TNPSC Thervupettagam

இன்சுலின்: அற்புத மருந்தின் நூற்றாண்டு!

July 26 , 2021 1102 days 479 0
  • நூறு ஆண்டுகளுக்கு முன்பு இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டதை கரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும் கொண்டாடுகிறது அறிவியல் உலகம். காரணம், இருபதாம் நூற்றாண்டின் அற்புதக் கண்டுபிடிப்புகளில் இன்சுலின் முக்கியமானது. நீரிழிவு நோயை எதிர்கொள்ளும் சிறந்த வழிமுறை இது. நவீன மருத்துவத்தில் ஒரு மைல்கல் இது!
  • இன்சுலினுக்கு முந்தைய காலத்தில், உலக அளவில் கோடிக்கணக்கான நீரிழிவுக் குழந்தைகள் கடுமையான பத்திய உணவுகளால் களைத்துப்போயினர். மரபுவழி மருந்துகளுக்கு நோய் கட்டுப்படாமல், பிறந்த சில வருடங்களில் இறந்துகொண்டிருந்தனர்.
  • இன்சுலினுக்குப் பிந்தைய காலத்தில் இந்தத் துயரங்கள் குறையத் தொடங்கின. இன்சுலினைக் கண்டுபிடித்து உலகளாவிய உயிரிழப்பைக் குறைத்தவர்கள் கனடாவைச் சேர்ந்த பாண்டிங் (Banting), பெஸ்ட் (Best) ஆகிய இரண்டு அறிவியலர்கள்.

கனவு காட்டிய கண்டுபிடிப்பு

  • பாண்டிங் டொரொன்டோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அறுவைச் சிகிச்சை மருத்துவர். 1920 வரை உடலில் செரிமான நீரைச் சுரக்கும் கணையத்துக்கும் நீரிழிவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பது மருத்துவர்களின் ஊகம்.
  • 1920 அக்டோபர் 30-ம் நாள் இரவில் பாண்டிங் கணையம் குறித்து மோசஸ் பேரோன் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு உறங்கச் செல்கிறார். நள்ளிரவில் அவருக்கு ஒரு கனவு வருகிறது.
  • அதில் பாண்டிங் கணையத்தை அறுவைச் சிகிச்சை செய்து கணையக் குழாயை முடிச்சுப்போட்டு மூடிவிடுகிறார். அதனால் செரிமான நீர் வழக்கம்போல் முன்சிறுகுடலுக்குச் செல்ல வழியில்லை. சுரப்புச் செல்கள் தாமாகவே அழிந்து விடுகின்றன. அதே சமயத்தில், கணையத்தில் ‘லாங்கர்ஹான் திட்டுகள்’ மட்டும் அழியாமல் இருக்கின்றன. கனவு கலைகிறது.
  • இந்தப் பின்னணியில், ‘கணையத் திட்டுகளில் நீரிழிவோடு தொடர்புடைய வேதிப்பொருள் இருந்தால், அதைத் தனியாகப் பிரித்தெடுத்து, நோயாளிகளுக்குக் கொடுத்து, நீரிழிவைக் கட்டுப்படுத்த சாத்தியம் இருக்கிறது’ என்று பொறிதட்ட, மருத்துவப் பேராசிரியர் பணியிலிருந்து ஆராய்ச்சியாளராக மாறுகிறார் பாண்டிங்.
  • அப்போது அவரிடம் ஆராய்ச்சிக்கூடம் எதுவுமில்லை. ஆகவே, பேராசிரியர் மேக்ளியாடை அணுகுகிறார். அவரும் தன்னுடைய ஆராய்ச்சிக்கூடத்தைக் கொடுத்ததோடு, பெஸ்ட் என்பவரையும் அவருக்கு உதவியாளராக அமர்த்துகிறார்.
  • பாண்டிங், தன்னுடைய ஆராய்ச்சியின் முதல் படியாக, ஆரோக்கியமான ஒரு நாயின் கணையத்தை அகற்றுகிறார். அதைத் தொடர்ந்து, அந்த நாய்க்கு ரத்தச் சர்க்கரை அதிகரித்து, கடுமையான நீரிழிவு வந்து இறந்துவிடுகிறது.
  • இப்படிப் பல நாய்களை ஆராய்ந்த பிறகு, நீரிழிவுக்கும் கணையத்துக்கும் உள்ள தொடர்பை உறுதிசெய்கிறார்.
  • பிறகு, நாயின் கணையத்திலிருந்து ஒரு திரவத்தைப் பிழிந்து, அதை நீரிழிவு நோயுள்ள நாய்க்கு ஊசி மூலம் செலுத்த, அதன் ரத்தச் சர்க்கரை குறைகிறதா என்பதை பெஸ்ட் கணிக்கிறார். ஆரம்பத் தோல்விகளுக்குப் பிறகு, 1921 ஜூலையில் அந்த அதிசயம் நிகழ்கிறது!
  • கணையத் திரவம் செலுத்தப்பட்ட நாயின் ரத்தச் சர்க்கரை குறையத் தொடங்குகிறது. அதே போன்ற திரவத்தைப் பல நாய்களிடம் சோதித்துப் பார்க்கிறார். எல்லா நாய்களுக்கும் ரத்தச் சர்க்கரை குறைவது உறுதியாகிறது.
  • ஆரம்பத்தில் பாண்டிங் தயாரித்த கணையத் திரவம் சுத்திகரிப்பு இல்லாமல் இருந்ததால், நாய்களுக்கு ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அறிவியலர் ஜேம்ஸ் கோலிப், பாண்டிங் தயாரித்த கணையத் திரவத்தைச் சுத்தப்படுத்திக் கொடுக்கிறார்.
  • ஆராய்ச்சியின் அதிமுக்கியமான அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிறார் பாண்டிங். நீரிழிவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த லியோனார்ட் தாம்சன் என்ற 14 வயதுச் சிறுவனுக்குச் சுத்திகரிக்கப்பட்ட திரவத்தை முதன்முதலில் செலுத்துகிறார்.
  • அவனுக்கும் நீரிழிவு கட்டுப்படுகிறது. அதன் மூலம், ‘கணையத்தில் இன்சுலின் சுரக்காததுதான் நீரிழிவுக்குக் காரணம்; அதற்கான தீர்வு இன்சுலினைச் செலுத்துவது’ என்று பாண்டிங் உறுதிசெய்கிறார். இது நடந்தது 1922 ஜனவரி 23-ல். இந்தச் சாதனைக்கு 1923-ல் பாண்டிங் நோபல் பரிசு பெறுகிறார்.

இன்சுலின் ஓர் அருமருந்து

  • பாண்டிங், தான் கண்டுபிடித்த திரவத்துக்கு ‘ஐலெடின்’ (Isletin) என்று பெயரிடுகிறார். ஆனால், அவருடைய ஆராய்ச்சிக்கு உதவிய மேக்ளியாட் ‘இன்சுலின்’ (Insulin) என்று அதை மாற்றி விடுகிறார்.
  • அதைத் தொடர்ந்து லில்லி என்ற மருந்து நிறுவனம், வணிக முறையில் இன்சுலினைத் தயாரிக்கத் தொடங்குகிறது. நாயிடம் பெறப்பட்ட இன்சுலினுக்கு ஒவ்வாமை குணங்கள் தெரிய ஆரம்பித்ததால் அடுத்த முயற்சியாக மாடு/பன்றியின் கணையத்திலிருந்தும் இன்சுலினைத் தயாரித்தனர்.
  • 1978-ல் ‘டி.என்.ஏ. மறுஇணைப்பு தொழில்நுட்ப’த்தைப் (DNA recombinant technology) பயன்படுத்தி மனித இன்சுலினைப் போன்று அதன் தயாரிப்புகளை மேம்படுத்தினர். இப்போது அதன் வேதிக் கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்து, பலதரப்பட்ட இன்சுலின்களைத் தயாரிக்கின்றனர்.
  • உலகில், முதலாம் வகை நீரிழிவு நோயாளிகள் 11 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்சுலின்தான் ஒரே மருந்து. இப்போதைய உலகத் தரவுகளின்படி, ஆயுள் முழுவதும் இன்சுலின் போட்டுக்கொண்டவர்கள் 90 வயது வரை வாழ்ந்துள்ளனர்.
  • இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகும் அது கடைக்கோடிச் சாமானியருக்கு எளிதாகச் சென்றடைய முடியவில்லை என்பதுதான் துயரம். அதற்குப் பொருளாதாரம் உள்ளிட்ட பல காரணங்கள் தடையாக இருக்கின்றன.
  • வளரும் நாடுகள் பலவற்றுக்கு இன்னமும் இன்சுலின் கிடைக்கவில்லை, உலகளவில் மூன்று மருந்து நிறுவனங்கள்தான் இன்சுலின் தயாரிப்பில் கோலோச்சுகின்றன. அதனால் அதன் விலை சமநிலையில் இல்லை. வளர்ந்த நாடுகளில்கூட நடுத்தரச் சமூகத்துக்கு இன்சுலினை ஆயுளுக்கும் வாங்கும் சக்தி இல்லை.
  • இந்தியாவில் சுமார் ஒன்றரை லட்சம் குழந்தைகள் முதலாம் வகை நீரிழிவு நோயாளிகள். இவர்கள் எல்லோருக்கும் இன்சுலின் கிடைப்பதில்லை. வடமாநிலங்களில் இலவச இன்சுலினுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது.
  • அதனால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க முடியவில்லை. ஒன்றிய அரசு இந்தக் குறைபாடுகளைக் களைந்து, இலவசமாக இன்சுலின் கிடைக்கச் செய்வதைக் கொள்கை முடிவாக எடுத்துச் செயல்பட்டால், பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை ஆண்டுதோறும் காப்பாற்றலாம்.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளில் தடையின்றி இன்சுலின் இலவசமாக வழங்கப்படுவது பாராட்டுக்குரியது. இப்போது புதிதாகத் தொடங்கப் பட்டிருக்கும் ‘மக்களைத் தேடி மருத்துவத் திட்ட’த்திலும் இன்சுலின் கிடைப்பதை உறுதி செய்தால் இன்னும் சிறப்பு.

நன்றி: இந்து தமிழ் திசை (26 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்