இயற்கைப் பேரிடர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காலத்தின் தேவை
- ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களில், கன மழை - வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் வேதனையளிக்கின்றன. 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் பரிதவித்தனர்.
- பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளோடு நிவாரணப் பணிகளையும் இரண்டு மாநில அரசுகளும் துரிதப்படுத்தியது காலம் கருதிய செயல்பாடுகள். லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டிருப்பதால், இதைத் தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என இரண்டு மாநில முதல்வர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கன மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் பெரும் சேதத்தை விளைவிப்பதற்கு மனிதச் செயல்பாடுகளே முக்கியக் காரணம். நீராதாரங்களையும் நீர்வழித்தடங்களையும் ஆக்கிரமித்துக் குடியிருப்புகளையும் தொழிற்சாலைகளையும் அமைப்பதால் மழைநீர் வடிவதற்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிடுகின்றன.
- வெளியேற வழியில்லாத நீர், குடியிருப்புப் பகுதிகளில் புகுந்துவிடுவது இயல்பு. ஆந்திர மாநிலம் விஜயவாடா பெரும் வெள்ளப் பாதிப்புக்கு ஆளானதற்கு புடமேரு ஆற்றங்கரையைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளே காரணம் என அம்மாநிலத் துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்திருக்கிறார்.
- ‘விஜயவாடாவின் துயரம்’ என்று சொல்லப்படும் புடமேரு ஆற்றில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் பிரகாசம் அணையின் பழுது காரணமாகத் தண்ணீர் அதிக அளவில் திறந்துவிடப்பட்டதாலும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
- காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதுமே பல்வேறு இயற்கைச் சீற்றங்களைச் சந்தித்துவருகிறது. அதிக வெப்பம், கட்டுக்கடங்காத மழை போன்றவையெல்லாம் இனி இயல்பாக மாறக்கூடும். இந்த ஆண்டு இந்தியாவில் நிலவிய அதிக வெப்பநிலையும் வட மாநிலங்களில் பெய்த அதி கனமழையும் அதற்கு உதாரணங்கள்.
- அதனால், அவற்றை எதிர்கொள்ளும் வகையில் திட்டமிட்டு, இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே ஓடைகள், ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றைச் சீராக்கும் பணிகளை முடக்கிவிடுவதோடு, மழைநீர் வடிகால்களைச் சீராகப் பராமரிக்க வேண்டும்.
- நகரமயமாதலும் வணிகநோக்கிலான காடழிப்பும் வெள்ளப் பெருக்கில் பெரும்பங்கு வகிக்கின்றன. பொருளாதார – தொழில் வளர்ச்சி என்பது இயற்கைக்கு எதிரானதாக அல்லாமல், இயற்கையோடு இயைந்ததாக அமைகிறபோது இயற்கைப் பேரிடர்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
- சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எனத் தனிக் குழு அமைத்து, ஆபத்து நேரக்கூடிய இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அதைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட வேண்டியது அவசியம். கேரளத்தில் நிலச்சரிவு ஏற்படச் சாத்தியமுள்ள இடங்கள் குறித்துச் சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான குழுவின் பரிந்துரை குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற ஆய்வறிக்கைகளும் அவை சார்ந்த உடனடி நடவடிக்கைகளும் அரசியல் சார்பின்றிச் செயல்படுத்தப்பட வேண்டும்.
- குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றித் தேங்கி நிற்கும் மழைநீராலும் சுகாதாரமான குடிநீர் இன்மையாலும் நோய்த்தொற்று, நோய்ப் பரவல் அபாயம் ஏற்படக்கூடும். இதையும் கருத்தில்கொண்டு மக்கள் நலன் காக்கப்பட வேண்டும்.
- இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது எதிர்க்கட்சிகளையும் முந்தைய ஆட்சியில் இருந்தவர்களையும் குற்றம்சாட்டி இதை அரசியல் ஆக்காமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும். நிவாரண நிதிகளும் மீட்புப் பணிகளும் மட்டுமல்ல, இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வதற்கான வலுவான கட்டமைப்புகளை உருவாக்கி அவற்றைப் பராமரிப்பதும் அரசின் தலையாய கடமை.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 09 – 2024)