TNPSC Thervupettagam

இயற்கை வேளாண்மை - என் அனுபவங்கள்

December 30 , 2023 383 days 246 0
  • புதுக்கோட்டை - கீரனூர் பகுதியில் 'குடும்பம் 'லீஸா" என்ற அமைப்புகளை உருவாக்கி இயற்கை வேளாண்மையில் இளைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பயிற்சி தந்தவர் திரு நம்மாழ்வார் அவர்கள். நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் இயற்கையையும் மக்களையும் அழித்துவரும் இன்றைய சூழலில், இயற்கை வேளாண்மையில் சில அற்புதங்களை அவர் சாதித்து வருகிறார். அண்மையில் கோவைக்கு திரு நம்மாழ்வார் வந்தபோது அவரிடம் ஞானி எழுப்பிய கேள்விகளுக்கு அவர் விரிவாகப் பதில் தந்தார். அவரது கருத்துகள் கீழ்வரும் கட்டுரையில் தொகுத்துத் தரப்படுகின்றன.
  • தஞ்சை மாவட்டத்தில் இளங்காடு என்ற ஊரில் ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் ஊருக்கு ஐந்தாவது கிலோ மீட்டரில் திருக்காட்டுப்பள்ளியும் பத்தாவது கிலோ மீட்டரில் கல்லணையும் இருக்கின்றன. அண்ணாமலைநகர் வேளண்மைக்  கல்லூரியில் 59-63-ல் படித்தேன். இந்தக் காலத்தில் பழைய வேளாண்மைமுறை மறைந்து பசுமைப்புரட்சி தொடங்கியது. பள்ளிப்படிப்பின் போது காலையிலும் மாலையிலும் விவசாய வேலையில் ஈடுபட்டேன். நாங்கள் செய்தது இயற்கை வேளாண்மை
  • கல்லூரியில் பசுமைப்புரட்சியைப் பற்றி கற்றுக் கொடுத்தார்கள் இதற்கு அக்காலத்தில் "தீவிர சாகுபடித் திட்டம் என்பது பெயர். இந்தியாவில் 7 மாநிலங்கள் - ஒவ்வொன்றிலும் ஒரு மாவட்டத்தைத் தேர்ந்து எடுத்து இந்த முன்னோடித் திட்டத்தை செயல்படுத்தினார்கள். ஃபோர்டு நிறுவனத்தின் உதவியோடு தண்ணீர் பாயும் நிலத்தில் இதைச் செயல்படுத்தினார்கள். ஜப்பானின் குள்ளநெல் ரகங்களை, புதிய உரவகைகளை அறிமுகம் செய்தார்கள். இதில் பெரியவெற்றி கிடைத்ததாக அறிவித்து திட்டத்தை இந்தியா முழுவதிலும் செயல்படுத்த விரும்பினார்கள். பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்ட, 69-ல் அறிமுகமான .ஆர்.8 நெல்லை மக்கள் மறுத்து ஒதுக்கினார்கள். காரணம் ருசியில்லை, மேலும் பூச்சித் தாக்குதலும் அதிகம். அப்போது மணிலாவில் உள்ள IRRI நிறுவனத்திலிருந்து வந்தன .ஆர்.20 .ஆர்.50 இவைதான் இன்று புழக்கத்திலுள்ளன. 74 ரகங்களை உற்பத்தி செய்தாலும் 2 ரகங்கள்தான் வெற்றி பெற்றன. இது அவர்களுக்குப் பெருந்தோல்வி.
  • படித்த காலத்தில் இந்த விஞ்ஞானம்தான் மக்களுக்கு நன்மை செய்யும் என்று நம்பினேன். படித்து முடித்தபோது கோவில் பட்டியில் ஓர் ஆய்வுப் பண்ணையில் வேலை கிடைத்தது. அது ஆங்கிலேயர் ஏற்படுத்திய ஆய்வுப்பண்ணை. 158 ஏக்கர் அளவில் இருந்த பண்ணையில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. ஆறாண்டுகள் (69 வரை ) அங்கு பணிபுரிந்தேன் .
  • மூன்று வருடத்திலேயே அங்கு நடைபெற்ற ஆய்வுகளால் விவசாயிகளுக்குப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். அங்கு நடைபெற்ற ஆய்வுகளுக்கெல்லாம் தேவையான அறிவுரைகள் டெல்லியிலிருந்த இந்திய வேளாண்மை நிறுவனத்திலிருந்து வந்தன. உண்மையில் ஃபோர்டு நிறுவனத்தின் ஆலோசனைகள் மற்றும் ராக்ஃபில்லர் நிறுவனத்தின் ஆலோசனைகள்தான் டெல்லி வழியாக இங்கு வந்தன. ஒட்டுரகங்கள், இட வேண்டிய உரங்கள் முதலிய எல்லாவற்றைப் பற்றியும் குறிப்புகள் இங்கு வந்தன. இந்த ஒட்டுரக வகைகளில் மலட்டுத்தன்மை அடங்கியிருந்தது. இவற்றை மீண்டும் விதைத்தால் அவை முளைக்கமாட்டா. முளைத்தால் கதிர் நீட்டாது. விவசாயி தன்னை இழப்பதற்கான முதல்படி இது.
  • விவசாய நிலத்தில் விதைகளோடு பூச்சி நஞ்சுகளையும் சேர்த்து இடவேண்டும் மானாவாரி விவசாயிகளுக்கு இவற்றை யெல்லாம் செய்வது சாத்தியமில்லை. காரணம் இவர்களால் அதிகம் முதலீடு செய்ய முடியாது. என்னதான் ஆய்வுகள் நடைபெற்றாலும் இந்த ஆய்வுகள் எல்லாம் ஆய்வுப் பண்ணையை விட்டு வெளியே செல்லவில்லை. பண்ணை மேலாளராக இருந்த காரணத்தால் பருத்தி மட்டுமல்லாமல் அனைத்துப் பயிர் சாகுபடிகளையும் மேற்பார்வை செய்து வந்தேன். எல்லாவற்றிலும் நஷ்டக்கணக்கு எழுத நேர்ந்தது. இடுபொருள் கூடிக்கொண்டே செல்லுமளவிற்கு விளைபொருள் இல்லை.
  • இந்த ஆய்வுகளால் பயன் இல்லை என்று ஆலோசனைக் கூட்டத்தில் சொன்னேன். 60 ஆண்டுகள் தொகுத்த மழை விபரங்கள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை மழை தோல்வியடைவதைக் காட்டின. எந்த ஆண்டு மழை பெய்யாது என்பதை முன்கூட்டி அறிய முடியாது. ஆகவே மானாவாரி விவசாயம் ஒரு சூதாட்டம். மழை பெறுவது உறுதி என்ற நிலையில்தான் விவசாயி பண்டம் பாத்திரங்களை அடகு வைத்து இடுபொருளை வாங்கி நிலத்தில் இடமுடியும். கையில் முதலீடு உள்ளவர்கள்தான் ஆய்வுப்பண்ணையின் அறிவுரை அடிப்படையில் விவசாயம் செய்ய முடியும். இந்தக் கருத்தை ஆலோசனைக் கூட்டத்தில் முதலில் எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். இந்த அறிக்கையை மேலே அனுப்பினால் பண்ணையை இழுத்து மூடிவிடுவார்கள் என்றார்கள். வெளியில் வருவது பற்றிச் சிந்தித்தேன்.
  • நோபல்பரிசு பெற்றவர் தொடங்கிய "அமைதித் தீவு என்ற நிறுவனம் அப்பொழுது தமிழகத்திற்கு அறிமுகமாயிற்று. இந்த நிறுவனத்தை அமைத்தவர் R.P. டொமினிக் பியர் என்பவர். இவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத்துறவி. இரண்டாம் உலகப் போரில் படுகாயமடைந்தவர்கள் 49 வரை கவனிப்பாரற்றுக் கிடந்தார்கள். இவர்களைக் குணப்படுத்த உதவி செய்ததோடு ஆப்பிரிக்காவில் பண்ணைகள் அமைத்து அங்கு இவர்களை பியர் குடியமர்த்தினார்.
  • வினோபாவே வழியாகத் தானமாகக் கிடைத்த நிலங்களில் போட்ட ஆழ்குழாய்க் கிணறுகள் ஒன்றிலும் தண்ணீர் கிடைக்க வில்லை. காரணம், அவை கரட்டு நிலங்கள். பிறகு சிறுவிவசாயிகளுக்கு ஆழ்குழாய்க் கிணறுகள் போட்டுக் கொடுத்தோம் நீர் இறைப்பு இயந்திரங்களுக்கும் ஏற்பாடு செய்தோம் மீன் பண்ணை அமைத்தோம். விவசாயிகளுக்கு கடைகளையும் அமைத்துக் கொடுத்தோம். இவற்றின் பயனாக சிறு விவசாயிகளின் வாழ்க்கையில் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் ஏற்பட்டன. விவசாயிகளுக்கென தோண்டித்தந்த ஆழ்குழாய்க் கிணறுகள், பிறகு அரசின் கூட்டுறவு அமைப்புகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. நாளடைவில் இந்தக் கிணறுகளின் பயன் பெரிய விவசாயிகளுக்குப் போய்ச் சேர்ந்தது.
  • அமைதி நிறுவன பெல்ஜிய பணியாளர்கள் தன்னாட்டுக்குத் திரும்ப நேர்ந்தது. திரும்புவதற்கு முன் அவர்கள் மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையைக் கேட்டார்கள். ஆட்சியர் ஓர் ஆலோசனைக் குழுவை அமைத்தார். இந்தக் குழுவில் இடம் பெற்றவர்கள் ஒரு பெரிய பண்ணையார் மற்றும் இரண்டு வக்கீல்கள், ஒரு பஸ் முதலாளி, உள்ளூர் அரசியல்வாதிகளோடு இவர்கள் நெருக்கமாக உறவு கொண்டிருந்தனர். இவர்கள் எதிர்பார்த்த சந்தர்ப்பம் இவர்களுக்கு தானாக வந்து சேர்ந்தது. சிறுநில விவசாயிகள் "அமைதித் தீவு நிறுவன செயல்பாட்டின் விளைவாக தமக்குள் வளர்த்துக் கொண்டிருந்த சுயமரியாதை உணர்வை அழிப்பதற்கான சந்தர்ப்பமாக இது அமைந்தது. மனச்சோர்வோடு நான் அங்கிருந்து வெளியேறினேன். பிறகு தருமபுரிக்கு போய்ச் சேர்ந்தேன்.
  • தருமபுரி ஒசூர் பகுதியில் திருச்சபையிலிருந்து விலகிவந்த ஃபிரான்சிஸ் என்று கிறிஸ்துவச் சகோதரர் தொடக்கத்தில் குழந்தைகளுக்குக் கல்வியும் பெரியவர்களுக்கு முதலுதவிகளும். என்று சேவை செய்து கொண்டிருந்தார். இந்தப் பகுதியில் விவசாயத்தில் ஏதாவது செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினார். வேறு சில இளைஞர்களும் அங்கு போய்ச் சேர்ந்தோம். அருகிலிருந்த கர்நாடக மாநிலத்தில் ஒரு துறவியார் செய்த பணியைப் பார்வையிட்டோம். நிலத்தை அறுத்தோடும் பள்ளங்களுக்குக் குறுக்கே சிறுசிறு அணைகளை அவர் அமைத்தார். தண்ணீர் தேங்கி நின்று அருகிலுள்ள கிணறுகளில் நீர் சுரக்கிறது. இரண்டு வருடம் இதே போல் நாங்களும் செய்தோம்.
  • ஒசூர் பகுதியில் பணியாற்றியபோது ஒரு பிரச்சினை எழுந்தது. வெள்ளத்தில் வந்த ஒரு மரக்கட்டையை இளைஞர் மன்றத்தினர் தம் வேலைக்காக எடுத்துக் கொண்டனர். ஊருக்குள் வந்த வனத்துறை ஊழியர் கேட்ட லஞ்சத்தை இவர்கள் கொடுக்க மறுத்தார்கள். திரும்பிச் சென்ற ஊழியரும் பிற அதிகாரிகளும் நண்பர்களும் ஒரு லாரியில் வந்து சேர்ந்தார்கள். லாரியிலிருந்து ஒரு கரிமூட்டையை இறக்கினார்கள். வனத்துறை அனுமதியின்றி காட்டிலிருந்து மரங்களை எரித்து கரி சேகரித்து வந்ததாக இளைஞர் மன்றத்தினரை குற்றஞ்சாட்டுவது அவர்கள் நோக்கம். ஒவ்வொரு நாளும் பல லாரிகளில் கரிமூட்டைகள் காட்டிலிருந்து வெளியே செல்லும். ஒரு லாரிக்கு ரூபாய் 300 என்பது இவர்கள் பெற்றுக் கொள்ளும் லஞ்சம். ஊருக்குள் வந்த வனத்துறையினர் மக்களைத் தாறுமாறாக அடித்தார்கள். இளைஞர் மன்றத்தினர் கோயில்மணியை முழக்கினர். பெரும் திரளான மக்கள் வந்து வனத்துறையினரை வளைத்துக் கொண்டார்கள். கடைசியாக ஊருக்குள் வந்தது தவறு என்று எழுதிக் கொடுத்துவிட்டுத் திரும்பினார்கள். திரும்பிச் சென்றவர்கள் தங்களைக் காயப்படுத்திக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள். இளைஞர் மன்றத்தினரை நாங்கள்தான் தூண்டி விடுகிறோம் என்பது அவர்கள் குற்றச்சாட்டு. இதன் காரணமாக அந்தப் பகுதியிலிருந்து நாங்கள் வெளியேறினோம்.
  • அதன்பிறகு எங்கள் சொந்த ஊர் உள்ளடங்கிய தஞ்சைப்பகுதியில் எங்கள் பணிகளை நாங்கள் தொடங்கினோம். விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்தோம். 83-ல் ஒரே வருடத்தில் வறட்சியும் அடுத்து வெள்ளமும் ஏற்பட்டன. விவசாயமோ கால்நடை வளர்ப்போ இந்தச் சூழ்நிலையில் சாத்தியமில்லை. சமூகநலக் காடுகள் பற்றிச் சிந்தித்தோம் இந்தத் திட்டம் அப்போதுதான் தமிழ்நாட்டில் செயல்படத் தொடங்கியிருந்தது. அரசின் திட்டத்துக்கான குறிக்கோள்கள் சிறப்பாகவே இருந்தன. நலக் காடுகள் என்ற பெயரில் தைல மரங்கள் அல்லது கருவேல மரங்களை நட்டார்கள் குளத்தில் கருவேல மரங்கள். தண்ணீரில்லாத இடத்தில் தைல மரங்கள் இவற்றால் பயனில்லை.
  • புதுக்கோட்டைப் பகுதி மக்கள் இன்னும் அதிக அளவில் ஏழைகள், அங்கு சென்றோம். 4 கிராமங்களில் குடிநீர்க் குளங்களை ஆழப்படுத்தினோம். மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அவர்களின் ஒத்துழைப்போடு கோயில் நிலங்களில் காடு வளர்க்கத் தொடங்கினோம். சமுதாயக் காடுகள் என்ற திட்டம் பயன்படாது. மைய அரசின் சார்பில் தரிசு நிலமேம்பட்டுக்கென வாரியம் அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தந்த நிதி உதவியைப் பயன்படுத்திக் கொண்டோம்.
  • இங்குதான் குடும்பம்" என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். தஞ்சை - புதுக்கோட்டைப் பகுதியில் தொடங்கிய "குடும்பம் இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக பணி செய்கிறது. மேய்ச்சல் மற்றும் தரிசு நிலங்களில் ஒருவகை மரத்தை மட்டும் பயிரிடுவதில்லை. எந்த மரங்கள் நமக்குப் பயன்படும்  எந்த மரம் நமது மண்ணில் பயிரிடலாம்? என்று கிராம மக்களிடமே கேட்டு அறிந்தோம். தைல மரம் பற்றி அவர்கள் யாரும் சொல்லவேயில்லை. சுமார் 50 வகையான மரங்களைப் பற்றிச் சொன்னார்கள். குறிப்பாக கரும்பொரசு - வண்டி மற்றும் மரவேலைகளுக்குப் பயன்படும். அடுத்து உசிலைமரம் - விறகு கால்நடைகளுக்குத் தீவனம், அரப்பு போன்றவற்றுக்கு இந்த மரம் பயன்படும். நிலத்தில் நைட்ரஜனைத் தங்க வைக்கும் சூபாபுல்- நிறைய இலை தரும். ஆடுமாடுகளுக்குப் பயன்படும். அடுத்து வேப்ப மரம் இன்னும் நிறைய மரங்கள். மரங்கள் மட்டுமல்லாமல் நிறைய செடிகொடிகள் மற்றும் புதர்கள் இந்தக்காடுகளில் இருக்கும். காடாக்குவது எங்கள் திட்டம் தோப்பாக்குவது அல்ல.
  • டிசம்பர் முதல் ஜூன் வரை மழையில்லை. ஆகவே மழை பெய்யும் காலத்தில் நிலத்தில் விழும் தண்ணீரை ஓடவிடாமல் தேக்கவேண்டும் சம உயர வரப்புகள் போட்டு தண்ணீரை நிறுத்தினால் தண்ணீர் நிலத்தினுள் இறங்கும். இது எங்கள் திட்டத்தின் முக்கிய அம்சம். ஏக்கருக்கு இவ்வளவு மரம் என்று நாங்கள் திட்டமிடவில்லை. பரவலாக மரங்களை வளர்த்ததால் தான் நாங்கள் வெற்றி பெறமுடிந்தது. இப்படி 375 ஏக்கர் நிலத்தில் காடு வளர்த்தோம். ஏழெட்டு கிராமங்களில் மக்கள் பெரிதும் ஒத்துழைத்தார்கள். இங்கெல்லாம் நல்ல வெற்றி கிடைத்தது. இரண்டொரு கிராமங்களில், ஊருக்கு அடங்காதவர்கள் ஆடு, மாடுகளை விட்டு காடுகளை அழித்து விடுவார்கள். என்னுடன் களப்பணி செய்தவர்கள் நான்கு பேர் மட்டும். மற்றபடி இளைஞர் மன்றத்தார் எப்போதும் உற்சாகமாக வேலை செய்வார்கள். மைய அரசின் நிதியை இளைஞர்கள் ஊதியமாகப் பெற்றார்கள்.
  • காடுவளர்ப்புத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுவதை 'சிடா' என்ற வெளிநாட்டு அமைப்பினர் பார்த்தார்கள். (ஸ்வீடன் சர்வ தேசிய வளர்ச்சி அமைப்பு) இந்தத் திட்டத்தைப் பரவலாக்க அவர்கள் விரும்பினார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஊர்ப் பொது நிலங்கள் இருக்கின்றன. இவை அளவில் குறைவாகத் தானிருக்கின்றன. தவிர இந்தப் பொதுநிலங்கள். ஊர்ப் பெரியமனிதர்கள் வசம் உள்ளன. இவற்றில் வளர்ச்சிப் பணி பெரிதாகப் பயன்படுவதில்லை. ஆகவே சிறு சிறு விவசாயிகள் மத்தியில் இந்தப் பணி செல்ல வேண்டும் விவசாயப் பணியோடு காடுவளர்ப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இப்படி நாங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தோம்.
  • 'விவசாயம் - மனிதன் -சூழல் என்ற இன்னொரு அமைப்பு புதுச்சேரியில் இருந்தது. அங்கு நான் சென்றேன். அங்குதான் இயற்கை வேளாண்மையை முறைப்படி திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். துண்டு துண்டாகச் செய்து பயனில்லை. ஒட்டு விதை அல்லது பூச்சிக்கொல்லி என்று ஒன்றிரண்டை நிறுத்தினால் போதாது. இயற்கையில் எல்லாமே ஒன்றோடொன்று நெருக்கமாக உறவு கொண்டுள்ளன. இதைப் புரிந்து கொள்ளவேண்டும் என் இளம் வயதில் என் சகோதரர்களோடும் பண்ணையாட்களோடும் நெருக்கமாக உறவு கொண்டிருந்ததெல்லாம் என் நினைவுக்கு வந்தன. எனக்குள் பெருத்த மகிழ்ச்சியேற்பட்டது. முதலில் செய்ய வேண்டியது பொட்டல் நிலத்தைக் காடாக்க வேண்டும் காட்டுக்குள் வெட்டவெளியாக இருக்கும் பகுதியை மட்டும் திருத்தி அதில் விவசாயம் செய்யவேண்டும். தாவரக் கழிவையெல்லாம் உரமாக்கிச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சில அணைகட்டி மழைத்தண்ணீரை நிலத்தில் இறக்க வேண்டும். முரட்டுப் பயிர்களை முதலில் உள்ளே சேர்க்க வேண்டும் பிறகு பயிர்ச்செடிகளை இணைக்க வேண்டும் இப்படிச் செய்தால் வேளாண்மையை வெற்றிகரமாகச் செய்ய முடியும்.
  • எனக்கு வந்த நம்பிக்கை மற்றவர்களுக்கும் வரவேண்டும். ஸ்வீடன்காரர்களைக் கேட்டோம். அவர்களின் நிறுவனத்தின் பெயர் "ஸ்வாலோஸ்" (வால் நீட்டமாக, கரிய நிறத்திலிருக்கும் குருவி ஸ்வாலோஸ். கொஞ்சம் கொஞ்சமாக இரை எடுத்துச் சென்று தன் குஞ்சுகளுக்குத் தரும் இந்தக் குருவி) அங்கங்கு கிடைக்கும் நிதியைத் திரட்டித் திரட்டி சிறுசிறு குழுக்களுக்கு அவர்கள் தந்து உதவுவார்கள். ’சிதாவோடு சேர்ந்து எங்களுக்கு உதவினார்கள்.
  • ஒடுகம்பட்டி என்ற இடத்தில் வெறும் 10 ஏக்கர் காட்டுநிலத்தை வாங்கினோம். அங்கு விவசாயம் என்றும் நடைபெற்றதில்லை.
  • ஒருகாலத்தில் அது காடாக இருந்து பிறகு அழிந்தது. மரங்களை எல்லாம் மக்கள் வெட்டியெடுத்துப் போனபிறகு பெரும் கற்கள்தான் மிஞ்சியிருந்தன. நாங்கள் 3 பேர் எங்கள் சம்பாத்தியத்தில் இந்த நிலத்தை 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினோம். நிலத்தை 'குடும்பம்' என்ற அமைப்புக்கு 20 ஆண்டுகளுக்கு ஒப்படைத்தோம். இதை ஒரு பயிற்சி மையமாக வளர்த்தெடுத்தோம். கடந்த 5 ஆண்டுகளுக்குள் மரங்கள் சுமார் 20/30 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளன. வெட்ட வெளிகளைத் திருத்தி, துவரை, பயறு போன்றவற்றைப் பயிரிட்டோம். சோளம், வரகு, நெல், வளர்ந்திருந்தாலும் சிறப்பாக இல்லை. எனினும், எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது.
  • பிற விவசாயிகள் மேலும் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு கொடுத்துள்ளார்கள். 5 கன்றுக் குட்டிகளை வாங்கி உள்ளேவிட்டோம். அவற்றின் சாணம் நிலத்திற்கு உரமாகிறது. நீர்த் தங்குமிடத்தில் குளம் வெட்டி மீன்களை வளர்க்கிறோம். அந்த மீன்குட்டையில் சுற்றி வருமாறு சில வாத்துகளை விட்டுள்ளோம். கொஞ்சம் முயல்கள் 50 - 60 இளைஞர்கள் மற்றும் விவசாயப் பெண்கள் இந்தப் பயிற்சி மையத்தில் பணிபுரிகிறார்கள். இயற்கை வேளாண்மையை இவர்கள் இப்படிக் கற்றுக் கொள்கிறார்கள். சுற்றிலுள்ள பத்து இருபது கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இவர்கள். பயிற்சியை முடித்துக் கொண்டு சென்றவர்களில் பலர் தங்கள் நிலங்களில் இயற்கை வேளாண்மை செய்கின்றனர். சிலரை பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. பயிற்சியின்போதே நம் விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து ஓர் அமைப்பாக்குகிறோம் 'குன்றாண்டார்கோயில் இயற்கை விவசாயிகள் சங்கம்" என்பது இந்த அமைப்பின் பெயர்.
  • தமிழ்நாடு முழுவதும் இயற்கை வேளாண்மையில் ஆர்வமுடைய தனிநபர்களையும், தொண்டு நிறுவனங்களையும் ஒரு தகவல் வலைப்பின்னல் என்ற முறையில் இணைத்து லீஸா" என்று நடத்துகிறோம். (Low External Input Sustainable Agriculture) இடுபொருள் குறைவாக இருந்தால் விவசாயம் நிலைத்து நிற்கும் என்பது இதன் கருத்து. வளமிழந்த நிலத்திற்கு முதலில் வளத்தை ஏற்படுத்த வேண்டும். பிறகு கால்நடைகளுக்கு தேவையானவற்றை அந்த நிலத்தில் உற்பத்தி செய்யவேண்டும். இப்பொழுது கால்நடைகளின் உழைப்பும் சாணமும் இந்த நிலத்திற்குச் சேரும். அடுத்து மனிதனுக்குத் தேவையானதை அங்கு உற்பத்தி செய்ய வேண்டும். அதற்குமேல்தான் சந்தைக்கானதை உற்பத்தி செய்யவேண்டும். 90ல் தொடங்கிய இந்த அமைப்பு இப்பொழுது பெரும் அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. 300 அமைப்புகள் இதில் அடங்கியுள்ளன. கோவை மாவட்டத்தில் அவினாசிப் பகுதியில் "அன்னைப்பொழில் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். பெரியார் மாவட்டத்தில் கோபியில் நண்பர் ஒருவர் செய்கிறார். ஒரு பொட்டல் மலையை விலைக்கு வாங்கி அங்கு மருத்துவத்துக்கான மூலிகைகளைப் பயிரிட்டு வளர்க்க முனைந்திருக்கிறார். புஞ்சைப் புளியம்பட்டியிலும் பண்ணை ஒன்றை அமைத்திருக்கிறோம். எதிர்காலத்தில் இன்னும் பலவற்றை நாங்கள் செய்யமுடியும்.
  • 1965-க்குப் பிறகு இந்தியாவில் ரசாயன இடுபொருட்களை மிகுதியாகப் பயன்படுத்துகிறோம். நிலத்தடி நீரை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். இதன் காரணமாக நிலம் உயிரியக்கமில்லாத ஒரு கெட்டியான பண்டம் ஆகிவிட்டது. வீரிய ஒட்டு வித்துக்களை அதிக அளவில் நுழைத்ததின் விளைவாக ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டி வந்தது. தொடர்ந்து இடு பொருட்களைக் கூட்டிக் கொண்டேயிருக்கிறோம். ஆலோசகர்கள் அறிவுரைப்படி இடு பொருட்களை விவசாயிகள் வாங்கிப் போட வேண்டிய நிலையில் விவசாயிகளுக்குக் கட்டுப்படியாவதில்லை. இந்த அடிப்படையில் நவீனவிவசாயம் என்பது எந்தக்காலத்திலும் விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகமுடியாது.
  • பசுமைப் புரட்சியினால் பயனடைந்தவர்கள் 100க்கு 25 விவசாயிகள்தான். பலன் எல்லோருக்கும் போய்ச் சேரவில்லை என்றாலும் ஒட்டு விதைகளும் ரசாயனங்களும் எல்லோரையும் தொட்டு விட்டன. பாரம்பரிய விதைகள் காணாமல் போய்விட்டன. பசுமைப் புரட்சி நிலங்கள் அனைத்தையும் பாழ்படுத்தி விட்டது. பணக்கார விவசாயி ஆழ்குழாய்க் கிணறு போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விடுகிறான். ஏழை விவசாயிகளுக்கு நீர் கிடைப்பதில்லை ஆக பசுமைப் புரட்சியினால் நேரடியாகப் பயனடைந்தவர்கள் 25 பேர் மட்டுமே. ரசாயனஉரத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. அரசின் கொள்கை, ஆலைத் தொழில்களைக் காப்பாற்றுவதாகத்தானிருக்கிறது. விவசாயத்தை ஆலைத்தொழிலுக்காக இணைத்திருக்கிறார்கள். அதாவது ஆலைத் தொழிலை விவசாயம் தாங்கி நிற்க வேண்டும். உணவு உற்பத்திக்குப் பதிலாக ஆலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை விவசாயிகளை உற்பத்தி செய்ய வைத்தார்கள். இதனால், கிராமப்புறங்களில் உற்பத்தி செய்பவனுக்கு உணவில்லை. இவர்களால் நிலத்தை வளப்படுத்த முடியவில்லை. தொழில் நுட்பரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் விவசாயம் சீரழிந்தது. இதுவரை மான்யம் கொடுத்ததனால்தான் விவசாயம் தாக்குப் பிடித்தது. இந்த உண்மையை மறைத்து  பசுமைப் புரட்சியை வெற்றிகரமானதென அரசியல்வாதிகள் மார்தட்டுகிறார்கள். உரக் கம்பெனிகள்தான் லாபமடைந்தன.
  • விவசாயத்திற்கான இயந்திரங்கள் மற்றும் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தான் லாபமடைகின்றன. இவ்வாறு மானியங்கள் கொடுத்ததின் மூலம், நிலத்தையும் நாசப்படுத்தி இறுதியில் அரசு விவசாயிகளை நொண்டியாக்கிவிட்டது. இந்த நிலையில் தான் இயற்கை வேளாண்மை என்ற மாற்று வேளாண்மைக்கு நாம் செல்ல வேண்டியிருக்கிறது. நமக்கு வேறு வழியில்லை. விவசாயி முதலில் தன் ஆதாரங்களைக் கொண்டு தனது தேவைகளுக்காக உற்பத்தி செய்ய வேண்டும். பிறகுதான் எஞ்சியதை சந்தைக்குக் கொண்டு போக வேண்டும்.
  • ஏற்கனவே நவீன வேளாண்மை என்ற போக்குக்கு விவசாயிகள் வசப்பட்டிருக்கிறார்கள். இயற்கை வேளாண்மைக்குத் திரும்பும் மனநிலை அவர்களுக்கு இல்லை. எனினும் விவசாயிகளுக்கு இனி வேறு வழியுமில்லை. மனம் திரும்பியாக வேண்டும். இயற்கை வேளாண்மை என்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம்தான் என்பதை அனுபவங்கள்மூலம் நான் கண்டிருக்கிறேன்.
  • சர்க்கரைத் தொழிற்சாலைகளுக்காகக் கரும்பு விளைச்சலில் விவசாயிகள் ஈடுபடுகிறார்கள். இதைப்போல இன்னும் பல மூலப் பொருள்களை இந்தியா மற்றும் உலகச் சந்தைக்காக உற்பத்தி செய்கிறார்கள். ஏற்றுமதிக்காக உற்பத்தி என்ற போக்கை அரசியல்வாதிகள் ஊக்குவிக்கிறார்கள். இந்த நிலையை நாம் ஏற்கமுடியாது. விவசாயிகளின் மனநிலையை இப்பொழுது அரசாங்கம் உருவாக்குவதாக இருக்கிறது. வளமான நிலங்களில் மட்டுமல்லாமல் பிற நிலங்களையும் பசுமைப் புரட்சிக்குத் தயாராக்குவதன் மூலம் அந்த நிலங்களையும் அரசாங்கம் நாசமாக்கி வருகிறது. இதற்கேற்றவாறு தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை விளம்பரங்களை அரசு ஊக்குவிக்கிறது. அரசு மற்றும் முதலாளிகளின் காலடியிலேயே விவசாயிகள் கிடக்கவேண்டும். மக்களின் கலாச்சாரத்தை அரசு அழிப்பதன் மூலம் அரசு தான் வெற்றி பெறுவதாக அறிவிக்கிறது. கரும்பை விற்று விவசாயி உணவை வாங்குகிறான். அவன் கையில் எதுவும் மிஞ்சி இருப்பதில்லை. முதலில் உணவு உற்பத்தி. பிறகுதான் பணப்பயிர் உற்பத்தி. இப்படி ஒரு உறுதிப்பாட்டை விவசாயிகளுக்குள் நாம் எழுப்ப வேண்டும்.
  • கரும்பு, தேயிலை, காப்பி, புகையிலை ஆகியவற்றின் சாகுபடி  காரணமாக இன்று நிலங்களும் நீர் நிலைகளும் மாசுபடுகின்றன. சாயப்பட்டறைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், கடைசியாக இறால் பண்ணைகள் ஆகியவற்றின் மூலம் நிலம், நீர்நிலைகள் மாசுபடுவதோடு மட்டுமல்லாமல், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இந்தியா அடிமையாகிறது. மக்கள் தன் சுதந்திரத்தை இழக்கிறார்கள். இந்த நிலவரங்களுக்கு மாற்று என்பதைப் பற்றி நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். மாற்றை நம்மால் உருவாக்க முடியும். நிலத்தையும் உயிரினங்களையும் அழிக்கும் நஞ்சுகளுக்கு அரசும் முதலாளிகளும் மருந்து என்று பெயர் வைத்தார்கள். பூச்சி நஞ்சை மருந்து என்று சொல்வது பயங்கரமான பொய். போருக்காகக் கண்டுபிடித்த நஞ்சுகளை இப்பொழுது விவசாயத்தில் தள்ளியிருக்கிறார்கள். பூச்சிகளைக் கொல்வதற்கென தரப்பட்ட நஞ்சுகளில் முக்கித்தான் இன்று, உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு என்று அனைத்து காய்கறிகளும் நமக்கு வந்துசேருகின்றன. பழங்கள், தானியங்கள் முதலியவை கெடாமல் இருக்கவேண்டுமென்பதற்காகவும் நச்சுப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆக, இந்த நஞ்சுகள் இப்பொழுது விவசாயிகளின் பிரச்னையாக மட்டும் இருக்கவில்லை. அனைத்து நுகர்பவர்களின் பிரச்னையாக மாறியிருக்கிறது. இந்திய மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. ஆனால் இந்தப் பொருட்களை வாங்கும் வெளிநாட்டினர் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். இயற்கை விவசாயம் செய்வதற்கு வெளிநாட்டினர் இப்பொழுது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறார்கள். இது ஒரு முக்கியமான வாய்ப்பு.
  • தொழிற்சாலைக் கழிவுகளால் நிலங்களும் நீர்நிலைகளும் நாசமாகி வருகின்றன என்பது உண்மைதான். இதைச் செய்பவர்கள் ஒரு சிறு கும்பல் மட்டுமே இப்பொழுது இந்தப் போக்கை எதிர்ப்பது விவசாயிகளது மட்டுமல்லாமல், அனைத்து உலக மக்களின் பிரச்னையாகவும் மாறியிருக்கிறது. இது மேலும் ஒரு வாய்ப்பு. இந்த அடிப்படையில் பெரும்பாலான மக்களை இத்தகைய விழிப்புணர்வை நோக்கிய இயக்கத்தில் இணைத்துக் கொள்ள முடியும்.
  • இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை ஆகிய மூன்றும் இணைந்து செல்ல வேண்டும். கல்வியிலும் ஒரு மாற்றுத் திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். மனிதனுடைய படைப்பாற்றலை அழிப்பதாகக் கல்வி இருக்க முடியாது. கல்வியாளர்களும் இந்த உண்மையை இன்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். மாற்றுக்கல்வி தான் இந்தத் திட்டத்திற்கு ஒரு நெம்புகோல் போல செயல்பட முடியும். அடுத்த பத்தாண்டுகளுக்கு இத்தகைய விழிப்புணர்ச்சியை நாம் மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். உலக அளவிலான முதலாளியத்தைப் போல இதற்கான எதிர்ப்பு இயக்கமும் உலக அளவில் ஏற்பட முடியும். இதற்கான சாத்தியம் இன்று வளர்ந்து வருகின்றது.
  • _ 'நிகழ்' 29, ஏப்ரல், 1995  இதழில் வெளியான கட்டுரை
  • டிச. 30 - இயற்கை வேளாண் அறிஞர் கோ. நம்மாழ்வார் நினைவு நாள்

நன்றி: தினமணி (30 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்