TNPSC Thervupettagam

இரா. நல்லகண்ணு 100

December 22 , 2024 2 days 42 0

இரா. நல்லகண்ணு 100

  • இரா.நல்​ல​கண்ணு அரசி​யலில் அறியப்​பட்ட அளவுக்கு இலக்​கி​யத்​தில் அறியப்​பட​வில்லை. இளம் பருவத்​திலேயே வாசிப்​ப​தில் பேரார்வம் கொண்​ட​வர். பள்ளி​யில் பலவேசம் என்ற ஆசிரியர் இவருக்கு ஊக்கச்​சக்​தியாக விளங்​கினார். விடு​தலைப் போராட்டக் களம் பாரதியை அறிமுகப்​படுத்​தி​யது. சிறை வாழ்வு பொது​வுடமை இலக்​கி​யங்களை வாசிக்​கும் வாய்ப்​பைத் தந்தது. மார்க்​சியத் தத்துவ நூல்​களு​டன், இலக்கிய நூல்​களை​யும் கற்கத் தொடங்​கினார்.
  • 1954இல் சிறை​யில் ஆங்கிலக் கவிஞர் ஆல்பிரட் டென்னிஸனின் படைப்​பிலிருந்து ‘மாண்ட வீரனை மனைக்​குக் கொண்டு வந்தனர்’ என்கிற பகுதியை மொழிபெயர்த்​தார். இது இவரின் கவித்துவ ஆற்றலை வெளிப்​படுத்​தி​யது. அறிஞர் நா.வான​மாமலை, எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன், எழுத்தாளர் தி.க.சிவசங்​கரன் ஆகிய மூவரும் இவருக்கு முன்னோடிகளாக விளங்​கினர். தொடக்​கத்​தில் இவர்​களு​டனான உறவு இளம் வயதில் இலக்​கியப் பற்றை​ உருவாக்​கியது. 1962இல் ஆர்.என்​.கண்ணன் என்கிற பெயரில் ‘சூத்​திர​தாரி’ சிறுகதையை ‘சாந்தி’ இதழில் எழுதினார். ஒடுக்​கப்​பட்ட மக்களின் எழுச்​சியைச் சித்தரிக்​கும் அற்புத​மான சிறுகதை அது.
  • விவசா​யிகள் இயக்​கத்​தி​லும், பொது​வுடமைக் கட்சி​யிலும் பொறுப்​பேற்றுச் செயல்​படத் தொடங்​கிய​தால் இவரின் படைப்புப் பணிக்கு அடைப்​பிட்டு விட்​டார் என்றே தோன்​றுகிறது. ஆனால் தொடர்ந்து இலக்​கி​யங்​களைக் கற்றார். இலக்​கிய​வா​திகளை ஊக்கப்​படுத்​தினார். தீவிர வாசக​ராக​வும் எழுத்​தாளர்​களின் உபாசக​ராக​வும் திகழ்ந்​தார். பொது​வுடமை இயக்கத் தலைவர் ஜீவாவுக்​குப் பிறகு பலதரப்​பட்ட எழுத்​தாளர்​களை​க் கொண்​டாடிய​வராக நல்ல​கண்ணு திகழ்​கிறார்.
  • ஜீவா தொடங்கிய தமிழ்​நாடு கலை இலக்​கியப் பெரு​மன்​றம், ‘தாமரை’ இதழ் ஆகிய​வற்றின் வளர்ச்​சி​யில் தன்னை இணைத்​துக் கொண்​டார். பொது​வுடமை இயக்கம் பாரதியை உயர்த்திப் பிடித்​தது. நல்லகண்ணு​வும் பாரதி குறித்து எழுதினார்; பேசினார். இவரின் ‘பார​தி​யும் விவசா​யிகளும்’ எனும் கட்டுரை சிறப்​பானது.
  • எட்டயபுரத்​தில் பாரதி விழாவைத் தொடர்ந்து நடத்திவரும் ‘எட்​டயபுரம் பாரதி முற்​போக்கு வாலிபர் சங்கத்​துடன்’ இன்றும் தொடர்​பில் இருந்து வழிகாட்டு​கிறார். காசிக்​குச் சென்​ற​போது பாரதி​யின் ‘காசி வாசம்’ குறித்து விவரங்​களைத் தேடிப் பதிவுசெய்திருக்​கிறார். பாரதி நூற்​றாண்டு விழா​விலும் மணிமண்டப உருவாக்​கத்​தி​லும் பெரும்​பங்​காற்றினார்.
  • பாரதி​யோடு பாரதி​தாசனை​யும் இணைத்து பொது​வுடமை இயக்​கத்​திற்கு வலுச் சேர்த்​தார். பாரதி​தாசன் நூற்​றாண்டு விழாவை நடத்தி, மலரும் கொண்டு​வரச் செய்​தார். கவிஞர் தமிழ்ஒளியைத் தமிழ்ச் சூழலில் கவனம் பெறச் செய்​தவர்​களில் ஒருவர் இவர். சென்னைப் பல்கலைக்​கழகத்​தில் ‘பாட்​டாளி​களைப் பாடிய பாவலர்​கள்’ என்கிற அறக்​கட்​டளைப் பொழி​வில் தமிழ்ஒளியைச் சிறப்​பித்​துப் பேசினார் நல்லகண்ணு. தமிழ்ஒளி-75 விழா​வில் தலைமை​யுரை​யாற்றினார்.
  • கம்பனில் தோய்ந்​தவர். ஆழ்வார்​கள், நாயன்​மார்​கள், சித்தர்​கள், வள்ளலார் வரை ஆழமான பரிச்​சயம் அவருக்​குண்டு. ஒருமுறை நேர்ப் பேச்​சில் ‘வள்​ளலார் பற்றிய என் பார்​வைக்கு தோழர் வழிகாட்டி’ என்றார் அறிஞர் கா.சிவத்​தம்பி. தொ.மு.சி. ரகுநாதனின் இலக்​கியப் படைப்புகளை மதிப்​பீடு செய்​துள்ளார். பாரதி குறித்த ஆக்கங்களை வரவேற்​றதுடன், சமுதாய இலக்​கியம் நூலை மிகவும் பாராட்​டி​யுள்​ளார். அதேவேளை, தொ.மு.சி.​யின் திருக்​குறள் குறித்த கருத்துகள் அவரின் சொந்தக் கருத்​துக்கள் என்றும் சுட்​டி​யுள்​ளார்.
  • நா.வான​மாமலை​யின் அறிவாற்​றலைப் புரிந்து அவரை முன்னோடியாக ஏற்றார். அவர்போல் நாட்டுப்புறப் பாடல்​களில் ஆர்வம் கொண்​டார். சில பாடல்​களைச் சேகரிக்​க​வும் செய்​தார். ‘ஆராய்ச்சி’ இதழுக்​கும் உறுதுணை​யானார். புகழ் பெற்ற ‘ஆண்​டான் கவிராயன்’ பற்றி​யும் எழுதி உள்ளார்.
  • விந்​தன், ஜெயகாந்​தன், சு. சமுத்​திரம், பொன்னீலன், இராஜம் கிருஷ்ணன், தனுஷ்கோடி ராமசாமி, சிற்பி, ஈரோடு தமிழன்பன் போன்ற பல படைப்​பாளி​களை​யும் போற்று​வார். சாமி.சிதம்​பரனார், ஆ.சிவசுப்​பிரமணி​யன், தொ.பரமசிவன், இ.சுந்​தரமூர்த்தி, வீ.அரசு, மே.து.ராசுக்​கு​மார், ந.முத்​து​மோகன் போன்ற அறிஞர்கள் பலரை​யும் ஊக்கப்​படுத்​தி​ய​வர். முகம் தெரியாத ஒருவரின் படைப்​பைக்​கூடப் பத்திரி​கை​களில் வாசித்து விட்டு, பிடித்​திருந்​தால் தேடி, அழைத்​துப் பாராட்டும் இயல்பு இவருக்​குண்டு.
  • ‘விடு​தலைப் போரில் விடி​வெள்​ளி​கள்’, ‘மொழி வழி மாநிலம் தமிழ்​நாடு’, ‘தமிழகத் தொழில் வளர்ச்​சி​யில் கம்யூனிஸ்​டு​கள்’, ‘சமுதாய நீரோட்​டம்’, ‘பாட்​டாளி​களைப் பாடிய பாவலர்​கள்’, ‘கவிஞர் தமிழ்​ஒளி’, ‘சிறையி​லிருந்து ஓர் இசை’, ‘அணிந்​துரைகள், முன்னுரைகள்’, மதிப்பு​ரைகள்’ ஆகிய நூல்கள் இவரின் கலை இலக்​கியப் பார்​வையைச் சுட்டி நிற்​கின்றன. “மனித வாழ்க்கை என்பது ஒரு போராட்​டம்.
  • எல்லா​விதமான சுரண்​டலிலிருந்​தும், ஒடுக்கு முறை​களி​லிருந்​தும் தன்னை​யும் தன் சமூகத்​தை​யும் மேலும் மேலும் விடு​வித்​துக் கொள்​ளும் போராட்​டம். பல முனை​களில் நடக்​கும் இந்தப்போராட்டமே வாழ்க்கையை மேலும் மேலும் மேம்​படுத்​தும். இம்மா​திரிப் போராட்​டத்​தில் ஈடுபடும் மனிதர்​களுக்கு இலக்​கியம் ஊக்கமளிக்க வேண்​டும். நம்பிக்கை அளிக்க வேண்​டும். கலையும் இலக்​கிய​மும் மனிதனை விமர்​சிக்​கலாம். ஆனால் விகாரப்​படுத்தக் கூடாது” என்பார். இத்திசை வாழ்​விலேயே இயங்கி வருகிறார்.
  • மார்க்சிய அடிப்​படைகளை முழு​மையாக ஏற்று, வழி நடத்தி, தலைமை தாங்​கியவர் நல்ல​கண்ணு. அதேவேளை, நிலவியல் சார்ந்து தாய் மொழியை​யும் தமிழ்ப் பற்றை​யும் கைக்​கொண்​டார். வர்க்க இலக்​கி​யங்​களோடு சேர்த்தே அதன் நீட்​சியாக தலித்​தி​யத்​தை​யும், பெண்​ணி​யத்​தை​யும் வரவேற்​றார்.
  • கலை இலக்​கியத் துறை​யில் ஈடுபடும் யாவருக்​கும் ஒரு மூதாயாக அரவணைத்​தார். சனநாயக​மும், சமநீ​தி​யும், மனித நேயமும்​தான் அவரின் அளவு​கோல்​கள். ‘என் கட்சி’ என்ற பாப்லோ நெரூடா​வின் க​விதையை அடிக்கடி நினைவுகூர்​வார். அ​தில், “என் கட்சி: நீ எனக்கு நெருப்பு பற்று​வதைப்போல அன்​பைத் தூண்​டக் கற்​பித்​தாய்” என வரும். நல்​ல​கண்​ணு​வும் அன்​பைத் தூண்டுகிறார்​. வையம்​ அன்​பால்​ தழைக்​கும்தானே?
  • (டிசம்பர் 26 அன்று இரா.நல்லகண்ணு நூற்றாண்டு தொடங்குகிறது.)

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்