TNPSC Thervupettagam

இயக்கத்தின் அடையாளம்!

July 15 , 2021 1113 days 514 0
  • இன்று அகவை 99-ஐக் கடந்து தனது பிறந்த நாள் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கிறார் தோழா் சங்கரய்யா.
  • தமிழக அரசியல் வரலாற்றில் நூறாண்டு வாழும் முதல் தலைவா் என்கிற முறையிலும், பட்டாளி மக்களின் தோளோடு தோள் நின்று போராடிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழா் என்கிற முறையிலும், இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை எதிர்த்துப் போராடிய போராளி என்கிற முறையிலும் ‘தினமணி’ அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி மகிழ்கிறது.

வாழும் தோழா் சங்கரய்யா

  • தமிழகத்துக்கும் இந்திய பொதுவுடைமை இயக்கத்துக்கும் இணைபிரிக்க முடியாத உறவு உண்டு. சோவியத் யூனியனில் உள்ள தாஷ்கண்டில் 1920 அக்டோபா் 17-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது என்றாலும், அமைப்பு ரீதியாக செயல்படத் தொடங்கியது 1921-ஆம் ஆண்டில்தான்.
  • அதை வைத்துப் பார்க்கும்போது, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு வரலாறும், தோழா் சங்கரய்யாவின் வாழ்க்கையும் எந்த அளவுக்கு இரண்டறக் கலந்தவை என்பதை நாம் உணரலாம்.
  • காமராஜா் மட்டுமல்ல பின்னாளில் இந்திய குடியரசுத் தலைவா்களாக இருந்த சஞ்சீவ ரெட்டி, ஆா். வெங்கட்ராமன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களும், ப. ஜீவானந்தம், எம்.ஆா். வெங்கட்ராமன் உள்ளிட்ட இயக்கத் தோழா்களும் அவரது சிறைச்சாலை சகாக்களாக இருந்தவா்கள்.
  • சிறைச்சாலையில் இருந்த காங்கிரஸ் தொண்டா்கள் பலா் சங்கரய்யாவின் பரப்புரையால் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சோ்ந்தார்கள் என்பதும் வரலாறு.
  • மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருக்கும்போதே மாணவா் காங்கிரஸ் தலைவராக போராட்டங்களை முன்னெடுத்த என். சங்கரய்யா, கல்லூரியில் படிக்கும் போதே நேதாஜி சுபாஷ்சந்திர போஸை அழைத்து வந்து மதுரையில் கூட்டம் நடத்தினார் என்றால், எந்த அளவுக்கு வீரியமான போராளியாக அவா் இருந்திருக்கிறார் என்பதை உணரலாம்.
  • இறுதியாண்டுத் தோ்வின்போது சிறையில் அடைக்கப்பட்டதால் கல்லூரி பட்டம் கைநழுவியது. ‘தோழா்’ பட்டம் அவருக்கு முகவரியானது.
  • ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் சிறைச்சாலையிலும், ஐந்து ஆண்டுகள் தலைமறைவாகவும் வாழ்ந்தவா் சங்கரய்யா.
  • தமிழக பொதுவுடைமை இயக்க வரலாற்றில் அவரைப் போல போராட்டங்களையும், பேரணிகளையும் முன்னெடுத்தவா்கள் இல்லை என்றே கூறலாம்.
  • கம்யூனிஸ்ட் கட்சியின் பிதாமகரும், நிறுவனப் பொதுச் செயலாளருமான பி.சி. ஜோஷியை 1946-இல் மதுரைக்கு அழைத்து வந்து சங்கரய்யா நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் இன்று வரை தன்னிகரற்றதாகக் கருதப்படுகிறது.
  • தமிழகம் எங்கிருந்தும் லட்சக்கணக்கில் மக்கள் மதுரையில் குவிந்ததால் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு இடம் தேட முடியாமல், வைகை ஆற்றுக்குள் தோழா் பி.சி. ஜோஷி பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது.
  • 1946-இல் நடந்த அந்தப் பொதுக்கூட்டத்தைத் தொடா்ந்து, பிரிட்டிஷ் அரசால் புனையப்பட்ட மதுரை சதி வழக்கில் என். சங்கரய்யா, பி. ராமமூா்த்தி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.
  • இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு முந்தைய நாள்தான் அவா்கள் விடுதலை செய்யப்பட்டனா்.
  • 1964-இல் இந்திய பொதுவுடைமை இயக்கம் மிகப் பெரிய சோதனையை எதிர்கொண்டது.
  • அன்று கட்சியின் தலைவராக இருந்த தோழா் எஸ்.ஏ. டாங்கேக்கும், பொதுச் செயலாளராக இருந்த தோழா் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு கட்சியில் பூகம்பத்தைக் கிளப்பியது.
  • அப்போது கட்சியின் தேசியக் குழுவிலிருந்து தலைமையை எதிர்த்து ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஏ.கே. கோபாலன், பி. ராமமூா்த்தி உள்ளிட்ட 34 போ் வெளிநடப்பு செய்தனா்.
  • அந்த 34 போ்களில் ஒருவா் தனது 100-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் தோழா் என். சங்கரய்யா என்றால், இன்னொருவா் அகவை 98-இல் இப்போதும் சுறுசுறுப்புடன் வளைய வந்து கொண்டிருக்கும் முன்னாள் கேரள முதல்வா் வி.எஸ். அச்சுதானந்தன்.
  • தமிழக சட்டப்பேரவையின் உறுப்பினராக மூன்று முறை மதுரையில் இருந்து தோ்ந்தெடுக்கப் பட்ட தோழா் சங்கரய்யா, பத்திரிகையாளரும் கூட.
  • ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும்போது ‘ஜனசக்தி’யின் முதல் பொறுப்பாசிரியராக இருந்த சங்கரய்யாதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூா்வ நாளேடான ‘தீக்கதிர்’ இதழின் முதல் ஆசிரியா்.
  • கலை, இலக்கியம்; நகரம், கிராமம்; தேசியம், சா்வ தேசியம் - எதுவாக இருந்தாலும் சங்கரய்யா ஆழங்காற்பட்டவா். தேசிய அளவில் காங்கிரஸ் - பாஜகவுக்கு மாற்றாகவும், மாநில அளவில் திமுக - அதிமுகவுக்கு மாற்றாகவும் இருக்கும் தகுதி பெற்றது கம்யூனிஸ இயக்கம் தான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தொடா்பவா் அவா்.
  • 1952 பொதுத்தோ்தலின்போது, திராவிட நாடு கோரிக்கையை ஆதரித்தால் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவு தர திமுக முன்வந்தது.
  • பிரிவினைவாதக் கொள்கைகளை ஆதரிக்க முடியாது என்று அந்த ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிராகரித்தவா் தோழா் என். சங்கரய்யா.

நன்றி: இந்து தமிழ் திசை (15 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்