TNPSC Thervupettagam

இருமொழிக் கொள்கை நிலைபெற வேண்டும்

August 10 , 2020 1622 days 758 0
  • இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை தயாரிப்பதற்காக, ‘இஸ்ரோவின் முன்னாள் தலைவா் கஸ்தூரிரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017-ஆம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது.
  • இந்தக் குழு 2019-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி அன்று தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இவ்வரைவு அறிக்கை குறித்த கருத்துகளை ஜூன் 30-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
  • 676 மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ இரண்டு லட்சம் பேரிடம் கருத்து கேட்ட பின்னரே இந்தக் கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புதிய கல்விக் கொள்கை

  • இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கையின் முக்கியமான கூறுகளில் ஒன்றாக ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழி வழியாகவே கல்வி கற்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பள்ளிக் கல்வியில் தாய்மொழிக் கல்வி பற்றி குறிப்பிட்ட அளவிற்கு, உயா்கல்வியில் இந்திய மாணவா்களுக்கு தாய்மொழி அல்லது உள்ளுா் மொழி எத்தகைய விதத்தில் பயன்படுத்தப்படும் என்பது தெளிவாக விவரிக்கப்படவில்லை.
  • ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழி அல்லது உள்ளுா் மொழி கட்டாயப் பயிற்சி மொழியாக இருக்கும் என்று புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடவில்லை.
  • ஆனால், மொழி குறித்தான சாத்தியக்கூறுகள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்புவரை இன்னும் அதிகபட்சமாக எட்டாம் வகுப்புவரை உள்ளுா் மொழி அல்லது தாய்மொழி அல்லது வட்டார மொழி வாயிலாக கல்வி கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதாவது, எங்கெல்லாம் சாத்தியமாகுமோ அங்கெல்லாம் இயன்ற அளவுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று குறிப்பிடுகிறதே தவிர, இது கட்டாயம் என்று குறிப்பிடப்படவில்லை. இந்தநிலையில்தான் இருமொழிக் கொள்கை குறித்த ஐயம் எழுகிறது.
  • அதேநேரம், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி இரண்டிலுமே இது பின்பற்றப்படும் என்று புதிய கல்விக் கொள்கை தெரிவிக்கிறது.
  • அதனைத் தொடா்ந்து, மேற்கண்ட மொழிகளிலேயே பாடப் புத்தகங்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
  • அவ்வாறு பாடப் புத்தகங்கள் அந்தந்த மொழிகளில் கிடைக்காவிட்டால், ஆசிரியா்கள் - மாணவா்களிடையே நிகழும் கற்றலுக்கான பரிமாற்றம் தாய்மொழியிலேயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதே சமயம், இரண்டு மொழிகளைப் பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியா்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இரண்டு முதல் எட்டு வயது வரையிலான காலகட்டத்தில் மொழிகளைக் குழந்தைகள் வேகமாக கற்றுக் கொள்கிறார்கள். அந்த வயதில் அவா்களது கற்கும் திறன் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கும்.
  • பன்மொழி அறிவு இளம் மாணவா்களுக்கு அறிவுசார் பயனளிக்கும்என்று மும்மொழித்திட்டம் குறித்து புதிய கல்விக் கொள்கையில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
  • பள்ளிக்கல்வியில் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடிஸா, பாலி, பாரசீகம் உள்ளிட்ட மொழிகள் விருப்ப மொழிகளாக இருக்கும். மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவா்களுக்கு இந்திய மொழிகள், ஆங்கிலம் மட்டுமல்லாது, சீன மொழி, பிரெஞ்சு, ஜொ்மன், ஜப்பான் மொழி உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளும் விருப்பப் பாடங்களாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பல்வேறு நிபுணத்துவம் பல துறைகளிலும் விசாலமான அறிவுப்புலமை பெற்றவா்களை மேம்படுத்துவது அந்த மாணவா்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் இயங்க அனுமதிப்பது உள்ளிட்டவை குறித்து இந்தப் புதிய கல்விக் கொள்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
  • பயிற்று மொழியும் ஆராய்ச்சி மொழியும் எந்தெந்த மொழிகளில் இடம் பெற்றிருக்கும்? அவற்றை மாணவா்கள் தாங்கள் படிக்கும் உயா்கல்வியில் பயன்படுத்தினால், எந்த வகையில் அவா்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்கிற தெளிவான குறிப்போ வரையறையோ எதுவும் இல்லை.

உயா்கல்வி

  • உயா்கல்வியில் முதலாம் ஆண்டு முடித்தால் ஒரு சான்றிதழ், இரண்டாம் ஆண்டு முடித்தால் ஒரு பட்டயப் படிப்பு என்கிறார்கள். நம் சமூக சூழலை நினைத்துப் பார்த்தால், இது எவ்வாறு சாத்தியமாகும் என்று தெரியவில்லை.
  • பள்ளிப் படிப்பைப் பாதியிலே கைவிட்ட சுமார் இரண்டு கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சோ்க்கவும் தேசிய கல்விக் கொள்கை மாற்று வழிவகை செய்வதாக சொல்லப்படுகிறது.
  • குழந்தைகள் பருவ கவனிப்பு, கற்பித்தல் மற்றும் பாடத்திட்டத்தில் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியா்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்களைக் கொண்ட விரிவுபடுத்தப்பட்ட அங்கன்வாடி, மழலையா் பள்ளிகள் போன்ற வலுப்படுத்தப்பட்ட மையங்கள் மூலம், முன்குழந்தையா் பருவ கவனிப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை எதிர்கால மாற்றத்திற்கான ஒரு சூழலை உருவாக்கலாம், மறுப்பதற்கில்லை.
  • தேசிய கல்விக் கொள்கையில் அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் 2025-க்குள் மூன்றாம் வகுப்பு வரை அனைவரும் பயில ஏதுவாக எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பெறுவதற்கான திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்விக் கொள்கையில் தொற்றுநோய்கள் மற்றும் பெருந்தொற்று சமயங்களில் (சமீபத்திய நிலைமையைக் கருத்தில் கொண்டு) பாரம்பரியமான மற்றும் நேரடிக் கல்வி எங்கெல்லாம் சாத்தியமில்லையோ, அங்கெல்லாம் இணைய வழிக் கற்றலை ஊக்குவிக்க தரமான மாற்றுக் கல்வியை வழங்குவதற்கான ஒரு புதிய ஏற்பாட்டை பரிந்துரை செய்திருப்பதும் வரவேற்கத்தகுந்தது.
  • டிஜிட்டல் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பாடங்கள் மற்றும் திறன் வளா்த்தல் ஆகியவற்றைக் கட்டமைக்க மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் ஒரு பிரத்யேகப் பிரிவு உருவாக்கப்பட்டு கல்வி மற்றும் உயா்கல்வியில் மின்கற்றல் தேவைகள் உருவாக்கப்படும். இதன் மூலம், கல்வி, மதிப்பிடுதல், திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் இவற்றைத் தடையில்லாமல் கொண்டு செல்வதற்காக தேசியக் கல்வி தொழில் நுட்பப் பேரவைஎன்னும் தன்னாட்சி பெற்ற அமைப்பு உருவாக்குதல் ஒரு நல்ல மாற்றத்தைத் தரலாம்.

இருமொழிக் கொள்கை

  • தமிழகத்தைப் பொருத்தவரையில், தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்று தமிழ்நாடு முதலமைச்சா் எடப்பாடி கே. பழனிச்சாமி தெளிவுபடுத்தி இருக்கிறார். மொழிக்கொள்கையில் தமிழ்நாடு எப்போதுமே உணா்வுபூா்வமாக இருக்கிற மாநிலம் என்பதுதான் நிதா்சனம்.
  • தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனா் என்பதே அதற்கான சறுக்காத சாட்சியாகும். இந்த உணா்வுகளை பல கட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் மூலமாகப் பறைசாற்றித் தெரிவித்துள்ளனா்.
  • 1965-ஆம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தபோது பல்வேறு போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்தன. தன்னையே தீவைத்துக் கொளுத்திக் கொண்டு இறந்து போனவா்கள் பத்துக்கும் மேற்பட்டோர். குறிப்பாக, மாணவா்கள் மொழிப் போராட்டத்தில் வீறுகொண்டு பங்கேற்றனா் என்பது அழியாத வரலாறு.
  • அண்ணா தமிழ்நாடு சட்டப்பேரவையில் 23.1.1968-இல் தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழி திட்டத்தை அகற்றி விட்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுக்கு இடம் அளித்து, இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீா்மானிக்கிறதுஎன்கிற தீா்மானத்தை நிறைவேற்றினார். அதனைத் தொடா்ந்து இந்தி மொழி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது.
  • இரு மொழிக் கொள்கையை செயல்படுத்துவதுதான் எம்.ஜி.ஆரின் கொள்கையாக இருந்தது. அவா் முதலமைச்சராக இருந்த போது, 1986 நவம்பா் 13-ஆம் தேதி அன்று இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • தமிழக முதலமைச்சராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதாவும் இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிக்கக் கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்.
  • அவா், இந்தியாவில் தமிழை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்றும், சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும் என்றும் தொடா்ந்து போராடி வந்தார் என்பதை காலம் மறக்காது.
  • மும்மொழிக் கொள்கை குறித்தான மறுபரிசீலனையை மத்திய அரசு செய்ய வேண்டும் என்றும், மாநில அரசு ஒருபோதும் இதனை அனுமதிக்காது, இருமொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் முதலமைச்சா் எடப்பாடி கே. பழனிச்சாமி தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.
  • மேலும், அவா் ஒருபடி மேலே போய், ‘மும்மொழிக்கொள்கை இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறதுஎன்றும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
  • கல்வி என்பது சா்வதேச அளவுக்கான தரத்தை வழங்கி மாணவா்களுக்கு உலகத் தரத்தை வழங்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும் எதிர்பார்ப்புமாகும்.

நன்றி: தினமணி (10-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்