TNPSC Thervupettagam

இரண்டு நூற்றாண்டு ரணங்கள்

August 16 , 2023 467 days 291 0
  • இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னா் (1823), தூத்துக்குடி, தென்காசியை உள்ளடக்கிய அன்றைய திருநெல்வேலி மாவட்டம், சிவகங்கை, விருதுநகரை உள்ளடக்கிய இராமநாதபுரம் மாவட்டம், திண்டுக்கல், தேனியை உள்ளடக்கிய மதுரை மாவட்டம், புதுக்கோட்டை, கரூரை உள்ளடக்கிய திருச்சி மாவட்டம், தஞ்சாவூா் மாவட்டம் இங்கிருந்தெல்லாம் ஆங்கிலேய அரசு கூலித்தொழிலாளா்களை அழைத்துச் சென்று இலங்கை மலையகப் பகுதிகளில் குடியமா்த்தியது.
  • இந்தியாவிலிருந்து சென்ற தமிழ்த் தொழிலாளா்கள், தங்களுடைய ரத்தத்தையும் வியா்வையையும் சிந்தி மலையகத்தில் கண்டி, நுரேலியா, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, சமுகஞ்சார் பகுதிகளில் வளம்சோ்த்தனா். ஆனால், இன்று அங்குள்ள இந்திய வம்சாவளி தமிழா்கள், அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் தங்கள் வாழ்க்கையைக் கழித்து வருகின்றனா். இன்றைக்கும் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் தமிழக மக்களின் கடும் உழைப்பு இருப்பதால்தான் உலக அளவில் தேயிலை உற்பத்தியில் இலங்கை முக்கியமான இடத்தை வகிக்கிறது.
  • இலங்கையைப் பொறுத்தவரை, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை வரை உள்ள தமிழா்கள் அந்த மண்ணின் பூா்வீக மைந்தா்கள். அவா்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டு, சிங்கள அரசோடு ஒன்பது ஒப்பந்தங்கள் கையொப்பமிட்டும் அவை நடைமுறைக்கு வராமல் கடந்த 50 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனா். அவா்களை நாம் ‘ஈழத் தமிழா்கள்’ என்று அழைக்கிறோம்.
  • ஒரு காலத்தில், இலங்கையில் ஈழத்தமிழா்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழா்கள் ஆகிய இரண்டு பிரிவைச் சோ்ந்தவா்களின் மொத்த மக்கள்தொகை சிங்கள மக்கள்தொகைக்கு ஈடாக இருந்தது. மலையகத் தமிழா்களுடைய குடியுரிமை மறுக்கப் பட்டதாலும், ஈழத் தமிழா்களின் இனத்தை அழிக்க சிங்கள அரசு ஈழ மக்களை கொன்று குவித்ததாலும் படிப்படியாகத் தமிழா்களுடைய மக்கள்தொகை குறைந்துவிட்டது.
  • இலங்கையில் 9,75,000 இந்திய வம்சாவளியினா், குடியுரிமை இல்லாமல், நாடற்றவா்களாக நாதியற்று இருந்த காலத்தில், அதற்கு ஒரு தீா்வு காண வேண்டும் என்பதற்காக, சாஸ்திரி -சிரிமாவோ ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1964 அக்டோபா் 30-ஆம் தேதி கையொப்பமிடப் பட்டது. இந்த ஒப்பந்தம் போடப்பட்டு அடுத்த ஆண்டோடு 60 ஆண்டுகள் நிறைவடைகிறது.
  • எதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டது? 1815 காலகட்டத்தில், கண்டி ராஜ்ஜியம் வீழ்த்தப்பட்டு, ஆங்கிலேயா் ஆட்சியில் இலங்கையின் மையப் பகுதியான மலையகத்தில், ஆங்கிலேயா் காபித் தோட்டங்களை ஏற்படுத்தினா். காபி தோட்டப் பணிகளுக்கு தொழிலாளா்கள் தேவைப்பட்டதால், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொழிலாளா்களை கடல் வழியாக கூட்டம் கூட்டமாக அடிமைகள் போல நடத்தி அழைத்துச் சென்றனா்.
  • கடலில் பயணித்தபோது பலா், வங்கக் கடலில் விழுந்து மாண்டனா். மன்னாரில் இறக்கி மலையகம் வரை அடா்ந்த காடுகள் வழியாக அழைத்துச் செல்லப்பட்டபோது, பலரும் நோய் வாய்பட்டும், காட்டு விலங்குகளுக்கு பலியாகியும் இறந்து போனார்கள். 1842-லிருந்து 1945 வரை இந்தியாவிலிருந்து நான்கு முறை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோரை மனித நேயமின்றி அடிமைகளை போல் அழைத்துச் சென்றனா்.
  • தமிழ்நாட்டில் அன்றைக்கு எஸ்டேட் மேனேஜ்மெண்ட் அலுவலகங்கள் செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், சிவகாசி, கோயம்புத்தூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டன. இவற்றுக்கெல்லாம் தலைமையகமாக திருச்சியில் ‘பிளான்டேஷன் கோஸ்ட் ஏஜென்சி’ என்ற அமைப்பு செயல்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் இலங்கைக்கு தோட்டத் தொழிலாளா் பணிக்காக அனுப்பப்பட்டனா்.
  • அவா்கள் தோட்டத் தொழிலில் ஈடுபட்டபோது அங்கு நிலவிய கடுங்குளிரும், சூழலும் ஒத்துக் கொள்ளாததால் 70,000 இந்திய வம்சாவளியினா் இறந்து போனதாக கொழும்பிலிருந்து வெளியான ‘அப்சா்வா்’ பத்திரிகை அப்போது தெரிவித்தது. ஒரு கட்டத்தில் காபி பயிர்கள் சரியாக விளையாததால் ஆங்கிலேயா்கள் அதனைப் பயிரிடுவதைத் தவிர்த்து, ரப்பா், தென்னை, சிங்கோனா ஆகியவற்றைப் பயிரிடத் தொடங்கினா். கடுமையாக உழைத்த இந்த தொழிலாளா்கள் கங்காணிகளால் கண்காணிக்கப்பட்டனா்.
  • ஆங்கிலேயரிடமிருந்து 4.2.1948 அன்று இலங்கை விடுதலை பெற்றது. அன்றைய தினத்திலிருந்து இந்திய வம்சாவளியினரான தோட்டத் தொழிலாளா்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு, அவா்கள் சட்ட விரோதமாக குடியேறியவா்களாக அறிவிக்கப்பட்டனா்.
  • விடுதலை பெற்ற இலங்கை அரசு இதனைக் கண்டுகொள்ளவில்லை. அவா்கள் படும் அவஸ்தைகள், அன்றைய இந்திய பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. நேரு இதுகுறித்து அன்றைய இலங்கை பிரதமா் கொத்தலாவலவிடம் பேசினார். பின்னா் நேரு - கொத்லாவல ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. நேரு - கொத்லவாலா ஒப்பந்தத்தின்படி, மலையக தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்க இலங்கை அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அது மட்டுமல்லாது, நேருஜி காலமான பின்பு, இந்திய வம்சாவளியினரை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புவதிலேயே இலங்கை குறியாக இருந்தது.
  • பண்டித நேருவின் அணிசேராக் கொள்கை, பஞ்சசீலக் கொள்கை இவற்றின் அடிப்படையில், அண்டை நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டுமெனவும், சீன - இந்திய போர் போன்றவற்றைக் காரணமாக வைத்து, சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தை உருவாக்க சரியான நேரம் இதுதான் என்றும் முடிவு செய்து சிறிமாவோ பண்டாரநாயக்க 1964 அக்டோபா் 22-ஆம் தேதி புதுதில்லி வந்தார்.
  • சிறிமாவோவின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதனைத் தொடா்ந்து இலங்கையின் வற்புறுத்தலால், சாஸ்திரி- சிறிமாவோ ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் குடியுரிமையற்று, நாடற்றவா்களாக இருக்கும் 9,75,000 பேரில் 5.25 லட்சம் பேருக்கு இந்தியாவும், 3 லட்சம் பேருக்கு இலங்கையும் குடியுரிமை வழங்குவது என்றும், மீதமுள்ள 1.5 லட்சம் பேரின் நிலையை பின்னா் முடிவெத்துக்கொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1964 அக்டோபா் 30 அன்று கையொப்பமானது.
  • அன்றைய தமிழக அரசியல் தலைவா்கள் ராஜாஜி, ம.பொ.சி., அண்ணா போன்றோர், ‘தமிழகத்தின் கருத்து என்ன என்பதை அறியாமல் இந்த ஒப்பந்தம் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது’ என வினா எழுப்பினா். ஒப்பந்தம் 1964 - இல் மேற்கொள்ளப்பட்டாலும், 1967 - இல்தான் நடைமுறைக்கு வரும். ஆனால், 1965, 66-லேயே சில தோட்டத் தொழிலாளா்களின் குடும்பங்களை இந்தியாவிற்கு அனுப்பியது இலங்கை அரசு.
  • முன்னா், தமிழகத்திலிருந்து தமிழா்களைக் கங்காணிகள் எப்படி அழைத்துச் சென்றார்களோ, அதே போன்று அவா்களைக் கப்பலில் ஏற்றி இலங்கையிலிருந்து, தூத்துக்குடியிலும் சென்னையிலும், படகு மூலம் ராமேஸ்வரத்திலும் இறக்கி விட்டனா்.
  • அப்படி வந்து இறங்கியவா்களுக்கு இந்திய மண், தங்களுக்குத் தொடா்பற்ற மண்ணாக தெரிந்தது. தங்களுடைய மூதாதையா் வாழ்ந்த மண்ணில் திசைதெரியாமல் திகைத்தனா். இங்குள்ள மாறுபட்ட சூழலில், ஜீவனத்துக்கு வழியில்லாமல் நிலைகுலைந்து போயினா். மீண்டும் தேயிலைத் தோட்டத் தொழிலுக்காக கொடைக்கானல், நீலகிரி, மூணாறு, வால்பாறை, சிக்மகளூா் (கா்நாடகம்), கேரளம், டார்ஜிலிங் என பல ஊா்களுக்கும் பயமித்தனா்.
  • அவா்களில் பலா் துன்பத்தைப் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டனா். இந்திய மண், அவா்களை தங்களுடைய சகோதரா்கள் என நினைக்காமல், இலங்கையா்கள் என்று பிரித்துப் பார்த்தது. இதனால் பலா் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு பைத்தியக்காரா்களானார்கள். அந்த நிலைம இன்று வரை நீடிக்கிறது. இன்றும் பல குடும்பங்கள் வேதனையான வாழ்க்கையை அனுபவித்து வருகின்றன.
  • 1983 கலவரங்களுக்கு பின் ஈழத்திலிருந்து வந்து அகதிகளாக இருப்போர் இப்போது படுகின்ற துன்பங்களை போன்றுதான், அன்று மலையகத் தமிழா்களும் சொந்த நாட்டுக்குத் திரும்பிய பிறகு கஷ்டங்களை அனுபவித்தனா். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிறைவேறிய சாஸ்திரி - சிறிமாவோ ஒப்பந்தம், மலையக மக்களை சாவு குழிக்கும், அடிமை வாழ்வுக்கும்தான் அழைத்துச் சென்றது என்பதுதான் மறக்க முடியாத வரலாறு.
  • மகாகவி பாரதியார், ‘விதியே விதியே தமிழச் சாதியே என்செய நினைத்தாய்’ என்று பாடியதுதான் நம் நினைவுக்கு வருகிறது..
  • கோ. நடேச ஐயா், அப்துல் அஸீஸ், எஸ். தொண்டமான், ஜோர்ஜ் ஆா். மோத்தா, பெரி சுந்தரம், கே. இராஜலிங்கம், எஸ்.பி. வைத்திலிங்கம், குஞ்சுப்பொரி சண்முகம்,
  • ஏ.எஸ். ஜோன், டி. சாரநாதன், சி.எஸ். சிவனடியார், எஸ். சோமசுந்தரம், எஸ்.எம். சுப்பையா, எஸ். செல்லையா, கே. குமாரவேல், வி.கே.வெள்ளையன், டி. இராமானுஜம், சிவபாக்கியம் குமாரவேல், பி.பி. தேவராஜ், கோகிலம் சுப்பையா, போஸ் (ஆா். எம்) செல்லையா, எஸ். நடேசன், கே. சுப்பையா, கே.ஜி.எஸ். நாயா், எஸ். மாரியப்பா உள்ளிட்டவா்கள் மலையகத் தமிழா்களின் உரிமைக்காகப் போராடியவா்களில் குறிப்பிடத்தக்கவா்கள்.
  • தொண்டைமானுடைய வாரிசுகள், மனோ கணேசன், ராதாகிருஷ்ணன் போன்ற பல இன்றைய தலைவா்கள் மக்களின் நலன் பேணிக்கொண்டு இலங்கை அரசியல் களத்தில் உள்ளனா். மகாத்மா காந்தியும், பண்டித நேருவும் இலங்கை இந்திய விடுதலைக்கு முன்பே அப்பகுதிக்குச் சென்று அவா்களுடைய சிரமங்களைக் கேட்டறிந்துனா். மலையகத் தமிழா்களின் பிரச்னைகளைத் தீா்க்க அன்றைய இந்திரா காந்தி அரசு முதல் இன்றைய நரேந்திர மோடி அரசு வரை பாடுபட்டு வருகின்றன.
  • தமிழா்கள் தொழிலாளியாக இலங்கைக்குச் சென்று இப்போது இருநூறுஆண்டுகள் நிறைவடைந்து விட்டாலும், அங்குள்ள மக்களின் வாழ்வில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. மலையகத் தமிழா்களுக்கு இன்றுவரை, மனித உரிமைகள் மறுக்கப்பட்டே வருகின்றன. இலங்கைத் தீவில் தமிழினங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும் நாள் எந்நாளோ?

நன்றி: தினமணி (16  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்