TNPSC Thervupettagam

இனிவரும் காலத்துக்கு மேலும் மேலும் தேவைப்படுகிறார் காந்தி!

October 3 , 2019 1882 days 766 0
  • நாடு பெரும் உணர்ச்சிப் பெருக்கோடு காந்தியின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் உலக நாடுகள் அணியணியாய்ப் பிரிந்துநின்று போர்களை நடத்திக்கொண்டிருந்த காலத்தில் அகிம்சையைப் போராட்ட வழிமுறையாகக் கையிலெடுத்தவர் காந்தி.
அஹிம்சை வழியில்....
  • ஆயுதங்களால் சாதிக்க முடியாத போராட்டத்தை ஆத்ம வலிமையால் சாதித்துக்காட்டினார். இன்று அவர் நினைவுகூரப்படுவதும் போற்றப்படுவதும் இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார் என்பதற்காக மட்டுமல்ல; அதற்காக அவர் தேர்ந்துகொண்ட வழிமுறைக்காகவும்தான்.
  • அகிம்சை, பேதங்கள் நீக்கிய சமூகம், சமய நல்லிணக்கம், இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என்று காந்தி தான் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் இன்று நமக்கு அதிகமாகவே தேவைப்படுகிறார்.
  • கடவுள் நம்பிக்கையும் சமய நம்பிக்கைகளும் ஒவ்வொரு மனிதருடைய மிகவும் தனிப்பட்ட விஷயங்கள். அவை சமூக நல்லிணக்கத்துக்கு எதிரிகளாக இருந்துவிடக் கூடாது.
  • சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை ஒதுக்கிவைப்பதும் அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதும் மானுட விரோதம். தொழில்நுட்பங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் மனித வாழ்க்கையை மேம்படுத்தி அன்றாடத் தேவைகளை எளிமைப்படுத்த வேண்டுமேயொழிய இயல்பான வாழ்வைச் சீர்குலைத்துவிடக் கூடாது. காந்தி வாழ்நாள் முழுவதும் போதித்த இந்தக் கருத்துகளுக்குத் தன்னையே உதாரணமாகவும் ஆக்கிக்கொண்டிருந்தார்.
தேசத் தந்தை
  • தேச தந்தையாக காந்தியை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவர் காண விரும்பிய சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா, அவர் போதனைகளை நாம் பின்பற்றுகிறோமோ என்று நாம் ஒரு சுயபரிசோதனைக்குத் தயாராக வேண்டியிருக்கிறது.
  • நிச்சயமாக, நாம் வாழ்ந்துகொண்டிருப்பது காந்தி காண விரும்பிய சமூகத்தில் அல்ல. சாதி பேதங்கள் நீங்கிய, பாலின பேதமற்ற, சமய நல்லிணக்கம் கொண்ட ஆன்மிக வாழ்க்கையையே அவர் விரும்பினார். ஆனால், சாதிய பேதங்கள் இன்னும் நம்மை விட்டு ஒழிந்தபாடில்லை.
  • பிணத்தைப் பொதுவழியில் கொண்டுசெல்வதைத் தடுக்கும் அளவுக்கு நம்முடைய மனங்கள் மனிதநேயமற்று இறுகிப்போய்க் கிடக்கின்றன. மதத்தின் பெயரால் கும்பலாகச் சேர்ந்து வன்முறையில் ஈடுபடும் செய்திகளைக் கடந்துபோய்க்கொண்டிருக்கிறோம்.
  • பெண்களின் மீது உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் நடத்தப்படும் வன்முறைகளும் தொடரவே செய்கின்றன. பழமையின் இத்தகைய கேடுகளிலிருந்து வெளிவர விரும்பாவிட்டாலும் இன்னொரு பக்கம், உலகளாவிய சந்தைக் கலாச்சாரத்துக்கும் நாம் அடிமையாகிக்கொண்டிருக்கிறோம்.
  • இன்றியமையாத தேவைகளையும்கூடப் படிப்படியாகச் சுருக்கிக்கொள்ள வேண்டும் என்ற இந்திய வாழ்க்கைமுறையிலிருந்து வழுவி, நுகர்வோரியத்தின் கைப்பாவைகளாக மாறிக்கொண்டிருக்கிறோம். மிதமிஞ்சிய நுகர்வுப் பசியால் உலகை மாசுபடுத்தி, பருவநிலைகளைப் பிறழச் செய்திருக்கிறோம். மனித வரலாற்றின் இப்படியொரு இக்கட்டான காலக்கட்டத்தில்தான் காந்தி நமக்கு மேலும் மேலும் தேவைப்படுகிறார்.
  • காந்தி இந்தியாவின் அரசியல் தலைவர் மட்டுமல்ல; உலகுக்கு வழிகாட்டும் ஆன்மிகத் தலைவரும்கூட. அவர் முன்னிறுத்திய விழுமியங்கள் உலகம் முழுவதுக்குமானது. காந்தியைக் கொண்டாடுவோம். இந்தியாவுக்கு அரசியல் விடுதலையைப் பெற்றுத் தந்தவர் என்ற நன்றியுணர்ச்சியோடு மட்டுமல்ல; அவரிடமிருந்து நாம் பெற வேண்டிய விழிப்புணர்வுக்காகவும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்