TNPSC Thervupettagam

இந்திராவிலிருந்து நரேந்திரா வரை

April 18 , 2023 635 days 336 0
  • காடுகள், வனவிலங்குகளின் பாதுகாப்பு என்பது பொருளாதார வளா்ச்சிக்கு எள்ளளவும் குறைவில்லாத முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. சூழலியலும் பொருளாதாரமும் ஒருங்கிணைந்து செயல்படும் என்கிற பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது. வனப்பாதுகாப்பு சட்டத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்கள், காடுகளுக்கும் வனவிலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் எச்சரிக்கையின் பின்னணியில் பிரதமரின் அறிவிப்பைப் பாா்க்கத் தோன்றுகிறது.
  • 1973-இல் தொடங்கப்பட்ட ‘புலிகள் பாதுகாப்புத் திட்டம்’ 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் 40,000-க்கும் அதிகமாக இருந்த ராயல் பெங்கால் புலிகளின் எண்ணிக்கை, 1970-களில் வெறும் 1,800-ஆகக் குறைந்தபோது உலகளாவிய சூழலியல் ஆா்வலா்கள் அபாய எச்சரிக்கை எழுப்பினா்.
  • அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, புலிகள் வேட்டையாடப்படுவதை ஐந்து ஆண்டுகளுக்குத் தடை செய்தாா். புலிகள் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அப்போது மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கரண் சிங் தலைமையில், புலிகளைப் பாதுகாப்பதற்கும் அவற்றின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கும் ஒரு குழு 1972-இல் அமைக்கப்பட்டது.
  • அப்போது ரூ. 4 கோடி ஒதுக்கீட்டில் வெவ்வேறு பகுதிகளில் ஒன்பது புலிகள் சரணாலயங்கள் அமைக்கப்பட்டன. கடந்த 50 ஆண்டுகளில் அது விரிவுபடுத்தப்பட்டு இப்போது 75,000 ச.கி. மீட்டருக்கும் அதிகமான வனப்பரப்பில் 53 புலிகள் சரணாலயங்கள் இருக்கின்றன. 18 மாநிலங்களில் 2,967 புலிகள் இருப்பதாக 2018-ஆம் ஆண்டின் புள்ளிவிவரம் தெரிவித்தது.
  • 2006-இல் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. புலிகள் சரணாலயங்களை மேம்படுத்துவது, குறைந்துவிட்ட புலிகள் வசிப்பிடங்களை விரிவுபடுத்துவது, புலிகளின் பாதுகாப்பை விஞ்ஞான மேலாண்மைப்படி உறுதிப்படுத்துவது உள்ளிட்டவை அந்த ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டன. புலிகள் மட்டுமல்லாமல் ஏனைய வனவிலங்குகள் குறித்தும், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. புலிகள் அதிகமாகக் காணப்படும் முக்கியமான பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களிலுள்ள மக்களை இடம்பெயரச் செய்யும் பணியும் புலிகள் பாதுகாப்பு சிறப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • 2018 கணக்கெடுப்பில் 2,967-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2022 கணக்கெடுப்பில் 3,167-ஆக அதிகரித்திருக்கிறது. புலிகள் மட்டுமல்ல, சிங்கங்களின் எண்ணிக்கையும் 523-லிருந்து 674-ஆகவும், சிறுத்தைகளின் எண்ணிக்கையும் 7,110-லிருந்து 12,852-ஆகவும் அதிகரித்திருக்கின்றன. உலகிலுள்ள புலிகளில் 75% இந்தியாவில் இருப்பதாலும், புலி இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டிருப்பதாலும் புலிகளின் இனம் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் கடமை நமக்கு உண்டு.
  • புலிகள் பாதுகாப்பு சிறப்புப் படை வெளியிட்டிருக்கும் புலிகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை, சில தகவல்களை வெளிப்படுத்துகிறது. புலிகள் வாழும் முக்கியமான ஐந்து பகுதிகளில் காடுகள் அழிக்கப்படுவதாலும், புலிகள் இயங்கும் வழித்தடம் குறைந்து வருவதாலும் அப்பகுதிகள் பாதிப்பை எதிா்கொள்கின்றன என்கிறது அந்த அறிக்கை. உலகிலேயே மிக முக்கியமான பல்லுயிா்ப் பெருக்க மையமாகக் கருதப்படும் மேற்கு தொடா்ச்சி மலை இந்தியாவின் மிக முக்கியமான புலிகள் வசிப்பிடமும்கூட. பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், மேற்கு தொடா்ச்சி மலை காடுகளில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள், ஆக்கிரமிப்புகளாலும், வேட்டையாடுவதாலும், மரங்கள் வெட்டப்படுவதாலும், காட்டுத் தீயாலும், சுரங்கப்பணியாலும், கட்டமைப்பு வளா்ச்சிப் பணிகளாலும் கடுமையான பாதிப்பை எதிா்கொள்கின்றன என்கிறது அந்த அறிக்கை.
  • புலிகளைப் பாதுகாப்பது எளிதான பணியல்ல. புலிகள் வாழ வேண்டுமானால், அவற்றைப் போலவே வனப்பகுதிகளில் உள்ள ஏனைய விலங்குகளும் வாழ வேண்டும். அடா்ந்த காடுகளில்தான் புலிகள் சுதந்திரமாக இயங்கி இனப்பெருக்கத்தில் ஈடுபடும். சுற்றுலா, வளா்ச்சிப் பணிகள் உள்ளிட்டவை காரணமாக வனவிலங்குகளின் இனப்பெருக்கம் தடைபடும் என்பது உறுதிப்பட்டிருக்கிறது. முக்கியமான புலிகள் சரணாலயங்களும், புலிகளின் வழித்தடங்களும் சாலைகள், ரயில் பாதைகள் போன்ற கட்டமைப்புப் பணிகளால் பாதிக்கப்படுகின்றன என்கிற வனவிலங்கு ஆா்வலா்களின் விமா்சனம் நியாயமானது.
  • 23 சரணாலயங்களில் உள்ள 13 புலிகள் வழித்தடம் வழியாக மத்திய இந்தியாவில் ரயில்வே பாதை போடும் திட்டம் முன்மொழியப்பட்டிருக்கிறது. கோந்தியா, பல்லாா்ஷா பகுதிகளில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கின்றன. இந்திய ரயில்வே வழித்தடங்களை அதிகரிக்க முற்பட்டால், மத்திய இந்தியாவில் உள்ள புலிகளின் வழித்தடங்கள் பல பாதிக்கப்படும்.
  • நெடுஞ்சாலைகளும், ரயில் பாதைகளும் வனவிலங்கு சரணாலயங்கள் வழியாக போடப் படுவது தவிா்க்கப்பட வேண்டும். வனவிலங்குகளுக்கும் மனிதா்களுக்கும் இடையே நேரடித் தொடா்பு இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம். பிரதமா் கூறியிருப்பதுபோல, வளா்ச்சிப் பணிகளும், வனப்பகுதிகளின் பாதுகாப்பும் ஒன்றையொன்று பாதிக்காமல் தொடா்ந்தால் மட்டுமே புலிகள் உள்ளிட்ட சரணாலயங்கள் பாதுகாக்கப்படும்.

நன்றி: தினமணி (18 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்