TNPSC Thervupettagam

இயற்கையின் எச்சரிக்கை புதையும் ஜோஷிமட் நகர்

January 10 , 2023 579 days 308 0
  • "தேவபூமி' என்று அழைக்கப்படும் உத்தரகண்ட் மாநிலம் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. வற்றாத ஜீவநதிகளான கங்கையும், யமுனையும் இங்குதான் உற்பத்தியாகின்றன. பத்ரிநாத், கேதார்நாத் போன்ற புனிதத் தலங்கள் இங்கு உள்ளன. சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக உத்தரகண்டில் பல்வேறு கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் ஏற்படும் பாதிப்புகளின் விளைவால் இயற்கைப் பேரிடர்களை இந்த மாநிலம் பல முறை சந்தித்துள்ளது.
  • 1970-இல் மேகவெடிப்பு காரணமாக அலக்நந்தா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஏராளமான கிராமங்கள் மூழ்கின. 1991-இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 750-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1998-இல் நிகழ்ந்த நிலச்சரிவில் 255 பேரும், 1999-இல் சமோலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 பேரும் பலியாயினர்.
  • இவை எல்லாவற்றையும் விஞ்சும் வகையில், 2013-ஆம் ஆண்டு ஜூனில் மேகவெடிப்பால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு 5,700-க்கும் மேற்பட்டோர் பலியானது மிகப்பெரும் சோகம். 2021 பிப்ரவரியில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டு தபோவன் அணையில் கட்டப்பட்டு வந்த விஷ்ணுகாட் நீர்மின் நிலையம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 83 பேர் இறந்தனர்.
  • இவ்வளவு இயற்கைப் பேரிடர்களை சந்தித்தாலும் கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தப் பின்னணியில், பத்ரிநாத்ஹேம்குண்ட்சாஹிப் போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கும், சுற்றுலாத் தலத்துக்கும் நுழைவாயிலாக உள்ள ஜோஷிமட் நகரில் பல ஆண்டுகளாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் இப்போது பெரும் இன்னலை அந்தப் பகுதி சந்தித்து வருகிறது.
  • நாட்டின் நான்கு மூலைகளில் ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களில் ஒன்று ஜோஷிமட் நகரில் உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அந்த ஜோஷிமட் நகரம் புதையக்கூடிய அபாயத்தை சந்தித்துவருகிறது.
  • கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஜோஷிமட் நகரில் 16,709 பேர் வசிக்கின்றனர். இங்கு 4,500-க்கும் மேற்பட்ட  வீடுகளும், கடைகளும் உள்ளன. கடந்த சில வாரங்களாக 610-க்கும் மேற்பட்ட கட்டடங்களில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அச்சம் அடைந்த மக்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு நேரங்களில் சாலைகளில் தஞ்சம் அடைகின்றனர். ஆனால், சாலைகளும் பாதுகாப்பானதாக இல்லை. சில சாலைகளிலும்கூட பாளம்பாளமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நகரே புதையுண்டுவிடக்கூடும் என்ற நிலை இப்போது உருவாகி உள்ளது. இப்போது விழித்துக்கொண்ட மாநில அரசு, இந்த நகரத்தை நிலச்சரிவு - புதைவு மண்டலமாக அறிவித்துள்ளது.
  • ஜோஷிமட் நகரில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள கர்ணபிரயாகை நகரிலும் கடந்த சில நாள்களில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
  • ரூ.12,000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் "சார்தாம்' சாலையான ஜோஷிமட் - ஒüலி சாலைப் பணிகளுக்காகவும், தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் நிலையப் பணிகளுக்காகவும் மலைப் பிரதேசம் வரையறை இல்லாமல் குடையப்படுவதே இன்றைய நிலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டி ஜோஷிமட் நகர பொதுமக்கள் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக "மறு உத்தரவு வரும் வரை' இந்தத் திட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
  • கடந்த 2019-இல் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு இந்த சாலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைத்தது. ஆனால், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சாலைத் திட்டத்துக்கு கடந்த மே 2022-இல் அனுமதி அளிக்கப்பட்டது.
  • அசுர வேகத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜோஷிமட் நகரம் புதையும் நிலை உருவாகும் என்று 1964-ஆம் ஆண்டிலேயே கர்வால் மாவட்ட ஆட்சியர் எம்.சி. மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட 18 பேர் கொண்ட குழு எச்சரித்தது. அப்போது முதல் 2022 வரை அரசுகளால் அமைக்கப்பட்ட குழுக்கள் எல்லாமே இது போன்ற பரிந்துரைகளையே அளித்தன. ஆனால், அந்த அறிக்கைகள் வழக்கம்போல குப்பைத்தொட்டிக்குச் சென்றன.
  • இந்த நகரத்துக்கு அருகில் உள்ள, உலகப் புகழ் பெற்ற பத்ரிநாத் நகரத்தில் உள்ள கோயிலின் தலைமை அர்ச்சகர் புவன் சந்திர உனியால், "ஜோஷிமட் நகரம் மரணத்தின் விளிம்பில் உள்ளது. இந்த செய்தியை நாடு முழுவதும் கொண்டு செல்லுங்கள்' என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • இது ஏதோ நாட்டின் ஒரு பகுதியில் நடைபெறும் விதிவிலக்கான சம்பவம் என்று கருதிவிட வேண்டாம். நமது அண்டை மாநிலமான கேரளத்தில் மூணாற்றில் நிலச்சரிவு அடிக்கடி ஏற்படுவதைக் கண்டு வருகிறோம். 2020-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் புதையுண்டு 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
  • தமிழ்நாட்டிலும் உதகை, குன்னூர், வால்பாறை, ஏற்காடு, கொடைக்கானல், ஏலகிரி, மேகமலை, கொல்லிமலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் விதிகளை மீறி கட்டடங்கள் புற்றீசல்போல முளைத்துவருகின்றன. குறுகிய கால,சட்டத்துக்குப் புறம்பான "வருமானத்துக்காக' உள்ளூர் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதற்குத் துணைபோகின்றனர்.
  • இயற்கை அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், சுயநலத்தின் காரணமாக இயற்கையின் எச்சரிக்கையை நாம் உதாசீனப்படுத்தினால் அது நம்மை அழித்துவிடும் என்பதைத்தான் ஜோஷிமட், மூணாறு சம்பவங்கள் உணர்த்துகின்றன.

நன்றி: தினமணி (10 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்