TNPSC Thervupettagam

இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்

February 21 , 2020 1787 days 1076 0
  • "தன்னேர் இலாத தமிழ்' என்று தமிழ் மொழியைப் போற்றிப் புகழ்கிறது தண்டியலங்காரச் செய்யுள். 

"இருந்தமிழே உன்னால் இருந்தேன்        - இமையோர்

விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்'

என்று கூறுகிறார் "தமிழ் விடு தூது' பாடிய புலவர்.  "இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்கிறது பிங்கல நிகண்டு.

தமிழ் மொழி

  • இவ்வாறு ஒப்பற்ற மொழியாக விளங்கும் தமிழ் மொழியில் எண்ணற்ற இலக்கண, இலக்கிய, கவிதை, உரைநடை, காப்பிய நூல்கள் இயற்றப்பட்டு தமிழுலகுக்கு அளிக்கப்பட்டுள்ளன.  தமிழர்கள் அவற்றை விரும்பிப் படித்து தங்களின் ரசனையை வளர்த்துக் கொண்டதோடு தாய்மொழியின் பெருமையை அறிந்தும் இன்புற்றனர்.
  • ஆனால், அறிவியல் வளர்ச்சியின் விளைவாக காலமும் தூரமும் சுருங்கி விட்டதால் உலகமே தங்கள் உள்ளங்கைக்குள் வந்துவிட்ட நிலையில், இளைய தலைமுறையினர் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை அநேகமாக இழந்து விட்டனர்.
  • தமிழில் இருக்கும் கருவூலங்கள் என்னென்ன என்று அறியாத தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. புத்தகக் காட்சியின் விற்பனையை அடிப்படையாகக் கொண்டு வாசிப்புப் பழக்கம் மிகுந்து விட்டதாக எண்ணுவது சரியன்று. குறிப்பிட்ட சில அறிஞர்கள் சிலரைப் பற்றியோ, படைப்புகளைப் பற்றியோ ஏற்கெனவே அறிந்தவர்களே குறிப்பிட்ட சில நூல்களை வாங்குகிறார்களே தவிர, இளைய தலைமுறையினர் சொந்த ரசனையின் அடிப்படையில் நூல்களை வாங்குவதும் வாசிப்பதும் அறவே இல்லை என்பதே உண்மை.
  • தமிழ்ச் சமூகத்தின் இன்றைய தேவை, இளைஞர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க வேண்டுவதே. இது தனிமனிதர்களாலோ அமைப்புகளாலோ அரசாங்கத்தாலோ சாத்தியமாகாது. படைப்பாளர்கள், அச்சு ஊடகத்தினர், காட்சி ஊடகத்தினர் ஆகிய மூன்று பிரிவினரின் கூட்டு முயற்சியினால்தான் இது சாத்தியமாகும்.
  • படைப்பாளர்கள் இன்றைய இளைஞர்களை மனத்தில் கொண்டு தங்கள் படைப்புகளை எளிமையாக உருவாக்க வேண்டும். தரத்தில் சமரசம் என்பது இதன் பொருளல்ல. தேவை எளிமைதான், மலிவல்ல.

மொழிநடை

  • இளைஞர்களுக்குப் புரியாத மொழிநடையைத் தவிர்க்க வேண்டும்.  குறிப்பாக வட்டார வழக்கு என்பது நிச்சயம் கூடாது. வட்டார வழக்கில் எழுதுவது தனித்துவத்தின் அடையாளம் என்று கருதுகிறார்கள். அது உண்மையாகவேகூட இருக்கலாம். ஆனால், நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதுதான் உண்மை. 
  • வட்டார வழக்கு என்பது அருகி வருகிறது. சென்ற தலைமுறையினர் தங்கள் வட்டார வழக்கை நன்கு அறிந்து வைத்திருந்தனர். பிற வட்டார வழக்குகளை ஆர்வத்துடன் அறிந்து கொண்டனர். இப்போது வீட்டில் தமிழ் பேசுவதே அரிதாகி  விட்ட நிலையில் வட்டார வழக்கை எப்படிப் புரிந்து கொள்வார்கள்?

வட்டார வழக்கு

  • வட்டார வழக்கில் எழுதுவதால் தம் படைப்புக்கு இலக்கியத் தகுதி கிட்டிவிடும் என்று சிலர் எண்ணுவதும் தவறு. உயரிய விருதுகளையும் பரிசுகளையும் பெற்ற படைப்புகளில் பெரும்பாலானவை வட்டார மொழி படைப்புகள் அல்ல. கடந்த ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனின் "சஞ்சாரம்' புதினம் வட்டார மொழியில் எழுதப்படாமல் பொது மொழியிலேயே எழுதப்பட்டது. இப்புதினம் வட்டார வழக்குக்குப் புகழ்பெற்ற கரிசல் மண்ணைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  • அகாதெமி விருது பெற்றதால் "சஞ்சாரம்' புதினம் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும். அப்புதினம் பொதுமொழியில் எழுதப்பட்டிருப்பதால் மொழிபெயர்ப்பதும் எளிது;  பிற மொழியினர் புரிந்து கொள்வதும் எளிது.
  • தமிழில் பொருள் இல்லாமல் எந்தவொரு சொல்லும் இல்லை. "எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே' என்பது தொல்காப்பியம். அது  மட்டுமல்ல, ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்த துல்லியமான பொருள் உண்டு. "பூ' என்று பொதுவாகச் சொன்னாலும் அரும்பு, போது, முகை, மொக்கு என்று அதன் ஒவ்வொரு படிநிலைக்கும் ஒரு சொல் உண்டு. வாடிய பூவுக்குக்கூட ஒரு பெயர் உண்டு. 
  • ஒரு நாளின் பொழுதுகளுக்குத் தனித்தனி பெயர்கள், பெண்களின் பருவங்களுக்குத் தனித்தனி பெயர்கள், காற்றுக்கு திசைகளுக்கேற்ப வேறு வேறு பெயர்கள் - இப்படி இருக்கின்றன. இந்த நுண்ணிய வேறுபாட்டைப் பிற மொழிகளில் காட்ட இயலாது.
  • எழுத்தாளர் பூமணியின் "வெக்கை' நாவல் அண்மையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. அந்நூலின் தலைப்பு ஹீட். "ஹீட்' என்கிற ஆங்கில வார்த்தை "வெக்கை' என்கிற தமிழ்ச் சொல்லுக்கு நிகரான வார்த்தைதானா?
  • மேலும், வட்டார மொழியைப் பயன்படுத்துவதால் மட்டுமே ஒரு படைப்பு வட்டார இலக்கியமாகி விடாது. வட்டாரம் சார்ந்த பிரச்னைகளைப் பேச வேண்டும்.  பெண் சிசுக் கொலை, பட்டாசுத் தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளர்கள், பஞ்சு மில் தொழிலாளர்களுக்குக் காச நோய் பாதிப்பு, சாயப்பட்டறைக் கழிவுகள் ஆற்றுநீரில் கலப்பது, தேயிலைத் தோட்டத் தொழிலாளர் துயரம், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலை - இப்படிப்பட்ட பிரச்னைகளைப் பேசும்போதுதான் அவை வட்டார இலக்கியங்களாகும்.

அச்சு ஊடகங்களில்

  • அச்சு ஊடகங்களில், குறிப்பாக, நாளேடுகளில் தமிழ் பலவிதமாக இடம்பெறுகிறது. இடங்களின் பெயர்கள், நபர்களின் பெயர்கள் ஒவ்வொரு நாளேட்டில் ஒவ்வொரு விதமாக வருகிறது.  பவளம்-பவழம், கருப்பு-கறுப்பு இப்படி இருவிதமாகவும் எழுதக்கூடிய சொற்களைப் பற்றி கவலையில்லை. மேக்கேதாட்டு - மேகதாட்டு, பீகார் - பிகார், வாரணாசி – 
  • வாராணசி என்று பல பெயர்கள் ஏட்டுக்கு ஏடு மாறுபடுகின்றன. ஓர் அரசியல் கட்சியின் பெயரை திரிணமூல் காங்கிரஸ் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் என்றும் எழுதுகின்றனர். உண்மையில்  அக்கட்சியின் பெயர் திரணமுல் காங்கிரஸ். திரணம் என்றால் புல். (ஆங்கிலத்தில் "கிராஸ்ரூட்' உயிரை திரணமாக மதித்து) ஆங்கில நாளேடுகள்போல் இதனை இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற வரையறை தமிழ் நாளேடுகளுக்கும் தேவை.
  • அடுத்ததாக ஜ, ஸ, ஹ, ஷ, க்ஷ ஆகிய ஐந்து எழுத்துகளைப் பயன்படுத்துவதில் சில நாளேடுகளுக்குத் தயக்கம் உள்ளது. ஆயினும் பயன்படுத்துகின்றன. ஏன் தயங்க வேண்டும்?  இந்த ஐந்து எழுத்துகளும் தமிழில் பயன்படுத்துவதற்காக தமிழர்கள் உருவாக்கியதுதானே?

பல்வேறு பெயர்கள்

  • நாளேடுகளில் நாள்தோறும் இடம் பெறக்கூடிய பல பெயர்கள் இந்த எழுத்துகளில் உள்ளனவே. அரசியலில் ராஜாஜி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் போன்ற பல பெயர்கள். திரைப்படத் துறையில் தியாகராஜ பாகவதர், சிவாஜி, நாகேஷில் தொடங்கி ரஜினி, அஜித், விஜய், தனுஷ் வரை பல பெயர்கள். இவற்றை எப்படி எழுதுவது? விஸ்வநாதனை விசுவநாதன் ஆக்கலாம், மஹாதேவனை மகாதேவன் ஆக்கலாம். ஜப்பானை சப்பான் என்று எழுதினால் நன்றாக இருக்குமா? ஸ்டாலினை சுடாலின் என்று எழுதுவது சரியாகுமா? ஜானி என்பதை "சானி' ஆக்கினால் நன்றாகவா இருக்கும்? முற்றிலும் இந்த ஐந்து எழுத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்பது சரியுமல்ல; சாத்தியமுமல்ல.

வடமொழி சொற்கள்

  • இந்த ஐந்து எழுத்துகளை வடமொழி என்று தவிர்ப்பவர்கள் வடமொழி சொற்கள் பலவற்றை தமிழோடு கலந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
  • நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல சொற்கள் வடமொழியே. தேதி, மாதம், நீதிபதி, மன்னிப்பு, உதாரணம், கண்டனம், சம்மதம், சுலபம், பயம், அவமானம் - இப்படிப் பல. இவற்றுக்கேற்ற எளிய தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். பேருந்து, பணிமனை, ஓய்வூதியம், நடத்துநர், ஓட்டுநர், செயலர், முன்னவர் முதலிய  பல சொற்கள் பயன்பாட்டில் வந்து விட்டன. எளிமையாக இருந்தால் புதிய சொற்களை மக்கள் தயக்கமின்றி ஏற்பர்.
  • நாளேடுகள் தமிழோடு வடமொழியைக் கலந்து புதிய சொற்களை உருவாக்குவது போலவே தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து புதிய புதிய சொற்களை உருவாக்குகின்றன. "நாவல்' என்கிற ஆங்கிலச் சொல் தமிழாகவே ஏற்கப்பட்டு விட்டது.

நன்றி: தினமணி (21-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்