TNPSC Thervupettagam

இந்திய சதுரங்கத்தின் தங்கமான பெருமிதம்

September 8 , 2020 1418 days 632 0
  • உலக சதுரங்கக் களத்தில் இந்தியா அடைந்துவரும் வளர்ச்சிக்கும், இந்தியாவில் இந்த விளையாட்டு அடைந்துவரும் பிரபல்யத்துக்கும் சான்றாகச் சமீபத்திய சதுரங்க ஒலிம்பியாடில் இந்தியா அடைந்த வெற்றி அமைந்திருக்கிறது.
  • போட்டியை வெல்லும் என்று பலரும் எதிர்பார்த்த ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியாவும் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறது. இணைய வழியில் நடைபெற்ற இந்தப் போட்டியின்போது ஏற்பட்ட இணையக் கோளாறு காரணமாக, இறுதிப் போட்டியில் இரண்டு ஆட்டங்களின் முடிவு பாதிக்கப்பட்டது.
  • இணையத்தில் கோளாறு ஏற்படவில்லை என்றால், இந்தியாவின் நிஹல் சரின், திவ்யா தேஷ்முக் இருவருக்கும் நேரப் பிரச்சினை இருந்திருக்காது. இது குறித்து இந்திய அணியின் நிர்வாகம் முறையிட்டது.
  • ஆகவே, ரஷ்யாவையும் இந்தியாவையும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கும் முடிவை உலக சதுரங்க அமைப்பான எஃப்.ஐ.டி.ஈ.எடுத்தது.
  • சதுரங்கத்தைப் பொறுத்தவரை செஸ் ஒலிம்பியாட்போட்டித் தொடர் மிகவும் பெருமைமிக்கதாகும். அதன் வரலாறு 1924-லிருந்து தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்தியாவின் அதிகபட்ச சாதனை 2014-ல் மூன்றாவது இடத்தைப் பிடித்ததாகும்.
  • 163 நாடுகளுள் இந்தியா 7-வது நிலையில் இருந்தாலும் அதை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
  • ஏனெனில் ஆண், பெண், இளையோர் மூன்று பிரிவுகளிலும் இந்தியா வலுவான ஆட்டக்காரர்களைக் கொண்டிருந்தது.
  • விஸ்வநாதன் ஆனந்தும் கோனேரு ஹம்பியும் உலகம் இதுவரை கண்டிருக்கும் ஆட்டக்காரர்களில் சிறந்தவர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள் என்றால், நிஹலும் ஆர்.பிரக்ஞாநந்தாவும் எதிர்கால நட்சத்திரங்களாகக் கருதத் தக்கவர்கள்.
  • இந்திய வெற்றியின் பெருமிதத்தில் நாம் திளைத்திருக்கும்போது, கவலைக்குரிய சில விஷயங்களையும் நாம் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது.
  • சில நாட்களுக்கு முன்பு விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதை இணையம் வழியாகக் குடியரசுத் தலைவர் வழங்கிக்கொண்டிருந்தபோது, ஒலிம்பியாடின் அரையிறுதியில் போலந்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றது.
  • சதுரங்க வீரர்கள் பலர் தங்கள் அற்புதமான ஆட்டத் திறனைச் சமீப ஆண்டுகளில் வெளிப்படுத்தியிருந்தாலும், உலக அளவில் சதுரங்கத்தில் இந்தியா 4-வது இடத்தில் இருந்தாலும் கடந்த 7 ஆண்டுகளில் எந்த சதுரங்க வீரருக்கும் அர்ஜுனா விருது வழங்கப்படவில்லை என்பதுதான் இதிலுள்ள முரணான விஷயம்.
  • ஒலிம்பியாட் நெருங்கிய நிலையில் அனைத்திந்திய சதுரங்க அமைப்பின் ஆதரவு இல்லாமல், தாங்கள் கைவிடப்பட்டது பற்றி இந்திய சதுரங்க அணித் தலைவர் விதித் குஜராத்தி கூறியது, இந்திய சதுரங்கத்தின் பலவீனமான பக்கத்தை நமக்கு உணர்த்துகிறது.
  • அந்த அமைப்பின் அதிகாரத் தரப்பினர், அதிகாரப் போட்டியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒலிம்பியாடுக்கு இரண்டு தனித் தனி அணிகளை அவர்கள் அறிவித்தனர், தலைமைத் தேர்வாளர் ஆர்.பி.ரமேஷை அமைப்பை விட்டு வெளியேறும்படி செய்தனர்.
  • தற்போதைய வெற்றியை அடுத்து, இனியாவது இந்திய சதுரங்கத்தைப் பற்றி ஆழ்ந்த பரிசீலனையில் ஈடுபடுவது அவசியம்.

நன்றி:  தி இந்து (08-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்