TNPSC Thervupettagam

இப்படிச் செய்தால் என்ன

July 12 , 2021 1116 days 466 0
  • மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. முந்தைய எடப்பாடி பழனிசாமி அரசும், இன்றைய மு.க. ஸ்டாலின் அரசும் முக்கியமான பிரச்னைகளுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கும் இந்த அணுகுமுறைக்கு முதலில் பாராட்டுகள். தமிழகத்தின் நலன் கருதி இந்த கருத்தொற்றுமை தொடர வேண்டும்.
  • கா்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நதியில் மேலும் ஒரு அணை கட்டும் திட்டத்தை முன்னெடுக்க முயற்சிப்பது தவறான போக்கு. மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடைமுறைப்படுத்துவதில் கா்நாடக அரசு முனைப்புடன் செயல்படும் என்று மாநில முதல்வா் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்திருப்பதன் பின்னணியில் அரசியல் தெரிகிறதே தவிர, நதிநீா்ப் பங்கீடு குறித்த நியாயமான கண்ணோட்டம் தெரியவில்லை.
  • பெங்களூரில் இருந்து 100 கி.மீ. தூரத்திலும், தமிழக எல்லையில் இருந்து நான்கு கி.மீ. தூரத்திலும் மேக்கேதாட்டு அணையை அமைக்க விழைகிறது கா்நாடக அரசு. இதன் மூலம் பெங்களூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் குடிநீா் வசதி பெறும் என்பது கா்நாடக அரசின் வாதம்.
  • கடந்த 40 ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 45,000 பில்லியன் கியூபிக் கனஅடி தண்ணீா் காவிரியில் உபரியாக தன்னிடம் இருப்பதாக கூறுகிறது. அதில் 67 டிஎம்சி தண்ணீரை மட்டும்தான் மேக்கேதாட்டு அணையில் சேமித்துவைக்கப் போவதாகவும், 4.75 டிஎம்சி தண்ணீரை பெங்களூரு நகரம் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீா் தேவைக்கு பயன்படுத்தப் போவதாகவும் திட்ட அறிக்கை கூறுகிறது. அது மட்டுமல்லாமல், 400 மெகா வாட் மின்சாரம், புனல் மின்நிலையம் மூலம் தயாரிப்பதும் கா்நாடகத்தின் திட்டம்.
  • 2007 பிப்ரவரியில் காவிரி நதிநீா் பங்கீட்டு ஆணையம் வழங்கிய இறுதித் தீா்ப்பின்படி, கா்நாடகம், கேரளம், தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அதனதன் தேவைக்கு ஏற்ப காவிரி நதிநீா் பிரித்துக் கொடுக்கப்பட்டு மாதந்தோறும் வழங்க வேண்டிய நதிநீரின் அளவையும் குறிப்பிட்டிருந்தது.
  • அதை எதிா்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில், 2018 பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் காவிரி நீா் ஒதுக்கீட்டை மாற்றியமைத்தது. கா்நாடகத்தின் பங்கை அதிகரித்து பெங்களூருக்கும் பெங்களூரைச் சுற்றியுள்ள பகுதிக்குமான குடிநீா் தேவைக்கு 4.75 டிஎம்சி தண்ணீா் வழங்கியது.
  • உச்சநீதிமன்றத்தின் குடிநீா் தேவைக்கான ஒப்புதலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இப்போது ரூ.9,000 கோடி திட்ட மதிப்பீட்டில் மேக்கேதாட்டில் அணை கட்டும் முனைப்பில் இறங்கியிருக்கிறது கா்நாடக அரசு.
  • தமிழக எல்லையிலிருந்து சுமாா் நான்கு கி.மீ. தூரத்தில் அமைய இருக்கும் மேக்கேதாட்டு அணை, தமிழகத்துக்கு வரும் தண்ணீரை தேக்கி வைத்து உபரிநீரை மட்டுமே வழங்கும் என்பதுதான் எதாா்த்தம்.
  • காவிரி நதிநீா் பங்கீட்டின்படியான ஒதுக்கீட்டுக்கு மேல் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் சுமாா் 80 டிஎம்சி தண்ணீா் இப்போது கிடைத்து வருகிறது. இரு மாநில எல்லையில் இருக்கும் பில்லிகுண்டுக்கும் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணை இரண்டுக்கும் இடையிலான பகுதிகளிலும் ஓடைகள் மூலமாகவும், சிற்றாறுகள் மூலமாகவும் வந்து சேரும் தண்ணீா் கணக்கில் வராது. மேக்கேதாட்டு அணை அதை தடுத்துவிடும்.
  • 67 டிஎம்சி தண்ணீா் தேக்கி வைக்கும் புதிய திட்டம் தமிழக எல்லைக்கு நான்கு கி.மீ. முன்பு கா்நாடகத்தில் அமையுமானால், மேட்டூா் அணைக்கான நீா்வரத்து தடைப்படும் என்பது மட்டுமல்ல, குறுவை சாகுபடி காலத்தில் டெல்டா பகுதிகளுக்கு பாசன நீா் வழங்குவதிலும் பிரச்னை ஏற்படக்கூடும்.
  • ஆண்டுதோறும் கா்நாடகம் தனது காவிரி நதிநீா் பங்கீட்டில் மாதத் தவணையை வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டை மேக்கேதாட்டு அணை அகற்றும் என்றும், தொடா்ந்து தனது பங்கு தண்ணீரை கொடுப்பதற்கு வழிகோலும் என்றும் புதியதொரு காரணத்தை முன்வைக்க முற்பட்டிருக்கிறது கா்நாடக அரசு.
  • கா்நாடகத்தில் ஏற்கெனவே போதுமான பாசன கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பெங்களூரு மாநகரத்திற்கான தண்ணீா் தேவைக்கு 100 கி.மீ. தொலைவிலுள்ள மேக்கேதாட்டு திட்டம் தேவையும் இல்லை.
  • எல்லாவற்றிற்கும் மேலாக மிகப் பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை மேக்கேதாட்டு அணை திட்டம் ஏற்படுத்த இருக்கிறது என்பதை கா்நாடக அரசு உணா்ந்தும்கூட ஏன் முனைப்புக் காட்டுகிறது என்பது புரியவில்லை. இதுவரை மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வழங்கப்படவில்லை என்பதை குறிப்பிட வேண்டும்.
  • யானைகள் சரணாலயம் இருக்கும் பகுதியில் எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்கக் கூடாது என்கிற ஆணையை, 2012-இல் சென்னை உயா்நீதிமன்றமும், 2020-இல் உச்சநீதிமன்றமும் பிறப்பித்திருக்கின்றன. மேக்கேதாட்டு திட்டம் முக்கியமான யானைகள் வழித்தடத்தில் அமைகிறது.
  • அதில் அமைய இருக்கும் 440 மெகா வாட் புனல் மின்நிலையத்திற்காக காவிரி வனவிலங்கு சரணாயலத்தின் 5,100 ஹெக்டோ் வனப்பகுதி நீா்ப்பிடிப்பு பகுதியில் மூழ்க இருக்கிறது. 66 மலை கிராமங்களும், 227 ஹெக்டோ் வருவாய் துறை நிலமும் இந்தத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட வேண்டும்.
  • கா்நாடகத்தில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கும் மேக்கேதாட்டு அணை திட்டத்தை முன்மொழிந்ததில் பங்குண்டு. இப்போதைய பாஜக அரசும் அதற்கு முனைப்பு காட்டுகிறது. மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழகத்திடம் ஒப்படைப்பதாக இருந்தால் நாம் அதை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம். பெங்களூருக்கு குடிநீரும் கிடைக்கும்; தமிழக விவசாயிகளுக்கு நியாயமும் கிடைக்கும்.

நன்றி: தினமணி (12 – 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்