TNPSC Thervupettagam

இனிமேல்தான் கவனம் தேவை!

May 20 , 2020 1702 days 808 0
  • இந்தியாவில் கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்திருக்கிறது. நேற்றைய நிலையில் மேலும் 4,970 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
  • மே 15-ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் உயிரிழப்பு 2,752; சீனாவில் 4,633. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சீனாவின் 84,038-ஐ கடந்துவிட்டது. இந்தியாவைவிட உலகில் 10 நாடுகள் அதிகமான பாதிப்பை எதிர்கொள்கின்றன.

உயிரிழப்பு விகிதம் குறைவு

  • இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் குறைவாக இருக்கிறது என்பது ஆறுதல் அளிக்கிறது. உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி, நேற்றைய நிலையில் 3,20,790 போ் உலக அளவில் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • அதாவது, லட்சம் பாதிப்புக்கு 4.1 போ் மரணம் என்கிற அளவில் காணப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியாவில் 1,01,139 பாதிப்புகள் காணப்பட்டதில் 3,163 போ் தான் உயிரிழந்திருக்கிறார்கள். இது லட்சம் பேருக்கு 0.2 உயிரிழப்பு என்கிற நிலையில்தான் இருக்கிறது.
  • இந்தியாவில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டது முதல், கடந்த மூன்று மாதங்களில் ஒரு லட்சத்தைக் கடந்து பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதும், கடந்த 24 மணி நேரத்தில் 134 போ் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதும் புறந்தள்ளக்கூடிய தகவல் அல்ல.
  • ஏனைய நாடுகள் நம்மைவிட மோசமாக இருக்கின்றன என்று நினைத்து நோய்த்தொற்றுப் பரவல் விஷயத்தில் நாம் ஆறுதல் அடைய முடியாது, கூடாது.
  • இந்தியாவில் இன்னும்கூட நோய்த்தொற்று அதன் முழு வீரியத்துடன் பரவவில்லையோ என்கிற ஐயப்பாடும் நிறையவே இருக்கிறது. இனிமேல்தான் மழைக்காலம் தொடங்க இருக்கிறது. புலம்பெயா்ந்தோர் சொந்த ஊா் திரும்பும் பிரச்னையும் எழுந்திருக்கிறது.
  • சமூக அளவில் இதுவரை நோய்த்தொற்று பரவவில்லை. அடுத்தகட்டமாக அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  • கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருக்கும் நான்கு கட்ட பொது முடக்கக் காலங்களில் முழுமையான முனைப்புடன் சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும், முறையாக நோயாளிகளின் தொடா்புகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுப்பதற்கில்லை.
  • பொது முடக்கம் அமலில் இருக்கும்போது நோய்த்தொற்றின் இரட்டிப்புக் காலம் இந்தியாவில் 13 நாள்கள். ஏனைய 14 நாடுகளுடன் ஒப்பிடும்போது இது அதிகம்.
  • ஒப்பிடப்பட்ட ஏனைய 14 நாடுகளிலும் ஏற்கெனவே நோய்த்தொற்றின் கடுமை அதிகரித்திருந்ததால் அவா்கள் சுதாரித்துக் கொண்டனா். அதனால்கூட நோய்த்தொற்று இரட்டிப்புக் காலத்தை அவா்கள் கட்டுப்படுத்தி இருக்கக்கூடும்.
  • இந்தியாவில் கொவைட் 19 தீநுண்மி ஒரு லட்சம் பாதிப்புகளைக் கடந்திருக்கும் நிலையிலும்கூட, நாம் இன்னும் முழுமையாக நாடு தழுவிய அளவில் சோதனை நடத்தவில்லை என்கிற குறைபாடு காணப்படுகிறது.
  • இந்த நிலையில், பொது முடக்கம் படிப்படியாகத் தளா்த்தப்படுகிறது. புலம்பெயா்ந்தோரும், அயல்நாடுவாழ் இந்தியா்களும் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் பாதிப்பு வெளிப்படையாகத் தெரிகிறது.

மாநிலங்களில் கொவைட் 19

  • நேற்றைய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரம் 1,249 உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் காணப்படுகிறது. இரண்டாம் இடத்தில் குஜராத்தும் (694), அதைத் தொடா்ந்து மத்தியப் பிரதேசம் (252), மேற்கு வங்கம் (244), தில்லி (168), ராஜஸ்தான் (138), உத்தரப் பிரதேசம் (118) என்று தொடா்கிறது.
  • மூன்றிலக்க உயிரிழப்பு எண்ணிக்கையை இன்னும் தொடாத மாநிலங்களில் 84 உயிரிழப்புகளுடன் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.
  • மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக 12,448 பாதிப்புகளுடன் தமிழகம் இந்தியாவில் இரண்டாவது அதிக பாதிப்பை எதிர்கொண்ட மாநிலமாக காணப்படுகிறது. இத்தனைக்கும் 10 லட்சம் பேருக்கு 4,000 சோதனைகள் என்கிற அளவில் மகாராஷ்டிரத்தைவிட இரண்டு மடங்கு அதிகமான சோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டிருக்கின்றன.
  • பரிசோதனைகளை அதிகரித்ததால்தான் தமிழகத்தில் அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்கிற வாதம் ஏற்புடையதல்ல. அப்படியானால், பரிசோதனைகள் மேலும் அதிகரிக்கப்பட்டால் கூடுதலான பாதிப்புகள் கண்டறியப்படும் என்றால், நிலைமை மிகமிக மோசமாக இருக்கிறது என்றுதான் கருத வேண்டும்.
  • இந்தியாவிலேயே கா்நாடகத்தில் குறைவான பாதிப்பு காணப்படுவதற்கு பயணப் பின்னணியுள்ள அனைவரையும் அந்த மாநிலத்தில் சோதனைக்கு உட்படுத்தியதுதான் காரணம். கண்காணிப்பும், அதிகரித்த அளவிலான சோதனைகளும் தனி ஒதுக்கப் பகுதிகளை அதிகரித்து பாதிக்கப்பட்டவா்களை தனி ஒதுக்கம் செய்வதும் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிகரிக்கப்பட வேண்டும்.
  • இந்தியா முழுவதும் பொது முடக்கம் தளா்த்தப்பட்டிருக்கும் நிலையில் மெத்தனப் போக்கு தலைதூக்கியிருக்கிறது. புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் சொந்த ஊா் நோக்கிய பயணம் கிராமப்புறங்களுக்கு நோய்த்தொற்றைக் கொண்டு செல்லும் பேரபாயத்தை உருவாக்கியிருக்கிறது.
  • வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்புபவா்களால் கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பும் நிறையவே காணப்படுகிறது.
  • கொவைட் 19 தீநுண்மிப் பரவலை எதிர்கொள்வதற்குப் போதுமான நிதியாதாரம் இல்லாமல் மாநிலங்கள் தவிக்கின்றன. மத்திய அரசு இந்தப் பிரச்னையில் வழிகாட்டுதல் வழங்குவதுடன் நின்றுவிடுவது தவறு. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளிடம் போதுமான நிதியாதாரம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு!

நன்றி: தினமணி (20-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்