TNPSC Thervupettagam

இயற்கை விவசாயம் ஏற்றம் பெறட்டும்

February 20 , 2022 897 days 432 0
  • இந்திய அரசு 2005-இல் இயற்கை வேளாண் கொள்கையை அறிமுகப்படுத்தியது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின்படி 2020-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி சுமார் 27.8 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் மட்டுமே இயற்கை விவசாயம் நடைபெறுகிறது.
  • நாட்டிலுள்ள 1401 லட்சம் ஹெக்டேர் நிகர விவசாயப் பரப்பில் இது இரண்டு சதவீதமாகும். 7.6 லட்சம் ஹெக்டேர் இயற்கை விவசாய பரப்பளவைக் கொண்ட மத்திய பிரதேசம் இயற்கை விவசாயம் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முழுமையாக இயற்கை விவசாயத்திற்கு மாறிய ஒரே இந்திய மாநிலம் சிக்கிம் மட்டுமே.
  • பெரும்பாலான இந்திய மாநிலங்கள் விவசாய நிலத்தில் ஒரு சிறிய பரப்பினை மட்டுமே இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றன. இந்தியாவில் அதிக பரப்பினில் இயற்கை விவசாயம் செய்யும்  முதல் மூன்று மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரம் ஆகியவற்றின் மொத்த விவசாய பரப்பளவில் முறையே 4.9%, 2% மற்றும் 1.6% நிலங்களில் மட்டுமே இயற்கை விவசாயம் நடைபெறுகிறது.
  • இந்தியாவில் குறைந்த அளவிலேயே இயற்கை வேளாண்மை நடைபெறும் போதிலும் இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்கள் இயற்கை விவசாயம் தொடர்பான கொள்கை அல்லது திட்டத்தினை கொண்டிருக்கின்றன. ஆந்திரம், ஹிமாசல பிரதேசம், கேரளம், உத்தரகண்ட், மிúôரம், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள் முழுமையாக இயற்கை விவசாயத்திற்கு மாறும் முனைப்புடன் பணியாற்றி வருகின்றன.
  • தமிழ்நாடு, குஜராத், தெலங்கானா மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மட்டுமே வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கரிம சான்றிதழ் முகமைகளைக் கொண்டுள்ளன.
  • இந்தியாவில் உள்ள 27.8 லட்சம் ஹெக்டேர் இயற்கை வேளாண் நிலத்தில் 19.4 லட்சம் ஹெக்டேர் நிலம் இயற்கை வேளாண் பொருட்கள் உற்பத்திக்கான தேசிய திட்டத்தின் கீழும் 5.9 லட்சம் ஹெக்டேர் நிலம் "பரம்பராகத் க்ரிஷி விகாஸ் யோஜனா' திட்டத்தின் கீழும்  0.7 லட்சம் ஹெக்டேர் நிலம் வடகிழக்கு பிராந்தியங்களுக்கான "மிஷன் ஆர்கானிக் வேல்யூ செயின் டெவலப்மென்ட்' கீழும் 1.7 லட்சம் ஹெக்டேர் நிலம் மாநில திட்டங்களின் கீழும் உள்ளன.
  • இயற்கை வேளாண் பரப்பு மிகக் குறைவாக இருந்தாலும் இயற்கைவழி விவசாயம் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2020-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவில் 19 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர். இது 14.6 கோடி பேரில் வெறும் 1.3 சதவீதமாகும்.
  • ஒரு விவசாயி தனது நிலத்தை ரசாயன அடிப்படையிலான விவசாயத்திலிருந்து இயற்கை வேளாண்மைக்கு மாறும் போது மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பிரிட்டன் போன்ற பல நாடுகள் இயற்கை விவசாயத்திற்கு மாறும்போது ஏற்படும் மகசூல் இழப்பை ஈடுசெய்ய விவசாயிக்கான மானியங்களை வழங்க அறிவியல் ரீதியாக செயல் திட்டங்களை வடிவமைத்துள்ளன. ஆனால், இந்தியாவில் அத்தகைய மானியம் வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான மாநிலங்களில் இயற்கை விவசாயத்திற்கென 2%-க்கும் குறைவாகவே  நிதி ஒதுக்கப்படுகிறது.
  • "பரம்பராகத் க்ரிஷி விகாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் செயல்படும் இயற்கை வழி விவசாயம் செய்யும் விவசாயிகள் பங்கேற்பு உத்தரவாத அமைப்பு மூலம் மானியம் பெறும்போது அவர்கள் தங்கள் வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பு உத்தரவாத அமைப்பினை அங்கீகரித்து ஏற்றுமதிக்கு அனுமதிக்கும் போதிலும் நமது நாட்டு இயற்கை வழி விவசாயிகள் ஏற்றுமதி செய்ய அனுமதியில்லை.
  • நல்ல தரமான இயற்கை உரத்திற்கான பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இது மகசூல் இழப்பின் அபாயத்தை அதிகரிக்கிறது. சந்தையில் இயற்கை உரத்தின் பெயரில் பல போலிகள் உள்ளன. அதேபோல், நல்ல தரமான இயற்கை விதைகளுக்கும் தட்டுப்பாடு உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு வகையான பயிர்கள் பூச்சித் தாக்குதல் மற்றும் மண்ணின் தரம் தொடர்பான பல்வேறு பிராந்தியரீதியான சிக்கல்களை எதிர்கொள்கின்றன. எனவே இயற்கை உரம், பயிர் மற்றும் பிராந்தியம் சார்ந்த ஆராய்ச்சி தேவை.
  • இயற்கை விளைபொருட்களுக்கான வளர்ச்சியடையாத விநியோகச் சங்கிலி காரணமாக மலைப்பகுதிகள் மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் உள்ள  சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் வேளாண் பொருட்களை சந்தைக்கு அனுப்புவதில் சிரமம் உள்ளது. அயல் மாசுபாட்டினை தவிர்க்க இயற்கை வேளாண் பொருட்களை வழக்கமான தயாரிப்புகளுடன் கலக்காமல் தனியாக சேமிக்க வேண்டிய சூழலில் குளிர்சாதன வாகனங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளின் பற்றாக்குறை இப்பகுதிகளில் வேளாண் பொருட்கள் வீணாவதற்கு வழிவகுக்கிறது.
  • நிலையான சந்தை இல்லாதபோது இடைத்தரகர்கள் லாபத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்ள நேரிடும். கண்காட்சிகளை ஒருங்கிணைத்து அதன் மூலம் இயற்கை வேளாண் பொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அரசாங்கம் உதவும் அதே வேளை விவசாயிகளுக்கு நிலையான விற்பனை சந்தையினை ஏற்படுத்தவேண்டும்.
  • உள்நாட்டு சந்தை மற்றும் இறக்குமதிக்கான இயற்கை விவசாயம் குறித்த கொள்கை இல்லாதது இயற்கை வழி விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். இதனை தவிர்க்க அந்தந்தப் பகுதி விவசாயிகளைக் கொண்டு அவர்களுக்கான விவசாயக் கொள்கைகளை அறிவியல் ரீதியில் உருவாக்க வேண்டும்.

நன்றி: தினமணி (20 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்