்டிருக்கிறோம்; எத்தனை விதமான களங்களில் எப்படிப்பட்ட வெற்றிகளையெல்லாம் நம்முடைய படையினர் பெற்றுள்ளனர் என்பதைப் பார்த்து வியந்தேன். ஆளுங்கட்சியும் இதேபோல திறமையாகச் செயல்பட்டு இப்படிப்பட்ட வெற்றிகளைக் குவித்திருந்தால், வெளியுறவுக் கொள்கை உள்பட அனைத்துத் தளங்களிலும் நமக்குப் பிரச்சினைகளாக இன்றைக்கும் திகழ்பவை பெரும்பாலும் தீர்ந்துவிட்டிருக்கும்.
  • மிகவும் நவீனமானதும் பயனுள்ளதுமான ஆயுதங்களை நம்முடைய படையினருக்கு நாம் வழங்கவில்லை என்று அறிகிறேன். காலத்தால் பிந்தைய, வழக்கிலிருந்து பெரும்பாலும் நீக்கப்பட்ட பழைய ஆயுதங்களையே நம்முடைய படைகளுக்கு வழங்கினோம். இருந்தும் கடுமையான சூழலிலும் அமெரிக்காவின் ‘பேட்டன்’ டேங்குகள் போன்ற நவீன ராணுவ ஆயுதங்களுக்கு எதிராகப் போரிட்டு நம் படையினர் வெற்றி பெற்றுள்ளனர்.
  • ஆனால், கடந்த 18 ஆண்டுகளாக நம்மை ஆளுங்கட்சிக்கு பழைய – வழக்கொழிந்த ஆயுதங்களை நாம் தரவில்லை, அவர்கள் கேட்டதையெல்லாம் தந்திருக்கிறோம்; இருந்தும் வெளியுறவுத் துறையானாலும் உள்நாட்டுத் துறையானாலும் உணவுத் துறையானாலும் தொழில் துறையானாலும் நம்முடைய ராணுவம் ஈட்டிய வெற்றிகளைப் போல, அவர்கள் புரிந்த சாதனைகளைப் போல வென்று குவித்துவிடவில்லை. ஆக, வெளியுறவுக் கொள்கையை ஆய்வுசெய்யும்போது நம்முடைய ராணுவ வெற்றியையும், அது எப்படி சாத்தியமானது என்பதையும் ஆராய வேண்டும்.
வெளியுறவுப் பாதை ஒருவழிப்பாதையாக இருக்க முடியாது!
  • நமது அல்லது எந்த ஒரு நாட்டினதாக இருந்தாலும், வெளியுறவுக் கொள்கை என்பது ஒருவழிப்பாதையாக இருக்க முடியாது. நம்மைச் சுற்றி ஏற்படும் சூழல்களையும் நமக்குப் பக்கத்தில் இருக்கும் நாடுகள் கடைப்பிடிக்கும் வெளியுறவுக் கொள்கைகளையும் கருத்தில் கொள்ளாமல் நம்முடைய வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்துக்கொண்டே போக முடியாது. நாம் கடைப்பிடிக்கும் அணிசேராக் கொள்கையையும் இதர அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும் என்று எங்களில் சிலர் கோரி வருகிறோம்; இதைக் கேட்டவுடனே ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து, நாங்கள் வேறு யாருடைய சிந்தனைகளையோ இங்கே விதைக்க வந்திருக்கிறோம் என்று அவசரப்பட்டு எங்களோடு மோதப் புறப்பட்டு விடக் கூடாது. உண்மை என்னவென்றால், திமுகவுக்கு உலக அரங்கில் எந்த அணி மீதும் ஆர்வம் இல்லை.
  • உள்ளபடி, ‘அணிசேரா’ என்ற வார்த்தை என்னுடைய பள்ளிக்கூட நாட்களை நினைவுபடுத்துகிறது. ஒரு வேலைக்காக மனுசெய்த ஒருவர், ‘பள்ளியிறுதி வகுப்பை முடிக்காதவர்’ (நான்-மெட்ரிகுலேட்) என்று தனது கல்வித் தகுதிக்கான கட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். வேலை தருவதற்காக நேர்காணல் நடத்தியவரோ, “சரி, நீ பள்ளியிறுதி வகுப்பை முடிக்கவில்லை; எதுவரைதான் படித்திருக்கிறாய்? ஆறாவது தேறினாயா? ஏழாவது தாண்டினாயா? எட்டாவதாவது பாஸ் செய்தாயா?” என்று எரிச்சலாகக் கேட்டார்.
ஒதுங்கியிருப்பது எதிர்மறைச் சிந்தனை
  • நீங்கள் அணியில் சேர்ந்தவரா அல்லது சேராதவரா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை; அப்படியென்றால் உண்மையில் நீங்கள் யார் என்று அரசைக் கேட்க எனக்கு உரிமையிருக்கிறது. அணி சேராமல் இருப்பது, எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருப்பது என்பதெல்லாம் எதிர்மறையான சிந்தனை. இல்லை, வேண்டுமென்றேதான் இந்த நிலையைத் தேர்ந்தெடுத்தோம், இது ஆக்கபூர்வமானது, இது குறிப்பிட்ட நோக்கம் கொண்டது என்று கூறுவதால் பலன் ஏதுமில்லை.
  • சேரா என்றாலே நாம் யாருடனும் சேரவில்லை என்று பொருள். இப்படிச் சொல்வதால் நாம் ‘சீட்டோ’, ‘சென்டோ’, ‘நேட்டோ’ இப்படியான அமைப்புகளில் எதிலாவது சேர்ந்திருக்க வேண்டும் என்று கூறவில்லை. இப்படிப்பட்ட ராணுவக் கூட்டுகள் இருப்பதையே நான் விரும்பவில்லை. வட்டத்துக்குள் வட்டங்களாக இதைப் போன்ற ராணுவக் கூட்டு அமைப்புகளை வைத்துக்கொண்டு, உலக அமைதியைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையை அனைவரும் முதுகில் குத்த முயல்கின்றனர். ‘அணிசேரா’ என்றால் என்ன என்று தெளிவாக விளக்குமாறு அரசை நான் கேட்கும்போது, ஏதாவது நாடுகளின் ராணுவக் கூட்டில் சேருங்கள் என்று நான் மறைமுகமாகக்கூட கூறவில்லை.
  • வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அரசுக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும். அந்த இலக்கானது கண்ணியத்துடன் கூடிய அமைதி, சமரசம், பிற நாடுகளுடன் தோழமையுணர்வு ஆகியவற்றை வளர்ப்பதாக அமைய வேண்டும். அமைதி நிலவ வேண்டும் என்று நினைக்கும்போது எந்த ராணுவக் கூட்டிலும் நாம் சேரக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். இதற்கு மாற்றாக, சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு நாம் பலசாலிகளாக வளர வேண்டும்.
கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தும் நாட்டால், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது!
  • இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்துக்கொண்டிருக்காமல், இந்த நாடு அல்லது அந்த நாட்டின் உதவியை எதிர்பாராமல், வாழ வேண்டும். “கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தும் நாட்டால், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது” என்று யாரோ பேசியது நினைவுக்குவருகிறது. “நிபந்தனையுடன் வரும் உதவியை ஏற்க மாட்டோம்” என்று சொல்வது எளிது அல்லது உற்சாகத்தைத் தருவது; நிபந்தனைகளே விதிக்கப்படாமல் தரும் உதவிகளைப் பெறுவதுகூட இந்த நாட்டின் நிலைமையை உலகுக்கு உணர்த்திவிடும்.
  • நம்மிடம் ஏராளமான திறமைகள், ஆற்றல்கள் பொதிந்துள்ளன. சரியான இடத்திலிருந்து, சரியான தருணத்தில், சரியான குரலில் அழைப்பு வந்தால், மாபெரும் மக்கள்திரள் திரண்டு வந்து எதிர்பார்க்கும் செயலைச் செய்து முடிக்கத் தயாராக இருக்கிறது என்பது சமீபத்திய போரின்போது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. எனவே, நம்முடைய வெளியுறவுக் கொள்கை உண்மை யிலேயே சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், உள்நாட்டு நிலைமை வலுவாக இருந்தால்தான் முடியும்.
  • உள்நாட்டு நிலைமை என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? ஊர்க்காவல் படையையோ, மக்கள் பாதுகாப்புப் பேரவைகளையோ, கிளப்புகளையோ, கூட்டங்களையோ அல்ல. ஜனநாயக சக்திகள், ஜனநாயக இயந்திரம், ஜனநாயக உணர்வுகள் ஆகியவற்றையே உள்நாட்டு நிலைமை என்கிறேன். நெருக்கடியான இந்த நிலையில்கூட ஜனநாயக இயந்திரத்தை வலுப் படுத்திக்கொண்டிருக்கிறோமோ என்று ஆளுங்கட்சியையும் அதைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்க விரும்புகிறேன். தங்களுடைய எல்லா முயற்சிகளிலும் எதிர்க்கட்சிகளையும் தங்களோடு இணைத்துச் செயல்படுவதாக ஆளுங்கட்சியினரால் கூற முடியுமா?
சொந்தக் காலில் எப்போது நிற்போம்?
  • ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக நாடே ஒரே அணியாகத் திரண்டதால் ஏற்பட்ட ஜனநாயக உணர்வு மங்காமல் அப்படியே நீடிக்க, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் செயல்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இப்போதைய நிலையைப் பொறுத்தவரை, உதவிக்காக இந்த நாட்டை அணுகுகிறோமா அல்லது அந்த நாட்டை அணுகுகிறோமா என்பது முக்கியமல்ல; நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் நம்மால் இன்னும் சொந்தக் காலில் எழுந்து நிற்க முடியவில்லை.
  • உணர்வுகளில் நாம் வலுவாக இருக்கிறோம், அறிக்கைகளில் அதைவிட வலுவாக இருக்கிறோம், ஆனால், உண்மைகளோ அறிக்கைகளைப் பொய்யாக்கி விடுகின்றன. இப்போதும்கூட நாம் அமெரிக்க உதவியைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் – நவீன இயந்திரங்களுக்காக அல்ல, ஏழைகளுக்கான ஒரு கவளச் சோறுக்காக!
பஞ்சமும் பட்டினிகளும் எவ்வளவு கொடுமை!
  • ஆளுங்கட்சியானது கடந்த 18 ஆண்டுகளாக இந்த நாட்டின் எதிர்கால வளர்ச்சியைத் தடுத்துக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து மக்களுக்குக் கிடைத்திருப்பது என்ன? அதிகம் வரி செலுத்த வேண்டும் என்றார்கள், மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து வரி செலுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்; இது போதாது கடன் வாங்க வேண்டும் என்றார்கள். பிறகு, மானியங்கள் வேண்டும் என்றார்கள். எல்லாம் நடந்தது. பிறகு, எங்களைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள், வாக்களியுங்கள் என்றார்கள்.
  • மூன்று பொதுத் தேர்தல்களில் மக்கள் தொடர்ந்து ஆதரித்து வாக்களித்தார்கள். இவ்வளவுக்கும் பிறகு, 18 ஆண்டுகள் ஆண்ட பிறகும் பிரதமரும் உணவுத் துறை அமைச்சரும் கட்சி மாநாட்டில் சந்தித்து, அமெரிக்காவிடமிருந்து உடனடியாக ‘பிஎல் 480’ (பப்ளிக் லோன் – பொதுக் கடன்) மூலம் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களைப் பெறாவிட்டால் மக்கள் பட்டினி கிடந்து பஞ்சத்திலே இறந்துவிடுவார்கள் என்று பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். உணவு தானிய விளைச்சலில்கூட தன்னிறைவு காண முடியாத நமது அரசின் செயல்பாட்டையும், நவீன ஆயுதங்களோ, சாதனங்களோகூட இல்லாத நிலையில் நம்முடைய ராணுவ வீரர்கள் போர் முனையிலே பெற்ற வெற்றியையும் ஒப்பிட்டுப்பார்க்க முயல்கிறேன்; அந்தோ, எந்த மாதிரியான ஒப்பீடு!
  • எதற்கெல்லாம் முன்னுரிமை தந்திருக்க வேண்டுமோ, அவற்றுக்கெல்லாம் ஆளுங்கட்சி முன்னுரிமை தந்திருந்தால் இந்த உணவுப் பற்றாக்குறையே ஏற்பட்டிருக்காது என்பதுதான் எங்களுடைய கருத்து. அதற்காக என்னுடைய நண்பர் கோவிந்தன் நாயரைப் போல, “பிஎல் 480 கூடாது, வாங்காதீர்கள்” என்று கூற மாட்டேன். ‘பிஎல் 480’-ஐவிடக் கொடுமையானது பஞ்சமும் பட்டினிச் சாவுகளும்!
தவறான ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள் அமெரிக்கர்கள்
  • நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங் மேற்கொண்ட பெருமுயற்சிகளால் அமெரிக்கச் செய்தித்தாள்களும் அமெரிக்க மக்களும் அமெரிக்கத் தலைவர்களும், “காஷ்மீர் தொடர்பாக மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று பேசாமல் இருக்கிறார்கள்; இருந்தாலும், காஷ்மீர் பிரச்சினைக்கு ஏதாவதொரு அரசியல் தீர்வு தேவை என்று நினைக்கிறார்கள், பேசுகிறார்கள். எனவே, இந்நாட்டின் பிரதமர் அமெரிக்கா சென்று அமெரிக்க அதிபரைச் சந்திக்கும்போது அவர் காஷ்மீர் குறித்துப் பேசும்போது, காஷ்மீருக்காக வெவ்வேறு போர்க்களத்தில் நம்முடைய வீரர்கள் சிந்திய செந்நீரையும், நாம் பெற்ற ராணுவ வெற்றிகளையும், காஷ்மீரை விட்டுத்தரும் பேச்சுக்கே இடமில்லை என்று இந்த அவையிலும் இன்னொரு அவையிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் பிரதமர் நினைவில் கொள்ள வேண்டும்.
  • இன்னொரு விஷயம், அமெரிக்காவிடமிருந்து உணவு தானிய உதவியை விரைந்து பெறுவது மிகவும் அவசியமாகிவிட்ட இத்தருணத்தில், அமெரிக்க ராஜதந்திர வரலாற்றையும் சர்வதேசக் கடமைகளையும் படித்துப் பார்த்ததில் எனக்கொரு உண்மை புலப்பட்டது; சரியான வேலைக்கு தவறான நபர்களைத் தேர்வுசெய்வதே அமெரிக்க அரசுக்கும் அமெரிக்கத் தலைவர்களுக்கும் வழக்கமாக இருப்பது தெரியவருகிறது. தவறான குதிரைமீது அதிகத் தொகைக்குப் பணம் கட்டுவதில் அமெரிக்கர்கள் வல்லவர்கள்.
  • அமெரிக்கர்கள் அப்படிப் பந்தயம் கட்டிய இடம்தான் தைவான்; இன்னொருவர் சிங்மேன் ரீ – தென் கொரிய அதிபர், அடுத்து வியட்நாமில் அவர்கள் வாரத்துக்கொரு பொம்மலாட்டத் தலைவரை உருவாக்குகின்றனர்.
  • ஆகையால், எப்படியோ என் மனதிலும் – மக்களுடைய மனங்களிலும், கம்யூனிஸ்ட்டுகளுடன் வலது, இடது என்று இரண்டிடமும் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் - அமெரிக்கா தரும் பணம் கறைபடிந்தது என்ற எண்ணம் நிலவுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக வாங்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு லாபம், அதிகம் வாங்கினால் நாம் அதிகம் இழக்க நேரும். எனவே, நாம் உள்நாட்டின் மீது கவனத்தை செலுத்தி ஜனநாயக சக்திகளை வலுப்படுத்த வேண்டும், ஜனநாயக உணர்வுகளை வலுப்படுத்த வேண்டும், பொருளாதாரரீதியாக நம்முடைய சொந்தக் காலிலேயே நிற்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்