TNPSC Thervupettagam

இந்தி படித்தால் வேலை கிடைக்குமா?

June 24 , 2019 2029 days 885 0
  • இந்தியாவில் ஹிந்தியைத் தாய்மொழியாய்க் கொண்டோர் 30% தான். இது அரசே வெளியிட்ட புள்ளிவிவரம். நம் தமிழகத்தைப் போலவே இந்தியிலும் பல்வேறு வட்டார மொழிகள் உள்ளன. எனினும், நம் நாட்டில் பரவலாய்ப் பேசப்படும் மொழி இந்தி என்பது பொய்யன்று. ஆனால், அதற்காக ஆங்கிலத்தைத் துரத்திவிட்டு, இந்தியைச் சிறுகச் சிறுக அரியாசனத்தில் அமர்த்துவது துளியும் நியாயமே இல்லாதது.
  • அந்த நாளில் வெள்ளைக்காரர்களின் மீது நமக்கிருந்த எரிச்சலின் விளைவாக ஆங்கிலத்தின் மீதும் வெறுப்பு இருந்தது. அந்த நிலையிலேயேகூட, இந்தியா குடியரசானதும் ஆங்கிலமா, இந்தி மொழியா எனும் கேள்வி நாடாளுமன்றத்தில் வாக்குக்கு விடப்பட்டபோது கருத்துகள் சரிபாதியாகப் பிரிந்திருந்தன என்பதும், ஆனால் குடியரசுத்தலைவர் தமது வாக்கை இந்திக்கு ஆதரவாய்ச் செலுத்தியதன் விளைவாகவே இந்தி அரியணை ஏறியது என்பதும் நாமறிந்த விஷயம்.
பண்டித ஜவாஹர்லால் நேரு
  • பண்டித ஜவாஹர்லால் நேருவால்கூட இந்தி வெறியர்களைச் சமாளிக்க இயலாது போனது. "இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் "நீடிக்கும்'  என்பதற்குப் பதிலாக "நீடிக்கலாம்'  என்று அறிவித்து,  ஆறாம் வகுப்பு ஆங்கில இலக்கணத்துக்கு மாறாக இரண்டும் ஒன்றுதான் என்று அவர்  சாதிக்கும்படி ஆனது.
  • இந்திக்காரர்களில் கல்வியறிவு பெற்றோர் கிட்டத்தட்ட 75% என்று அரசின் சமீபத்திய இணையதளப் புள்ளிவிவரம் கூறுவது வியப்பளிக்கிறது. இந்தியின் எழுத்துகளை (அ, ஆ, இ, ஈ) மட்டும் படிக்கவோ எழுதவோ அறிந்தவர்களையெல்லாம் படித்தவர்களின் பட்டியலில் சேர்த்து விட்டார்களோ என்றுதான் தோன்றுகிறது. இந்தி படித்தால் வடக்கே வேலை கிடைக்கும் என்பது எவ்வளவு பெரிய பொய். இது உண்மையாயின், பிகார், மத்தியப் பிரதேசம் இன்ன பிற வட மாநிலங்களிலிருந்தெல்லாம் இளைஞர்கள் சோறு கிடைத்தாலே போதும் என்று தமிழ்நாடு உள்பட பிற தென் மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கில் வருவானேன்?
  • இந்தியைக் கற்பது பிற மாநிலத்தவர்க்கு நல்லதுதான். வடக்கே வேலை கிடைத்து அந்தப் பகுதிகளுக்குச் செல்வோருக்கு அது உதவியாக இருக்கும் என்பது மட்டுமே உண்மையே தவிர, இந்தி கற்றால் அங்கே வேலை கிடைக்கும் என்பது உண்மை அல்ல.
  • முப்பதுகளின் இறுதியில் மதராஸ் ராஜதானியின் முதலமைச்சராக இருந்த போது இந்தியைக் கட்டாயமாக்கிய ராஜாஜியே பின்னர் அது தவறு என்று கைவிட்ட போது அவரைக் கேலி செய்தார்கள்.Inconsistency is the quality of an ass - அடிக்கடி கருத்தை மாற்றிக்கொள்ளுவது கழுதைக் குணம் - எனும் சொற்றொடர் அப்போது பிரபலமாயிற்று.   "அப்போது அப்படிச் சொன்ன நான்தான் இப்போது அதைக் கைவிடுகிறேன். மாறிய சூழலில் கருத்தை மாற்றிக்கொள்வதே சரி. காயாக இருக்கும்போது புளிப்பதும், பின்னர் அதுவே கனியாகும் போது இனிப்பதும் இயல்புதானே' என்கிற  பொருள்பட ராஜாஜி பதிலடி கொடுத்தார்.
மூன்று அரசு மொழிகள்
  • "சுவிட்சர்லாந்து போன்ற மிகச் சிறிய நாட்டிலேயே மூன்று அரசு மொழிகள் இருக்கும் போது, பெரிய நாடான இந்தியாவில் பல மொழிகள் அரசு மொழிகளாய் அங்கீகரிக்கப்படுவதில் என்ன தவறு' என்று  இந்திய நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணா வினவி கைதட்டல் பெற்றது இங்கே நினைவுகூரத்தக்கது.
  • மத வெறி, இன வெறி, மொழி வெறி போன்றவை வெறுக்கவும் கண்டிக்கவும் தக்கவை. மொழி வெறி நம் ஆட்சியாளர்களில் தலையாயவர்களிடமே இருப்பது துரதிருஷ்டமானது. உதாரணமாகக்  கீழ்க்காணும் நிகழ்வுகளைச் சொல்லலாம்.
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய்  ஐக்கிய நாடுகள் சார்ந்த அவையொன்றில் இந்தியில் உரையாற்றினார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் அதன் 69 -ஆம் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் முன்னவரின் அடியொற்றி இந்தியில் உரையாற்றினார். நாம் மற்றவரோடு பேசுவதன் நோக்கமே நம் எண்ணங்களை அவர்கள் புரிந்துகொள்ளுமாறு செய்வதுதானே? பேச்சாளர்களின் சொற்பொழிவுகளின் ஆங்கில மொழியாக்கம் அவையோருக்கு அளிக்கப்பட்டிருக்கும்தான்.  ஆனால், அவையோருக்குப் புரிகிற மொழியில் அவர்கள் முன் நின்று ஒருவர் கூறும் சொற்கள் நேரடியாக அவர்களின் செவிகளுள் புகுந்து மூளையிலும் பதிவதற்கும் ஒரு மொழிபெயர்ப்பைப் படிப்பதற்குமிடையே பெரிய வேறுபாடு இருக்கிறதல்லவா?
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் வாஜ்பாய் பேசிய காலகட்டத்தில், காஷ்மீர் பிரச்னை அதன் உச்சத்தில் இருந்தது. கொடுமைகள் பல அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தன, பாகிஸ்தானின் பங்களிப்பு அதில் இருந்ததற்கான அறிகுறியும் இந்தியாவிடம் இருந்தன.  காஷ்மீர் பற்றி வாஜ்பாய் இந்திக்குப் பதிலாக அவையோர்க்குப் புரிந்த ஆங்கிலத்தில் பேசியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். சுஷ்மா ஸ்வராஜும் இதே தவறைச் செய்தார். ஏற்கெனவே பாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்தால் உலகின் பல நாடுகள் இந்தியா மீதுதான் தவறு இருந்ததாய்க் கருதிக்கொண்டிருந்த அந்தத் தருணத்தில், பாகிஸ்தானின் அத்துமீறல்கள், ஒப்பந்தங்களை மதியாமை உள்ளிட்ட அட்டூழியங்கள் குறித்து  ஆங்கிலத்தில் வாஜ்பாய்  பேசியிருக்க வேண்டாமா? பேசவில்லை என்பதற்கு மொழி வெறியும், அதன் விளைவாக ஆங்கிலத்தின் இன்றைய மதிப்பைப் புரிந்துகொள்ள மறுப்பதும்தானே அடிப்படைகள்? நம்மை ஆள்பவர்களே இப்படி இருந்தால், வட நாட்டு மக்களைக் குறை சொல்ல என்ன இருக்கிறது?
ஆங்கிலம்
  • ஆங்கிலத்துக்கு ஆதரவு தருவது தேச பக்தியற்ற செயல் என்பதாய் ஒரு கருத்து வட நாட்டில் நிலவுகிறது.  ஏதோ இந்திக்காரர்கள்தான் தேசபக்தி நிறைந்தவர்கள் போலவும், ஆங்கிலமே என்றும் தொடரவேண்டும் என்று நியாயத்தின் அடிப்படையில் கோரும் மற்றவரெல்லாம் நாட்டுப் பற்றே இல்லாதவர்கள் போன்றும் அவர்கள் பேசியும் எழுதியும் வருவது பெரிதும் வருந்தத்தக்கது.
  • வெள்ளைக்காரர்கள் நம் நாட்டைத் தந்திரமாய் அடிமைப்படுத்தி நம்மைச் சுரண்டினார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் நம்மை ஆண்டதன் விளைவாகத்தான், மருத்துவம், விஞ்ஞானம், தகவல் தொழில் நுட்பம், போக்குவரத்து, சமுதாயம் சார்ந்த சட்டங்கள், ஆங்கிலக்கல்வி இன்ன பிற நன்மைகள் நமக்குக் கிடைத்தன என்பதை மறுக்க முடியுமா? மேலும், ஆங்கிலம் உலகப் பொது மொழியாகிவிட்டது. அதன் இடத்தை இந்தி  பிடிப்பது பின்னோக்கிய பயணமே ஆகும்.
  • ஆங்கிலத்தின் உதவி இல்லாமலே, விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ள ஜப்பான், சீனா, ரஷியா போன்ற நாடுகளே, கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலத்தை தங்கள் கல்வித் திட்டத்தில் இணைத்திருக்கும் போது, அதில் கணிசமான தேர்ச்சி பெற்றுள்ள நாம் அதைப் புறக்கணித்தல் ஆகுமா?
  • தெற்கே பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள்கூட ஆங்கிலத்தை ஓரளவு புரிந்து கொண்டு அரையும் குறையுமானாலும் தங்களுக்குப் புரிகிற விதத்தில் பதில் சொல்லுவதாக இந்தியாவுக்கு வரும் அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர். வடக்கே என்ன கேட்டாலும் இந்தியில்தான் பதில் வருமாம். மொழி வெறியை ஒதுக்கிவிட்டு நடு நின்று சிந்தித்தால், ஆங்கிலத்தின் இடத்துக்கு இந்தி வருவது இந்த நாட்டை மேலும் கூறுபோடும் என்பது விளங்கும்.
  • படிப்படியாய் இந்தியைத் திணித்து ஆங்கிலத்தின் இடத்தில் அதை ஏற்றிவிடுவதே வடக்கத்தியர்களின் நோக்கமாகும். இப்போது  இவ்வாறு திட்டவட்டமாய்ச் சொல்லா விட்டாலும், அதுவே அவர்களின் நோக்கம் என்பது இரண்டாம் முறையாகப் பா.ஜ.கட்சியினர் பதவி ஏற்றபின், அவர்களின் செயல்பாடுகளில் உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்படுகிறது.
இந்திரா காந்தி                                                                                                                  
  • இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, என் கடிதத்தில், ஆங்கிலம் சார்பாக என் வாதங்களை முன்வைத்த பின், படிப்படியாக ஆங்கிலத்தின் இடத்துக்கு இந்தி கொண்டுவரப்படும் என்று கூறும் நீங்கள், உங்கள் மகன்களை மட்டும் ஏன் லண்டனில் ஆங்கிலக் கல்வி கற்க வைத்தீர்கள் என்று அதில் வினவியிருந்தேன்.  என் வாதங்களுக்குப் பதில் சொல்லாவிட்டாலும்,  "உங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி அவற்றைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி' என்று இந்திரா காந்தி பதில் அனுப்பினார்.
  • இந்தி கற்பது நல்லதுதான். அதை மக்கள் தாங்களாகவே செய்வார்கள். செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதைத் திணிப்பது, ஆங்கிலத்தைப் புறக்கணிப்பது போன்றவை அறிவார்ந்த செயல்கள் அல்ல.
  • மேலும் இது தொடர்பாக, வட இந்தியர்களிடையே தம் ஆணித்தரமான சொற்பொழிவுகளின் வாயிலாக ஆங்கிலமே இந்தியாவின் அரசு மொழியாகவும் இணைப்பு மொழியாகவும், என்றென்றும் தொடர்வதே அனைத்து இந்தியர்களுக்கும் நீதி வழங்கக்கூடிய ஏற்பாடாக இருக்கும் என்பதோடு, இந்தியாவுக்கு அதுவே நல்லதும் கூட என்கிற கருத்தை பிரதமர் மோடி பரப்ப வேண்டும்.
  • அது தொடர்பான வாக்குறுதியையும்  நாடாளுமன்றத்தின் மூலம் அளித்து அரசியல் அமைப்புச் சட்டமாகவும் இயற்ற முன்வர வேண்டும்.

நன்றி: தினமணி (24-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்