TNPSC Thervupettagam

இயற்கைக்கு முன் நாம் "பூஜ்யம்'!

June 7 , 2019 2045 days 4171 0
தப்பிப் போன காலம்
  • ஓர் ஆண்டுக்கு ஆறு பருவங்கள். இவை ஆண்டின் 12 மாதங்களில் பாதியாகப் பிரிக்கப்படுகின்றன. பின்பனிக் காலம் தை, மாசி, இளவேனில் காலம் பங்குனி, சித்திரை, முதுவேனில் காலம் வைகாசி, ஆனி, கார் காலம் ஆடி, ஆவணி, இலையுதிர் காலம் புரட்டாசி, ஐப்பசி, முன்பனிக் காலம் கார்த்திகை, மார்கழி என்று காலங்களை 6 பிரிவுகளாக நம் முன்னோர் அளவிட்டு வைத்துள்ளனர்.
  • ஆனால், மேற்கத்திய நாடுகளில் 4 பருவ காலங்கள்தான். அவை வசந்த காலம், வேனிற்காலம், குளிர் காலம் மற்றும் இலையுதிர் காலம். மேற்கத்தியர்கள் மூன்று மூன்று மாதங்களாக பருவ காலத்தைப் பிரிக்கிறார்கள். இரண்டு இரண்டு மாதங்களாக நமக்கு பருவ காலம் பிரிக்கப்பட்டுள்ளது.
  • உலக வெப்பமயமாதலில் நமது நாட்டில் பருவகாலங்கள் வெகுவாக மாறிவிட்டன. ஆடிப் பட்டம் தேடி விதை, வைகாசி ஆனியில் தென்மேற்குப் பருவமழை அடை மழையாக இருக்கும். தூவானம் தூறலை நிறுத்திக் கொண்ட பிறகு ஆனியில் விதைப்பார்கள். ஆடி, ஆவணி குளிரால் நம்மை வாட்டியும், மகிழ்வித்தும் இருவேறு மனநிலைகளைத் தந்த போதிலும், மழை பொழிவதில் குளம் குட்டை நிறைந்திருக்கும். பூமி குளிர்ந்திருக்கும். குதூகலம் நம் மனதில் நிறைந்திருக்கும்.
  • பின்னர், ஆடிக் காற்று வீச கூதிர் என்னும் குளிர் நம்மைத் தொட்டு விட்டு பூமியெங்கும் பற்றிப் படரும். அந்தக் குளிர் காற்றில் நடுங்கிப் போய் தீ மூட்டி குளிர் காய்பவர்களும் உண்டு.
  • கார்த்திகை தீபம் வீடுதோறும் வரிசையாக ஏற்றும்போது, அந்த விளக்கு வெளிச்சத்தில் நம்முடைய பனிக்காலம் நிறைவடைகிறது என்பதை நம்முடைய முன்னோர் மிக அழகாக தட்பவெப்ப நிலையைக் கணித்து வைத்திருந்தார்கள்.
  • சித்திரையில் கொளுத்தும் வெயிலில் இடி, மின்னலுடன் மழை, ஐப்பசியில் வடகிழக்குப் பருவமழை, சாரல் மழை, கொங்க மழை, அடை மழை என அழைத்து வந்த மழைகள் தற்போது காலம் தப்பிப் போய்விட்டன.
தொழில் புரட்சியும் - பூமி வெப்பமும்
  • மக்கள்தொகை, வாகனப் பெருக்கம், காடு அழிப்பு, மனிதர்களின் பேராசைக்கு ஈடு கொடுக்க முடியாமல் இயற்கைத் தாய் ஒவ்வொரு நாளும் சிதைந்து போய்க் கொண்டிருக்கிறாள். இவற்றால்தான் பருவ காலங்கள் பாதிக்கப்பட்டு விட்டன.
  • வெப்பம், அதிக வெப்பம், மிக அதிக வெப்பம், அக்னி வெப்பம் என்று பருவ காலங்கள் மனிதனை மாற்றி விட்டன. ஆகவே, குளிர்சாதனப் பெட்டியை வைத்துக் கொண்டு, தன்னுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறான்.
  • இத்தகைய துயரத்தைத் துடைக்க அடர்ந்த காடுகளை நாம் உருவாக்க வேண்டும். இந்த மலைகளில் காடுகள் உருவாக்கினால் பருவகாலங்களை நாம் மீட்டுருவாக்கத்திற்கும், புத்துருவாக்கத்திற்கும் உள்ளாக்கலாம். இல்லையேல், வரும் காலங்களில் பருவ காலத்தை நாம் கணிக்க முடியாது போய்விடும்.
  • புவியியல் வெப்ப வாயுக்களின் அளவானது, கடந்த பல ஆண்டுகளாகவே காற்று வெளி மண்டலத்தில் படிப்படியாக அதிகரித்ததன் விளைவே வெப்பநிலை மாற்றங்கள் என்றே விஞ்ஞானிகளின் ஆய்வு தெரிவிக்கிறது.
  • அதிலும் குறிப்பாக, கடந்த 150 ஆண்டுகளில் இந்தப் புவி வெப்ப வாயுக்களின் வெளியிடுகிற அளவு அதிகமாகி காற்று வெளி மண்டலத்தில் எல்லை மீறி கலந்து விட்டது.
  • காரணம், 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, 20 ஆம் நூற்றாண்டில் வேகம் பிடித்த மேற்கு உலக நாடுகளின் தொழிற்புரட்சி இதற்கான முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, இந்தத் தொழிற்புரட்சியின் முக்கிய உந்துசக்தியாக இருந்தவை நிலக்கரி, பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய புதைபடிவ எரிபொருள்கள்.
  • இந்தப் புதைபடிவ எரிபொருள்கள் எரிக்கப்படும்போது வெளியேறும் கரியமில வாயுதான் புவி வெப்பமடைவதன் முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது. இத்துடன் பெருமளவில் காடுகளை அழிக்கும்போது மீத்தேன் போன்ற வாயுக்களும், ஹைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களை பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தும்போது வெளியாகும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்களும், தொழிற்சாலைகள் வெளியிடும் மற்றும் மூன்று புவி வெப்ப வாயுக்களும் ஒன்றாகச் சேரும்போது, சிறு துளி பெரு வெள்ளம் என்பதைப் போல பூமியில் காற்று வெளி மண்டலத்தில் புவி வெப்ப வாயுக்களின் அளவு பன்மடங்கு அதிகரிக்கிறது.
பசுமை இல்ல வாயுக்கள்
  • இதன் காரணமாகவே பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகமாகி வருவதாகப் பல்வேறு விஞ்ஞான ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன.
  • புவி வெப்பமயமாதல் என்பது நாம் வாழும் பூமியில் உயிர் வாழ்வதற்கான சாத்தியமான தேவைகளில் வெப்பம் முக்கியமானதாகும்.
  • இந்த வெப்பத்தைச் சமச்சீரான சாதகமான அளவில் வைத்திருப்பதில், பூமியைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலம் முக்கியப் பங்காற்றுகிறது. அதிலும், குறிப்பாக இந்த காற்று மண்டலத்தில் காணப்படும் கண்ணுக்குத் தெரியாத வளையம் போர்வை போலச் சுற்றி நிற்கின்றன.
  • இதனால், பூமியின் வெப்பமானது இயற்கையாக இருக்கக் கூடியதைவிடவும், 30 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கிறது. இதனால், சூரியனின் பாதகமான எதிர்மறையான வெப்பக் கதிர்கள், பூமியை நேரடியாகத் தாக்காமல் தடுப்பதிலும் குறிப்பிட்ட சில வாயுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றைத்தான் "பசுமை இல்ல வாயுக்கள்' என அழைக்கின்றனர்.
புவி வெப்பம் – காரணிகள்
  • புவி வெப்பமடைவது கடல் மட்டத்தை அதிகப்படுத்தும் என்று பார்த்தால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
  • முதலாவது, புவி வெப்பமடைவதால் பூமியின் வடதென் துருவங்களான ஆர்க்டிக், அன்டார்டிக் இரு துருவங்களிலிருந்தும் பனி உருகி அதனால் கடலில் நீரின் மட்டம் அதிகரிக்கிறது.
  • இரண்டாவது, வெப்பமடையும்போது தண்ணீர் விரிவடையும் தன்மை கொண்டது.ஆகவே, கடல் நீரின் வெப்பமும் அதிகரிக்கும். அதனால் கடல்நீரின் மட்டம் அதிகரிக்கும் என்பதே விஞ்ஞானத்தின் அடிப்படைக் கூறுகளாகும்.
  • இப்படி கடல் நீரின் மட்டம் அதிகரிக்கும் போது அவற்றில் ஏற்படும் புயல்களின் தீவிரமும் அதிகரித்து, கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் அழிவுகளை அதிகமாக ஏற்படுத்தும் என்பதுதான் கவலை அளிக்கும் செய்தியாகும்.
  • இதனால், அடிக்கடி பாதிப்புக்குள்ளாவது தெற்காசிய பகுதிகளில் இருக்கும் வங்கதேசம், மாலத்தீவு மற்றும் பசிபிக் தீவுகளாகும். இந்த அழிவுகளைத் தடுப்பது எப்படி? தாங்கள் வெளியிடும் புவி வெப்பமடைவதற்கான வாயுக்களின் அளவை உலக நாடுகள் முழுவதும் உடனடியாகக் குறைக்க வேண்டும் என்பதே ஐ.நா சபையின் பரிந்துரையாகும்.
சிதைவடையும் இயற்கை
  • புவி வெப்பமடைவதற்கான வாயுக்களின் அளவைக் குறைப்பதில் தனி மனிதனின் பங்களிப்பும் முக்கியம் என்பதைத் தொடர்ந்து ஐ.நா.வலியுறுத்தி வருகிறது. எரிபொருள் கொண்ட இரு, நான்கு சக்கர வாகனங்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவது, மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, விமானப் பயணங்களை அவசியத்துக்கு மட்டும் மேற்கொள்ளுதல், நீரை வீணாக்காமல் பயன்படுத்துவது உள்ளிட்டவை தனி மனிதர்கள் செய்யக்கூடிய அளப்பரிய பங்களிப்புகளாகும். இவை, சக மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதரும் அளிக்கும் மதிப்பற்ற தியாகங்களாகும்.
  • புவி வெப்பமடைவதால் சுமார் 16,732 அடி உயரம் கொண்ட தான்சானியா (ஆப்ரிக்கா) நாட்டில் கிளிமஞ்சாரோ சிகரத்தின் சில எழில் தோற்றங்கள் உருகி வருகின்றன. உலகத்தின் மிக உயர்ந்த இமயமலைச் சிகரங்கள் உருகி வருவது மனித குலத்துக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களாகும்.
  • இந்துகுஷ் மற்றும் இமயமலைப் பகுதிகளில் உள்ள பனிமலைகள் அழிவைச் சந்தித்து வருகின்றன. இந்தப் பனிமலைகள்தான் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், சீனா, இந்தியா, மியான்மர் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளில் வசிக்கும் 25 கோடி மக்களுக்கு நீராதாரமாக உள்ளது.
  • இந்த நிலையில் அதிகரித்து வரும் அதிகப்படியான கரியமில வாயு வெளியேற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற பருவ மாற்றத்தால் இந்த மலைகளில் உள்ள மூன்றில் இரு மடங்கு பனிமலைகள் காணாமல் போகக் கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
  • இந்த நிலையில், பனிமலைகள் உருகுவதால் நதியை ஒட்டிய பகுதிகளில் வாழும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவர். விவசாய நிலங்கள் அழியும். உலகில் முக்கியமான 10 நதிகளுக்கு இந்தப் பனிமலைகள் ஆதாரமாக விளங்குகின்றன. இவற்றில் கங்கை, சிந்து, மஞ்சள், ஐராவதி உள்ளிட்ட ஆறுகள் பாதிக்கப்படும்.
  • இதனால் இன்னும் ஒரு நூற்றாண்டுகளுக்குள் இப்பனிமலைகள் வெறும் பாறைகள் கொண்ட பிராந்தியமாக மாறக்கூடும். கிழக்கு பாகிஸ்தான், வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகள், கங்கை பிராந்தியம், கிழக்கு பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு முதலானவை எல்லாம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாகும். வெப்ப நிலையானது 2 டிகிரி செல்சியஸ் அளவு அதிகரிக்கும் எனில் 2100  ஆம் ஆண்டில்  பனிமலைகளில் பாதி இருக்காது. ஆகவே, உடனடியாக இவற்றை அறிந்து தீவிர அணுகுமுறை மூலம் கரியமில வாயு அளவைக் குறைப்பதே தீர்வாகும்.
  • ஏனென்றால், எல்லாவற்றையும் விஞ்ஞானத்தின் மூலம் வென்று விட்டதாக, அதன் மூலம் எல்லாவற்றையும் சொந்தமாக்கிக் கொண்டதாக கருதும் மனிதன் இயற்கைக்கு முன்னால் யாதும் அற்றவன் என்பதை மிக விரைவில் உணரக் கூடும் என்பதே பருவநிலை மாற்றம் கற்றுத் தரும் பாடமாகும்.

நன்றி : தினமணி (07-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்