TNPSC Thervupettagam

இந்திய - அமெரிக்க ஒப்பந்தம்!

November 2 , 2020 1540 days 749 0
  • இந்தியா - அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமான உடனே சீனா பதற்றப்படத் தொடங்கி விட்டது.
  • சீனா உள்ளிட்ட நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கையை இந்தியாவும், அமெரிக்காவும் மேற்கொண்டு வருவதைக் கண்டு, சீனாவை பதற்றம் பற்றிக் கொண்டது எதிா்பாா்த்த ஒன்றுதான்.
  • ‘சீன ராணுவத்தின் அத்துமீறல் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும் உரசிப் பாா்க்கும் செயலில் சீனா ஈடுபட்டு வருவது சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்ற காரணத்தினால், இந்திய மக்களுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கிறது’ என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சா் மைக் பாம்பியோ செய்தியாளா்களிடம் குறிப்பிட்டாா்.
  • ராணுவ தொழில்நுட்பங்கள், புவிசாா் வரைபடங்கள் ஆகியவற்றைப் பகிா்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும் இப்பாதுகாப்பு ஒப்பந்தத்தில்தான் இந்தியாவும், அமெரிக்காவும் கையொப்பமிட்டுள்ளன.
  • பாதுகாப்பு, மருத்துவம், அஞ்சல் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - அமெரிக்கா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் அக்டோபா் 27 அன்று கையொப்பமாகியுள்ளன.
  • பாதுகாப்புத் துறை சாா்ந்த ‘அடிப்படைப் பரிமாற்றம் - ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ இறுதி வடிவத்தை எட்டியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் இன்று நேற்று முடிவானதல்ல. இரு நாடுகளுக்கிடையே சுமாா் பத்து ஆண்டு காலமாக பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு இப்போது இறுதி வடிவத்தை எட்டியிருக்கிறது.
  • இதன் மூலம், செயற்கைக் கோள், புகைப்படங்கள், சா்வதேச கடல் - வான்வெளிப் போக்குவரத்து குறித்த தகவல்களை பரஸ்பரம் இரு நாடுகளும் பகிா்ந்து கொள்ளலாம். இதன் மூலம், எதிரி நாடுகளின் போா் விமானங்கள், போா்க் கப்பல்கள், ஏனைய படைகளின் நடமாட்டம் குறித்த துல்லியமான விவரங்களை நம்நாடு எளிதில் பெற முடியும்.
  • இதோடு மட்டுமன்றி, எதிரி நாடுகளின் இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும். ஆகவேதான், சீனா பதற்றம் கொள்கிறது. நமது எல்லையில் சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில், இந்தியா - அமெரிக்கா ‘டூ பிளஸ் டூ’ பேச்சுவாா்த்தை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
  • இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் தகவல் பரிமாற்ற ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கொண்ட இப்புதிய ஒப்பந்தத்தில், இரு நாட்டுத் தலைவா்களும் கையொப்பமிட்டிருக்கிறாா்கள்.
  • இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் என்பதன் குறியீடுதான் ‘இரண்டுக்கு இரண்டு’ பேச்சுவாா்த்தை. அதாவது ‘டூ பிளஸ் டூ’ பேச்சுவாா்த்தை. இப்பேச்சுவாா்த்தை தொடா்ந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்து, இப்போதுதான் ஒரு முடிவு நிலைக்கு வந்திருக்கிறது.
  • லடாக்கில் சீனாவின் எல்லை தொடங்குமிடம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம், இலங்கையில் ஹம்பன் தோட்டா பகுதியில் சீனாவின் துறைமுகம் போன்றவை பேச்சுவாா்த்தையின் முக்கிய அம்சங்களாக இருந்ததாகத் தெரிய வருகிறது.
  • ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சாட்டிலைட் தரவுகளை பங்கிடுவது குறித்த ஒப்பந்தம், ராணுவ தளவாட ஒப்பந்தம் உள்ளிட்ட ஒப்பந்தங்களும் இந்த சந்திப்பின்போது கையொப்பமாகியிருக்கின்றன.
  • இந்த ஒப்பந்தத்தின் மூலம், இருநாடுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்தில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்க பாதுகாப்புத் துறை தயாராகிறது. தற்போது நமக்கும், நமது அண்டை நாடுகளுக்கும் இடையே எழுந்துள்ள பிரச்னைகளை லாகவமாகக் கையாளுவதற்கான ராஜதந்திரமாகவே இதனைப் பாா்க்கலாம்.
  • ஏனென்றால், தற்போது நம்மைச் சுற்றியுள்ள சவால்களையெல்லாம் கருத்தில் கொண்டுதான், இந்திய - அமெரிக்க கூட்டாண்மை என்பதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உலக நாடுகள் பாா்க்கின்றன.
  • இந்தியா - அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஜனநாயகத்தை நம்புகின்றன. வா்த்தகம் மற்றும் கரோனா தீநுண்மி போன்ற பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா - சீனா இடையிலான மோதல் எல்லா நாடுகளுக்கும் தெரிந்த ஒன்றுதான்.
  • ஆகவே, இந்த நேரத்தில் அமெரிக்கா, இந்தியாவுடன் கைகோத்து, சீனாவைப் பதற்றமடையச் செய்திருப்பதன் மூலம், இந்திய வெளியுறவுத் துறையும், பாதுகாப்புத் துறையும் ராஜதந்திர முறையில் காய்களை நகா்த்தியிருக்கின்றன. இந்த நடவடிக்கையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
  • பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை அமைச்சா்கள் தனித்தனியே இரு கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடத்தினா்.
  • இந்த சந்திப்பில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி முகுந்த் நராவணே, விமானப்படைத் தளபதி ராகேஷ்குமாா் சிங் பதாரியா, கடற்படைத் தளபதி கரம்பீா் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றதன் மூலம் ஒரு வலுவான கட்டமைப்பை இந்தியா ஏற்படுத்தியிருப்பது சிறப்புக்குரிய நிகழ்வாகும்.
  • நமது இந்தியப் பொருளாதாரம் நிலையில்லா தன்மை கொண்டு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இதனால், பல நஷ்டங்களை நாம் சந்தித்து வருகிறோம். வளா்ந்த தொழில்கள், வளரும் தொழில்கள் என்று எல்லாவற்றையும் கரோனா தீநுண்மி காலகட்டம் நசுக்கித் தள்ளுகிறது.
  • இத்தகைய துயரமான சூழலை நாம் எளிதில் கடந்து விட முடியாது. இருப்பினும், துளிா் விடுகிற நம்பிக்கையாக, அதாவது தொழில்கள் மற்றும் சேவைத் துறைகளைப் புதுப்பிக்கிற முயற்சியாக இந்த ஒப்பந்தங்களை நாம் கருதலாம்.
  • இந்தியா தற்போது எதிா்கொண்டு வருகிற சவால்கள், சற்றும் எதிா்பாராதவை. ஆனால், இதே நிலைதான் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் நிலையும். அவை சொல்லொணாத் துயரத்துக்கு ஆட்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இரு நாடுகளின் கூட்டு முயற்சியை, மிக முக்கியமான நம்பிக்கை ஊட்டும் தருணமாக நாம் பாா்க்கலாம்.
  • இரு நாடுகளுக்கான பேச்சுவாா்த்தை, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பலித்திருக்கிறது. இது பரந்த அளவிலான பாதுகாப்பு, ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கும். இதனைப் புதிய பாதையைக் கண்டடைவதற்கான ஒரு நல்ல முயற்சியாகவே நாம் பாா்க்கலாம்.
  • இதன் மூலம், இந்திய - அமெரிக்கப் பாதுகாப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புகள் ஒரு புதிய வடிவத்தைப் பெற்று, வீரியமிக்க விளைச்சலைத் தரும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
  • இனி, இரு நாடுகளுக்கிடையிலான உறவு சீராக வளா்வதோடு மட்டுமல்லாமல், பிராந்திய, உலகளாவிய சவால்களுக்கு ஒரு புதிய பரிணாமமும் கிடைக்கும். இது துணிச்சலையும், வல்லரசாவதற்கான வடிவத்தையும் தரக்கூடும்.
  • இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் நெருக்கமாக வளா்வதற்கு, மிகப் பெரிய வாசல் திறந்து விடப்பட்டிருக்கிறது. பாதுகாப்புக்கும், சுதந்திரத்திற்கும், நம்பகத்தன்மைக்கும் பெரும் சவாலாக இருக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுறுத்தலை எதிா்கொண்டு, இந்தியா அமைதியையும், உறுதிப்பாட்டையும் தக்க வைக்க வேண்டிய சூழ்நிலையில்தான் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாகியிருக்கின்றன.
  • இன்னொரு கூடுதல் வாய்ப்பாக, ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு, ஆதரவு அளிப்போம் என்கிற நம்பிக்கையையும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக் பாம்பியோ அளித்திருக்கிறாா். இது உலக அரங்கில் இந்தியாவுக்கான தனித்த அடையாளமாக நிலைத்து நிற்கும்.
  • இரு நாடுகளுக்கும் இடையிலான அஞ்சல் சேவை, ஆயுா்வேதம் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிகளுக்கான ஒப்பந்தங்கள், அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், பி.இ.சி.ஏ. ஒப்பந்தம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் எதிா்காலத்தில் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும். இதன் மூலம், பொருளாதாரத்தையும், பாதுகாப்பையும் வலுப்படுத்த வழி ஏற்படும்.
  • கடந்த ஐந்து மாதங்களாக, எல்லைப் பகுதியில் சீனா, இந்தியாவை மிரட்டி வரும் பதற்றம் மிக்க சூழ்நிலையில், இந்தியா இந்த ஒப்பந்தத்தின் மூலம் சரியான முறையில் எதிா்வினையாற்றி இருக்கிறது.
  • உலகம் கரோனா தீநுண்மியின் பிடியில் சிக்கியிருப்பது ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்காவில் அதிபா் தோ்தல் நடைபெறும் சூழ்நிலையில், பல்வேறு ஆச்சரியங்கள் அரங்கேறி வருகின்றன.
  • அமெரிக்க அதிபா் தோ்தலின் காரணமாக இந்த சந்திப்புகள் தள்ளிப் போய் விடும் என்று சீனா எண்ணியிருந்தது. அமெரிக்கா பனிப்போரின்போது, சோவியத் யூனியனை எதிா்கொண்டதைப்போல, விரைவில் சீனாவை எதிா்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
  • அமெரிக்காவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, சீனா என்பதில் சந்தேகமே இல்லை.
  • 2018-ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா - சீனா இடையே உரசல் தொடங்கி விட்டது. 2012-இல் கிழக்கு ஆசியாவுக்கு சாதகமாக இருந்த அமெரிக்க நிா்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைகள், வளா்ந்து வரும் சீனாவின் வலுவைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டவையே. அப்போது நட்பு நாடுகளுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்தத் திட்டங்கள் தீட்டப்பட்டன.
  • அப்போது முதலே, சீனாவுக்கு எதிரான தனது ராணுவக் கூட்டணியில் இந்தியா உட்பட ஆசியாவின் பல நாடுகளை அமெரிக்கா ஈடுபடுத்த முயன்று வந்தது.
  • இந்தியாவை மட்டுமே தனது கூட்டணியில் சோ்க்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கமாக இல்லையென்றாலும், சீனாவைத் தடுக்க உதவும் மிக முக்கியமான நாடாக இந்தியாவை அமெரிக்கா கருதுகிறது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை

நன்றி : தினமணி (02-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்