TNPSC Thervupettagam

இன்னும் மீதம் இருக்கிறது இயற்கை

August 17 , 2024 103 days 85 0

இன்னும் மீதம் இருக்கிறது இயற்கை

  • `சென்னை பறவைப் பந்தயம்' எனும் இயற்கை சார்ந்த போட்டிக்காக சென்னை முழுக்க ஒரே நாளில் ஒரு முறை சுற்றினோம். எரிபொருளை வீணாக்கும் தனிநபர் வாகனங்களில் அல்லாமல், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி சென்னை சுற்றுவட்டாரத்துக்குள் ஒரே நாளில் அதிகமான பறவை வகைகளை நோக்கலாம் எனப் பேராசிரியர் த.முருகவேள் தலைமையிலான எங்கள் குழு முடிவெடுத்திருந்தது.
  • அதில் ஓர் இடமாக அடையாற்றின் நிரந்தர அடையாளங்களில் ஒன்றான தியசாபிகல் சொசைட்டி என்று அறியப்படும் பிரம்மஞான சபைக்குள் பறவைகளைப் பதிவுசெய்துகொண்டிருந்தோம். அடையாற்றின் தென்கரையில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் 140 ஆண்டுகளாக அந்த வளாகம் அமைந்திருக்கிறது.
  • மதிய நேரத்தில் சத்தம் எழுப்பாமல் சென்றபோது (பறவை நோக்குபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியமுதல் விதிமுறை), தரையில் ஐந்து வண்ணங்களில் தத்தித் தாவும் ஆறுமணிக் குருவியைப் பார்த்தோம். சிட்டுக்குருவியைவிடச் சற்றே பெரிய பறவையான அது, இமயமலைப் பகுதிகளில் இருந்து வலசை வருகிறது. மாலை நேரத்தில்தான் இதை அதிகம் பார்க்க முடியும் என்பதால், அதற்கு இப்படி ஒரு காரணப்பெயர்.
  • நடந்து நடந்து கால் வலித்த நிலையில் சற்றே ஓய்வெடுப்பதற்காக ஓரிடத்தில் அமர்ந்தோம். அண்டையிலிருந்த ஒரு மரத்திலிருந்து காரசாரமாகவிவாதித்துக்கொள்வது போன்ற ‘கிறீச்', ‘கீச்'சென்ற ஒலிகள் சில உயிரினங்களிடமிருந்து வெளிப்பட்டன. அவை பெரிய ‘பழந்தின்னி வௌவால்கள்' என்றார் முருகவேள். அவற்றின் முகம் நரியைப் போலிருக்கும் என்பதால், அவற்றுக்கு ‘பறக்கும் நரி’ என்றொரு பட்டப் பெயரும் உண்டு. சென்னையில் எளிதாகப் பார்க்க முடியாத கொண்டலாத்தியையும் பார்த்தோம்.

நரியும் பரியும்:

  • அப்போதுதான் மூன்று அரிய உயிரினங்கள் எங்களுக்குக் காட்சி தந்தன. நிஜ நரிகள். சாட்சாத் நரிகளேதான். நான் ஆச்சரியத்தில் வாய்பிளந்தேன். உலகின் 35ஆவது பெரிய நகரமான, சுற்றுச்சூழல் சீர்கேடு-மக்கள் நெருக்கடி-கட்டட நெருக்கடி போன்றவை மிகுந்த சென்னையில் நரி போன்ற காட்டுயிர்கள் எஞ்சியிருப்பது சாத்தியப்படுகிறதா என்பதே ஆச்சரியத்துக்குக் காரணம்.
  • பிரம்மஞான சபை போன்ற தனியார் வளாகங்கள், இயற்கையை மதிப்பதாலும் இயற்கையைத்தொந்தரவு செய்யக்கூடாது என்கிற மதிப்பீட்டைக்கொண்டிருப்பதாலும்தான் அந்த வளாகங்களில்அரிய பறவைகள், உயிரினங்கள் இப்போதும் வாழ்ந்து வருகின்றன. அது மட்டுமல்லாமல், உலகம் முழுக்க இருந்து கொண்டுவரப்பட்ட அரிய தாவர வகைகள் நிறைந்த வளாகம் அது. சென்னையில் இயற்கை தஞ்சமடைந்திருக்கும் கடைசிப் புகலிடங் களாக இப்படிச் சில எஞ்சியுள்ளன.
  • அடையாற்றின் வடகரையில் செட்டிநாடு பங்களாவைத் தாண்டி உள்ள பகுதிகளிலும் அடையாறு கழிமுகப் (estuary) பகுதிகளிலும் 1970களில் பல அரிய பறவை வகைகளைப் பதிவசெய்துள்ளதாகப் பறவை ஆய்வாளர் வி. சாந்தாராம் தெரிவித்திருக்கிறார். அந்த இடங்களிலும் அடையாற்றின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் விண்ணை முட்டும் கட்டிடங்கள் இன்றைக்கு முளைத்து நின்று நம்மை மிரட்டுகின்றன.
  • வலசை பறவைகளும் இயற்கையும் தம் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கின்றன. சிறு ஆறுதலாக அடையாற்றின் ஓரங்களில் அலையாத்தி (மாங்குரோவ்) மரங்கள் இன்றைக்கு வளர்க்கப்பட்டுள்ளன. இயற்கை மீது அக்கறையுள்ள சில காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களின் பணியால் இது சாத்தியப்பட்டுள்ளது.

இயற்கை வரலாறு:

  • ‘ஆசியாவின் டெட்ராய்ட்' என்கிற பட்டத்துடன் உலக நகரங்களோடு போட்டிபோடத் தயாராக இருக்கும் சென்னையில் இயற்கைக்கு மிச்ச சொச்ச இடம் ஏதாவது இருக்கிறதா? உலக அளவில் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் ஐரோப்பிய நகரங்களில் பெரும்பாலானவை 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட பசுமைப் பரப்புகளைக் கொண்டிருக்கின்றன. சென்னையோ வெறும் 12 சதவீதப் பசுமைப் பரப்பையே கொண்டுள்ளது.
  • சென்னையில் உள்ள நீர்நிலைகள் கடந்த 120 ஆண்டுகளில் முக்கால் பங்கு மண்ணிட்டு மூடப்பட்டு, புதைக்கப்பட்டுவிட்டன. தென்னிந் தியாவில் காற்று மாசுபாடு அதிகமுள்ள பெருநகரங்களில் ஒன்றாக சென்னை இருக்கிறது. இவ்வளவு மோசமாக இயற்கை சிதைக்கப்பட்ட பிறகும் இங்கே உயிரினங்களும் தாவரங்களும் எஞ்சியிருக்கின்றனவா?
  • சற்றே வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் சென்னையின் இயற்கை குறித்து இடையறாது பதிவுசெய்துவந்தவர்கள் என இயற்கை அறிஞர் மா.கிருஷ்ணனையும், சு. தியடோர் பாஸ்கரனையும் குறிப்பிடலாம். இருவரும் சென்னையின் இயற்கை, காட்டுயிர்கள், சுற்றுச்சூழல் குறித்து நிறைய எழுதியிருக்கிறார்கள்.
  • 1990களில் சென்னையின் இயற்கை அம்சங்கள் குறித்து மா. கிருஷ்ணன் ரத்தினச்சுருக்கமான ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் (https://www.currentconservation.org/the-wildlife-of-madras-city-2/). அதிலிருந்து 20 ஆண்டுகள் கழித்து தியடோர் பாஸ்கரன் Wildlife (Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India Volume 1, Editor: S. Muthiah, Palaniappa Brothers-Association of British Scholars (India), Chennai Chapter) எனும் நெடுங்கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார். அவர்கள் இருவரும் பதிவுசெய்ததில் எவ்வளவு எஞ்சியிருக்கின்றன?
  • 1940களில் மயிலாப்பூரிலேயே நரிகள் இருந்தன என்கிறார் கிருஷ்ணன். இன்றைக்கு பிரம்மஞான சபையில் விரல் விட்டு எண்ணும் நிலைக்கு அதலபாதாளத்தில் அவை வீழ்ந்துவிட்டன. இப்படிப் பல உயிரினங்கள் இன்று இல்லையே என விரக்தியுடன் சொல்லலாம். எனினும் இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முடிந்த வகைகளில் எல்லாம் தன்னைத் தகவமைத்துக் கொண்டு இயற்கை நம்மைப் பார்த்துக் கண்சிமிட்டவே செய்கிறது.

இயற்கையின் செழுமை:

  • நெருக்கடி நிறைந்த மந்தைவெளியில், சற்றே ஆரவாரம் குறைந்த இடத்தில் இருக்கிறது எங்கள் வீடு. கோடைக் காலத்தில் குயிலின் கூவலுடனே காலை விடியும். வெளிச்சம் வந்த பிறகு வால்காக்கை, மைனா, காக்கை, கிளிகள் போன்றவை குரலெழுப்பி நம்மை எழுப்பிவிடும். தினசரி காலையில் சீரான இடைவெளியில் இரும்பைச் சுத்தியலால் அடிப்பதுபோல் 'டன்க் டன்க் டன்க்' என்னும் மெல்லொலியுடன் குக்குறுவான் ஒன்று சிறிது காலத்துக்கு முன்புவரை சத்தமிட்டுவந்தது.
  • விரைந்து பறக்கும் ஹெலிகாப்டர்கள் போல தேன்சிட்டு, தையல்சிட்டுகள் தொடர்ந்து வரும். சிறு பறவைகள், சிற்றுயிர்களை வேட்டையாட வரும் வல்லூறு 'டிடு டிடு' எனக் கீச்சிடும் ஒலியை எழுப்பும். சொல்லிவைத்ததுபோல் சரியாக மாலையில் இரண்டு மரங்கொத்திகள் எங்கள் வீட்டிலும் எதிர் வீட்டிலும் உள்ள தென்னை மரங்களைக் கொத்தி இரை தேட வரும்.
  • கிளிகள், கொக்குகள் தங்கள் ஓய்விடத்துக்குத் திரும்பும்போது, வானில் கரும்பருந்து வட்டமடித்துப் பறந்துகொண்டிருக்கும். இருள் கவியத் தொடங்குவதற்கு முன்னால் தென் பகுதியில் இருந்து வடக்கு நோக்கிப் பழந்தின்னி வௌவால்கள் தங்கள் பெரிய இறக்கைகளால் காற்றைத் தள்ளித்தள்ளி மெதுவாகப் பறந்துபோகும். அவை 25 செ.மீ. நீளமுள்ளவை என்றால், 5 செ.மீ. நீளமே உள்ள வண்ணத்துப்பூச்சிகளைப் போன்ற சிறிய கொசுவுண்ணி வௌவால்கள் சரக் சரக்கென்று பறக்கும்.
  • இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பறந்து கொசு, பூச்சிகளைப் பிடித்துக்கொண்டிருக்கும் அது, மீயொலி அலையைப் பயன்படுத்தக்கூடியது. தூங்குவதற்கு முன்னதாக ஒரு நாள் இதய வடிவ முகம் கொண்ட கூகையின் (வெண்ணாந்தை) அழைப்பொலியைக் கேட்டோம். இருட்டில் அதன் தோற்றத்தை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. சில நேரம் இருளின் அமைதியைக் கிழிப்பதுபோல் ஆள்காட்டிப் பறவை வானில் பறந்து 'டிட் யூ டூ யிட் டிட் யூ டூ யிட்' எனக் கத்துவது உண்டு.

எத்தனை எத்தனை:

  • நாம் வேண்டாம் என ஒதுக்கிவைத்தாலும்கூட, தன் இயல்பை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாத இயற்கை கிடைக்கும் இண்டு இடுக்குகளில் துளிர்க்கவும் உயிர்க்கவுமே செய்கிறது. இப்படிப் பறவைகள் மட்டுமல்லாமல், ஓடற்ற நத்தைகள், காட்டுக் கரப்பான்பூச்சி வகையான ஏழுபுள்ளிக் கரப்பான், ஓணான், அரணை, தவளை போன்றவற்றை எங்கள் வீட்டில் சாதாரணமாகப் பார்க்கிறோம். இவையெல்லாம் என்ன பிரமாதம் என்பதுபோல், தரையோடு தரையாக குடுகுடுவென ஓடும் கீரிப்பிள்ளைகளை மயிலாப்பூரின் ஆள் நடமாட்டமுள்ள பல பகுதிகளில் பார்த்திருக்கிறேன்.
  • சற்றே நகர்ந்து சென்னைக் கடற்கரைகளுக்குச் சென்றால் டிசம்பர் - மார்ச் மாத இரவுகளில் கடற்கரைகளுக்கு முட்டையிட வரும் தாய்ப் பங்குனி ஆமைகளைப் பார்க்கலாம். உங்களுக்கு நல்வாய்ப்பு இருந்தால் சில நேரம் ஓங்கில்களையே (டால்பின்) பகலில் பார்க்க முடியும். பல ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்திருக்கிறேன்.
  • இவ்வளவு சந்தடி, மக்கள் கூட்டம், கட்டிட நெருக்கடிகளுக்கு மத்தியில் இவையெல்லாம் எப்படி இயற்கையாக ஜீவிக்கின்றன என்பது வியப்புதான். ஆனால், எப்படியோ தங்களுக்கான பற்றுக்கோலைக் கண்டறிந்து அவை வாழ்கின்றன. ஷங்கர்-ரஜினியின் எந்திரன் 2.0 படத்தில் கூறப்பட்டதற்கு முற்றிலும் மாறாக சாந்தோம் தேவாலயம், சிட்டி சென்டர், மெரினா கலங்கரை விளக்கம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சிட்டுக்குருவிகளை இப்போதும் பார்க்க முடிகிறது.
  • சிட்டுக்குருவிகள் இருக்கட்டும், நம்மைச் சுற்றியுள்ள பறவைகள், உயிரினங்கள், பூச்சி,புழுக்களில் எத்தனையை நாம் கவனித் திருக்கிறோம், தெரிந்து வைத்திருக்கிறோம்? இன்றிலிருந்து தொடங்குவோமா, சென்னையின் இயற்கை வளத்தை அறிந்துகொள்வதற்கான பயணத்தை?

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்