TNPSC Thervupettagam

இந்திய வெளியுறவுக் கொள்கை - ஒரு பார்வை!

October 21 , 2020 1551 days 864 0
  • வெளியுறவுக் கொள்கை என்பது வணிகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதா? அல்லது இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை மையமாகக் கொண்டதா? நட்பைப் பேணுவதன் மூலம் நமது நாட்டுக்கான அனுகூலம் எந்த விதத்தில் அமைகிறது? இவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.

வெளியுறவுக் கொள்கை

  • ஒரு நாடு, வெளியுறவு விவகாரங்களின் மூலம், தேசிய நலனைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், இரு தரப்பு மற்றும் பல தரப்பு உறவுகளைப் பாதுகாத்தல் போன்றவை முக்கியக் காரணிகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட கொள்கையே வெளியுறவுக் கொள்கையாகும்.
  • இந்த நாட்டு மக்களின் நலன்களோடு மாத்திரமல்லாமல், நாட்டின் பூகோள வரைபடத்திற்கு எவ்விதக் கேடும் வர விடாமல் பாதுகாத்து, பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்குவதில் இருக்கின்ற பெரும் பொறுப்பு வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
  • ஒரு நாட்டினுடைய பாரம்பரியத் தொன்மையின் மீட்டுருவாக்கத்திற்காகவும், அதனடிப்படையில் அந்த தேசியக் கொள்கையைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும், எதிர்பார்ப்பு, சுய கருத்து ஆகியவற்றில் இரு நாடுகளின் பிரதிபலிப்பாகவும் வெளியுறவுக் கொள்கைகள் இருந்து வருகின்றன.
  • மிக முக்கியமான அம்சங்களாக, உடன்படிக்கைகள், தூதுவர்களை நியமித்தல், நிர்வாக ஒப்பந்தங்கள், தேவைப்படுகிற வெளிநாட்டு உதவிகள், சர்வதேச வணிகத்திற்குத் துணைபுரிதல் மற்றும் ஆயுதத் தளவாடங்கள் போன்றவையும் தவிர்க்க முடியாத காரணிகளாக வெளியுறவுக் கொள்கையில் அமைந்து விடுகின்றன.
  • இந்தியா, தனது பாரம்பரியம் மிக்க வெளியுறவுக் கொள்கையில் இன்று எந்த நிலையில் இருக்கிறது? அது ஒருசார்பு நிலையை எடுக்கின்றதா? அல்லது அது தனி நபர்களின் செயல்பாடுகளால் மாற்றத் தக்கதாக உள்ளதா? இவையெல்லாம் ஆராயப்பட வேண்டியவையாக தற்போதைய காலகட்டத்தில் அமைந்திருக்கின்றன.
  • இந்திய - அமெரிக்க உறவை வலுப்படுத்தவும், அதை மேம்படுத்தவும் அது குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுவதன் மூலம் இருநாட்டு உறவை அடுத்தக் கட்டத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்கு ஐந்து முக்கியக் கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும். அது தேவையும் அவசியமான ஒன்றும்கூட என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து வலியுறுத்தி உள்ளார்.

இந்திய - அமெரிக்க

  • இருநாட்டுத் தலைவர்களும் அவ்வப்போது பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிற சூழ்நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இந்தியத் தலைநகர் தில்லியில் அக்டோபர் மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
  • இதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் இந்தியா வர உள்ளனர்.
  • இதில் இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப உறவு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இப்பேச்சுவார்த்தைகளை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்ல வேண்டுமெனில், குறுகிய கால பலன்கள் அல்லது உடனடி நிவாரணத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதைத் தவிர்த்து, நீண்டகால வளர்ச்சி மற்றும் அதை ஒட்டிய பலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இரு நாடுகளும் தங்களுடைய திட்டத்தை முன்மொழிகிறபோது, அது குறித்து விரிவாக, ஆழமாக ஆராய்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும்.
  • மேலும், இருநாட்டு உறவின் வெளிப்பாடு என்பது வலிமையான உறுதிப்பாட்டில் அமைய வேண்டும்.
  • இந்தியா என்ற ஒரு நாட்டின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டதல்ல என்பதைப் புரிந்து கொண்டு, ஒட்டுமொத்த உலகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்துவதாகவும், உலக நலனைக் கருத்தில் கொண்டதாகவும் அமையும் என்பதையும் உணர்த்திட வேண்டும்.
  • அமெரிக்கா - இந்தியா இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகிறபோது, இதுவரை இணைந்து செயல்படாத பல துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு வாய்ப்புகள் பிறக்கும்.
  • இதனால் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு, ஒரு புதிய பாதையில் அடியெடுத்து வைப்பதற்குத் தயாராக வேண்டும்.
  • இறுதியாக, நாம் வாழ விரும்பும் இந்த உலகை நாம்தான் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்.
  • "உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்கள் ஆக வேண்டும்' என்ற மகாத்மா காந்தியின் சிந்தனை முன்னிறுத்தப்பட்டிருக்கிறது.
  • "வெளியுறவுக் கொள்கையில் நாம் சரியான பாதையை நோக்கி செல்வதற்கான லட்சியப் பாதையை வகுத்துக் கொள்வது நமது இந்தியாவை வலுவுள்ளதாக மாற்றிக் காட்டும்' என்கிறார் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து.

அணிசேரா நாடு எனும் பாதை

  • ஏற்கெனவே நாம் இந்த உலகத்தை எப்படிப் பார்த்தோம் என்பதை ஒரு மீள்பார்வையாக ஆராயலாம்.
  • அதாவது, பஞ்சசீலக் கொள்கையை அறிமுகப்படுத்தினார் ஜவாஹர்லால் நேரு. அதையொட்டி, அணிசேராக் கொள்கையை இத்தருணத்திலே நினைவுபடுத்துவது சரியாக இருக்கும்.
  • அந்தக் காலகட்டத்தில் சுதந்திரம் அடைந்திருந்த 100-க்கும் மேற்பட்ட நாடுகளை அணிசேரா நாடுகள் என்ற ஓர் அமைப்பாகத் திரட்டியதில், இந்தியாவின் அக்கறையும், நேருவின் அளப்பரிய பங்களிப்பும் குறிப்பிடத் தகுந்தவையாகும். அவை பலனளித்தனவா என்பது வேறு விஷயம்.
  • அணிசேராக் கொள்கைக்கு உண்மையான உந்துதல், ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியா பெற்ற அறவழி வெற்றிதான்.
  • "அணிசேரா' என்ற வார்த்தையை முதன்முதலில் கட்டமைத்து ஐ.நா.வில் அரங்கேற்றியவர், நவீன இந்தியாவின் ராஜதந்திரிகளில் ஒருவராகப் போற்றப்படும் வி.கே. கிருஷ்ண மேனன்.
  • திறமையில் அவருக்கு சற்றும் குறைவில்லாதவர்தான் தமிழரான தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
  • அமெரிக்கா- ரஷியா இரண்டு பக்கமும் சாயாமல் நீதியின் பக்கமும், நியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்பது என்பது அணிசேரா நாடுகளின் அடிப்படைக் கொள்கையாகும்.
  • இந்த அணிசேரா நாடுகளுக்கான ஐந்து அம்சக் கொள்கைகளை அமெரிக்க - இந்திய உறவுக்கான ஐந்து அம்சக் கொள்கைகளாகச் சொன்ன இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்தை எண்ணிப் பார்க்க வேண்டியது மிக இன்றியமையாத ஒன்றாகும்.
  • 1. நாடுகளுக்கான நில உரிமை, இறையாண்மைக்கு பரஸ்பரம் மதிப்பளித்தல் 2. நாடுகளுக்கிடையே பரஸ்பரம் சீற்றம் பேணாதிருத்தல் 3. நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாதிருத்தல் 4. சமமான பரஸ்பர நட்புகளை அனுபவித்தல் 5. அமைதியான போக்கு - இவையே அணிசேரா நாடுகளின் ஐந்து அடிப்படைக் கொள்கைகளாகும்.
  • இரு வல்லரசுகளின் அணிகளின் பிடியில் சிக்கி விடாமல், தனித்துவமாக நிற்பது என்பதே அவையாகும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அவை சாத்தியமா? இது யோசிக்க வேண்டியதாகும்.
  • அன்றைய காலகட்டத்தில் இவற்றை நிரூபிக்கும் விதமாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ரஷியா உடனான தனது ராஜீய நட்புறவைப் பலப்படுத்தினார்.
  • அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த நட்வர் சிங் போன்றவர்களும், ஜனதா கட்சியில் இருந்த ஐ.கே. குஜ்ரால் போன்றவர்களும், பின்னாளில் பி.வி. நரசிம்ம ராவ் போன்றவர்களும் இக்கொள்கைகளை உருவாக்குவதற்குப் பாதை வகுத்தார்கள்.
  • ஆனால், அணிசேரா அமைப்பு நாடுகளை உருவாக்கிய இந்தியாதான், அந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டிய சூழலுக்கு வந்து விட்டது.
  • எவ்வாறெனில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருந்த அந்த நிகழ்ச்சியில், அவர் கலந்து கொள்ளாமல் தனது பயணத்தை ரத்து செய்தார் என்பதில் தொடங்கியது அச்சர்ச்சை.
  • இருந்த போதிலும், இம்மாநாட்டில் இந்தியாவின் சார்பில், அப்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி கலந்து கொண்டார். இதன் மூலம் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுந்தது.
  • அப்படியானால், அணிசேரா நாடுகள் என்ற பாதையில் இருந்து விலகி அமெரிக்காவை மையப்படுத்திய நாடு என்ற பாதைக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோமா என்கிற வினாவுக்கான விடை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்தின் பதிலில் மறைந்திருக்கிறது.

ஆரோக்கியமான ஒன்று

  • ஆறு ஆண்டுகளாக உலகத்தைச் சுற்றி வந்த பிரதமர் மோடியின் ராஜதந்திரம் என்று இதை நாம் பார்க்கலாமா? நமது நட்புறவு நாடுகளுடனான உறவு மிகவும் வலிமையாகவும், சர்வதேச அளவில் உயர்ந்த இடத்திலும் உள்ளது என்பதை வெளியுறவுக் கொள்கைகள் பறைசாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.
  • அந்த வகையில், அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளுடன் நாம் தொடர்ந்து உச்சி மாநாடுகளை நடத்தி வருகிறோம்.
  • சீனாவுடன் இந்தியா கொண்டிருக்கும் அரசியல் உறவும் எந்த விதத்திலும் குறையவில்லை.
  • இலங்கையில் ஹம்பன் தோட்டா துறைமுகம் அமைப்பதற்கு சீனா 2008-இல் ஒப்பந்தம் போடப்பட்டபோது, அதைத் தடுக்கத் தவறி விட்டது காங்கிரஸ் அரசு என்பது அன்றைய வெளியுறவுக் கொள்கையின் சறுக்கலாகும்.
  • சீனா, நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு மற்றும் ஏனைய நாடுகளுடனான இந்திய உறவை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
  • சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனாலும், கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக நிகழாத சம்பவங்கள் அண்மைக்காலமாக நிகழ்ந்து வருகின்றன.
  • இந்திய வெளியுறவுத் துறை, அவற்றை முறியடிப்பதில் ராஜதந்திரத்தைக் கடைப்பிடித்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை .
  • 2014-இல் பிரதமர் மோடி பதவியேற்ற நிகழ்ச்சியில், பூடான் பிரதமர் ஷெரிங்டோப்கே, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம், மோரீஷஸ் பிரதமர் நவீன் ராம்கூலம், நேபாள பிரதமர் சுஷீல் கொய்ராலா, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் இந்தியாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டனர். இது இந்திய பிரதமர் மோடியின் புத்திசாலித்தனமான அணுகுமுறையாகப் பார்க்கப்பட்டது. இது ஆரோக்கியமான ஒன்றும்கூட.

நன்றி: தினமணி (21-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்