TNPSC Thervupettagam

இந்திய விண்வெளி ஆய்வு

August 22 , 2023 508 days 377 0
  • திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. விஞ்ஞானிகளின் உழைப்பும் முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம். இப்படி ஒரு பக்கம் விண்வெளி ஆய்வுகளுக்கான எதிர்பார்ப்புஇருக்க, இன்னொரு பக்கம் எதிர்ப்பும்எழும்.
  • மனிதக் கழிவுகள் நிறைந்த சாக்கடை அடைப்பை நீக்குவதற்கான தொழில்நுட்பம் பரவலாக்கப் படாதபோது விண்வெளி ஆய்வு எதற்கு? ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைத் தூக்க முறையான கருவிகள் இல்லாதபோது, நிலவில் காலூன்றி என்ன பயன் என்பது போன்ற கேள்விகள் எழும், மீம்கள் வரும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான ஆய்வுகளைச் செய்யாமல், நிலவுக்கு ஏன் பயணம் போக வேண்டும் என்னும் எளிய இந்தியக் குடிமகனின் ஆதங்கங்கள் இவை.
  • இந்தக் கேள்வியில் நியாயம் இருப்பதுபோல் இருந்தாலும், ஒரு விண்வெளி ஆய்வு நிறுவனத்தை நோக்கி வீசப்படும் கேள்விகளா இவை? இது போன்ற கேள்விகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாலும், கூடவே விண்வெளி ஆய்வுகள் தேவையே இல்லை என்னும் பிம்பத்தையும் சேர்த்தே உருவாக்கிவிடுகின்றன.

இஸ்ரோவை நோக்கிய கேள்விகள்

  • தேசமாக ஒன்றிணைந்து அனைத்து வகைகளிலும் முன்னேற நாம் சிரமப்பட்ட சமயத்தில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ உருவாக்கப்பட்டது (1969). அதன்பிறகு, ஒவ்வொரு அடியாக விண்வெளி ஆய்வில் இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது. 1975இல்தான் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்டது. பின்னால், ஒரேமுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் திறனைப் பெற்றது.
  • நிலவையும் செவ்வாய் கோளையும் சுற்றிவர முடிந்திருக்கிறது. விரைவிலேயே நிலவில் கால்பதிக்கவும் இருக்கிறது. அடுத்தடுத்த காலகட்டங்களில் விண் வெளிக்கு மனிதனையும் அனுப்ப உள்ளது. 1970-80 காலகட்டத்திலேயே கிராமங்களில்கூடத் தொலைக்காட்சி இருந்ததற்குக் காரணம், இஸ்ரோவின் SITE, STEP திட்டங்கள்தான். இதுபோன்ற பயனுள்ள தொழில்நுட்பங்களை மக்களிடம் இஸ்ரோ கொண்டுசேர்த் திருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் மக்களின் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டிய, ஆனால் இன்னும் செய்யப்படாத பல நவீனத் தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றை நாம் கேள்விக்கு உட்படுத்தலாம்.

வானிலை அறிக்கை ஏன் துல்லியமாக இல்லை?

  • *அடுத்த மூன்று நாள்களுக்குச் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை எதிர்பார்க்கப்படுகிறது.
  • *வேளச்சேரி பகுதியில் இன்று பிற்பகல் மூன்று மணி முதல் நான்கு மணி வரை அதிகப்படியான தூறல் எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த இரண்டு செய்திகளுக்கும் வித்தியாசம் தெரிகிறதா? இவற்றில் எந்தச் செய்தி அதிகளவு பயனளிக்கும்? முதல் செய்தியை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளுக்கு வேண்டுமானால் விடுமுறை அளிக்கலாம். ஆனால், இரண்டாம் வகையைப் போன்று நேரத்தையும் இடத்தையும் துல்லியமாகச் சொல்லும் செய்தி அமைந்தால், அன்றாட வாழ்க்கை எவ்வளவு எளிதாக இருக்கும்.
  • மழை வரும் என்று குறிப்பிடப்பட்ட நேரத்தில் அலுவலகம் விட்டு யாராவது வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே வருவார்களா? தெருவில் காய்கறி விற்கும் ஒரு சாமானியர், அந்த நேரத்தில் கடையை விரிப்பாரா? அந்த ஒருநாள் மட்டும் பள்ளிக்கு அரை நாள்விடுப்பு கொடுத்தால் போதும்தானே? இரண்டாம் வகைச் செய்திகள் சாத்தியமா என்றால், இஸ்ரோ போன்ற விண்வெளி ஆய்வு நிறுவனம் இல்லாத நாடுகளில்கூட இன்று இவ்வகைச் செய்திகள் கிடைக்கின்றன.
  • ஆனால், நமக்கு மட்டும் ஏன் சாத்தியப்படவில்லை? மேகமூட்டம் எந்த அளவு உள்ளது என்பது போன்ற வானிலையைக் கணிப்பதற்கான படங்களும் தரவுகளும் ஏன் துல்லியமாக்கப்படவில்லை? அன்றாட வாழ்க்கைக்கு உதவும் என்பதைவிட, இது போன்ற துல்லியமான செய்திகள் மழையால் உண்டாகும் விபத்துகளையும் சேதத்தையும் தடுத்து, நாட்டின் பொருளாதாரத்துக்கே உதவக்கூடியவை.

இந்திய ஜிபிஎஸ்கிடைக்குமா?  

  • இன்றைய உலகில், ஓரிடத்துக்குப் பயணிப்பதற்கு முன்பாக கூகுள் மேப்பார்க்காதவர்கள் சொற்பம் தான். ஒருவர் எங்கிருக்கிறார், ஓரிடம் எவ்வளவு தூரம் என்பதை அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் துல்லியமாகச் சொல்கிறது, உலக இடம் காணும் அமைப்பு (Global Positioning System - GPS).
  • அமெரிக்க அரசாங்கத்தின் அமைப்பான ஜிபிஎஸ், பல நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் இதை விற்கிறது. இஸ்ரோ மூலமாகவும் NavIC என்னும் இதுபோன்ற இடம் காணும் அமைப்பு இருக்கிறது என்றாலும், பக்கத்து ஊருக்குச் செல்வதற்குத் திட்டமிட வேண்டும் என்று நினைக்கும் சாமானியனுக்கு ஏற்ற வகையில் அது இல்லாதது ஏன்?

அடிப்படை அறிவியலில் என்ன செய்திருக்கிறோம்?  

  • விண்வெளி ஆய்வுகளில் முக்கியமானவை அடிப் படை அறிவியல் சார்ந்த ஆய்வுகள். உதாரணமாக, பெருவெடிப்பு நிகழ்ந்ததா, கருந்துளை உருவாவது எப்படி என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடுவது.
  • நிலவில் நீர் உள்ளதா?’ என்னும் அடிப்படைக் கேள்விக்கு ஆம்என்று ஆணித்தரமாகப் பதிலளித்தது, இஸ்ரோவின் சந்திரயான் 1 திட்டம் (2008). நிலவுக்கு நாம் அனுப்பிய முதல் விண்கலம் என்பதாலும், அனுப்பப்பட்ட நோக்கம் சரியாக நிறைவேறியதன் மூலமாகவும் சந்திரயான் 1 திட்டம் வெற்றியடைந்ததாகக் கருதலாம்.
  • அடுத்ததாக, 2013இல் செவ்வாய்க் கோளை ஆய்வுசெய்ய மங்கள்யான்திட்டம் செயல் படுத்தப் பட்டது. அதன் ஒரு நோக்கம், செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட சுற்றுப்பாதைத் திட்டம் (orbiter), கோளைச் சுற்றிவந்து பரப்பைப் படம்பிடித்து ஆய்வுசெய்வது. மற்றொரு நோக்கம், பிரத்யேகக் கருவிகளைக் கொண்டு செவ்வாய் கோளின் வளிமண்டலத்தில், மீத்தேனும் கார்பன்டை ஆக்ஸைடும் உள்ளனவா என்பதைக் கண்டறிவது.
  • இரண்டாவது நோக்கத்தைச் செயல்படுத்தும் கருவியில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்தன என்பது மங்கள்யான் அனுப்பப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்புதான் தெரிய வந்தது. ஆக, இந்தத் திட்டத்தின் ஒரு முக்கிய நோக்கம் நிறைவேறவில்லை. மேலும், மங்கள்யான் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் குறைந்த அளவே வெளிவந்துள்ளன.
  • இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும், நாசா செலவிட்டதில் வெறும் பத்து சதவீதப் பொருள் செலவிலேயே மங்கள்யான் திட்டத்தை இஸ்ரோ நிறைவேற்றிவிட்டது என்று விளம்பரம் செய்து கொள்வது எப்படி ஏற்புடையதாகும்? ஏனெனில், ‘குறைந்த செலவில் செவ்வாய்க் கோளுக்குச் செல்ல வேண்டும்என்பது மங்கள்யானின் நோக்கம் அல்ல.
  • மங்கள்யானின் குறிக்கோள்களில் ஒன்று, செவ்வாயின் வளிமண்டல வாயுவை அறிந்து கொள்வது. அப்படி இருக்கும்போது, சம்பந்தப்பட்ட கருவியிலேயே பழுது என்றால், அத்திட்டம் முழுமையாக வெற்றிபெற்றதாக எப்படிக் கருத முடியும்?
  • நிலைமை இப்படியிருக்க, ஒவ்வொரு திட்டத்தின் மூலமும், என்னென்ன அடிப்படை அறிவியல் கேள்வி களுக்கு நாம் பதிலளித்திருக்கிறோம் என்று மக்களிடம் தெளிவாக இஸ்ரோ எடுத்துச்சொல்ல வேண்டும். செய்தி ஊடகங்களும் திட்டம் சார்ந்த வெற்றி தோல்விகளைப் பகுத்தாராய்ந்து மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
  • அதே சமயம், நிலவு குறித்த இஸ்ரோவின் இந்த ஆராய்ச்சி வெற்றியடைவது, அரசியல் ரீதியாகத் தங்கள் சித்தாந்தத்துக்கு எதிரானவர்களின் வெற்றி என்று அர்த்தமற்ற கற்பனைகள் செய்துகொண்டு விஞ்ஞானிகளைக் கேலிப்பொருளாக்கும் முயற்சி மிகவும் கண்டிக்கத் தக்கது.

எல்லாம் இருக்கட்டும், மனிதக் கழிவுகள் நிறைந்த சாக்கடை அடைப்பை நீக்குவதற்கான தொழில்நுட்பம் பரவலாக்கப்படாதது குறித்து யாரிடம் முறையிடுவது?

  • இஸ்ரோவின் நோக்கம், விண்வெளி ஆய்வுகளின் மூலம் இந்திய மக்களுக்கு உதவுவது என்பதால் அந்த அமைப்பிடம் இந்தக் கேள்வியை கேட்க முடியாது. ஆனால், இந்தியப் பல்கலைக்கழகங்கள், பிற ஆய்வு நிறுவனங்கள், கல்விக் கொள்கை அமைப்புகள், அறிவியல் ஆய்வுக்கு நிதி ஒதுக்கும் அமைப்புகள், அரசாங்கம் சார்ந்த பல அமைப்புகளையும் நோக்கி இந்தக் கேள்வி அவசியம் கேட்கப்பட வேண்டும்.
  • அனைத்து வகை ஆய்வுகளும் மக்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய இடத்தில் இருக்கும் அரசாங்கத்திடமும் அரசியல் தலைவர்களிடமும் அவசியம் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும்.

நன்றி : இந்து தமிழ் திசை (22– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்