TNPSC Thervupettagam

இயற்கை விவசாயம்தான் இலங்கையின் வீழ்ச்சிக்குக் காரணமா

April 21 , 2022 838 days 397 0
  • அமெரிக்கரான டெட் நார்தௌஸ், ‘தி பிரேக்த்ரூ இன்ஸ்டிடியூட்’ அமைப்பின் இயக்குநர். 1966இல் பிறந்த இவர் பல நூல்களை எழுதியிருக்கிறார். மைக்கேல் ஷெல்லன்பர்கருடன் இணைந்து 2003இல் இந்நிறுவனத்தை நிறுவினார்.
  • சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முக்கியம் என்று பேசும் அதேசமயம், ‘சுற்றுச்சூழலியலாளர்கள் அச்சுறுத்துகிறபடி உலகம் அவ்வளவு சீக்கிரம் அழிந்தெல்லாம் போய்விடாது!’ என்றும் பேசுபவர். இயற்கை வளங்களை நவீனத் தொழில்நுட்பங்கள் உதவியுடன் அளவோடு பயன்படுத்தி வளமாக வாழலாம் என்கிறவர். அணுசக்தியையும் நகரமயமாக்கலையும் இணைத்து வளம் பெற முடியும் என்றும்கூட பேசுபவர். அவருடைய பல கருத்துகளைச் சுற்றுச்சூழலியல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
  • இத்தகு சூழலில் சமீபத்தில் வெவ்வேறு இதழ்களுக்கு அளித்த பேட்டியில், இலங்கைச் சூழலையும்கூடப் பேசியிருக்கிறார். டெட் நார்தௌஸ் பேசும் பல விஷயங்கள் தமிழ்நாட்டோடும் பொருத்திப் பார்க்கக் கூடியவைதான் என்பதால், அவருடைய பேட்டிகளிலிருந்து தொகுக்கப்பட்ட விஷயங்களை இங்கே நாம் பார்க்கலாம்.

பருவநிலை மாற்றத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

  • பருவநிலை மாற்றம் தொடர்பான இப்போதைய கொள்கை யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் கடுமையாக இருப்பதால் அதில் மாற்றம் அவசியம். தூய்மையான ஆற்றலைப் பெற உயர் தொழில்நுட்பங்களில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். தொழில்நுட்பங்களில் அதிகம் முதலீடு செய்வதால் சுற்றுச்சூழல் தரம் மேம்படுவதுடன் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்; மக்களுடைய வாழ்க்கைத் தரமும் அதிகரிக்கும்.

இயற்கை விவசாயம் நஷ்டம்தான் தருமா?

  • அப்படியெல்லாம் சொல்ல முடியாது. இயற்கை விவசாயத்தைப் பற்றிப் பேசும்போது நீங்கள் அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், அது ஒரு விசேஷமான விஷயம். பணக்கார நாடுகளில் இயற்கை விவசாய சாகுபடி லாபகரமானதாக இருக்கலாம்; காரணம், தங்களுடைய விளைபொருள்களுக்கு அதிக விலை வைத்து, வாங்க முடிந்த பணக்காரர்களுக்கு அவர்களால் எளிதில் விற்றுவிட முடியும். இதற்காகத் தனிச் சந்தையை உருவாக்கிவிடவும் முடியும். எல்லா இடங்களிலும் அது சாத்தியம் இல்லை.

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

  • ரசாயன உரம், பூச்சிகொல்லிகள் போடாமல் பயிர் சாகுபடி செய்வது என்பது செலவு பிடிக்கும் வேலை. அதோடு விளைச்சலும் கொஞ்சம் குறைவாகவே வரும். ‘இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது, ரசாயன உரம், பூச்சிகொல்லிகள் போடப்படுவதில்லை, எனவே இதில் நஞ்சு கலப்பதில்லை; ஆகையால் விலை அதிகம்’ என்று நீங்கள் கூறி விற்றால் அதற்கேற்ப அதிக விலை கொடுக்க பணக்காரர்களால் முடியும். இதையே நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மேற்கொள்ள ஆரம்பித்தால், பெரும் நாசமே உண்டாகும்.

எப்படிச் சொல்கிறீர்கள்?

  • இயற்கை விவசாயத்தில் உற்பத்தியாகிற பொருட்களை எல்லோராலும் அதிக விலை கொடுத்து வாங்க முடியாது. விளைச்சல் குறைவாகிவிடும்போது, எல்லோருமே இயற்கை விவசாயம் மூலம்தான் சாகுபடி செய்கிறார்கள் என்பதால் சந்தையில் விலையையும் அதிகப்படுத்தி விற்றுவிட முடியாது. எனவே முதலில் சாகுபடியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். சந்தைக்கு வரும் உணவு தானியங்களின் அளவும் குறையும். இது பிறகு விலையுயர்வுக்கும் பற்றாக்குறைக்கும் வழிவகுக்கும். விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள், மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

விவசாயிகள் இதனால் எப்படிப் பாதிப்புள்ளாவார்கள்?

  • எப்படியென்றால், இந்த விலையுயர்வு சாகுபடியாளர்களுக்குப் பயன் தராது. அப்புறம் இதனால் சுற்றுச்சூழலுமே கெடும்! வழக்கமான உரம் – பூச்சிகொல்லி சாகுபடியைவிட புதிய முறையும் தன் பங்குக்கு சூழலைக் கெடுக்கும். பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாடு, நைட்ரஜன் வெளியேற்றம், நிலப் பயன்பாடு காரணமாக சூழல் மேலும் கெடும். சாகுபடி குறைந்தால் ஏற்றுமதியும் குறையும்.

இலங்கை நிலைமையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

  • கரோனா பெருந்தொற்றால் நாடு மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இயற்கை விவசாய சாகுபடி முறைகளுக்கு மாறுமாறு அனைவரையும் கட்டாயப்படுத்தியது இலங்கையில் பேரழிவுக்கே இட்டுச் சென்றது. கோத்தபய ராஜபட்ச சற்றே நிதானத்துடன் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க உத்தரவிட்டிருந்தால் மிகக் குறுகிய காலத்தில் இந்த அளவுக்குப் பேரழிவு ஏற்பட்டிருக்காது. முழுக்க மாறுவதற்குப் பதிலாக, பெருமளவு ரசாயன உரப் பயன்பாட்டையும் தொடர்ந்து அனுமதித்திருந்தால் சாகுபடி சரிந்திருக்காது. செயற்கை ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தால் – அதை வேகமாகச் செய்தாலும், நிதானமாகச் செய்தாலும் – விளைச்சலும் ஏற்றுமதியும் நிச்சயம் குறையும்.

சரி, மாறிவரும் சுற்றுச்சூழல் கேடுகளுக்கு மத்தியில் இந்த விஷயங்களை எப்படி அணுகுவது?

  • நிதான அணுகுமுறைதான் நமக்குத் தேவை. கச்சா பெட்ரோலிய எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் பயன்பாட்டை நம்மால் ஒரேயடியாகக் குறைக்கவோ கைவிடவோ முடியாது. அப்படிச் செய்வதற்கு நிறைய காலம் பிடிக்கும். அவ்வாறு செய்து முடிக்கும்போது ஆற்றலுக்காக நாம் அதிகம் செலவிட வேண்டிய நிலையில்தான் இருப்போம்.
  • இப்போது உரங்களின் விலை அதிகரிப்புக்குக் காரணம் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துவிட்டதுதான். மின்சாரம் தயாரிக்கவும் வாகனங்களை இயக்கவும் பெட்ரோல் – டீசல், இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும் என்ற நிலையை உருவாக்கினாலும்கூட சிமென்ட், செயற்கை உரம், உருக்கு ஆகியவற்றைத் தயாரிக்க இந்த ஆற்றல் வளங்கள் அவசியம்.

ஆனால், ரசாயன உரங்கள் கொடியவை என்கிறார்களே?

  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மானிய விஞ்ஞானிகள் பிரிட்ஸ் ஹேபர் – கார்ல் பாஷ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய அதிக அழுத்தம் மூலம் வேதி விளைவை ஏற்படுத்தி அம்மோனியா தயாரிக்கும் நடைமுறையால்தான் இன்று உலகின் சரிபாதி மக்கள் பட்டினி கிடக்காமல் வயிறார உணவு தானியங்களைச் சாப்பிட முடிகிறது. இந்தத் தயாரிப்புச் செலவைக் குறைக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் அல்லது மண்ணில் நேரடியாக நைட்ரஜனை செறிவூட்ட மரபணு மாற்றப்பட்ட நுண்ணுயிரிகளைப் பயன்படுத்த வழிகாண வேண்டும்.
  • பருவநிலை மாற்றம் மற்றும் சூழல் கேடு நிச்சயமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை. புவி வெப்பமடைவதைக் குறைப்பதும் அவசியம். ஆனால், இதோ உலகம் அழியும் காலம் வந்துவிட்டது என்று அனைவரையும் பீதியில் ஆழ்த்துவதும், இன்ன தேதிக்குள் பெட்ரோல்-டீசல் பயன்பாட்டைக் கைவிட வேண்டும் என்றெல்லாம் கெடு நிர்ணயிப்பதும் வேண்டாத வேலை. இவற்றுக்குப் பின்னால் அறிவியலைவிட அரசியல்தான் அதிகம் இருக்கிறது. இப்போதே நவீனத் தொழில்நுட்பங்களாலும் மாற்று உற்பத்தி முறைகளாலும் காற்றில் நஞ்சு கலப்பது குறைந்துகொண்டிருக்கிறது. தூய்மையான சூழலும் உருவாகிறது. இப்படிச் சொல்வதற்காக மானிடர்களைக் கொத்து கொத்தாக கொல்ல நினைக்கும் கொலைகாரன் என்று சூழலியலாளர்கள் என்னைச் சாடியுள்ளனர். இது அபத்தம்.

சரி, சுற்றுச்சூழலை எப்படித்தான் ஆக்கபூர்வமாக அணுகுவது?

  • பருவநிலை மாற்றம் அதிகமாகாமல் இருக்க, புவியின் வெப்பத்தைக் குறைக்க உடனே செயல்பட்டாக வேண்டும், காலம் வேகமாகக் கடந்துகொண்டிருக்கிறது என்று உலக நாடுகளுக்கு இடையிலான அரசுகளின் கூட்டறிக்கை எச்சரிக்கிறது. இந்த எச்சரிக்கைகளும் இலக்குகளும் தான்தோன்றித்தனமானவை, அறிவியல் அடிப்படையிலானவை அல்ல. புவி வெப்பம் அதிகமானாலும்கூட மக்களை உயிரோடு வாழ வைப்பதற்கான தொழில்நுட்பம் கிடைத்துவிட்டால் கவலைப்பட ஏதும் இல்லை.
  • புவி வெப்பம் குறைந்து, அதே வேளையில் மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகி, நாட்டில் பசி – பட்டினி – பஞ்சம் தலைவிரித்தாடினால் என்ன பயன்? மக்களை வாழவைக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கண்டுபிடித்துவிட்டால் இந்த எச்சரிக்கைகள் தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை. 
  • பனிப்போர் காலத்தில் உலக மக்கள் கரிப்புகை வெளிப்பாட்டைக் குறைக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினர். இதனால் சூழல் தூய்மை அடைந்தது. இப்போது உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்திவரும் தாக்குதலால் கச்சா பெட்ரோலிய எண்ணெய், இயற்கை எரிவாயுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் உலகம் இதற்கும் ஒரு மாற்று வழியைக் கண்டுபிடிக்கும்.
  • புவி அரசியலும் எரிசக்தித் தேவைகளும்தான் நாடுகளை சிந்திக்க வைக்கின்றன. பருவநிலை மாற்றம் என்ற தலைப்பு பேச்சுக் கச்சேரிக்குத்தான் அதிகம் பயன்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை அதிகம் பயன்படுத்துவது, புதுப்பிக்க முடியாத புதைபடிவ எரிபொருளைத் திட்டமிட்டு சிக்கனமாகப் பயன்படுத்துவது, புவியரசியல் சார்ந்த கொள்கைகளில் கவனமாக இருப்பது ஆகியவற்றின் மூலம்தான் நாடுகள் பருவநிலை மாற்ற பாதிப்புகளைக் குறைக்க முடியும்.

நன்றி: அருஞ்சொல் (21 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்