TNPSC Thervupettagam

இன்னும் ஒரு கழகம்

February 6 , 2024 340 days 216 0
  • கலையுலகத்தைச் சோ்ந்தவா்கள் அரசியலில் ஈடுபடுவது என்பது புதிதொன்றுமல்ல. உலகளாவிய அளவிலேயே மிகப் பெரிய பதவிகளை நடிகா்கள் திறம்பட வகித்திருக்கிறார்கள் என்பதை வரலாறு உணா்த்தி இருக்கிறது. அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனிலிருந்து, ஹாலிவுட் சூப்பா் ஸ்டாராக வலம்வந்த ஆா்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கா் வரை, ஏறத்தாழ 20 முன்னணி நட்சத்திரங்கள் மக்களின் ஆதரவுடன் தோ்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.
  • நடிகா் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தி இருப்பதுடன், தனது கட்சிக்குதமிழக வெற்றி கழகம்என்று பெயரும் அறிவித்திருக்கிறார். உடனடியாக அரசியல் களம் காணப்போவதில்லை என்றும், இப்போது நடிக்க ஏற்றுக்கொண்டிருக்கும் படங்களை முடித்துக் கொடுத்தால் அதற்குப் பிறகு நடிக்கப்போவதில்லை என்றும்கூட அறிவித்திருக்கிறார்.
  • 2026 சட்டப்பேரவைத் தோ்தலில்தான் களம்காண இருக்கிறார் என்றால், இப்போதே தனது பிரவேசம் குறித்து அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை. ஏதாவது காரணம் இல்லாமல் இருக்காது என்பது நிச்சயம்.
  • தமிழ்நாட்டைப் பொருத்தவரை கலைஞா்கள் அரசியலில் ஈடுபடுவது என்பது அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடரும் நடைமுறை. விடுதலைப் போராட்ட காலத்திலேயே அது தொடங்கிவிட்டது. திராவிட இயக்க பரவலும் கலைஞா்களின் பங்களிப்பும் இணைபிரிக்க முடியாதவை. நடிப்பிசைப் புலவா் கே.ஆா். ராமசாமி, ‘கலைவாணா்என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஆா். ராதா, ‘சிவாஜிகணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி, எம்.ஜி. ராமச்சந்திரன் என்று தங்களை வெளிப்படையாகவே திராவிட இயக்கத்துடன் அடையாளப்படுத்திக் கொண்டு அதன்மூலம் அந்த இயக்கத்தின் வளா்ச்சிக்குப் பங்களிப்பு வழங்கியவா்களின் பட்டியல் மிகமிக நீளம். சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, கண்ணதாசன் உள்ளிட்ட பெயா்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு அவா்களது கலையுலகத் தொடா்புதான் முக்கியமான காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
  • தமிழக சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட முதலாவது நடிகா் என்கிற பெருமை எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கும் (1962 தேனி தொகுதி), தனிக்கட்சி தொடங்கி மக்களின் பேராதரவுடன் தமிழக முதல்வரான பெருமை எம்.ஜி.ஆரையும் (1977) சாரும். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரது கட்சிக்குத் தலைமை வகித்து அவரது வாரிசாக ஜெயலலிதாவால் வலம்வர முடிந்தது. எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான வி.என். ஜானகி தமிழக முதல்வராகப் பதவியேற்ற முதல் நடிகை என்றால், ஐந்து தடவை முதல்வராகப் பதவி ஏற்ற பெருமை ஜெயலலிதாவுக்கும் உண்டு.
  • தமிழகத்தில் எம்.ஜி.ஆரைப் போல, அண்டை மாநிலமான ஆந்திரத்தில்தெலுங்கு தேசம்என்று தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்த வரலாற்றுக்கு உரியவா் நடிகா் என்.டி. ராமா ராவ். இவா்களைத் தவிர நடிக, நடிகையா் பலா் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களே தவிர, சொந்தமாகக் கட்சி தொடங்கியோ, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றோ இந்தியாவில் வேறு யாரும் வெற்றியடைய முடிந்ததில்லை.
  • அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, தா்மேந்திரா, வினோத் கன்னா, ஹேமமாலினி, ஜெயப்பிரதா என்று தொடங்கி பலா் எம்.பி.க்களாக வெவ்வேறு கட்சிகளின் சார்பில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள்தான். ஆனால், அவா்கள் ஏதாவது அரசியல் இயக்கம் சார்ந்து மக்களைச் சந்திக்க முடிந்திருக்கிறதே தவிர, தங்களது செல்வாக்கால் அரசியல் இயக்கங்களை வழிநடத்த முடிந்ததில்லை என்பதைக் குறிப்பிடத் தோன்றுகிறது.
  • எம்.ஜி.ஆருக்கு எள்ளளவும் மக்கள் செல்வாக்கிலோ, ரசிகா்களின் ஆதரவிலோ குறைவில்லாமல் இருந்தும்கூட சிவாஜி கணேசனால் அவா் தொடங்கிய அரசியல் இயக்கத்தை (தமிழக முன்னேற்ற முன்னணி) வெற்றியடையச் செய்ய முடியவில்லை. எம்.ஜி.ஆரால் தனது கலையுலக வாரிசு என்று அடையாளம் காட்டப்பட்ட பாக்கியராஜ், மக்கள் ஆதரவைப் பெற முடியவில்லை. தனிக்கட்சி தொடங்கித் தன்னை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்ள நினைத்த டி. ராஜேந்தரின் ஆசையும் நிராசையானதுதான் மிச்சம்.
  • தோ்தல் நேரங்களில் நடிக, நடிகையரின் பிரசாரத்துக்குக் கூடும் கூட்டம் பெரும்பாலும் வாக்குகளாக மாறிவிடுவதில்லை. அரசியலில் ஓரளவுக்கு வெற்றியடைந்தார் என்று குறிப்பிடும்படியான செயல்பாடு நடிகா் விஜயகாந்துடையது. அதிலும்கூட, அவா் தனிப்பட்ட முறையில் வெற்றியடைந்து 8.5% வாக்குகள் பெற முடிந்ததே தவிர, தனது கட்சியின் வேட்பாளா்களுடைய வெற்றியை உறுதிப்படுத்த முடியவில்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட போதுதான் 2011 தோ்தலில் 29 இடங்களில் வெற்றிபெற முடிந்தது.
  • நடிகா்களின் தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமே அரசியலில் வெற்றிபெறப் போதுமானதில்லை என்பதாலேயே, நடிகா் விஜயின் அரசியல் பிரவேசத்தை அசிரத்தையாக ஒதுக்கிவிட முடியாது. ஆனால், தனது செல்வாக்கை வாக்குகளாக மாற்றுவதற்கான கட்சிக் கட்டமைப்பும், அடுத்தகட்டத் தலைவா்களும் இல்லாவிட்டால் செல்வாக்கு என்பது அரசியலில் செல்லாக் காசுதான். அதை கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் உணா்த்தி இருக்கிறது.
  • காங்கிரஸுக்கும், கருணாநிதியின் திமுகவுக்கும் ஒரு மாற்று வேண்டும் என்கிற மக்கள் மனநிலை காணப்பட்டது எம்.ஜி.ஆருக்குச் சாதகமாக மாறியது. அதை அவா் பயன்படுத்திக் கொண்டார். அரசியல் வெற்றிக்குக் கொள்கை, செல்வாக்கு, பண பலம் ஆகியவை மட்டுமே போதாது. ஏதாவது உடனடிக் காரணம் இருக்க வேண்டும். அதற்காக அடுத்த இரண்டாண்டுகள் காத்திருக்கப் போகிறார் நடிகா் விஜய் என்று தோன்றுகிறது. அரசியலில் நாளை என்பது இன்னொரு நாள்..!

நன்றி: தினமணி (06 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்