TNPSC Thervupettagam

இரும்புப் பெண் இந்திரா காந்தி!

May 13 , 2019 2023 days 1167 0
  • பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் மகள், நாட்டின் முதல் பெண் பிரதமர், கிழக்கு பாகிஸ்தான் பகுதி வங்க தேசம் என்னும் தனிநாடாக உருவாக காரணமானவர், நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியவர், பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியவர், காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்கியவர், இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுக்கு வித்திட்டு, இந்திரா காங்கிரஸ் ஆக கட்சியை உருவாக்கியவர் என பல்வேறு பலமும், பலவீனமும் கொண்ட மாபெரும் தலைவராக விளங்கியவர் இந்திரா காந்தி என்றால் மிகையல்ல.
  • நாட்டை கட்டமைப்பதில் இவர் மேற்கொண்ட சிரத்தையை எப்போதும் நடுநிலையாளர்கள் மனதார பாராட்டுவதே இவருக்கு கிடைத்த நற்சான்று. குறிப்பாக வங்கிகளை நாட்டு உடமையாக்கியதன் மூலம் செல்வந்தர்கள், பெரும் வசதி படைத்தவர்கள்தான் வங்கிச் சேவையை பயன்படுத்த முடியும் என்ற மாயையினை உடைத்தவர் இந்திரா.
தனியொரு பெண்
  • ஆணாதிக்கம் மிக்க உலகில், தனியொரு பெண்ணாக நின்று அனைத்து சவால்களையும் முறியடித்து, உலக அரங்கில் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவராக உயர்ந்து விளங்கியவர் அவர். அவர் சந்தித்த சோதனைகளும், அதனால் ஏற்பட்ட வேதனைகளையும் கடந்து, சாதனைகளாக்கிய பெருமை மிக்கவர்.
  • முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, கமலா தம்பதியினரின் ஒரே வாரிசான இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி ஆமதாபாதில் பிறந்தார். இவரது தாத்தா மோதிலால் நேரு மிகப்பிரபலமான வழக்குரைஞராக இருந்தார். தனது தந்தையும், தாத்தாவும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை சென்றவர்கள் என்பதால் இயல்பாகவே நாட்டின் சுதந்திர போராட்டத்தில் இந்திராவும் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். இவரது கணவரான பெரோஸ் காந்தியுடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டபோது, காதல் மலர்ந்ததையடுத்து, 1942இல் பெரோஸ் காந்தியை மணம் முடித்தார்.இந்திரா-பெரோஸ் காந்தி தம்பதிக்கு ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி என இரண்டு மகன்கள் பிறந்தனர்.
முதல் மக்களவைத் தேர்தல்
  • 1947இல் நாடு சுதந்திரம் பெற்று, 1952ஆம் ஆண்டு நாட்டின் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. முதல் பிரதமராக தந்தை நேரு பதவியேற்றுக் கொள்ளவே, தந்தையின் அரசியல் வாழ்க்கையை அருகிலிருந்து கவனிக்கத் தொடங்கினார் இந்திரா. 1947முதல் 1964ஆம் ஆண்டு வரை தந்தையின் தனி உதவியாளராக ஆர்வத்துடன் பணியாற்றி வந்த இந்திரா, நேருவின் மறைவுக்கு பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் பங்கேற்கத் தொடங்கினார். கணவர் பெரோஸ் காந்தி 1960ஆம் ஆண்டிலும், அதைத்தொடர்ந்து தந்தை நேரு 1964ஆம் ஆண்டிலும் காலமான பிறகு, இந்திரா முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.
மாநிலங்களவை எம்.பி
  • தந்தை நேரு மறைவுக்குப்பிறகு முதன்முதலாக மாநிலங்களவைக்கு 1964ஆம் ஆண்டில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்திரா. அதற்கு முன்பு, 1959ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திரா, மூத்த தலைவர்களின் ஆதிக்கம் காரணமாகவும், அப்போதைய கேரள மாநிலத்தை ஆட்சி புரிந்து வந்த கம்யூனிஸ்ட் ஆட்சியை "டிஸ்மிஸ்' செய்வதிலும் முக்கியப் பங்கு வகித்தார். 1964ஆம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி.யாக பொறுப்பேற்ற இந்திரா காந்தி, நேருவின் மறைவுக்குப் பிறகு இரண்டாவது பிரதமராக பொறுப்பேற்ற லால் பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
பிரதமரான இந்திரா
  • 1966ஆம் ஆண்டு ரஷியாவின் தாஷ்கண்ட் நகருக்கு சென்ற லால்பகதூர் சாஸ்திரி, திடீரென காலமாகவே நாட்டின் இடைக்கால பிரதமராக குல்சாரிலால் நந்தா பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத்தொடர்ந்து, நாட்டின் 3ஆவது பிரதமராக இந்திரா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். மூத்த தலைவர்களான மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்களையும் கடந்து, பிரதமராக இந்திரா பொறுப்பேற்க முக்கிய காரணமாக இருந்தவர் காமராஜர். "கிங் மேக்கர்' காமராஜரின் உறுதுணையோடு, பிரதமர் பதவியேற்ற இந்திராவின் முதல் ஆண்டில், அவரது ஆட்சியை அப்போதைய ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்தன. படிப்படியாக அரசியலிலும், ஆட்சியிலும் தனக்கென ஒரு பாதையை வகுத்து செயல்படத் தொடங்கினார்.
பிளவுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ்
  • 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். வறுமையை ஒழிப்பதிலும், வேலை வாய்ப்பை பெருக்குவதிலும், உணவுப்பஞ்சத்தை போக்கவும் முயற்சி மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டின. மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒரு பிரிவாக, இந்திராவுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.
  • இருப்பினும், உட்பூசல்களை கடந்து 1967ஆம் ஆண்டில் 545 எம்.பி. தொகுதிகளில் 297 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று இந்திரா மீண்டும் பிரதமரானார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 60 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. கட்சியில் நிலவி வந்த உட்பூசல் காரணமாக மொரார்ஜி தேசாய்க்கு துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
1969
  • உட்பூசல் நீடித்து வந்த நிலையில் 1969ஆம் ஆண்டு வங்கிகளை தேசியமயமாக்குவதாக பிரதமர் இந்திரா அறிவித்தார். நிதி அமைச்சரான, தன்னிடம் கலந்தாலோசிக்காமல் வங்கிகளை தேசியமயமாக்குவதாக அறிவிப்பதா என்று மொரார்ஜி தேசாய் ஆவேசமடைந்தார். இதன்பின்னர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டது. சோஷலிஸ கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் 1971-ஆம் ஆண்டு வரை இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடித்தார். அதன் பிறகு, காங்கிரஸ் வலுவிழக்கத் தொடங்கியது.
  • அதுவரையிலும், அனைத்து மாநிலங்களிலும் வலுவாக கால் ஊன்றி இருந்த காங்கிரஸ் கட்சி தனது பலத்தை இழக்கத் தொடங்கி விட்டது. இந்த சம்பவம் இந்திராவின் அரசியல் வாழ்வில் ஒரு சறுக்கலாகவே அமைந்தது. இருப்பினும், அதற்கெல்லாம் சளைக்காத இந்திரா, 1971ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், போட்டியிட்டு மீண்டும் வெற்றிப் பெற்று பிரதமர் ஆனார்
உருவானது வங்க தேசம்
  • கிழக்கு பாகிஸ்தானில் கலாசாரப் பாகுபாட்டால் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது. முஜிபுர் ரஹ்மானின் கிளர்ச்சி இயக்கத்துக்கு ஆதரவாக இந்திய ராணுவத்தை அனுப்பி வைக்க உத்தரவிட்டார் இந்திரா. இதன் எதிரொலியாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. போரில் இந்தியா வெற்றி பெற்றதுடன், கிழக்கு பாகிஸ்தான் என்ற நாடு மறைந்து, வங்க தேசம் என்ற நாடு உருவாக காரணமாக இருந்தார்.
அவசர நிலை பிரகடனம்
  • இந்திராவின் ஆட்சிக்காலத்தில் கருப்பு தினங்கள் என்று கூறப்படுபவை இந்த அவசர நிலை (எமர்ஜென்ஸி) பிரகடனம் செய்யப்பட்ட கால கட்டத்தில்தான். 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நாட்டில் அவசர நிலையை அறிவித்தார் இந்திரா. பிரதமராக இருந்த இந்திரா, தேர்தலை தவிர்ப்பதற்காக அவசரநிலையை பிரகடனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பாகிஸ்தானுடன் நடத்திய போர் காரணமாகவும், பொருளாதார சிக்கல் காரணமாகவும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் அரசுப்பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது; அனைத்து செய்தித்தாள்களும் தணிக்கை செய்யப்பட்டு, அரசுக்கு எதிரான செய்திகளை நீக்கம் செய்த பிறகே வெளியிட வேண்டும் என்றும் ஊடகங்கள் பணிக்கப்பட்டன.
  • அரசின் இச்செயல் பத்திரிகை சுதந்திரத்துக்கு வேட்டு வைப்பதாக உள்ளது என பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்க்கட்சிகளை அடக்கி, ஒடுக்குவதற்காகவே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதாக பேசப்பட்டது.ஜனநாயகத்துக்கு எதிராக நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் என்று எதிர்க்கட்சிகளால் வர்ணிக்கப்பட்டது.
  • எதிர்க்கட்சித் தலைவர்களான, ஜெயப்பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், வாஜ்பாய், எல்.கே.அத்வானி, மு.க.ஸ்டாலின் போன்ற பல்வேறு தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1977ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி அவசரநிலை விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆட்சியை பறி கொடுத்த இந்திரா
  • அவசர நிலை அமல்படுத்தப்பட்டதால், இந்திராவுக்கு எதிரான அலை நாடு முழுவதும் வீசியதால் 1977ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. முந்தைய தேர்தலில் 350 இடங்களை கைப்பற்றியிருந்த காங்கிரஸ், இம்முறை 153 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதில் 92 இடங்கள் தென்னிந்தியாவில் இருந்து வெற்றி பெற்ற தொகுதிகளாகும். ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற, கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் மொரார்ஜி தேசாய் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். நாட்டில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்தது 1977ஆம் ஆண்டில் தான்.
மீண்டும் வெற்றி
  • எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாத நிலையில் 3 ஆண்டுக்குள் ஜனதா கட்சியின் ஆட்சிகாலம் முடிவுக்கு வந்தது. 1980ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் இந்திரா.
  • பிரதமராக பொறுப்பேற்றபின், அவருக்கு பெரும் சவாலாக விளங்கியது பஞ்சாப் தீவிரவாதம். பிந்தரன்வாலே தலைமையில் காலிஸ்தான் கேட்டு சீக்கிய தீவிரவாதிகள் போராடி வந்தனர். அவர்களை அழிக்க 1984ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொற்கோயிலுக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை அழிப்பதற்காக ராணுவத்தை உள்ளே அனுப்ப உத்தரவிட்டார் இந்திரா. ஆபரேஷன் "புளூ ஸ்டார்' என்ற பெயரில் ராணுவத்தினர் பொற்கோயிலுக்குள் நுழைந்து தாக்கியதன் மூலம் சீக்கியத் தீவிரவாதம் முடிவுக்கு வந்தது. இருப்பினும், பொற்கோயிலுக்குள் ராணுவம் புகுந்த நடவடிக்கை சீக்கியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இறப்பு
  • பொற்கோயில் தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்திரா காந்தியின் இரு சீக்கிய மெய்காவலர்கள் சிலரால் 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • பசுமை புரட்சி, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு நிலை, பாகிஸ்தான் போரின் போது அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு அடிபணியாதது, முதன்முதலாக அணுசக்தி நிலையத்தை உருவாக்கி, இளம் அணுசக்தி கொண்ட நாடாக இந்தியாவை கட்டமைத்தது, 20 அம்ச கொள்கை திட்டம், வங்கிகளை தேசியமயமாக்கியது, இந்திய வெளியுறவுக் கொள்கைகளில் சீர்திருத்தம், ஒருங்கிணைந்த சோவியத் ரஷியா, ஈரான், இஸ்ரேல், லிபியா, எகிப்து போன்ற பல்வேறு நாடுகளுடன் நட்புறவை பேணி பாதுகாத்ததன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது போன்றவை அவரது சாதனைகளை உலகுக்கு என்றென்றும் பறை சாற்றும்.
இந்திரா போட்டியிட்ட தொகுதிகள்
  • 1964 ஆகஸ்ட் முதல் 1967ஆம் ஆண்டு பிப்ரவரி வரை மாநிலங்களவை எம்.பி..யாக இருந்தார். 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவசரநிலை பிரகடனத்தால் அதிருப்திக்கு ஆளான இந்திரா 1977ஆம் ஆண்டில் ஜனதா வேட்பாளர் ராஜ் நாராயணிடம் வெற்றியை பறி கொடுத்தார்.
  • 1980இல் ரே பரேலியிலும், ஆந்திரப் பிரதேச மாநிலம் மேடக் தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார். பின்னர், ரேபரேலி தொகுதியை ராஜிநாமா செய்து விட்டு மேடக் தொகுதியை மட்டும் தன்னகத்தே வைத்துக் கொண்டார்.
  • 1967 முதல் 1977ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் 1980ஆம் ஆண்டிலும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்தார். 1972ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இந்திராவுக்கு வழங்கப்பட்டது. 1971ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சிறப்பு வாக்கெடுப்புப்படி உலகில் அதிகம் மக்களால் விரும்பப்படும் பெண் என்ற கெளரவமும் இந்திராவுக்கு கிடைந்தது. இதுதவிர பல்வேறு விருதுகளும், பாராட்டுகளும் இவரது புகழுக்கு, புகழ் சேர்த்தன.

நன்றி: தினமணி ( 13-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்