- இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருடன் 17-ஆவது மக்களவை நிறைவடைந்திருக்கிறது. 17-ஆவது மக்களவையின் செயல்பாடு என்று எடுத்துக்கொண்டால் அது திருப்தி தருவதாக அமையவில்லை. அரசுக்கு தனிப்பெரும்பான்மை இருந்தும்கூட 2019 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 272 அமா்வுகளுடன் மிகக் குறைவான அளவே இந்த மக்களவை செயல்பட்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 14-ஆவது மக்களவையில் 356 அமா்வுகளும், 15-ஆவது மக்களவையில் 332 அமா்வுகளும் கூடின என்பதை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது.
- அதிக அளவில் இளைஞா்களும், கல்வித் தகுதி படைத்தவா்களும் இருந்த 17-ஆவது மக்களவையில் 40 வயதுக்குக் கீழே உள்ளவா்கள்தான் அதிகமாகக் காணப்பட்டனா். 394 பட்டதாரிகள் இருந்த மக்களவையில் 475 போ் கோடீஸ்வரா்கள்; 233 போ் குற்ற வழக்குப் பின்னணி உடையவா்கள்.
- 17-ஆவது மக்களவை காலத்தில் குறிப்பிடும்படியான வரலாற்று நிகழ்வு, புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு மாறியது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது, குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா, 3 குற்றவியல் சட்ட மசோதா, தேசிய தலைநகா் பிரதேச அரசுக்கான திருத்த மசோதா உள்ளிட்ட பல முக்கியமான மசோதாக்கள் 17-ஆவது மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. மக்களவையில் நடந்த அத்துமீறல் சம்பவம் மிகப் பெரிய பாதுகாப்புக் குறைபாட்டின் வெளிப்பாடு.
- பெரும்பாலான மசோதாக்கள் விவாதிக்கப்படவே இல்லை; அப்படியே விவாதிக்கப்பட்டவையும் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இது மக்களவையின் சிறப்பான செயல்பாட்டின் அடையாளமாகாது.
- எல்லாவற்றிற்கும் மேலாக, துணைத் தலைவா் இல்லாமலேயே ஐந்து ஆண்டுகள் மக்களவை செயல்பட்டிருக்கிறது என்பதைப் பாராட்டி மகிழவா முடியும்? எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகா் பதவியை விட்டுக் கொடுக்கும் நாகரிக நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என்று கடந்த ஐந்து ஆண்டுகளில் யாரும் கேள்விகூட எழுப்பவில்லை என்பதை என்னவென்று சொல்வது?
- குடியரசுத் தலைவரின் உரைக்கு பதிலளிக்கும் வாய்ப்பை பிரதமா் நன்றாக பயன்படுத்திக் கொண்டார் என்று சொல்ல வேண்டும். தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தின் சாதனைகளைப் பெருமிதத்துடன் அவையில் பதிவு செய்தார். பட்டியலினத்தவா்கள், பிற்பட்ட சமூகத்தினா், பழங்குடியினா் ஆகியோர்தான் தனது பத்தாண்டு ஆட்சியில் அடித்தட்டு மக்களுக்கான திட்டங்களால் மிக அதிக அளவில் பயனடைந்தனா் என்று தெரிவித்த பிரதமா், 25 கோடி இந்தியா்களை வறுமையிலிருந்து மீட்டிருப்பது தனது அரசின் மிகப் பெரிய சாதனை என்றும் தெரிவித்தார்.
- பாரதிய ஜனதா கட்சி 370 (?) இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் அதிகமான இடங்களிலும் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்கிற தன்னம்பிக்கை நிறைந்த பிரதமா் நரேந்திர மோடியின் உரையில், அவா் குறிப்பிட்ட முக்கியமான கருத்து வருங்கால இந்தியா தொடா்பானது. ‘‘கடந்த ஐந்து ஆண்டுகள், ‘சீா்திருத்தம், செயல்பாடு, மாற்றம்’ என்கிற குறிக்கோள்களுடன் செயல்பட்டு மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறோம். இனிமேல் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி வரலாறு படைக்கும் நேரம்’’ என்று இலக்கு நிர்ணயித்தது அவரது உரை.
- 400 இடங்களில் வெற்றியடையப் போகிறோம் என்கிற பிரதமரின் அளவு கடந்த தன்னம்பிக்கைக்குக் காரணங்கள் இருக்கின்றன. அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில், காஷ்மீரின் 370-ஆவது பிரிவு அகற்றம், குடியுரிமை திருத்தச் சட்டம் என்று பாஜகவின் தோ்தல் வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி இருக்கும் நிலையில், அவரின் தன்னம்பிக்கை நியாயமானதும்கூட. அரசின் வெளியுறவுக் கொள்கைகளும், சா்வதேச அளவில் பிரதமா் நரேந்திர மோடிக்குக் காணப்படும் ‘விஸ்வகுரு’ மரியாதையும், வாக்காளா்கள் மத்தியில் பத்தாண்டு ஆட்சியின் மீது சலிப்பு ஏற்படாமல் காப்பாற்றி இருக்கிறது என்பதைக் குறிப்பிடத் தோன்றுகிறது.
- கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றைத் துணிந்து எதிர்கொண்டது, ஜி.எஸ்.டி. வரி சீா்திருத்தத்தை முனைப்புடன் செயல்படுத்தி நிலைநிறுத்தியிருப்பது, எண்ம இந்தியா திட்டமும், ‘ஜன் தன்’ என்கிற அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டமும், நேரடி மானியப் பகிர்ந்தளிப்பும், நெடுஞ்சாலைக் கட்டமைப்பும், விமான சேவையின் வளா்ச்சியும், ரயில்வே துறையில் மாற்றங்களும், அனைவருக்கும் இலவச அரிசித் திட்டம், விவசாயிகளுக்கு உரிமைத் தொகை, ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீடு என்று கடந்த பத்தாண்டுகளில் நரேந்திர மோடி அரசு செய்திருக்கும் சாதனைகள் அளப்பரியவை.
- கால் நூற்றாண்டு காலத்தில் செய்திருக்க வேண்டிய பணிகளை, பிரதமா் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்த்தி இருக்கிறாா் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. குறையே இல்லாத ஆட்சி என்று எதுவுமே இருக்க முடியாது. 140 கோடி மக்களையும் திருப்திப்படுத்துவது என்பதும் சாத்தியமல்ல. இந்தியா்களுக்குத் தன்னம்பிக்கையையும், வருங்காலம் குறித்த நம்பிக்கையையும் நரேந்திர மோடியின் ஆட்சி ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் உண்மை.
- அதெல்லாம் சரி, 400 இடங்களில் வெற்றியடைவோம் என்கிற நம்பிக்கையும், சா்வதேச அளவில் ‘விஸ்வகுரு’ என்கிற மரியாதையும் பெற்றிருக்கும் பிரதமா் நரேந்திர மோடி, ஏன் காங்கிரஸையும், ராகுல் காந்தியையும் இந்த அளவுக்கு வலிந்து நையாண்டி செய்ய வேண்டும் என்பது புரியவில்லை. அது அவரது இன்றைய சா்வதேசத் தகுதிக்கு ஏற்ாக இல்லை!
நன்றி: தினமணி (13 – 02 – 2024)