- ‘கிறிஸ்தவப் பாதிரியார் வெரியர் எல்வினுடன் ஜவாஹர்லால் நேரு (வட கிழக்கு மாநிலங்கள் தொடர்பாக) ஒப்பந்தம் செய்துகொண்டார்’ என்றொரு தகவல் சமூக ஊடகத்தில், மணிப்பூர் கலவரம் வெடித்த சில நாள்கள் கழித்து மே மாதம் முதல் வாரத்தில் வெளியானது; அது எந்த அளவுக்கு உண்மை என்று நான் கேட்டிருந்தேன்; ‘அந்த ஒப்பந்தப்படி நாகாலாந்தில் நுழையக் கூடாது என்று இந்து மத சாதுக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. நேருவின் ஆட்சிக் காலத்தில்தான் நாகாலாந்து, கிறிஸ்தவர் பெரும்பான்மை எண்ணிக்கையுள்ள பிரதேசமானது. இன்று நாகாலாந்தில் கிறிஸ்தவர்கள் 88%” என்று அந்தப் பதிவு தெரிவிக்கிறது.
மூன்று காரணங்கள்
- வெரியர் எல்வினுடைய வாழ்க்கை வரலாற்றை விவரித்து 1999இல் புத்தகம் எழுதியிருக்கிறேன். அதைப் பிரசுரித்தவர்கள் மற்றும் தொடர்புள்ளவர்கள் இந்தச் சமூக ஊடகத் தகவல் தொடர்பாக எனக்குப் பல கடிதங்களை எழுதி விளக்கம் கேட்டிருந்தனர்.
- நாடு சுதந்திரம் அடைந்த பிறகும், நாகர்களின் ஊடுருவல் - தாக்குதல்கள் காரணமாக, ‘அந்தப் பகுதிக்கு யாரும் போக வேண்டாம்’ என்று பாதுகாப்பு கருதி அரசால் அறிவுறுத்தப்பட்டது; நாகாலாந்து தொடர்பாகவோ வேறு பிரதேசம் தொடர்பாகவோ நேருவும் எல்வினும் எந்த உடன்படிக்கையையும் செய்துகொள்ளவே இல்லை என்று அவர்களுக்கெல்லாம் விளக்கினேன்.
- நேரு, எல்வின் ஆகியோர் பிறப்பதற்கு முன்பிருந்தே கிறிஸ்தவப் பாதிரிமார்கள் நாகர்களுடைய குன்றுப் பகுதிகளில் சமுதாயப் பணியையும் மதப் பிரச்சாரங்களையும் தீவிரமாக மேற்கொண்டனர். கிறிஸ்தவப் பாதிரியார்கள் மட்டுமல்ல - ஆர்எஸ்எஸ் இயக்கத்தவர் மீதும் எல்வினுக்கு நம்பிக்கை இருந்ததில்லை.
- பழங்குடிகள் தொடர்ந்து அவர்களுடைய வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும் பின்பற்ற வேண்டும், அவர்கள் கிறிஸ்தவர்களாகவோ இந்துக்களாகவோ மதம் மாறக் கூடாது என்றே எல்வின் விரும்பியிருக்கிறார். ‘வாட்ஸப்’ போன்ற சமூக ஊடகங்களின் குழுக்களில் இப்படியாக வெளியாகும் உண்மையற்ற தகவல்களுக்கெல்லாம் நான் விளக்கம் சொல்வது வழக்கமில்லை, காரணம் அப்படிச் சொல்லத் தொடங்கினால் வேறெந்த வேலையையும் செய்ய முடியாமல் போய்விடும். இந்த ஒரு தகவலுக்கு மட்டும் நான் எதிர்வினையாற்ற நினைப்பதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.
- வெரியர் எல்வின் தொடர்பாக நேருவும் அவரும் செய்துகொண்டதாகக் கூறப்படும் கற்பனையான உடன்பாடு பற்றி மட்டுமல்ல, வேறு பல உண்மையற்ற தகவல்களும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. வட கிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவம் பரவ எல்வின் ஒரு காரணம், எனவே இப்போது இந்து மெய்திகளுக்கும் கிறிஸ்தவ குகிக்களுக்கும் மோதல்கள் நடைபெற அவரும் ஒரு காரணம் என்பது இந்தத் தகவல்களின் ஜோடிப்பு.
- இறப்புக்குப் பிறகு எல்வினை அவதூறாக இழித்துப் பேசுவதை வலதுசாரி இந்து அமைப்பினர் மட்டுமல்ல, அசாமின் முதலமைச்சரும், வட கிழக்கில் பாரதிய ஜனதாவுக்காக எந்த வேலையையும் செய்யத் தயார் செய்யப்பட்டிருப்பவருமான ஹிமந்த விஸ்வ சர்மாவும் இந்த வேலையில் இறங்கியிருக்கிறார்.
- தீவிரமான இந்துத்துவம் தவிர வேறு எதையும் மூர்க்கமாக எதிர்க்கும் பாரதிய ஜனதாவின் விரோதப் போக்கு. பழங்குடிகளின் கலாச்சாரத்தின் மீது தீவிர அனுதாபம் கொண்டவரான எல்வின், கிறிஸ்துவத்தையே உதறித்தள்ளும் அளவுக்குப் பரந்த மனத்தவராக இருந்திருக்கிறார்.
என் பதில்
- எல்வின் தொடர்பாக சர்மா கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கிறேன். அதற்கும் முன்னதாக, எல்வின் பற்றி நான் எழுதிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தைப் படிக்காதவர்களுக்காக அவரைச் சுருக்கமாக அறிமுகம் செய்கிறேன். (சாவேஜிங் த சிவிலைஸ்ட்: வெரியர் எல்வின், ஹிஸ் ட்ரைபல்ஸ் அண்ட் இந்தியா, 2011 – ‘Savaging the Civilized: Verrier Elwin, His Tribals and India’, 2011இல் திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு வெளியானது, இப்போது அச்சில் இருக்கிறது). 1902இல் பிறந்த வெரியர் எல்வின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார், இந்தியாவுக்கு 1927இல் வந்தார்.
- கிறிஸ்தவத்தை ‘இந்தியமயப்படுத்துவது’ அவருடைய நோக்கம். மகாத்மா காந்தியாலும் அவருடைய சீடர்களாலும் ஈர்க்கப்பட்ட அவர், தேவாலயத்துடனான தொடர்புகளை விட்டுவிட்டு, மத்திய இந்தியாவில் பழங்குடிகளுக்கு இடையே சமூகத் தொண்டு செய்யத் தொடங்கினார். 1930-களிலும் 1940களிலும் பழங்குடி சமூக இன அமைப்பியல் தொடர்பாகவும் பழங்குடிகளின் வாழ்க்கை முறை, நாட்டுப்புறவியல், கலை ஆகியவை குறித்தும் முன்னோடியாக பல படைப்புகளை எழுதினார்.
- இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியக் குடியுரிமை பெற்றார். 1954இல் ‘வட கிழக்கு எல்லைப்புற மாகாண’ மானுடவியல் ஆலோசகராக அரசால் நியமிக்கப்பட்டார். ‘நேஃபா’ என்று அறிவிக்கப்பட்ட அப்பகுதிதான் அருணாசலப் பிரதேசம். இந்தப் பிரதேசம் இந்தியப் பகுதிக்கும் சீனப் பகுதிக்கும் இடையில் இருக்கிறது. அப்போது இந்தப் பிரதேசத்துக்கு வரைபடமும் கிடையாது, அப்பகுதியில் நிர்வாக அமைப்பும் கிடையாது.
- பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அங்கு அரசு நிர்வாகத்துக்கான அடையாளமே ஏதுமில்லாமல் இருந்தது. அங்கு வாழும் வெவ்வேறு பழங்குடி மக்களுக்கும் அரசுக்கும் இடையில் உறவுப்பாலம் ஏற்பட எல்வினின் அனுபவம் உதவும் என்று கருதியே அரசு அப்பதவியில் அவரை அமர்த்தியது.
- அரசின் நோக்கமும் ஓரளவுக்கு நிறைவேறியது. வட கிழக்கு மாநிலங்களிலேயே அருணாசலப் பிரதேசத்தில் பிற பழங்குடிகளின் ஊடுருவல் பெரிய அளவில் இல்லாமல் போனதற்குக் காரணம் அவர்களுடைய நில, வன உரிமைகளுக்காக எல்வினும் அவருடைய சகாக்களும் தொடர்ச்சியாக பாடுபட்டதுதான். வெவ்வேறு பழங்குடி மக்களுக்கு இடையே தொடர்பு மொழியாக இந்தியை அவர் பரப்பினார், இந்து சாதுக்களையும் கிறிஸ்தவ மிஷினரிகளையும் அப்பகுதிக்கு வரவிடாமல் தடுத்தார்.
சர்மாவின் குற்றச்சாட்டு
- வெரியர் எல்வின் 1964 பிப்ரவரியில் - ஜவாஹர்லால் நேரு இறப்பதற்குச் சில மாதங்கள் முன்னதாக – இறந்தார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், எல்வின் இறந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு அசாம் முதல்வர் ஹிமந்த குமார் சர்மா தன்னுடைய கையெழுத்திட்டு, புது டெல்லியில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
- “ஐரோப்பாவில் பிறந்த ஒருவரை பிரதமர் நேரு, வட கிழக்கு மாநிலங்கள் தொடர்பாக தன்னுடைய முதல் ஆலோசகராக அமர்த்திக்கொண்டார்; அசாமில் இயற்கையாகவே பெட்ரோலிய எண்ணெய் வளம் அதிகமிருந்தும் அங்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம் என்று நேருவைத் தடுத்தது அவர்தானா? அசாமியரான தேச பக்தர் கோபிநாத் பர்தோலாய்க்கு பாரத் ரத்னா விருது தர வேண்டாம் என்று தடுத்ததும் அவர்தானா?” என்று அந்த அறிக்கையில் கேட்டிருந்தார்.
- ஐரோப்பாவில் பிறந்தவர் யார் என்று, எல்வினுடைய பெயரை அவர் கட்டுரையில் குறிப்பிடவில்லை. மூன்று நாள்களுக்குப் பிறகு ட்விட்டரில் (சுட்டுரை) அசாம் முதல்வர் சர்மா தெரிவித்த கருத்தில், சிறிதளவும் லஜ்ஜையே இல்லை; “ஐரோப்பாவில் பிறந்த வெரியர் எல்வினை வட கிழக்கு மாநிலங்கள் தொடர்பான ஆலோசகராக பண்டிதர் நேரு நியமித்தார், காங்கிரஸ் கட்சியின் கண்மூடித்தனமான தவறுகள் இங்கிருந்துதான் தொடங்கின” என்று பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்.
- இந்தத் தகவல்கள் உண்மைதானா என்று சரிபார்ப்பது அவசியம்; வெரியர் எல்வின், நேஃபாவுக்கு மட்டும்தான் ஆலோசகராக இருந்தார், வட கிழக்கின் வேறு எந்தப் பகுதியின் நிர்வாகத்திலும் அவருடைய பங்களிப்பு ஏதுமில்லை. நாகாலாந்தில் மட்டுமல்ல மணிப்பூரிலும் அவருக்குப் பொறுப்பு ஏதுமில்லை, அதிலும் குறிப்பாக அசாமில் இல்லவே இல்லை.
- இருந்தாலும் அசாம் மாநிலத்துக்கு எண்ணெய் சுத்திகரிப்பாலை கிடைப்பதைத் தடுத்தார், கோபிநாத் பர்தோலாய்க்கு பாரத் ரத்னா விருது கிடைக்காததற்கும் அவர்தான் காரணம் என்று அசாம் முதல்வர் துணிந்து குற்றஞ்சாட்டியிருக்கிறார். வட கிழக்கு மாநிலங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ்தான் காரணம் என்று பாரதிய ஜனதா கூறுவதைப் போல, எல்லாவற்றுக்கும் மூலக் காரணம் எல்வின்தான் என்று சர்மா குற்றஞ்சாட்டுகிறார்.
பாஜகவின் தீய உள்நோக்கம்
- உண்மைகளை சரிபார்ப்பது அவசியம், அதைவிட முக்கியம் எந்தப் பின்னணியில் இப்படிப்பட்ட உண்மையல்லாத அவதூறுகள் வாரி இறைக்கப்படுகின்றன என்று அறிவது; வட கிழக்கு மாநிலங்களின் இப்போதைய பிரச்சினைகளைப் பேசாமல், விவாதங்களை அந்தக் காலத்துக்கு மடைமாற்றுவதுதான் அசாம் முதல்வர் மற்றும் பாரதிய ஜனதாவின் இழிவான – தீய உள்நோக்கம் கொண்ட இந்தக் குற்றச்சாட்டுகளுடைய நோக்கம்.
- மூன்று மாதங்களுக்கும் மேலாக இன மோதல்கள் காரணமாக மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற உறுதி ஒன்றிய பாஜக அரசுக்கும் இல்லை, மாநில பாஜக அரசுக்கும் இல்லை. இந்த மோதல்கள் இப்படியே மிசோரம், நாகாலாந்து, மேகாலயம் ஆகிய மாநிலங்களுக்கும் பரவும் ஆபத்து அதிகரித்துவருகிறது.
- மணிப்பூரில் நடைபெறும் வன்செயல்கள், மக்களுடைய துயரம் அனைத்தையும் தீர்க்க வேண்டிய முழுப் பொறுப்பு பாரதிய ஜனதாவின் ‘இரட்டை என்ஜின்’ அரசுகளுடையதுதான்; ஒன்றியத்திலும் மாநிலத்திலும் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் அல்ல, பாரதிய ஜனதாதான். மணிப்பூர் மாநிலத்தின் மோதல்களைத் தவிர்க்கத் தவறியதற்கான முழுப் பொறுப்பு மணிப்பூர் முதல்வர் பீரேன் சிங், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதம மந்திரி நரேந்திர மோடி ஆகியோருடையதே. இந்தப் பழிகளின் ஒரு பகுதியிலிருந்து அசாம் முதல்வர் சர்மாவும் தப்பிவிட முடியாது.
- தன்னையும் தன்னுடைய கட்சியையும் இந்தப் பழிகளிலிருந்து மீட்டுக்கொள்ள, கடந்த காலம் பற்றியும் எப்போதோ இறந்து போனவர்கள் பற்றியும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக இழுத்துவிடுகிறார் அசாம் முதல்வர். இந்த விஷயத்தில் அவர் தன்னுடைய கட்சித் தலைவர்களை அப்படியே அடியொற்றி நடந்துகொள்கிறார்.
- அமித் ஷாவும் நரேந்திர மோடியும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்ல நேர்ந்தால், ‘கடந்த காலத்தில் என்ன நடந்தது?’ என்று எதிர்க் கேள்வியையே பதிலாகத் தருவார்கள். ‘மக்களுடைய அடிப்படை உரிமைகளை நசுக்கிறீர்களே?’ என்று கேட்டால், ‘இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-77 நெருக்கடிநிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் எப்படி இருந்தன?’ என்று கேட்பார்கள். ‘இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் பெரும்பகுதியை சீனம் ஆக்கிரமித்திருக்கிறதே?’ என்று கேட்டால், ‘ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது 1962இல் என்ன நடந்தது?’ என்று திருப்பிக் கேட்பார்கள்.
எல்வினுக்காகப் பேசுவது என் கடமை
- நான் காங்கிரஸ்காரன் அல்ல, முந்தைய காங்கிரஸ் பிரதமர்களுக்காக இங்கே பரிந்து பேச வரவில்லை. ஆனால், வெரியர் எல்வினைப் பற்றிய வரலாற்று நூலை எழுதியவன், எனவே இறப்புக்குப் பிறகு அவர் மீது இல்லாததையும் பொல்லாததையும் கூறினால் அமைதியாக இருக்க முடியாது.
- மத வெறியையும் அன்னிய எதிர்ப்புணர்வையும் கொண்டவர்களுக்கு, கிறிஸ்தவராக இருந்த ஒருவர் தன்னுடைய மதத் தலைமையிடமிருந்து விலகி, பன்மைத்துவ மதக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்ட பெருமையைப் பற்றிப் புரிய வைக்க முடியாது; எங்கோ வெளிநாட்டில் பிறந்த ஒருவர் இந்த நாட்டை நேசித்து அதன் வளத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டதை எடுத்துரைக்கவும் முடியாது.
- வெரியர் எல்வின் முழுமையாக நல்லவர் இல்லைதான்; பழங்குடிகள் மீது அவர் தேவைக்கதிகமாக ஈர்ப்புகொண்டிருந்தார். கோண்ட் சமூகத்தைச் சேர்ந்த அவருடைய முதல் மனைவியுடனான இல்வாழ்க்கை சிறிது காலம்தான் நீடித்தது. இரண்டாவது மனைவியும் பழங்குடிதான், ஆனால் அவர்களுடைய இல்லறம் தொடர்ந்தது. இருந்தாலும் பழங்குடிகளின் முன்னேற்றத்துக்காக அவர் அளித்த உழைப்பும் அவர் விட்டுச் சென்ற பாரம்பரியமும் முக்கியமானவை.
- மத்திய இந்தியப் பகுதியில் வாழ்ந்த பழங்குடிகள் குறித்து அவர் எழுதிய நூல் மிகச் சிறந்த அவதானிப்பு. பழங்குடிகளை அவர்கள் வசிக்கும் நிலங்களிலிருந்தும் வனங்களிலிருந்தும் வெளியேற்றாமல் அவர்களுடைய வாழ்க்கையை எப்படி மேம்படுத்தலாம், வன வளங்களையும் காக்கலாம் என்பதற்கு அவர் எழுதிய ‘ஏ ஃபிலாசஃபி ஃபார் நெஃபா’ (A Philosophy for NEFA) என்ற புத்தகம் ஆட்சியாளர்களுக்கு இன்றைக்கும் பயன்படக்கூடிய கையேடு. பழங்குடிகளை அவர்கள் கடைப்பிடிக்கும் கலாசாரத்துக்காக அவமானப்படுத்தக் கூடாது என்பது அவர் வலியுறுத்தும் முக்கிய அம்சம்.
- அஞ்சலிக் குறிப்புகள்
- வலதுசாரி இந்துத்துவ அமைப்பினரால் அவமதிக்கப்படும் எல்வின், இந்தியர்களின் நலனுக்காக எந்த அளவுக்கு பாடுபட்டார், எப்படியெல்லாம் ஆய்வுசெய்திருக்கிறார் என்பதைப் படிக்க விரும்புகிறவர்கள் அவரைப் பற்றி நான் எழுதிய வரலாற்று நூலையும் படிக்கலாம், பழங்குடிகள் குறித்து அவரே எழுதிய நூலையும் வாசிக்கலாம்.
- எர்வினின் சமகாலத்தில் வாழ்ந்த மூவரின் அஞ்சலிக் குறிப்புகளுடன் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். “எர்வின் வெறும் மானுடவியலாளர் மட்டும் அல்ல, சிறந்த கவிஞர், கலைஞர், மெய்யியலாளர். நாட்டின் பெரிய ஆய்வு நிறுவனங்கள், ஏராளமான பணியாளர்களுடன் மிகுந்த பொருட்செலவில் அளிக்கும் ஆய்வுக் கட்டுரைகளைவிட சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்” என்று மானுடவியலாளர் எஸ்.சி.துபே புகழ்ந்திருக்கிறார்.
- கல்கத்தாவிலிருந்து வெளியாகும் ‘அமிர்த பஜார்’ பத்திரிகை தனது தலையங்கத்தில் பின்வருமாறு அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறது: “நாடு தலைசிறந்த மானுடவியலாளரை மட்டும் இழக்கவில்லை, இந்த நாட்டைத் தன்னுடைய நாடாகவும் இந்த மக்களைத் தன்னவர்களாகவும் கருதிய பரந்த மனம் கொண்ட – அனேகமாக கடைசி ஆளாகக்கூட இருக்கலாம் – ஆங்கிலேயரை இழந்துவிட்டது.”
- ‘த லிட்டில் தியேட்டர் குரூப்’ என்ற வங்காள நாடகக் குழு அவருடைய இறப்புக்குப் பிறகு இந்த அஞ்சலிக் குறிப்பை விளம்பரமாக அதே பத்திரிகையில் வெளியிட்டிருந்தது:
‘எங்கள் நினைவில் வாழும்
டாக்டர் வெர்னியர் எல்வின்
இந்தியர்களிலேயே உன்னதமானவர்.
நன்றி: அருஞ்சொல் (27 – 10 – 2023)