TNPSC Thervupettagam

இந்திய அறிஞர் ஆந்திரே பெத்தேல்

September 8 , 2024 129 days 127 0

இந்திய அறிஞர் ஆந்திரே பெத்தேல்

  • இந்திய அறிவாளிகளிலேயே நான் மிகவும் விரும்பும் பேராசிரியர் ஆந்திரே பெத்தேல், இம்மாதம் 15ஆம் நாள் 90வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். வங்காளத்தில் பிறந்து வளர்ந்த அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு டெல்லியில் குடியேறினார். டெல்லி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் நாற்பதாண்டுகள் பணிபுரிந்தார், அத்துடன் ஏராளமான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியிருக்கிறார். பணி ஓய்வுக்குப் பிறகு அசோகா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பதவி வகித்தார்.
  • தான் சார்ந்த துறையில் பல நூல்களைப் பதிப்பித்ததோடு தனது இளமைக் காலம், கல்வி பற்றி மிகவும் சுவையான நினைவுக் குறிப்புகளையும் எழுதியிருக்கிறார்.

யார் இந்த பெத்தேல்?

  • ஆந்திரே பெத்தேல் அரை பிரெஞ்சுக்காரர், அரை வங்காளி - ஆனால் முழுமையான இந்தியர்! வங்காள அறிஞர்களில் பெரும்பாலானவர்களைப் போல அல்லாமல், தன்னுடைய தாய்நாட்டை மிகவும் நேசிப்பவர் ஆந்திரே. வங்காளிகள் குறுகிய மனம் படைத்தவர்கள் என்று பொருள் இல்லை, அவர்கள் தங்களுக்கு ஆர்வமானவற்றில் மட்டும் அதிகம் கவனம் செலுத்துவார்கள். வங்காளிகளில் பலர் ‘இரண்டு தேசியர்கள்’ என்று ஒருமுறை கேலியாக எழுதியிருந்தேன். நிராத் சி. சௌத்ரி வங்காளி – ஆங்கிலேயர்; சத்யஜித் ராய் வங்காளி – பிரெஞ்சுக்காரர்; ஜோதி பாசு வங்காளி – ரஷ்யர்; சாரு மஜும்தார் (நக்ஸல் இயக்கத் தலைவர்) வங்காளி – சீனர்; ரவீந்திரநாத் தாகூர் மட்டுமே வங்காளியாகவும் இந்தியராகவும் இருந்திருக்கக்கூடிய கடைசி பிரமுகர் என்று சேர்த்திருந்தேன்.
  • தாகூரைப் போலவே பேராசிரியர் பெத்தேலும் உலகைப் பற்றியும் இந்தியாவின் பிற மாநிலங்கள் குறித்தும் அறிவதில் ஆர்வம் உள்ளவர். தமிழ்நாட்டின் உள்பகுதி நகரமான தஞ்சாவூரில் தங்கியிருந்து, டாக்டர் பட்டத்துக்கான ஆய்வை நடத்தியிருக்கிறார். பிற்காலத்தில் அவருடைய ஆய்வு மாணவர்களில் சிலர் பம்பாயிலிருந்துவந்த வங்காளி, ஜாம்ஷெட்பூரிலிருந்துவந்த தமிழர், லடாக்கில் பணிபுரிந்த கன்னடியர், கர்நாடகத்தில் பணிபுரிந்த பஞ்சாபி என்று பலதரப்பட்டவர்கள். கார்ல் மார்க்ஸ், வீபர், இவான்ஸ்-பிரிட்சார்ட், லெவி ஸ்டிராஸ், ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் ஆகியோரை ஆழ்ந்து கற்றவர் பெத்தேல்.
  • ‘ஜனநாயகவாதிகளும் – முரண்படுகிறவர்களும்’ (Democrats and Dissenters) என்ற என்னுடைய நூலில், அறிவுலகுக்குப் பேராசிரியர் பெத்தேல் செய்துள்ள பங்களிப்பு குறித்து விரிவாக எழுதியிருக்கிறேன். அவருடனான எனது நட்பு எப்படிப்பட்டது என்று விளக்க விழைகிறேன். அவரை முதலில் 1988இல் சந்தித்தேன். அன்று முதல் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவருடைய எழுத்துகளும், எங்களுக்கு இடையிலான உரையாடல்களும் என் நாட்டைப் பற்றியும், என்னுடைய நூல்கள் பற்றியும் ஆழ்ந்த மாறுதல்களை என்னுள் ஏற்படுத்தின.

பெத்தேலின் கருத்துகள்

  • நான் ‘இந்தியாவிலேயே அறிவாளியான மனிதர்’ என்று ஒருமுறை எழுதினேன், அதில் இரண்டு அம்சங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். அவரைப் போன்ற அறிவாளியான பெண் இந்தியாவிலேயே வாழக்கூடும், அதேபோல அவரைப் போன்ற அறிவாளியான இந்தியர் ஏதேனும் வெளிநாட்டிலும் வாழ வாய்ப்பிருக்கிறது. அவர் மீது எனக்கு ஏன் ஈர்ப்பு ஏற்பட்டது என்பது சொல்லாமலேயே விளங்கும்.
  • என்னுடைய பாராட்டுக்கு ஏன் அவர் பதில் அளித்தார்? என்னுடைய கண்ணோட்டம் அவருடையதைப் போல இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் முதலில் சந்தித்தபோது அவர் தனது துறையில் 30 ஆண்டுகளைக் கடந்துவிட்டிருந்தார். நானோ ஏழு ஆண்டுகளில் நாலாவது வேலைக்கு வந்துவிட்டேன். நான் எளிதில் உணர்ச்சிவசப்படுவேன், அவசரப்பட்டு சிலவற்றை பொதுமைப்படுத்திவிடுவேன். அவர் அமைதியானவர். அவருடைய கணிப்பு, ஒரு பிரச்சினையின் அனைத்து பரிமாணங்களுக்கும் பதில் அளிப்பதாக இருக்கும்.
  • என்னுடைய சகாக்களுடன் சர்ச்சைக்குரியவற்றைக் கூறி விவாதத்தில் ஈடுபட விரும்புவேன். அவரோ பேச்சிலும் எழுத்திலும் நிதானமானவர். குணாதிசயங்களில் இப்படி வேறுபட்டவனாக இருந்ததால் என் மீது ஆர்வம் ஏற்பட்டதோ என்னவோ? என்னுடைய மாறுபட்ட சுபாவம் காரணமாக எங்களுடைய உரையாடல் பொறி பறப்பதாகவும், உயிர்த்துடிப்புடனும் இருந்தன.
  • பெத்தேலுடைய நூல்களிலிருந்து நிறைய கருத்துகளையும் மேற்கோள்களையும் என்னுடைய கட்டுரைகளிலும் உரையாடல்களிலும் கையாண்டிருக்கிறேன். ராஜீவ் காந்தி உயிரோடு இருந்த காலத்தில் எங்களுக்குள் நிகழ்ந்த ஓர் உரையாடலில், ‘ஜவஹர்லால் நேருவின் புகழ், இறப்புக்குப் பிறகு பாராட்டுகளாக இல்லாமல் விமர்சனங்களாக மாறிவிட்டது – பைபிளில் குறிப்பிட்டிருப்பதற்கு நேர் மாறாக’ என்றார். ‘மாதா – பிதா செய்யும் பாவங்களின் பலன்கள் பிள்ளைகளையே சேரும்’ என்பது பைபிள் வாசகம். ஆனால் நேருவின் மகள், பேரன் போன்றோர் செய்யும் தவறுகளால் நேரு பழிக்கப்படுகிறார் என்று மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
  • இந்தியக் குடியரசை உருவாக்க நேரு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்தார், ஆனால் அவருடைய குடும்ப வாரிசுகள் செய்த தவறுகளும் பேச்சுகளும் அவருடைய புகழை மறைப்பதாகவும் களங்கம் ஏற்படுத்துவதாகவும் அமைந்துவிட்டன. சோனியா காந்தியும் பிறகு ராகுல் காந்தியும் அரசியலுக்கு அடுத்தடுத்து வந்தபோது, பெத்தேலின் கருத்து மேலும் வலுப்பெற்றதாகவே கருதுகிறேன். அவருடைய இந்தக் கருத்தை நான் குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட முறை – அவருடைய கருத்து என்று சொல்லியே – பயன்படுத்தியிருக்கிறேன்.

பெத்தேலின் போக்கு

  • ஆந்திரே பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார், எப்போதாவதுதான் உரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தன்னை படித்த அறிவாளியாகக் கருதினாரே தவிர, பொதுவெளிக்கான அறிவுஜீவியாக கருதியதில்லை. தங்களுடைய கல்விப் பெருமையையும் ஆய்வுகள் பற்றியும் பிறர் அறிய வெளிப்படுத்திக்கொண்டே இருப்பவர் மத்தியில் அவர் அந்தப் புகழ்ச்சியை விரும்பாதவராக இருந்தார். பொதுவெளியில் காணப்படும் அறிவாளிகளிடம் பொதுத்தன்மை மிகுந்தும் அறிவார்ந்த பார்வை குறைந்துவிடுவதாகவும் கருதினார்.
  • ஊடகங்களின் கவனக்குவிப்பு அறிவாளிகளுக்கு எதிரி, தார்மிக நேர்மையையும் நாசப்படுத்திவிடும் என்றார். அவர் போதித்த துறை சார்ந்த ஆய்வேடுகள், வகுப்பறை பாடம், ஆய்வு மாணவர்களுடைய ஆக்கங்களை மேற்பார்வையிடுதல் ஆகியவற்றையே அவர் தனது கடமைகளாகக் கருதினார். பத்திரிகைகளில் எழுதும் கட்டுரைகளை அவர் அதில் சேர்த்ததே இல்லை. அரசுகளின் குறிப்பிட்ட கொள்கைகள் எப்படிப்பட்டவை என்று கருத்து தெரிவிப்பாரே தவிர அவற்றுக்கு மாற்றாக எந்தக் கொள்கையைப் பின்பற்றலாம் என்று ஒருபோதும் கூறவே மாட்டார்.
  • பொருளாதாரத் துறை அறிஞர்கள் அரசுகளின் கொள்கைகளைக் குறை சொல்லும்போது, ‘இப்படிச் செய்திருக்க வேண்டும், அப்படி மாற்றியிருக்க வேண்டும்’ என்றெல்லாம் கருத்து தெரிவிப்பார்கள். எனவே, சில சமூகவியலாளர்களும் வரலாற்று ஆசிரியர்களும் அவர்களைப் பின்பற்றி கருத்துகளைத் தெரிவிக்க விழைவார்கள். ஆட்சியில் இருக்கும் அரசியலர்களுக்கும் ஆட்சியை இழந்த அரசியலர்களுக்கும் ஆதரவு திரட்ட அவர்கள் முற்படுவார்கள். அரசின் கொள்கைகளை விமர்சிப்பதைக்கூட எப்போதாவதுதான் செய்வார், ஆனால் மாற்றுக் கொள்கை என்று எதையும் உபதேசிக்க மாட்டார்.
  • நாட்டின் தலைநகரமான டெல்லியிலேயே வசித்தாலும் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் நட்பாக இருக்கவோ அவர்களுக்கு ஆலோசனை சொல்லவோ முற்பட்டதே இல்லை. தன்னுடைய துறையில் ஆராய்ச்சிகளை செய்வது ஆழ்ந்து படிப்பது, எழுதுவது, மாணவர்களுக்குக் கற்றுத்தருவது ஆகியவை மட்டுமே தன்னுடைய வேலை என்று இருப்பவர். ஆட்சியாளர்களுக்கோ, எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவருக்கோ ராஜகுருவாக இருக்க விரும்பியதில்லை.
  • புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள், ராஜீயத் தூதரக நிகழ்ச்சிகளில் அவரைப் பார்க்கவே முடியாது. தன்னுடைய துறையைத் தவிர பிறவற்றில் அவருக்கு ஆர்வமில்லை என்றும் சொல்ல முடியாது. ஆங்கிலம், பிரெஞ்சு, வங்காளி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியான கவிதைகளை வாசிப்பார். எலியட் - மக்நீஸ் ஆங்கிலக் கவிதைகளும் மல்லார்மேயின் பிரெஞ்சுக் கவிதைகளும் தாகூர் – ஜீவானந்த தாஸின் வங்கக் கவிதைகளும் அவருக்கு மிகவும் பிடிக்கும்.

எங்களின் கடிதங்கள்

  • ஆந்திரே பெத்தேலைப் பற்றி நிறைய கூறிவிட்டேன். பொதுவெளியில் நான் அதிகம் தலைகாட்டுவதாகவும், தேவைக்கும் அதிகமாக உரை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகவும், தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி வருவதாகவும், உருப்படியில்லாத சர்ச்சைகளில் அதிகம் சிக்குவதாகவும் என்னைப் பற்றிக் கருதுகிறார். 2012இல் சாலை விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில மாதங்கள் படுத்த படுக்கையாக வீட்டிலேயே ஓய்வெடுக்க நேர்ந்தது.
  • இந்தத் தகவலைக் கேட்டதும் அவர் இப்படியொரு கடிதம் எழுதியிருந்தார்: “இந்த விபத்து உங்களுக்குக் கெட்டதிலும் ஒரு நன்மையைச் செய்திருக்கிறது. வீட்டிலேயே படுத்திருப்பதால் ஏன் எழுதுவதைத் தொடர முடியாது? உண்மையில் ஊர் ஊராகப் போவதையும் உரை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் விட்டுவிட்டு ஓய்வாக இருந்துகொண்டு வாசிக்கவும் சிந்திக்கவும் எழுதவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுடைய உறவினர் தர்ம குமார் என்னிடம் கூறுவார், உங்களிடம் ஒழுக்கமும் கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கின்றன – ஆனால் கற்பனை அதிகமில்லை என்று. உங்களுக்கு இப்போது ஒழுக்கமும் கட்டுப்பாடும் அதிகம் தேவைப்படுகிறது, உங்களுடைய சிந்தனைக்கும் எழுத்துக்கும் அதிக வாய்ப்பளியுங்கள், அதற்கு நீங்கள் ஒரே இடத்தில் நிலையாக இருப்பதும் சிந்திப்பதும் எழுதுவதும் அவசியம்.”
  • ஆந்திரே எனக்கு எழுதிய கடிதம் பற்றி எழுதிவிட்டேன், அவருக்கு நான் எழுதிய கடிதம் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். “சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘பிபிசி’யின் ஊடகர் மார்க் டுலியை பெங்களூருவில் சந்தித்தேன். ஆந்திரேயைத் தெரியுமா என்று என்னிடம் கேட்டார். ‘பிபிசி’க்காக உங்களுடன் சில ஆண்டுகளுக்கு முன்னால் நீண்ட நேரம் பேசி, பேட்டி தயாரித்திருந்தார். உங்களை மெத்தப் படித்த மேதாவி என்று மதிக்கிறார். ஆனால், நீங்கள் வானொலி வடிவ ஊடகம், அச்சு வடிவ ஊடகத்தைவிட மட்டமானது என்றும் அச்சு வடிவ ஊடகம் அறிவார்ந்தவர்களுடைய மேதமையைவிட மட்டமானது என்றும் கருதுவதாக டுலி உங்களைப் பற்றிக் கூறினார். இரண்டு ஊடகம் குறித்தும் உங்களுடைய கருத்து சரியானதுதான்” என்று ஆந்திரேவுக்கு எழுதியிருந்தேன்.

பெத்தேலின் எழுத்துகள்

  • ஆந்திரேவை விமர்சிப்பவர்கள், அவர் ஒரே துறையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்பார்கள்; சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து மட்டுமே அதிகம் எழுதுகிறார் என்பது அவர்களுடைய ஆதங்கம். ஆனால், அது மிகவும் விரிவான துறை, மிகவும் முக்கியமானதும்கூட. சமூக ஏற்றத்தாழ்வுகளில் நிலவும் உற்பத்தி – இனப்பெருக்கம் குறித்தவை அவருடைய நூல்கள். தமிழ்நாட்டு கிராமங்களில் நிலவும் சாதிப் பிரிவுகளையும் வேளாண் துறையில் நிலவும் வர்க்க கட்டுமானத்தையும் ஆராய்ந்திருக்கிறார். கீழை நாடுகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் எப்படிப்பட்டவை என்று ஒப்பீடு செய்திருக்கிறார்.
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக – அரசியல் எழுச்சியையும், சமூகநீதி கோரும் பிரிவினருக்கும் உள்ளதை உள்ளபடியே தொடர வேண்டும் என்று விரும்புவோருக்கும் இடையிலான போராட்டம் எப்படிப்பட்டது என்றும் விவரித்திருக்கிறார். வெறும் பொருளாதாரக் காரணிகளை மட்டும் சொல்லி அடையாளப்படுத்தாமல், சமூக அந்தஸ்து, அதிகாரம் ஆகியவை எப்படி இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதையும் ஆழ்ந்து ஆராய்ந்திருக்கிறார்.
  • ஆந்திரேவின் நூல்கள் எந்தக் காலத்துக்கும் பொருந்தும் வகையிலான தன்மையுள்ளவை. அவருடைய நூல்களை இதுவரை வாசிக்காதவர்கள் செய்தித்தாள்களில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘கிரோனிகல் ஆஃப் அவர் டைம்ஸ்’ (Chronicles of Our Time) முதலில் வாசிக்கலாம். மேலும், ஆய்வு மனப்பான்மை உள்ளவர்கள் அவருடைய பின்வரும் புத்தகங்களில் ஒன்றையோ அல்லது அதற்கும் மேற்பட்டவற்றையோ படிக்கலாம்: ‘காஸ்ட், கிளாஸ் அண்ட் பவர்’ (Caste, Class and Power); ‘சொஸைடி அண்ட் பாலிடிக்ஸ் இன் இந்தியா’ (Society and Politics in India); ‘தி ஐடியா ஆஃப் நேச்சுரல் இன் ஈகுவாலிடி அண்ட் அதர் எஸ்ஸேஸ்’ (The Idea of Natural Inequality and Other Essays).
  • பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளின் இன்னொரு தொகுப்பான ‘சித்தாந்தமும் சமூக அறிவியலும்’ (Ideology and Social Science) என்ற நூலையும் வாசிக்கலாம்.

நன்றி: அருஞ்சொல் (08 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்