TNPSC Thervupettagam

இந்திராதிகாரம் பிறந்த கதை 1975 - தில்லியைக் குலுக்கிய பேரணி

June 11 , 2023 528 days 323 0
  • 1966 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியின் மறைவைத் தொடர்ந்து நாட்டின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தி.
  • 1969-ல் காங்கிரஸ் இரண்டாகப் பழைய காங்கிரஸ், புது காங்கிரஸ் என பிளவுண்டது. காங்கிரஸின் மூத்த தலைவர்களில் பெரும்பாலோர் இந்திரா காந்தியை விட்டு விலகினர்.
  • எனினும், வங்கிகள் நாட்டுடைமை, மன்னர் மானியம் ஒழிப்பு என அதிரடி திட்டங்களைச் செயல்படுத்திய இந்திரா காந்தி, 1971 மக்களவைத் தேர்தலில் வறுமையை விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் போட்டியிட்டுப் பெரும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார்.
  • தொடர்ந்து, அடுத்தடுத்த சில ஆண்டுகளில் மழைக் குறைவால் பற்றாக்குறை நிலவியது. நாட்டின் நிலைமை திருப்திகரமாக இல்லை. இந்திரா காந்தியைச் சுற்றியிருந்தவர்கள் தனிப்பெரும் சக்தியாக மாறினார்கள். காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களிலும் நிலைத்தன்மை குலைந்தது.
  • வலுப்பெற்ற எதிர்க்கட்சிகளால் மக்கள் ஆதரவையும் பெற முடிந்தது. 1974, மே மாதத்தில் தொழிற்சங்கத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் நாடு தழுவிய அளவில் 20 நாள்கள் ரயில்வே வேலை நிறுத்தம் நடைபெற்றது. உலகின் மிகப் பெரிய வேலைநிறுத்தம் எனக் கருதப்படும் இந்தப் போராட்டத்தில் 17 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். நாடே முடங்கியது.
  • 1975 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே அரசுக்கு எதிராக நிறைய அதிருப்திகள். 1971 தேர்தலில் உத்தரப் பிரதேசம் ராய் பரேலி தொகுதியிலிருந்து மக்களவைக்கு  இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ்நாராயண் தொடர்ந்து வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
  • ஆங்காங்கே போராட்டங்கள். முழுப் புரட்சி முழக்கத்தை முன்வைத்து பிகாரில் தொடங்கி நாடு முழுவதும் பரவலாகப் போராட்டங்களை நடத்திவந்தார் சர்வோதயத் தலைவரான ஜெயப் பிரகாஷ் நாராயண். ஏறத்தாழ அனைத்து எதிர்க்கட்சிகளும் அவருடன் அணிவகுத்தன. ஜெ.பி. என்றழைக்கப்பட்ட ஜெயப் பிரகாஷ் நாராயணின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்த மத்திய துணை அமைச்சர் மோகன் தாரியா, இந்திரா காந்தி அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

உண்மை பேசுவது கலகம் என்றால்...

  • 1975, மார்ச் மாதம் 6 ஆம் நாள் தலைநகர் தில்லியில் மாபெரும் மக்கள் பேரணியொன்று நடத்தப்பட்டது. பேரணியின் முடிவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவர்களிடமும் நாட்டு மக்கள் சார்பில் தலைவர்களால் மனுக்கள் அளிக்கப்பட்டன.
  • கட்சி சார்பின்றி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் (அப்போது இந்திரா காந்தியின் புது காங்கிரஸுக்கு மிக நெருக்கமாக இருந்த) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்துகொண்டன.
  • செங்கோட்டையிலிருந்து நாடாளுமன்றம் வரை நடந்த இந்தப் பேரணியில் ஜெயப் பிரகாஷ் நாராயண் உள்பட தலைவர்கள் வாகனங்களில் வந்தனர். அத்தனை எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டபோதிலும் பேரணியில் கொடிகள் எதுவுமே  எடுத்துவரப்படவில்லை. கோரிக்கை அட்டைகள் மட்டுமே இருந்தன.
  • உண்மை பேசுவது கலகம் என்றால் நாங்கள் கலகக்காரர்களே, மக்களுக்கு உணவும் உடையும் அளிக்க முடியாத அரசு பயனற்றது - இவைதான் இந்தப் பேரணியின் முழக்கங்கள், அரசு எதிர்ப்பு முழக்கங்கள்.
  • பிகாரிலிருந்து அதிகளவில் மக்கள் வந்திருந்தனர். பேரணி சுமார் 12 கி.மீ.க்கும் அதிகமான நீளம் இருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தில்லி நகர் முழுவதும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 
  • பேரணியில் பங்கேற்றோர் 10 லட்சம் பேர் இருக்கலாம் என்று பேரணியை நடத்தியவர்களும் ஆதரவாளர்களும் குறிப்பிட்டனர். ஜெ.பி. இயக்க எதிர்ப்பாளர்களோ ஒரு லட்சம் பேர்தான் என்று தெரிவித்தனர். காவல்துறையினரோ 3 லட்சம் பேர் இருக்கும் என்று தெரிவித்தனர். மறுநாள் மாநிலங்களவையில் பேசிய ரபி ராயும் சுப்பிரமணியம் சுவாமியும் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை என்றனர். ஆனால், உள்ளபடியே அந்தக் காலத்திலேயே தில்லி குலுங்கியது என்றால் மிகையில்லை, யாருக்குமே மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
  • பேரணியில் ஜனசங்கத் தலைவர்கள் வாஜபேயி, அத்வானி, விஜயராஜே சிந்தியா, பாரதிய லோகதளத் தலைவர் சரண் சிங், பழைய காங்கிரஸ் தலைவர்கள் அசோக் மேத்தா, எஸ்.என். மிஸ்ர, சோசலிஸ்ட் தலைவர்கள் மது லிமயே, மது தண்டவதே, என்.ஜி. கோரே, மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் சமர் முகர்ஜி, ஜோதிர்மயீ பாசு, திமுக சார்பில் இரா. செழியன், அகாலிதளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், புரட்சிகர சோசலிஸ்ட் தலைவர் திரிதீப் சௌதுரி பங்கேற்றனர்.
  • பேரணியின் முடிவில் இரு அவைகளின் தலைவர்களிடமும் வழங்கப்பட்ட மனுவில்:
  • பிரதமர், முதல்வர்கள் உள்பட உயர் பதவிகளில் இருப்போர் மீது கூறப்படும் புகார்களை பரிசீலனை செய்ய முழு அதிகாரங்கள் உள்ள நீதிமன்றங்கள் நியமிக்கப்பட வேண்டும். மக்களின் சமூக, பொருளாதார உரிமைகளும் ஜனநாயக உரிமைகளும் காக்கப்பட வேண்டும். தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும், அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். அவசர நிலைப் பிரகடனம், குடியுரிமைகளுக்கு முரணான உள்நாட்டு பாதுகாப்பு சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் (மிசா போன்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன). விலைவாசிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்... என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

திருப்புமுனை!

  • பேரணி நிறைவில் பேருரையாற்றிய சர்வோதயத் தலைவர் ஜெயப் பிரகாஷ் நாராயண், இந்தியாவின் வரலாற்றில் இந்தப் பேரணி ஒரு திருப்புமுனை என்று குறிப்பிட்டார்.
  • "சுதந்திரம் பெற்று 27 ஆண்டுகளாகப் பொறுமையாக இருந்துவந்த மக்கள், தங்கள் பொறுமையை இழந்து கொதித்து எழுந்துள்ளனர்.
  • "இன்றைய பேரணி ஒரு மகத்தான பேரணி, மக்களின் குரலை ஆட்சியாளர்களின்  காதில் ஆணித்தரமாக விழச் செய்வதற்கு, மக்களால் அமைதியான முறையில் உறுதியாக வற்புறுத்த முடியும் என்பதை எடுத்துக்காட்டும் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது. இந்திய வரலாற்றில் இதுவொரு திருப்புமுனையாகும்.
  • "மக்கள் இப்போது மாற்றத்தை விரும்புகின்றனர். அவர்கள் தங்கள் நீண்ட காலப் பொறுமையை இழந்துவிட்டனர். எனவே, இப்போதைய ஆட்சியாளர்கள் எப்படியாவது மீண்டும் மக்களின் நம்பிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். அல்லது அதிகாரத்திலிருந்து கீழே இறங்க வேண்டும்.
  • "ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள், மக்களின் இந்தக் கொதிப்பைச் சிறிதும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. நாட்டில் எப்படியாவது வன்முறை பரவாதா, அதைச் சாக்காக வைத்துக்கொண்டு, இந்த நாட்டில் சர்வாதிகாரத்தைக் கொண்டுவர முடியுமே என்று இந்திரா காந்தியும் அவரது கட்சியினரும் விரும்புகின்றனர். இந்த அபாயத்தை மக்கள் உணர வேண்டும்." என்று குறிப்பிட்டார்.

வரலாற்றின் பக்கங்கள்!

  • நாடு முழுவதுமே இந்திரா காந்தி அரசுக்கு எதிரான அதிருப்தி கனன்றுகொண்டிருந்தது.
  • குஜராத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. எதிர்த்து மொரார்ஜி தேசாய் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். எதிர்க்கட்சிகள் இணைந்து மக்கள் கூட்டணி உருவாக்கப்பட்டது. குஜராத் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்தியே தீர வேண்டிய சூழல் உருவானது.
  • இத்தகைய சூழலில்தான் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது, 48 ஆண்டுகளுக்கு முன், ஜூன் 12 ஆம் தேதி! பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்ற, வங்க தேசத்தை உருவாக்கிக் காட்டிய, மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருந்த பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாதா?
  • இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, அடுத்த இரு வாரங்களில் இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை (அவசர நிலை) பிரகடனம் செய்யப்பட்டது. சர்வ அதிகாரம் கொண்டவராக மாறினார் இந்திரா காந்தி. நெருக்கடி நிலைக் காலத்தில் நாடு சந்தித்த அவலங்களை புதிய தலைமுறை அறியாதென்றாலும் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் தெரிந்துகொள்ள முடியும்.
  • ஜூன் 12. அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு வெளியான 1975 ஆம் ஆண்டு ஜூன் 12-ல் நடந்தது என்ன?

நன்றி: தினமணி (11 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்