இயற்கைக்கு உரிமைகள் உண்டா?
- விலங்குகளின் பாதுகாப்பு பற்றிப் பேசக் கேட்டிருக்கிறோம்; மனித உரிமை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். நீர்நிலைகளுக்கு உரிமை இருக்கிறதா? ஆம், இயற்கைக்கும் தன்போக்கில் இயங்குவதற்கு உரிமை இருக்கிறது.
- மனித மையப் பார்வை கொண்ட நாம், இதைப் புரிந்துகொள்வதில்லை. தொன்றுதொட்டே தமிழ்கூறும் நல்லுலகு ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று கொண்டாடி வந்திருக்கிறது. எல்லா உயிர்களும் சமம் எனக் கொண்டால், உரிமைகளும் சமம்தானே?
- அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்திலுள்ள டொலீடோ நகரில் எரீ என்றோர் ஏரி உள்ளது. அந்த ஏரியில் மிகையான பாசி வளர்ச்சியினால் நீர் சீர்கெட்டுப் போனது. 2014இல் டொலீடோ நகரத்து மக்கள் மூன்று நாள்கள் குடிநீரின்றித் தவித்தனர்.
- அப்பகுதியிலுள்ள ட்ருவ்ஸ் பண்ணை (Drewes Farm) பயிர்ச் சாகுபடியில் பயன்படுத்திய உரங்கள் வெள்ளத்தின் போக்கில் ஏரியில் கலந்துகொண்டிருந்ததே அதற்குக் காரணம். இதைப் புரிந்துகொண்ட டொலீடோ நகர மக்கள், ஏரியைப் பாதுகாப்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டும் என்று நகர்மன்றத்திடம் கோரிக்கை வைத்தனர்.
- ‘எரீ ஏரியின் சூழலியல் கட்டமைப்பின் இருப்புக்கும், செழுமைக்கும், அந்த ஏரி இயல்பாக படிமலர்ச்சி அடைவதற்குமான மறுக்க முடியாத உரிமையை’ வழங்கும் ஒரு மசோதாவை நகர்மன்றம் சட்டமாக்கியது.
- அச்சட்டம் அமெரிக்க அரசியல் சாசனத்துக்கும் ஒஹையோ மாகாணச் சட்டங்களுக்கும் முரணாக உள்ளதாக ட்ரூஸ் பண்ணைத் தரப்பு ஃபெடெரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. எனினும், நீர்நிலைகளை மாசுபடுத்தாமல் பாதுகாக்கும் கூட்டுப்பொறுப்பு நகர மக்களுக்கு உள்ளது என்னும் கருத்து பரந்த அளவில் ஏற்கப்பட்டுவிட்டது.
இயற்கை உரிமை இயக்கம்:
- எரீ ஏரி உரிமை மசோதா நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, இயற்கைக்கான உரிமை இயக்கம் உருவானது. காலநிலை, சூழலியல் மேம்பாட்டையும், மனிதகுல நலனையும் முன்னிட்டு நீர்வளங்களை மீட்டுத் தக்கவைக்கும் விதமாக அமைந்த, மனிதனை மையப்படுத்தாத வலிமையான ஆயுதம் ‘இயற்கை உரிமைக் கோட்பாடு.’
- மேலை நாட்டுச் சட்டங்களும் கருத்தியல்களும் பொதுவாக இயற்கையை வருவாய் அளிக்கும் சொத்தாக மட்டுமே அணுகுகின்றன. அவர்களைப் பொறுத்தவரை, மனிதனின் தேவைகளைக் கடந்து இயற்கைக்கு வேறெந்த மதிப்பும் இல்லை. வேடிக்கை என்னவென்றால், இயற்கையைப் பற்றி உலகுக்குப் பாடம் நடத்துபவர்களும் அவர்கள்தான்.
- அண்மையில் கயானா அதிபருடனான நேர்காணலில் பிபிசி ஊடகர் இதுபோன்ற ஒரு போலி அக்கறையை வெளிப்படுத்தினார். “இயற்கையை எப்படிப் பாதுகாப்பது என்று எங்களுக்கு நீங்கள் கற்றுத் தரவேண்டிய தேவையில்லை” என்று தரவுகளுடன் கயானா அதிபர் பதிலளித்தார். ஊடகரோ வாயடைத்துப் போனார்.
- பல்லாயிரம் ஆண்டுகளாகத் திணைக்குடிகள் இயற்கையின் பிரிக்க முடியாத அம்சமாகத் தங்களைக் கருதி வாழ்ந்துவருகின்றனர். இதுபோன்றதொரு முரண்பட்ட நிலைமையில் இயற்கையைச் சிதைவிலிருந்து பாதுகாக்க, நடப்பிலுள்ள சட்டங்கள் போதவில்லை.
- சமூகங்கள், நகரங்கள், நாடுகள் ஈறாக அனைத்துத் தரப்பும் இதை உணர ஆரம்பித்திருக்கின்றன. வட அமெரிக்கா, ஈக்வடார், நியூசிலாந்து போன்ற நாடுகளில் ‘இயற்கையின் உரிமைகள்’ என்கிற புதிய சட்ட அணுகுமுறை தோற்றம் கொண்டுள்ளது. புதிய சட்டத்தின் கீழ் ஆறுகளும், ஏரிகளும், காடுகளும் மனிதர்களுக்கு நிகரான அங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
நாவில் புரளும் சொல்லாக…
- காலநிலை பிறழ்வின் காரணிகளைக் குறைப்பது, பாதிப்புகளைக் குறைப்பது, விளைவுகளைச் சமாளிப்பது, புதிய வாழ்க்கை முறைத் தகவமைப்புகளை உருவாக்குவதுதான் தற்போதைய அவசரத் தேவை. மக்கள் பிரச்சினைகளை மக்களே கையிலெடுக்காதவரை தீர்வு கிடைக்காது. தீர்வுக்கு முதற்படி, காலநிலை பற்றிய கலந்துரையாடலை மக்களிடையே தொடங்கி வைப்பதே. ‘காலநிலை பிறழ்வு’ எல்லார் நாவிலும் புரளும் சொல்லாக மாறவேண்டும்.
- செய்தி ஊடகங்கள் பெருமுதலாளிகளின் கையில் உள்ளன; அல்லது, அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களின் லாப இலக்குகளுக்கு ஊறு விளைவிக்கும் என்று அஞ்சுகிற பிரச்சினைகளை அவை பேசாது. பேசினாலும், மக்களைத் திசைதிருப்பும் அல்லது அவர்கள் மீதே பழி போடும் வகையிலேயே செய்யும்; அல்லது பீதியைப் பரப்பிக் காசு பார்க்கும்.
- சமூக ஊடகங்களோ கேளிக்கைத் தீனியிட்டு, மக்களை நுகரும் பிண்டங்களாக்கிக் கொண்டிருக் கின்றன. ஊடகங்களில் செய்திகள் உருவாக்கப்படுகின்றன; கேளிக்கைப் பொருளாக வடிவமைக்கப்படுகின்றன. எல்லார் கையிலும் இருக்கும் ஊடகச் செயலி வசதி கொண்ட திறன்பேசி, வெறும் சந்தைத் தளங்களாகக் குறுகிப் போயிருக்கிறது.
மரபறிவின் தேவை:
- இயற்கைச் சீற்றங்கள், காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளுக்கு உலக அளவில் பெருந்தொகைகள் செலவிடப் படுகின்றன. விவாதிப்பதற்குப் பன்னாட்டு, தேசிய மையங்களில் அரங்குகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஏராளமான கண்டுபிடிப்புகள் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிடப்படுகின்றன. ஆனால், இந்தச் செய்திகள் அடித்தள மக்களைச் சென்றடையவே இல்லை!
- பிற துறைகளைப் போலவே, காலநிலை மாற்றம் குறித்த தரவுகளும் மேலிருந்து கொட்டப்படுகின்றன என்பதுதான் இதில் சிக்கல். இந்த ஆய்வுகள் அடித்தள மக்களின் மரபறிவுடன் இணைக்கப்படுவதில்லை. குடிமக்களின் அனுபவ அறிவின் அடிப்படையில் மக்களால் சேகரிக்கப் படுகிற, பகிர்ந்து கொள்ளப்படுகிற தகவல்கள் மட்டுமே மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது மக்கள் அறிவியல் (citizen science) எனப்படுகிறது.
- மக்கள் அறிவியல் என்கிற கருத்து 1989இல் அமெரிக்காவில் அறிமுகமானது. அந்த ஆண்டில் தேசியஆவ்டுபாவ்ன் சங்கம் (National Audubon Society) அமில மழை சார்ந்த விழிப்புணர்வுப் பரப்புரையை நிகழ்த்தியது. அதற்கு அடிப்படையான மழை மாதிரிகளை அமெரிக்கா முழுவதும் சேகரித்துக் கொடுத்தவர்கள் 225 தன்னார்வலர்கள்.
- அமில மழை விழிப்புணர்வுப் பரப்புரை ஒரு புதிய அறிவியல் பண்பாட்டுக்கு வித்திட்டது. இப்படி, தொழில்முறை விஞ்ஞானிகளுடன் இணைந்து அறிவியல் ஆய்வுக்குத் தமது நேரத்தையும் வளங்களையும் பங்களிப்பவரை மக்கள் அறிவியலாளர் என்கிறார்கள்.
- பிரித்தானிய சமூகவியலாளர் ஆலன் இர்வின், ’அறிவியல் மற்றும் அறிவியல் கொள்கை செயல்முறைகளை மக்களுக்குத் திறந்துவிடுவதன் தேவையை முன்னிறுத்தும் அறிவியல் குடியுரிமைக் கருத்துகளை உருவாக்குதல்' என்பதாக அதனை வரையறுத்தார்.
- ‘அறிவியல், மக்களின் தேவைகளுக்குப் பதிலளிப்பதாக இருக்க வேண்டும்; மக்களே நம்பகமான அறிவியல் அறிவை உருவாக்கவும் முடியும்’ என்று இர்வின் நம்பினார். ‘அறிவியல் அறிவை மேம்படுத்தும் ஆய்வில் மக்களின் பங்கேற்பையும் ஒத்துழைப்பையும் உள்ளடக்கியதே மக்கள் அறிவியல்’ என ஆஸ்திரேலிய மக்கள் அறிவியல் சங்கம் 2016இல் வரையறுத்தது.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 08 – 2024)