TNPSC Thervupettagam

இந்திய வனநிலை அறிக்கை: தமிழ்நாட்டுக்கான பாடங்கள்

January 18 , 2022 930 days 415 0
  • அண்மையில் வெளியாகியுள்ள இந்திய வனநிலை அறிக்கை- 2021, நாட்டின் மொத்த நிலப் பரப்பில் பசுமைப் பரப்பானது ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கை (24.6%) தொட்டிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளது. மொத்த நிலப் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனப் பரப்பாக இருக்க வேண்டும் என்பது இலக்கு.
  • ஆனால், பசுமைப் பரப்பை மதிப்பிடும்போது வனங்கள் மட்டுமின்றி வனங்களுக்கு வெளியே உள்ள மரங்களின் அடர்த்தியும் கணக்கில் கொள்ளப்படுகிறது. முந்தைய 2019 மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் நாடு முழுவதும் 2,261 சதுர கிமீ பரப்பு பசுமைப் பரப்பாக மாறியிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
  • வனப் பரப்பை மட்டும் கணக்கில் கொண்டால், மொத்த நிலப் பரப்பில் இது 21.7% ஆக உள்ளது. முந்தைய மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் 0.2% வனப் பரப்பு அதிகரித்துள்ளது.
  • குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்த இரண்டு ஆண்டுகளில் வனப் பரப்பானது 55 சதுர கிமீ அதிகரித்திருப்பது பாராட்டுக்குரியது. அதே வேளையில், வனங்களுக்கு வெளியே உள்ள மரங்களின் அடர்த்தி 406 சதுர கிமீ அளவுக்குக் குறைந்திருப்பது வருத்தத்தையும் அளிக்கிறது. கஜா புயலால் காவிரிப் படுகை மாவட்டங்களில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வீழ்ந்ததும் மரங்களின் அடர்த்தி குறைந்ததற்கான காரணமாக ஊகிக்கப்படுகிறது.
  • என்றாலும், வனப் பரப்பைப் போலவே மரங்களின் அடர்த்தி குறித்த விவரங்களையும் மாவட்டவாரியாக இந்திய வனநிலை அறிக்கை தெரிவித்தால் மட்டுமே, மரங்களின் அடர்த்தி குறைந்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
  • அதற்கு முன்பே புயல், வெள்ளம், பெருமழை போன்ற இயற்கைப் பேரிடர்களை அடுத்து, புதிதாக மரக்கன்றுகளை நடுவதும் அவற்றைப் பராமரிப்பதும் பேரிடர்க் காலத்தின் பணிகளில் ஒன்றாக மாற வேண்டும்.
  • அது மட்டுமின்றி, சாலை விரிவாக்கப் பணிகளின்போது வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் மரங்கள் நடுவதையும் ஒரு கட்டாய விதிமுறையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • தமிழ்நாட்டின் வனப் பரப்பு தற்போது 20% என்ற அளவிலேயே உள்ளது என்றாலும் காடுகள் அழிப்பைத் தடுப்பது, வனப் பரப்பை விரிவுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் நேர்மறையான அறிகுறிகள் தென்படுகின்றன.
  • காஞ்சிபுரம், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வனப் பரப்பின் அளவு அதிகரித்துள்ளது. இடைப்பட்ட இதே ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில், வனப் பரப்பின் அளவு 23 சதுர கிமீ அளவில் குறைந்திருப்பதும் கவனத்துக்குரியது.
  • சென்னைப் பெருநகரத்தைப் பொறுத்தவரையில், மொத்தப் பசுமைப் பரப்பு ஏறக்குறைய 5 சதுர கிமீ அளவுக்கு அதிகரித்துள்ளது. 2011-ல் 18 சதுர கிமீ ஆக இருந்த சென்னையின் மர அடர்த்திப் பரப்பு, 2021-ல் 22.7 சதுர கிமீ ஆக அதிகரித்துள்ளது.
  • ஜப்பானிய வனவியலர் அகிரா மியாவாகியின் வழிமுறைகளைப் பின்பற்றி வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் மரத் தொகுதிகளை வளர்த்ததன் காரணமாக சென்னையின் பசுமைப் பரப்பு அதிகரித்துள்ளது. இத்திசையில் மேலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 - 01 - 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்